அன்று அரசு ஊழியர் இன்று விவசாயி...வயலில் வாழிய நிலனே எழுத்துக்களை விதைத்து வைரலாக்கிய லட்சுமிதேவி!
‘‘இருபது ஆண்டுகளுக்கு முன்னாடி விவசாயம் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. என் குடும்பமும் விவசாய பின்புலத்தைச் சார்ந்ததில்ல. ஆனா, இன்னைக்கு சிறந்த விவசாயினு பலரும் பாராட்டும்போது மனசுக்கு ரொம்ப நிறைவாக இருக்கு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கைகளால், ‘டாக்டர் எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது’ம் வாங்கியிருக்கேன்...’’ என அத்தனை உற்சாகமாகப் பேசுகிறார் லட்சுமிதேவி.சமீபத்தில், ‘வாழிய நிலனே’ என்ற புறநானூற்றுப் பாடல் வரியை தன் நிலத்தில் பாரம்பரிய நெல்லால் எழுதி உலகம் முழுவதும் வைரலானவர். மட்டுமில்ல, ‘பொதிகை உழத்தி விதை வங்கி’ என்ற பெயரில் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்தும் வருகிறார். இன்று இவரின் சேகரிப்பில் மட்டும் 120 பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளன. முன்னாள் மத்திய அரசு ஊழியரான லட்சுமிதேவி, விவசாயியாக மாறிய தருணம் ரொம்பவே நெகிழ வைக்கிறது.
‘‘பூர்வீகம் வள்ளியூர். அப்பா ஆசிரியராக இருந்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரியநாயகிபுரம் ஊரில் வசித்தோம். நான் பாளையங்கோட்டையில் பி.எஸ்சி வேதியியல் படிச்சேன். அப்புறம், எம்ஏ ஆங்கில இலக்கியம், சைக்காலஜி கோர்ஸ்களை தொலைதூரக் கல்வி மூலம் முடிச்சேன். லைப்ரரி சயின்ஸ் கோர்ஸும் படிச்சேன். டெலிபோன் துறையில் பணியாற்றினேன்.
என் கணவர் சூர்யநாராயணனுக்கு தென்காசி அருகே இலத்தூர் கிராமம். அவர் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் நூலகராக வேலை செய்தார். இதனால் நாங்க அம்பாசமுத்திரத்தில் செட்டிலானோம்.
எங்களுக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. வாழ்க்கை சிறப்பா போயிட்டு இருந்த நேரம் உடல்நலக் குறைவால் பிரச்னை ஆரம்பிச்சது. என்னுடைய 45 வயதில் மெனோபாஸை எதிர்கொண்டேன்.
அப்போ தைராய்டு பிரச்னையும் வந்தது. ரெண்டுமே என் உடல் நலத்தை பாதிச்சது. ஹீமோகுளோபின் அளவு 5 ஆக குறைஞ்சு போச்சு. நார்மலா ஹீமோகுளோபின் அளவு பத்துக்கு மேல் இருக்கணும். இதனால் உடல் எடையும் குறைஞ்சது. அந்நேரம் என் கடைசி பையன் பள்ளியில் படிச்சிட்டு இருந்தான். எனக்கு என்ன செய்றதுனு தெரியல. கொஞ்சம் சீரியஸ்னு டாக்டர் சொன்னார்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஹீமோகுளோபின் அளவு ஐந்திலேயே இருந்தது. இதனால், என் குழந்தைகளுக்காக என்னைக் காப்பாத்திக்கணும்னு ஹீமோகுளோபின் அளவை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
அதுக்கு நஞ்சில்லாத, சத்தான அரிசி வகைகளையும், காய்கறிகளையும் அதிகளவு எடுத்துக்க சொன்னாங்க. நஞ்சில்லாத உணவுக்கு எங்கே போறது? நாமே விவசாயியாக மாறினால்தான் உண்டு. அதனால், விவசாயம் பண்றதுனு முடிவெடுத்தேன். ஐம்பது வயதில் விஆர்எஸ் வாங்கி அம்பையில் அரை ஏக்கர் நிலம் வாங்கினேன்.
