ஆன்லைன், யூடியூப் விமர்சனங்களும் சினிமா பிசினஸும்!



நிகழ்வு 1

‘ஒரு திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு யூடியூப், எக்ஸ் என எந்தவிதமான சமூகவலைதளங்களிலும் சினிமா விமர்சனங்களை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்...’ என தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

டிசம்பர் 3, 2024 அன்று அந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிடத் தடைவிதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது. ‘அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம்’ என நீதிபதி சவுந்தர் தெரிவித்தார். 
‘விமர்சனம், கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது’ எனக் கூறி விமர்சனத்தை முறைப்படுத்த விதிகள் வகுக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள், யூடியூப் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டார். விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

நிகழ்வு 2

செப்டம்பர் 3, 2025 அன்று, இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கவுன்சிலான ஐஎஃப்டிபிசி (IFTPC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
இந்தியாவில் 375க்கும் மேற்பட்ட முன்னணி திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மையான அமைப்பே இந்த ஐஎஃப்டிபிசி. 

‘கடந்த சில ஆண்டுகளாக சமூக ஊடகச் செல்வாக்கு செலுத்துபவர்களில் சிலர் திரைப்படங்களுக்கு எதிராக தீங்கிழைக்கும் மற்றும் இழிவான விமர்சனங்களை வெளியிடுகின்றனர். இதை வைத்து தயாரிப்பாளர்களிடமிருந்து மிரட்டி பணம் பறிக்கும் செயலும் அதிகரித்துள்ளது.

ஐஎஃப்டிபிசியும் அதன் உறுப்பினர்களும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர்களல்ல. உண்மையான, ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்கின்றனர். ஆனால், சில நேர்மையற்ற நபர்களின் இந்தச் செயலால் இந்தியத் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் பொருளாதார நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முடிவு கட்டுவதற்கு அனைத்து வகையான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள IFTPC முடிவு செய்துள்ளது...’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

நிகழ்வு 3

சென்னையில் கடந்த செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் நடிகர் வடிவேலு பேசியது சர்ச்சையாகியுள்ளது.‘நமக்குள் கொஞ்சம் ஒற்றுமை குறைவாக உள்ளது. அனைவரிடமும் ஒற்றுமை வரவேண்டும். சமூக வலைதளங்களில் திரை உலகினரைப் பற்றி சிறியவர்கள், பெரியவர்கள் என்று கூட பார்க்காமல் தாறுமாறாகப் பேசுகிறார்கள். நம் ஆட்களிலேயே சிலர் அவர்களுக்குத் துணை போகிறார்கள். 

பத்து பேர் சேர்ந்து சினிமாவையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தவறாகப் பேசுபவர்களுக்கு ‘ஆப்பு’ வைக்க வேண்டும். நம்மைத் தூங்க விடாமல் செய்யும் அவர்களை தூங்கவிடக் கூடாது. அவதூறு கருத்துகளைப் பரபரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை...’ என காட்டமாகப் பேசினார் வடிவேலு. 

இந்த மூன்று நிகழ்வும் சாம்பிள்தான். உண்மையில் விஷயம் பெரியது. எனவேதான் அண்மைக்காலமாக இணையதளங்கள், யூடியூப் திரைவிமர்சனங்களுக்கு எதிராக பலரும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.உண்மை என்ன..? சிலரிடம் உரையாடினோம்.

ராகேஷ் (வெற்றி திரையரங்கம், குரோம்பேட்டை)

ஆன்லைன் மற்றும் யூடியூப் விமர்சனங்களால் கண்டிப்பாக பாதிப்பு இருக்கிறது. புதுமுகங்கள் நடிக்கும் படங்கள் நன்றாக இருக்கும்போது, அதைக் குறித்து விமர்சனம் செய்கிறவர்கள் நேர்மறையாக விமர்சிக்கும் போது அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. உதாரணத்துக்கு ‘லப்பர் பந்து’ படத்தைக் குறிப்பிடலாம்.அந்தப் படம் பார்த்தவர்கள் படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னவுடன் அது மக்கள் மத்தியில் பரவி படம் வெற்றியடைந்தது.

