பெர்ஃபாமன்ஸ் படங்களில் ப்ரீத்தி கேரண்டி!



‘அயோத்தி’ படத்தில் ஆழமான நடிப்பை வழங்கி அசத்தியவர் ப்ரீத்தி அஸ்ரானி. சமீபத்தில் வெளியான ‘கிஸ்’ படத்தில் கவினுக்கு கிஸ் கொடுத்து கிறங்க வைத்தவர். இப்போது எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘கில்லர்’ படத்தில் நாயகி என பிஸியாக இருக்கிறார் ப்ரீத்தி. 

எந்த சினிமா உங்களை நடிகையாக மாறுவதற்கு தூண்டுதலாக இருந்துச்சு?

நான் பார்த்த சினிமாவை விட சினிமா லொகேஷன்தான் நடிகையாக மாறுவதற்கு தூண்டுதலாக இருந்துச்சு. என் அக்கா எனக்கு முன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர். 
அவருடன் சின்ன வயசுல இருந்து ஷூட்டிங் போகும்போது எனக்குள் சினிமா ஆர்வம் வந்துச்சு. ஆக்டிங் பிடிக்கும் என்பதால் சினிமா லொகேஷன், அட்மாஸ்ஃபியர், செட் எனக்கு பிடிச்சிருந்துச்சு. படங்களை பொறுத்தவரை கதாநாயகி படத்தை கொண்டு செல்வது போல் வருகிற படங்கள் பிடிக்கும். ஆரம்பத்தில் இருந்து ஒரு பெர்ஃபாமராக அறியப்படணும்னு நினைச்சேன்.

‘அயோத்தி’, ‘கிஸ்’, ‘பல்டி’... உங்களுக்கு என்ன மாதிரி அனுபவத்தை கொடுத்துச்சு?

‘அயோத்தி’யில் எமோஷனலாக நடிக்க முடியும் என்ற அனுபவத்தை கொடுத்துச்சு. அதற்கு இயக்குநர் மூர்த்தி சார் உதவியாக இருந்தார். இப்போது வரை ‘அயோத்தி’க்காகத்தான் அறியப்படுகிறேன்.‘கிஸ்’ படத்தில் மாடர்ன் ரோல். ‘பல்டி’யில் கிராமத்துப் பெண் வேடம். பெர்ஃபாமன்ஸுக்கு முக்கியத்துவம் உள்ள படம். 

சினிமாவில் உங்களுக்கு சவாலாக தோன்றும் விஷயம் எது?

எந்தத் துறையாக இருந்தாலும் சவால்கள் இருக்கத்தான் செய்யும். இப்போதுள்ள சூழ்நிலையில் நடிகர், நடிகைகளாக இருந்தாலும் அல்லது பிரபலங்களாக இருந்தாலும் அவர்களை சோஷியல் மீடியா வழியாக எளிதாக ஜட்ஜ் செய்து விட முடிகிறது. கருத்துக்களை எப்படி வேண்டுமானாலும் ஷேர் செய்கிறார்கள். எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அது அளவுக்கு மீறி அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது.  

சோஷியல் மீடியா கருத்துக்கள் உங்களைப் பாதித்துள்ளதா?

சிலரால் சோஷியல் மீடியா விஷத்தைக் கக்கும் தளமாக இருக்கிறது. இந்த அனுபவத்தை நடிகர்கள் மட்டுமல்ல, எல்லோரும் எதிர்கொள்கிறார்கள்.போஸ்ட் ஏதேனும் போட்டபிறகு கமெண்ட்ஸ் அதிகம் பார்க்க மாட்டேன். கமெண்ட்  பகுதியில் பிளஸ், மைனஸ் இரண்டும் இருக்கும். நெகட்டிவ் கமெண்ட்ஸை அவாய்ட் பண்ணுவது பெட்டர்.  

உங்கள் பேட்டிகளில் எப்போதும் உங்கள் அக்காவைப் பற்றி குறிப்பிடுவீர்கள். அவரிடம் என்ன கற்றுக் கொண்டீர்கள்?