விவசாயம் பத்தி துளியும் தெரியாது. என் குடும்பப் பின்னணில எல்லோருமே ஆசிரியர்கள். யாரும் விவசாயம் செய்ததில்ல. அப்ப நம்மாழ்வார் அய்யா பத்தியும், இயற்கை விவசாயம் பத்தின புரிதலும் எனக்கில்ல. ஒரு நம்பிக்கைல 2008ம் ஆண்டு விவசாயத்தைத் தொடங்கினேன். முதலில் பொன்னி, அம்பை 16னு இரண்டு ரகங்களைப் போட்டேன்.
ஆனா, பத்து மூட்டைகள் வரவேண்டிய இடத்தில் ஒன்றரை மூட்டைகள்தான் வந்தன. கொஞ்சம் கொஞ்சமாக விவசாயத்தை படிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் இரண்டு மூட்டை, மூன்று மூட்டைனு கூடியது.
இந்நேரம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் கேலி செய்தாங்க. அரசு வேலையை விட்டுட்டு இதெல்லாம் தேவையா? பென்ஷன் வாங்கிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டியதுதானே, ஏன் கஷ்டப்படுறனு கேட்டாங்க.
ஆனா, என் குழந்தைகளுக்குத் தாயாக இருந்து அவர்களை வளர்க்கணும் இல்லையா... அதனால் வயலில் நெல் ரகங்களுடன் என்னுடைய வீட்டுத் தோட்டத்தில் கொஞ்சம் காய்
கறிகள், கீரை வகைகள் எல்லாம் போட்டேன்.
எந்த உரங்களும் போடாமல் எல்லாவற்றையும் இயற்கை முறையிலேயே விளைவிச்சேன். அப்படியாக என் வயலில் விளைந்த அரிசியையும், வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தேன். என் உடல்நிலையில் நல்ல மாற்றம் தெரிஞ்சது. இரண்டு ஆண்டுகளிலேயே உடல்நிலை தேறியது.
தைராய்டு பிரச்னை குறைந்து ஹீமோகுளோபினும் 9 ஆக உயர்ந்தது. விவசாயம் செய்யச் செய்ய எனக்குள்ளே ஆர்வமும் அதிகரிச்சது...’’ என்கிற லட்சுமிதேவி, இதன்பிறகு பாரம்பரிய நெல் ரகங்களுக்குள் சென்றுள்ளார்.
‘‘எல்லோருக்கும் வருவதுபோல் விளைச்சல் வர ஆரம்பிச்சதும் பக்கத்து நிலத்தை சேர்ந்தவங்க, தங்கள் நிலத்தை விற்கும் எண்ணம் வந்தப்ப ‘நீ வாங்கிக்கறியா’னு என்கிட்ட கேட்க ஆரம்பிச்சாங்க.
அப்படியா நிலங்கள் சேர்ந்து இப்ப நான் பத்து ஏக்கரில் விவசாயம் செய்றேன். விளைச்சலும் நல்லாயிருக்கு.ஒருகட்டத்துல எப்பவும் இதே ரகங்களையே விதைக்கறோமே... நமக்குனு பாரம்பரிய ரகங்கள் நிறைய உண்டேனு தோணுச்சு. அப்ப ஆத்தூர் கிச்சலி சம்பா தவிர எனக்கு வேறெதுவும் தெரியல.
நெல்லை மாவட்டத்துல யாரும் பெருசா பாரம்பரிய ரகங்கள் போடல. இதனால தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் வேலை செய்த என் கணவரின் வகுப்புத் தோழரிடம் பேசினேன்.
அவர் வாங்கித் தர்றேன்னு வரச்சொன்னார். நான் அங்க போய் மாப்பிள்ளை சம்பா, பூங்கார், ஆத்தூர் கிச்சலி சம்பானு மூன்று ரகங்களை வாங்கிட்டு வந்தேன்.
இதில் ஆத்தூர் கிச்சலி சம்பா கொஞ்சம் நல்லா வந்துச்சு. மாப்பிள்ளை சம்பா 150 நாட்களில் வரும். இதை எப்படி பயிரிட்டுக் கொண்டு வரணும், பராமரிக்கணும்னு தெரியல. முயற்சி செய்து கத்துக்கிட்டேன்.