சமீபத்தில் வெளியான உச்ச நடிகர் நடித்த படத்துக்கு இரண்டாம் நாளிலேயே சோஷியல் மீடியாவில் எதிர்மறையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், படம் வெளியான இரண்டாவது நாள், மூன்றாவது நாளில் நிறைய ஃபேமிலி ஆடியன்ஸ் படம் பார்த்துவிட்டு ‘விமர்சகர்கள் விமர்சித்த அளவுக்கு படம் மோசம் கிடையாது. படம் நன்றாக இருக்கிறது’ என்றார்கள். மட்டுமல்ல, ‘யூடியூப் விமர்சகர்கள் ஏன் இவ்வளவு நெகடிவ் கமெண்ட்ஸ் தருகிறார்கள்’ என்றும் கேட்டார்கள். 

தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து விமர்சனம் செய்வது சரியான முன்மாதிரி கிடையாது. ஏனெனில் விமர்சகர்கள் சொல்வதை ரசிகர்கள் நம்புகிறார்கள். விமர்சனம் செய்கிறவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் தியேட்டருக்கு வருகிறார்கள். நெகட்டிவாக சொன்னால் வருவதில்லை. அந்த வகையில் விமர்சனங்கள் படத்தின் பிசினஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது.

அம்பேத்குமார் (தயாரிப்பாளர்)

படத்தோட கன்டென்ட் சரியாக இருந்தால் யார் என்ன விமர்சனம் செய்தாலும் அது படத்தை பாதிக்காது. எந்தவொரு தனி நபரின் விமர்சனமாக இருந்தாலும், பொது ஊடகங்களாக இருந்தாலும் ஆடியன்ஸ் படத்தோடு கனெக்ட் ஆகிவிட்டால் அது படத்தின் வெற்றியை பாதிக்காது. ஒரு திரைப்படம் நூறுசதவீதம் பொழுது போக்கு அம்சங்களுடன் இருந்தால் அது சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும், பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் நூறு சதவீதம் வெற்றிகரமாக ஓடும்.

என்னுடைய ‘ஒலிம்பியா மூவிஸ்’ தயாரித்த படங்களில் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும். ‘மனம் கொத்தி பறவை’, ‘டாடா’, ‘டிஎன்ஏ’ போன்ற படங்களில் கதைக்கு முக்கியத்துவம் இருந்துள்ளதை கவனித்திருக்கலாம். விரைவில் வெளிவரவுள்ள ‘மை லார்ட்’ படமும் கதைக்கு முக்கியத்துவமுள்ள படம்தான். தனிப்பட்ட விதத்தில் என்னுடைய நிறுவன படங்களுக்கு இந்தப் பிரச்னையை நான் சந்திக்கவில்லை.

செய்யாறு பாலு (யூடியூப் விமர்சகர்)

மீடியா வளர்ச்சி மின்னல் வேகத்தில் வளர்ந்துள்ளது. பத்து யூடியூபர் செய்வது மட்டுமே விமர்சனம் கிடையாது. ஆண்ட்ராய்டு போன் வைத்துள்ள ஒவ்வொரு ரசிகர்களும் மீடியாவாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். 

பிரிண்ட் மீடியா காலத்தில் ஒரு படம் பற்றி விமர்சனங்கள் முரணாக இருந்தால் சம்பந்தப்பட்ட டீம் கேள்வி கேட்பார்கள், சிலர் சண்டை போடுமளவுக்கு எல்லை மீறுவார்கள். அந்தக் காலம் மாறிவிட்டது. கன்டென்ட்  நன்றாக இருந்தால் ஆடியன்ஸ் கொண்டாடுவார்கள். 

இப்போது ஒவ்வொரு ரீலுக்கும் ஆடியன்ஸ் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இடைவேளைக்கு முன், இடைவேளைக்கு பின் விமர்சனம் என வந்துவிட்டது. விமர்சகர்கள் யூடியூப்பில் பேசும்போது தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

ஆனால், அது மொத்த சினிமாவை பாதிக்காது. சமீபத்தில் நடந்த நடிகர் சங்க கூட்டத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் ‘சினிமா வட்டாரத்திலேயே நடிகர்களுக்கு எதிராக சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது’ என்று பேசியிருந்தார். 