அக்காவைப் பற்றி சொல்வதாக இருந்தால் நிறைய இருக்கிறது. எல்லோரிடமும் முழுமையாக அன்பு செலுத்தக் கூடியவர். அம்மாவைவிட அக்காவிடம்தான் அதிகம் நெருக்கமாக இருந்திருக்கிறேன். 

அவரிடமிருந்துதான் அதிகமாக கற்றுக் கொண்டேன். குழந்தையாக இருக்கும் போது அம்மாவுடைய அட்வைஸ் கேட்டு வளர்ந்தேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு அக்கா சொல்லுக்கு கட்டுப்பட்டவளாக இருந்தேன். வாழ்க்கையாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் அக்காவுடைய அட்வைஸ் கேட்பேன்.

சசிகுமார், கவின், ஷேன் நிகம்... ஆகியோருடன் வேலை செய்த அனுபவம் எப்படி இருந்துச்சு?

சசி சார் எப்போதும் அமைதியாக இருப்பார். அவர் சிறந்த இயக்குநர் என்று தெரியும். சிறந்த நடிகராகவும் பெயர் வாங்கியவர். பழகுவதற்கு நேர்மையான, எளிமையான மனிதர். 
கவின் அர்ப்பணிப்புள்ள கடின உழைப்பாளி. 

தன் வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். எந்த இடத்திலும் தன்னால் பிரச்னை ஏற்படக் கூடாது என்று கவனமாக இருப்பார்.‘கிஸ்’ படத்தில் என் கேரக்டர் வித்தியாசமாக இருந்ததை பார்த்திருக்கலாம்.

எனக்கு காமெடி கொஞ்சம் டஃப் ஆக இருந்துச்சு. கவினுக்கு நேச்சுரலாக காமெடி வரும். அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். கவினுடன் ஒர்க் பண்ணியது ஒரு லேர்னிங் ப்ராசஸ் மாதிரி இருந்துச்சு.ஷேன் நிகமிடம் யதார்த்தமான  நடிப்பை பார்க்கலாம். சிறிய  நுட்பங்களை அழகாக வெளிப்படுத்துவார். சில காட்சிக்கு இப்படி கூட டயலாக் இருக்கலாம் என்று டெக்னிக்கலாகவும் ஐடியா கொடுப்பார். 

ஸ்டைல் ரீதியாக உங்களைக் கவர்ந்த நடிகை யார்?

பெரும்பாலும் நான் சிம்பிளாகத்தான் உடை அணிவேன். ஃபேஷனாகவோ, ஸ்டைலாகவோ என்னைப் பார்க்க முடியாது. எளிமை எப்போதும் அழகு தரும். சமீபகாலமாக நான் கவனித்த வகையில் நடிகை சமந்தா மேடம் பல படங்களில் தன்னை நவநாகரீக பெண்ணாக காண்பித்திருக்கிறார். அது எனக்குப் பிடிக்கும். 

இன்னொரு வகையில் சாய் பல்லவி மேடத்தை பிடிக்கும். அவர் என்னுடைய சோன்ல இருக்கிற மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். நீங்கள் நீங்களாகவே இருப்பது எப்போதும் ஒரு மதிப்பைத் தரும்.

எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்கும் ‘கில்லர்’ பற்றி?

ரொம்ப வித்தியாசமான படம். எஸ்.ஜே.சூர்யா சாருடைய எனர்ஜி நெக்ஸ்ட் லெவல்ல இருக்கும். அவர் செட்டில் இருந்தால் எல்லோருக்கும் அந்த எனர்ஜி பரவ ஆரம்பிச்சுடும். புரிதலுள்ள நடிகர், இயக்குநர்னு சொல்லலாம். இப்போதைக்கு இதுபோதும். ரிலீஸ் நேரத்தில் ‘கில்லர்’ பற்றி பேசலாம்.

எஸ்.ராஜா