வரி... விசா... அமெரிக்கா... டொக்கில் இந்திய டெக் தொழிலாளர்கள்!



அமெரிக்க அதிபர் டிரம்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு ஒயிட் காலர் தொழிலாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.அமெரிக்காவிலுள்ள ஐடி கம்பெனிகளில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டுத் தொழிலாளருக்காக அந்நாட்டு அரசு வழங்கும் விசாவின் பெயர்தான் எச் 1பி.

இந்த விசா தொடர்பாக டிரம்ப் கெடுபிடி காட்டியிருப்பது மிகப்பெரிய அளவில் இந்திய டெக் தொழிலாளர்களைக் கலங்கடித்திருக்கிறது.கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் பல வாக்குறுதிகளை அமெரிக்க மக்களிடம் அள்ளி வீசினார். அதில் முதன்மையானது ‘மகா’ (MAGA) என சுருக்கமாக அழைக்கப்படும், அமெரிக்காவை மீண்டும் ஒரு சிறந்த நாடாக உயர்த்துவது - Make America Great Again - எனும் அறிவிப்பு.

இதில் முக்கியமானது அமெரிக்க குடிமகன்களுக்கு முன்னுரிமை கொடுத்து அந்நாட்டை மீண்டும் முன்னேற்றப் பாதையில் செலுத்துவது.அதன் அடிப்படையில்தான் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக அவர் பதவியேற்றது முதல் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இதில் முதன்மையானதுதான் வெளிநாடுகள் மேல் விதித்த அதிகபட்சமான ஏற்றுமதி வரி. அதிலிருந்து மீள்வதற்குள்ளேயே மீண்டும் ஓர் இடியாக இப்போது விசா மேல் அவர் கைவைத்திருக்கிறார்.

எச் 1பி விசா என்றால் என்ன?

1990ம் ஆண்டு முதல் இந்த எச் 1பி விசா முறை அமெரிக்காவில் அமலில் இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் ஒரு ஐடி நிறுவனம் வெளிநாட்டினரை வேலைக்கு வைத்துக் கொள்வதற்காக அந்தப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு விசாவே இந்த எச் 1பி.இந்த விசா ஒரு வெளிநாட்டுத் தொழிலாளருக்கு கொடுக்கப்படவேண்டுமென்றால் அந்த நிறுவனம் சில விதிகளைப் பின்பற்றவேண்டும். அதில் முதன்மையானது, அந்த வெளிநாட்டுத் தொழிலாளி அவர் செய்யப்போகும் தொழிலில் அமெரிக்க தொழிலாளர்களைவிட திறன் வாய்ந்தவராக இருக்கவேண்டும் என்பது.

இத்தோடு அந்த விசாவுக்காக குறிப்பிட்ட அந்த ஐடி கம்பெனி மிக சொற்பமான ஒரு தொகையையும் அரசுக்கு செலுத்தவேண்டும். அதாவது ஆயிரம் டாலர். நம்மூர் மதிப்பில் ரூ.88 ஆயிரம்.

இந்த விதியை டிரம்ப் இப்பொழுது மாற்றியிருக்கிறார். இனி வெளிநாட்டு ஊழியரை பணிக்கு அமர்த்தும் அமெரிக்க ஐடி நிறுவனம், அரசுக்கு சுமார் ஒரு லட்சம் டாலர்களை - அதாவது ரூ.88 லட்சம் செலுத்தினால்தான் எச் 1பி விசா வழங்கப்படும்.

இதற்குத்தான் அமெரிக்க ஐடி நிறுவனங்களும், அமெரிக்காவுக்கு பணிக்குச் செல்லும் வெளிநாட்டினரும் - குறிப்பாக இந்தியர்கள் - எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பொதுவாக இந்த விசா ஒருவருக்கு மூன்று வருடங்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்காக வழங்கப்படும். 

தேவைப்பட்டால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.
இக்காலத்தில் இந்தத் தொழிலாளர்கள் அமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்குவதற்கு தேவைப்படும் விசாவான ‘க்ரீன் கார்ட்’ எனும் அனுமதிக்கு விண்ணப்பம் செய்வார்கள். அதை வாங்கியும் விடுவார்கள்.

பொதுவாக வருடத்துக்கு 65 ஆயிரம் எச் 1பி விசாவை அமெரிக்கா வழங்குகிறது. இதுதவிர 25 ஆயிரம் விசாக்கள் அமெரிக்காவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. 

படித்து முடித்ததும் இந்த மாணவர்கள் அமெரிக்காவிலேயே வேலை தேடிக் கொள்ளலாம்; க்ரீன் கார்டும் பெறலாம்.இப்படி 1990 முதல் அமெரிக்காவுக்கு எச் 1பி விசா வழியாகச் சென்ற ஐடி தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 75% பேர் இந்தியர்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.

