சிக்கப் போகும் தமிழ் நடிகர்கள் யார்... யார்..?
கடந்த வாரம் முழுக்க ஹாட் ஆக ஆரம்பித்து பின் பிசுபிசுத்த செய்தி மீண்டும் லைம் லைட்டுக்கு வரும்... பரபரப்பாகும் என்கிறார்கள். ஏனெனில் கடந்த வாரம் செய்தியின் மையம், கேரளா; மலையாள நடிகர்கள். திரும்பவும் பரபரப்பாகும் என ஆரூடம் சொல்வதற்கு காரணம், தமிழகம்; தமிழ்நாட்டு நடிகர்கள்.அதேதான். வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட சொகுசு கார்கள்!
 கேரளாவில் சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டு, மோசடியாக விற்பனை செய்யப்பட்ட 200 சொகுசு கார்கள் இம்மாநிலத்தில் பயன்பாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து கேரள நகரங்களில் உள்ள கார் ஷோரூம்ஸ் முதல் ‘கார் காதலர்களாக’ இருக்கும் மலையாள நடிகர்களின் வீடுகள் வரை ரெய்டு நடத்தப்பட்டது.
 துல்கர் சல்மான் முதல் சில நடிகர்கள் இப்படி முறைகேடாக வெளிநாட்டு சொகுசு கார்களை முறைகேடாக வாங்கி பயன்படுத்தி வருவது தெரிய வந்தது. தொடர்புள்ள கார்களும் அவர்களின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இதுதான் செய்தி. ஆனால், இது மட்டுமே நியூஸ் அல்ல.ஏனெனில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் வெளிநாட்டு சொகுசு கார்களை ‘திருடி’ எடுத்து வரவில்லை. ‘பணம் கொடுத்து, அதற்காக இந்திய அரசுக்கு வரியும் செலுத்தி’தான் ‘வாங்கி’யுள்ளனர்.  அப்படியிருக்க ஏன் கேரள சுங்கத்துறையும் வருவாய் புலனாய்வுத் துறையும் அதிரடியாக களத்தில் இறங்கி அந்த வாகனங்களை பறிமுதல் செய்தது?
காரணம் கார் மாஃபியா.புரியவில்லை அல்லவா? வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களுக்கு, காரின் விலையில் 100 முதல் 200 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகின்றன.
அதாவது வெளிநாடுகளில் தயாரான சொகுசு காரின் விலை இந்திய மதிப்பில் ரூ.2 கோடி என வைத்துக் கொள்வோம். இந்த காரை இந்தியாவில் ஒருவர் வாங்குகிறார்... அதை இந்தியாவுக்கு வரவழைக்கிறார் என்றால் அந்த கார் நம் நாட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக அதற்கு சுங்கவரி வசூலிக்கப்படும். இந்த சுங்க வரி ரூ.2 கோடி காருக்கு ரூ.2 கோடி விதிக்கப்படலாம். ஆக மொத்தம் அந்த காரின் விலை இந்தியாவிலுள்ள ஒருவரின் இல்லத்துக்கு வரும்போது ரூ.4 கோடி மதிப்புள்ளதாக இருக்கும்.இந்த இடத்தில்தான் கார் மாஃபியா கும்பல் கல்லா கட்டுகிறது.வெளிநாட்டு சொகுசு காரை புத்தம் புதிதாக வாங்கும்போதுதான் நம் நாட்டில் சுங்க வரி 100 முதல் 200 சதவிகிதம் வரை விதிக்கப்படுகின்றது.
அதுவே செகண்ட் ஹேண்ட் என்றால் இவ்வளவு வரி இல்லை. இது ஒரு பாயிண்ட்.அடுத்த பாயிண்ட் இந்தியாவில் இருக்கும் ஒருவர் பயன்படுத்திய வெளிநாட்டு சொகுசு காரை அதே இந்தியாவைச் சேர்ந்த மற்றொருவர் செகண்ட் ஹேண்ட் ஆக வாங்கும்போது இன்னும் வரி குறைவு.
இவ்விரு அம்சங்களையும் மையமாகக் கொண்டுதான் அம்சமாக கார் மாஃபியா கும்பல் விளையாடுகிறது.இந்திய எல்லையை ஒட்டி வடகிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு தம்மாத்துண்டு நாடுதான் பூடான். இந்த தேசத்தை சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் இருந்து சொகுசு காரை வாங்குவார்கள். அந்நாட்டில் சுங்க வரி, இந்தியாவைப் போல் கிடையாது. கொஞ்சம்தான்.
இப்படி வாங்கிய காரை சும்மா பெயருக்கு ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை பயன்படுத்துவார்கள். பிறகு அதை விற்றுவிடுவார்கள். இப்படி விற்கப்படும் வெளிநாட்டு சொகுசு காரை வாங்குபவர்கள் இந்தியாவிலுள்ள கார் மாஃபியா ஒயிட் காலர் தாதாக்கள்தான்!வாழைப் பழத்தை உரித்து உண்பதற்கு வழங்குவதுபோல் சொல்வதென்றால் - பூடானில் இருக்கும் சற்றே பசையான ஆட்களுக்கு பணம் கொடுத்து வெளிநாட்டு சொகுசு கார்களை வாங்க வைப்பது இந்திய கார் மாஃபியா கும்பல்தான்.