இதன்பிறகு கொரோனா நேரம் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன். அப்ப வெளியில் எங்கேயும் போகமுடியாது. அதனால் விவசாயம் சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் நிறைய படிக்க ஆரம்பிச்சேன். உழவுத் தொழில் பத்திச் சொல்லும் பள்ளு இலக்கியங்கள் வாசிச்சேன். இதில் ஏதாவது ரகங்களின் பெயர் வந்தா அதை இணையத்தில் தேடுவேன். அப்ப, அந்த ரகம் சம்பந்தமான நபர் யாராவது நமக்குக் கிடைப்பார்.
உதாரணத்துக்கு கள்ளிமடையான் நெல்னு இணையத்துல தேடினா, ‘இவங்ககிட்ட இந்த நெல் ரகம் இருக்கும்’னு ஒரு லிங்க் கிடைக்கும். அவங்களைத் தொடர்பு கொண்டேன். இப்படி 35 பாரம்பரிய ரகங்கள் சேகரிச்சேன்.
அந்தாண்டு மூன்று ஏக்கரில் இந்த 35 ரகங்களையும் விளைவிச்சேன். இதில் ஆத்தூர் கிச்சலி சம்பா ஆறரை அடி உயரம் வளர்ந்தது. இவ்வளவு உயரம் நெல் வருமானு எல்லோரும் ரொம்ப ஆச்சரியமாகப் பார்த்தாங்க.
பிறகு, நான் விவசாயத்துறையைத் தொடர்பு கொண்டு ‘இந்த மாதிரி பாரம்பரிய நெல் ரகம் போட்டிருக்கேன், வந்து பாருங்க’னு அழைச்சேன். வேளாண்மை துறையில் ரொம்ப சப்போர்ட் செய்தாங்க. அவங்க கலெக்டர் விஷ்ணு சாரையும் அழைச்சிட்டு வந்தாங்க. அவர் பார்த்துட்டு பாராட்டினார். பிறகு விதை விளைச்சல் போட்டியில் கலந்துகிட்டு 2022ம் ஆண்டு தமிழக முதல்வரிடம், ‘டாக்டர் எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர்‘ விருது வாங்கினேன். அடுத்ததா 35 பாரம்பரிய நெல் விதைகளுடன் நிறுத்தக்கூடாதுனு இன்னும் சேகரிக்க ஆரம்பிச்சேன். கடந்த ஆண்டு நூறு விதைகளைச் சேகரிப்பவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் மானியம் கொடுப்பதா சொன்னாங்க.
அப்ப எங்கிட்ட 72 விதைகள்தான் இருந்தது. மீதி 28 விதைகளை சேகரிக்க எல்லோரும் ஊக்கப்படுத்தினாங்க. பலர் உதவிகள் செய்தாங்க. ரொம்ப முயற்சி எடுத்து சேகரித்து 102 விதைகளாக்கினேன். இதனால் எனக்கு 3 லட்சம் ரூபாய் மானியம் கிடைச்சது. இப்ப, ‘பொதிகை உழத்தி விதை வங்கி’னு வச்சிருக்கேன்.
இங்க பாரம்பரிய நெல் ரகங்களை எல்லாம் மண்பாண்டங்களில் சேகரித்து வைக்கிறேன். இதனை ஒரு பட்டத்துல 20 எண்ணம்னு விளைவிக்கிறேன். அடுத்த பட்டம் வரும்போது இன்னொரு 20 விதைகள்னு ஒரு சுற்றுப்போல செய்திட்டு வர்றேன். என்னிடம் இப்ப, 120 ரகங்கள் இருக்கு.
இதுதவிர, விவசாயத்திற்காக நாட்டு மாடுகளையும் வளர்க்கறேன். என் வயலுக்குத் தேவையான பஞ்சகவ்யம் முதலான இயற்கை உரங்களையும் நானே தயாரிக்கறேன்...’’ என நம்மை ஆச்சரியப்படுத்துகிறவர், ‘வாழிய நிலனே’ உருவாக்கியது பற்றி தொடர்ந்தார். ‘‘இப்ப, எங்க பார்த்தாலும் நீர்நிலைகளையும், நிலத்தினையும் மாசுபடுத்துறாங்க.
நீர்நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கறாங்க. அதனால் நிலத்தினை பாதுகாக்கணும்னு தோணுச்சு. ஏற்கனவே ஜப்பானில் ‘ஸ்டார் வார்ஸ்’னு வயலில் நெல்லால் எழுதியிருந்தாங்க. அதேமாதிரி கேரளாவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’னு விதை நெல்லில் எழுதினாங்க.