ஒருகாலத்தில் மேனுஃபேக்சரிங் எனும் உற்பத்தித் துறையில் அமெரிக்காவின் மத்திய மாகாணங்கள் கோலோச்சின. உலகளவில் நம்பர் ஒன் ஆகத் திகழ்ந்தன.ஆனால், இன்று சேவைத் துறையே முதன்மையாக இருக்கிறது. 

உற்பத்தித் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.அப்படி இன்று கோலோச்சும் சேவைத் துறைக்கு துணையாகத்தான் அமெரிக்காவில் ஐடி துறைகள் இயங்குகின்றன. இந்த ஐடி துறையில்தான் இந்திய கம்பெனிகளும், இந்தியத் தொழிலாளர்களும் ராஜாவாக வலம் வருகிறார்கள்.

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அமெரிக்க ஐடி தொழிலாளரை விட திறமையில் இந்திய ஐடி பணியாளரே மேலோங்கி நிற்கிறார். அதனால் உயர் பொறுப்பிலும் இந்தியர்களே அமர்கிறார்கள்.‘‘ எச் 1பி விசாவில் இந்தியர்கள் அதிகம் அமெரிக்காவுக்குச் செல்கிறார்கள் என்பது உண்மைதான்...’’ என்று பேச ஆரம்பித்தார் சென்னை லயோலா கல்லூரி பேராசிரியரும், புலம்பெயர் தொழிலாளர் தொடர்பான ஆய்வாளருமான பெர்னார்ட் டி சாமி.

‘‘உதாரணமாக கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவுக்கு சென்ற வெளிநாட்டு ஐடி தொழிலாளர்களில் இந்தியர்களின் பங்கு 71 சதவீதம். எண்ணிக்கையில் சொன்னால் சுமார் 3 லட்சத்து 99 ஆயிரத்து 395 பேர்.இந்த எச் 1பி விசா குறித்து டிரம்ப் சொன்ன குற்றச்சாட்டுகளை கவனித்தால் அவர் ஏன் அந்த விசாவுக்கு தடை விதிக்கிறார் என்பதைப் புரிந்து
கொள்ளலாம்.

அமெரிக்காவில் இயங்கும் இந்திய மற்றும் பன்னாட்டு ஐடி கம்பெனிகள் அமெரிக்காவின் எச் 1பி விசா விதிப்படி திறனான தொழிலாளர்களை வேலைக்கு எடுத்தாலும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியம் மிகக் குறைவு என்பதுதான் டிரம்பின் முதல் குற்றச்சாட்டு.

உதாரணமாக இந்த ஐடி கம்பெனிகள் வருடத்துக்கு வெறும் 60 ஆயிரம் டாலர்களைத்தான் அடிமாட்டு ஊதியமாக வழங்குகின்றன... உண்மையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டாலரை அந்தக் கம்பெனிகள் திறனுள்ள தொழிலாளருக்கு ஊதியமாக வழங்கியிருக்க வேண்டும் என்கிறார்.இதுநாள் வரை பலரும் சொல்லும் குற்றச்சாட்டுக்கு இது வலுசேர்க்கிறது. 

அமெரிக்காவில் திறன் இல்லாததால்தான் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துகிறோம் என்பதில் ஓரளவுக்குத்தான் உண்மை இருக்கிறது.அமெரிக்காவில் ஒரு தொழிலாளியின் உரிமை என்ன என்பது பற்றி நன்கு தெரிந்தவராக அமெரிக்க தொழிலாளர் இருக்கிறார். 

அவர்களிடம் குறைந்த கூலி கொடுத்து வேலை வாங்கமுடியாது. இதனால்கூட அமெரிக்க ஐடி நிறுவனங்கள் கூலி பற்றி வாய் திறக்காத இந்தியத் தொழிலாளர்களை அதிகம் வேலைக்கு எடுக்கிறார்களோ என்ற சந்தேகமும் பலருக்கு உண்டு.

எப்படி இருந்தாலும் பல ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த பிரச்னையை கொஞ்சம் கொஞ்சமாக தீர்ப்பதற்கு பதிலாக தடாலென்று முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார் டிரம்ப். இது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்...’’ என பெர்னார்ட்  டி சாமி முடிக்க, இந்த வரிப் போர், மூன்றாம் உலகப் போருக்கு சமமானது என்கிறார் அரசியல் விமர்சகர் 
சுகி வெங்கட்.