பணம் கொடுத்து ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வருவது இப்போது பெரிய சவால். அப்படி தியேட்டருக்கு வரும் ரசிகர்களை சினிமா எங்கேஜ் செய்ய வேண்டும். அது நடக்காதபோது ரசிகர்கள் விரக்தியில் தங்கள் கருத்துக்களை பதிவிடுகிறார்கள். 

ஆர்.கண்ணன் (இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்)

விமர்சனங்கள், கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் தங்களுடைய தளத்தின் வளர்ச்சிக்காக, வியூஸ்க்காக அல்லது தங்கள் அறிவுத்திறனை வெளிப்படுத்துவது போலவே பெரும்பாலான விமர்சனங்கள் உள்ளன.

ஒரு படத்தை முதல் முறை பார்த்ததுமே அதன் நிறைகுறைகளை சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. படம் வெளியான மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகே ஒரு படத்தின் நிறை குறைகளை சொல்ல முடியும்.

படம் பார்க்கும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், தொழில்முறை விமர்சகர்கள் கவனமாக விமர்சிக்க முன்வர வேண்டும். 

சினிமா எப்போதும் ஒரு பொழுதுபோக்கு தளம்தான். அதை அறிவுக் களஞ்சியமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. மனதைக் காயப்படுத்தும் அளவுக்கு வன்மத்தை வெளிப்படுத்துவது சரியல்ல. 

இப்போது சினிமா மிகவும் கடினமான காலகட்டத்தில் இருக்கிறது. ஒரு படத்துக்கு ஃபைனான்சியர் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. லாபமற்ற தொழிலாக சினிமா மாறிய நிலையில் விமர்சனம் செய்கிறவர்கள் தோள் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். மாறாக படத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விமர்சனம் செய்வதை பாவச் செயலாகத் தான் கருத வேண்டும். 

நந்தகோபால்  (செயலாளர், சென்னை-செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்கம்)

நெகட்டிவாக முன்வைக்கப்படும் விமர்சனங்களால் கண்டிப்பாக சினிமாவுக்கு பெரிய பாதிப்பு உண்டு. விமர்சனம் என்கிற பெயரில் கீழ்த்தரமாக பேசுகிறார்கள்.
‘இந்தப் படத்தை இந்த மாதிரி முயற்சி செய்திருக்கலாம்... இந்த இடத்தில் இது தேவையில்லை...’ என்று கண்ணியமாக விமர்சனம் செய்த காலம் உண்டு.

‘சன் டிவி’யில் டாப் டென் படங்கள் என்று அழகாக ஒரு படத்தை அதன் நிறை குறைகளை யாரும் பாதிக்கப்படாத அளவுக்கு விமர்சனம் செய்வார்கள். இப்போது ஆன்லைனில் விமர்சனம் செய்பவர்களோ, ‘தியேட்டர் பக்கமே போயிடாதீங்க, பணம் வீண்’ என்கிறார்கள். இது மிகவும் தவறான செயல். சில விமர்சகர்கள் மில்லியன் அளவில் சந்தாதாரர்களை வைத்திருக்கிறார்கள். இவர்கள் விமர்சனம் செய்யும் படங்கள் சில நேரங்களில் பெரிய அளவில் ஹிட்டாகிறது. 

ஆவரேஜ் படங்களுக்கு விமர்சனம் செய்யும் போது அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெரிய படங்களுக்கு எந்தவொரு பிரசாரமும் பயனளிக்காது. ஆனால், ஆவரேஜ் படங்களுக்கு விமர்சனம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.சினிமா என்பது பெரிய தொழில். ஒரு சிலர் செய்கிற பொறுப்பற்ற செயலால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படுகிறது.  

சீனு ராமசாமி (இயக்குநர்)

விமர்சனத்தால் பெரிய  படங்களுக்கு வேண்டுமென்றால் பாதிப்பு இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை சிறிய படங்களின் வெற்றிக்கு விமர்சனங்கள் பெரிதும் உதவுகின்றன. 
விமர்சனம் என்றால் படத்தைப் பார்க்கத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். இப்பொழுது அது தனிநபர் தாக்குதலாக இருப்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். இது கவலையளிக்கும் விஷயம். மற்றபடி விமர்சனம் இல்லையென்றால் எந்தவொரு கலையும் வளராது. 

எஸ்.ராஜா