நாமும் நிலம் சார்ந்து ஏதாவது பண்ணணும்னு நினைச்சப்ப இந்த ஐடியா கிடைச்சது. அதனால் புறநானூற்றுப் பாடல் ‘வாழிய நிலனே’னு பாரம்பரிய நெல் ரகங்களைக் கொண்டு விதைச்சேன்.
இதுக்கு நல்ல ரீச் கிடைச்சது. நிலத்தைப் பத்தி ஓர் அக்கறையும், புரிதலும் வரணும்னு நான் நினைச்சது நடந்தது. இந்த, ‘வாழிய நிலனே’ எழுத்துக்களை ‘சின்னார்’ என்கிற நெல் ரகத்தை வச்சு உருவாக்கினேன். இது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பரிய அரிசி ரகம். அதைச் சுற்றி இருக்கும் நெல் ரகத்தின் பெயர் நெல்லையப்பர். இது நான் மீட்டெடுத்த ரகம்.
செண்பகராமன் என்கிற பள்ளு இலக்கியத்தில் இந்த நெல் குறித்து சொல்லப்பட்டிருக்கு. இதனை வள்ளியூரில் ஒரு குதிரில் இருந்து கண்டெடுத்தேன். இது 45 ஆண்டுகளுக்கு முந்தைய நெல், முளைக்காதுனு சொன்னாங்க. ஆனாலும் நம்பிக்கையா நான்கு கிலோ எடுத்துப் போட்டேன்.
ஏழு நாத்துதான் முளைச்சது. இதிலிருந்து ஒரு பிடி நெல் கிடைச்சது. அதனை மூன்று ஆண்டுகளாக பாதுகாப்பாக் கொண்டு வந்து இப்ப நிறைய பேருக்கு விதை நெல்லாகக் கொடுக்கறேன். இதை சாப்பிடுவதற்கு ரொம்ப நல்லாயிருக்குனு சொன்னாங்க. இதற்கென தனிப்பட்ட வாடிக்கையாளர்களும் இருக்காங்க.
‘வாழிய நிலனே’ எழுத்தினை கயிறு கட்டி நடவு செய்தேன். இதுக்கு எனக்கு சேரன்மகாதேவி பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் நயினார் உதவினார். அவர் என்னிடம் அரிசி வாங்கும் வாடிக்கையாளர்.
அவரிடம் பேசிட்டு இருக்கும்போது இந்தத் திட்டம் பத்தி சொன்னேன். அவர் நிலத்தை வந்து பார்த்து அளந்து, ‘தமிழ் என்பதால் ஆறு வரி கோட்டில் எழுதுவது சிறப்பு’னு சொன்னார். இதற்கேற்ப ஒரு கிராப் போட்டோம். ஒரு எழுத்துக்கு எவ்வளவு இடைவெளி விடணும், எவ்வளவு போல்டாக இருக்கணும்னு எல்லாமே பார்த்து செய்தோம்.
15 நாட்களுக்குப் பிறகு தவறா வளர்ந்திருந்த இடங்களில் திருத்தினோம். 80 நாட்கள் கழித்து சிறப்பாக வந்தது. இதனை ட்ரோன் மூலம் எடுத்த புகைப் படங்கள் அத்தனை வைரலாச்சு.
இப்ப நான் அரிசி, அவல் எல்லாம் விற்பனை செய்றேன். எனக்கு திருப்பித் திருப்பி வாங்குகிற மாதிரி அறுபது வாடிக்கையாளர்கள் இருக்காங்க. அவங்களுக்கு சப்ளை பண்ணவே சரியா இருக்கு. இதுதவிர, 20 பேருக்கு வேலை கொடுத்திருக்கேன்.
நான் விவசாயத்தை லாப நோக்கில் செய்யல. சந்தோஷத்துக்காக மட்டுமே செய்திட்டு வர்றேன். இப்ப, நம் பாரம்பரிய ரகங்களை எல்லாம் வருங்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கணும்னு ஆசைப்படுறேன்...’’ என ஆத்மார்த்தமாகச் சொல்கிறார் லட்சுமிதேவி.
பேராச்சி கண்ணன்
|