‘‘1940 முதல் 1970 வரை அமெரிக்கா மற்ற நாடுகளைவிட உற்பத்தித் துறையில் மேலோங்கி - அதாவது முதலிடத்தில் இருந்தது. ஆனால், 1970களில் நடந்த கொரிய, வியட்நாம் போர்கள் அமெரிக்காவின் உற்பத்தித் துறையைப் பாதித்தது.இந்நேரத்தில் தங்கம், பெட்ரோல் என தன் பொருளாதாரத்தை அமெரிக்கா மாற்றி அமைத்தது. இதனாலும் சரியத் தொடங்கிய அமெரிக்க பொருளாதாரத்தை நிமிர்த்த முடியவில்லை.

இக்கால கட்டத்தில்தான் அமெரிக்காவின் வேலைகளை சீனா செய்துகொடுக்கும் அவுட்சோர்சிங் முறை உருவானது. இதனால் அமெரிக்காவில் வேலை என்பதே இல்லாமல் போனது. இப்படியான வேலை இழப்பிலிருந்து மீளவே டிரம்ப் முயற்சிக்கிறார்.ஆனால், இது ஆசை மட்டுமே. 

நடைமுறை வேறாக இருக்கிறது. அமெரிக்காவில் ஐடி துறையில் இருக்கும் இந்தியக் கம்பெனிகளும், இந்தியத் தொழிலாளர்களும் யாருக்கு வேலை செய்கிறார்கள்? அமெரிக்காவில் உள்ள பெரிய பன்னாட்டு முதலாளிகளுக்குத்தானே? பன்னாட்டு முதலாளிகளுக்கு லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும்.

அமெரிக்காவில் மத்திய அமெரிக்கா எனச் சொல்லப்படும் பகுதி இருக்கிறது. இப்பகுதி வேலையின்மையால் திண்டாடுகிறது. இந்த மத்திய அமெரிக்காவில் இருக்கும் குட்டி முதலாளிகள்தான் டிரம்புக்கு ஆதரவானவர்கள்.‘உள்ளூர் தொழிலை சிறக்க வைக்கவேண்டும். 

உள்ளூர் ஆட்களுக்கு வேலை வேண்டும்’ எனச் சொல்பவர்களும் இவர்களே.என்ன பிரச்னை என்றால்... டிரம்ப் பதவியேற்றதும் அரசுத் துறையில் உள்ள வேலைகளை எல்லாம் வீணான செலவுகள் என குறைத்துள்ளார். இதன் அடிப்படையில் பார்த்தால் உள்ளூர் ஆட்களுக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

பன்னாட்டு முதலாளிகள், உள்ளூர் முதலாளிகள் என அமெரிக்காவில் பிரிந்துகிடக்கிறார்கள். பன்னாட்டு முதலாளிகளுடன் ஒப்பிடும்போது உள்ளூர் முதலாளிகள் சிறு துரும்பாக இருப்பார்கள்.

உள்ளூர் முதலாளிகளுக்கு ஆதரவாக நிற்கும் டிரம்பால் பன்னாட்டு முதலாளிகளை சமாளிக்க முடியுமா என்பதும் கேள்விக்குறிதான்.

இந்தியா மேல் அதிக வரி, இந்தியர்கள் அதிகம் இருக்கும் ஐடி துறைக்கு கட்டண உயர்வு... என அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கையைப் பார்க்கும்போது ஒன்று புரிகிறது.

அமெரிக்காவின் வர்த்தகத்தில் இந்தியா இடம்பிடிக்கவில்லை. அமெரிக்க பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு முக்கியமானது. அதனால்தான் வரி மற்றும் பல விஷயங்களில் சீனா மேல் மென்மையாக அமெரிக்கா இருக்கிறது.

இந்தியா இந்த விஷயத்தில் பலவீனமாக இருப்பதால்தான் அமெரிக்கா அவ்வப்போது இந்தியாவை மிரட்டுகிறது.ஐடி மற்றும் எஞ்சினியரிங் கல்லூரிகளை ஏன் இந்தியா பெரிய அளவுக்கு கொண்டுவந்தது? ஒரு தொழில்வளர்ச்சி நாடாக நாம் உயரவேண்டும் என்பதற்காகத்தானே?

ஆனால், இது நடக்கவில்லை. இதைச் செய்யவேண்டியவர்கள் அமெரிக்காவுக்கு குறைந்த ஊதியத்துக்காக சேவை செய்கிறார்கள். இப்படிச் செய்தால் அவர்களால் அங்கேயும் நிம்மதியாக வாழமுடியாது. இதற்கு சான்றாகத் திகழ்கிறது டிரம்பின் அதிரடி அறிவிப்புகள்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் சுகி வெங்கட்.

டி.ரஞ்சித்