இதற்காக ஒரு தொகையை கமிஷனாக அந்த பூடான் நாட்டு பிரகஸ்பதி பெற்றுக்கொள்வார். கூடவே மூன்று மாதங்கள் வரை அதை ஓட்டி தன் தேசத்தில் கெத்து காட்டுவார். இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய கார் மாஃபியா கும்பல் ஒரு காரியத்தை செய்வார்கள்.பூடானில் இருந்து இந்தியாவுக்கு பொடி நடையாக வரலாம். வந்ததுமே இந்திய எல்லையில் இருக்கும் அருணாச்சல பிரதேச மாநிலம் வருக வருக என வரவேற்கும்.இந்த அருணாச்சல மாநிலத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கும் கார் மாஃபியா கும்பலுக்கும் நெருக்கம் உண்டு. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பரஸ்பரம் கையெழுத்திட்டுள்ளார்கள்!
போதாதா? பூடானில் இருக்கும் சொகுசு காரை அருணாச்சல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர், ‘வாங்கிவிட்டார்’ என்பதற்கான அத்தாட்சியை பெற்றுவிடுவார்கள்.
எல்லாம் ‘லீகல்’தான்! ஆதார் கார்ட், ரேஷன் கார்ட் முதல் வசிப்பிட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும்!பிறகென்ன... இந்திய கார் மாஃபியாவைச் சேர்ந்தவர்கள் பூடானில் இருக்கும் அந்த சொகுசு காரை ஓட்டிக் கொண்டு இந்திய எல்லைக்கு வருவார்கள். இந்த கார் அருணாச்சல பிரதேசத்துக்கு சொந்தமானது என்ற அத்தாட்சியை காண்பிப்பார்கள். ஜம்மென்று இந்தியாவுக்குள் நுழைவார்கள்.
தென்னிந்திய நடிகர்கள் கார் பைத்தியங்களாக இருப்பது இந்த கார் மாஃபியா கும்பலுக்கு கிடைத்த ஜாக்பாட்.எனவே கார் பைத்தியங்களை, கார் மாஃபியா ஏஜெண்டுகள் சந்திப்பார்கள். மூன்று மாதங்கள் மட்டுமே பயன்படுத்திய கார் என்பதும், ஒரிஜினல் ரேட்டை விட சல்லீசான விலை என்பதும் பைத்தியங்களை மயக்கிவிடும்.
பேரம் பேசியோ பேரம் பேசாமலோ சொகுசு காரை அந்தந்த மாநில ஆர்டிஓ அலுவலகம் வழியாக வாங்கிவிடுவார்கள். கையோடு வாங்கிய சொகுசு காரின் முன்பு நின்றபடி போட்டோ எடுத்து தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றுவார்கள். லைக்ஸ், ஷேர், கமெண்ட்ஸ் குவியும். இப்படி ‘லீகலாக’, ‘இல்லீகல்’ பிசினஸ் நடப்பதை மோப்பம் பிடித்துதான் பொறி வைத்து சுங்கத் துறையினர் பிடித்திருக்கிறார்கள்; சொகுசு கார்களை பறிமுதல் செய்திருக்கிறார்கள். கடைசியில் ‘பெப்பே’ என முழிப்பது கார் பைத்தியங்களான நடிகர்கள்தான்.அப்படித்தான் துல்கர் சல்மான் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் தலையில் கை வைத்தபடி இப்பொழுது அமர்ந்திருக்கிறார்கள்.இந்த நடவடிக்கைகளுக்கு சுங்கத்துறை வைத்துள்ள பெயர் ‘ஆபரேஷன் நும்கோர்’.
‘நும்கோர்’ என்பது பூடான் நாட்டு சொல். அந்நாட்டு மொழியில் இதற்கு அர்த்தம் ‘வாகனம்’ என்பது! பொருத்தமான பெயர்தான் இல்லையா?!
தமிழ் நடிகர், நடிகைகளிலும் ஏராளமான கார் பைத்தியங்கள் உண்டு. வீட்டு பார்க்கிங்கில் ஐந்து முதல் ஆறு வரை வெளிநாட்டு சொகுசு கார்களை நிறுத்தி வைப்பதில் அப்படியொரு அலாதி விருப்பம் இவர்களுக்கு.இந்த கார்களும் கார் மாஃபியாக்களிடம் வாங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் சுங்கத் துறையினருக்கு எழுந்துள்ளது.எனவே தமிழ்நாட்டு நடிகர், நடிகைகளின் சொகுசு கார்களும் விரைவில் பறிமுதல் செய்யப்படலாம் என பட்சி சொல்கிறது!
என்.ஆனந்தி
|