தாத்தா ஒரு கதை சொல்லுங்க...



-தாத்தா...
- என்ன மா...
- ஒரு கதை சொல்லுங்க...

- ஒரு ஊர்ல ஒரு கோமாளி ராஜா இருந்தாராம். தினமும் அவருக்கு முன்னாடி ஒரு பத்து பேர கொண்டு போய் நிப்பாட்டுவாங்களாம்.
அந்தப் பத்து பேரும் ஒவ்வொருத்தரா ராஜா முன்னாடி போய் நின்னு எதுனா ஜோக் சொல்லி அந்த ராஜாவ சிரிக்க வைக்கணும். ராஜா சிரிச்சிட்டா ஜோக் சொன்னவன் தலை தப்பிச்சது. இல்ல சிரச்சேதம்தான். 

அன்றைக்கும் அப்படித்தான் புதுசா ஒரு பத்து பேர் வந்து நின்னாங்க.முதலாவதா ஒருத்தன் ஜோக் சொன்னான். ராஜா சிரிச்சிட்டாரு. அவன் தல தப்பிச்சது. ரெண்டாவது, மூணாவது, நாலாவதா சொன்ன ஆளுங்களும் ராஜாவ சிரிக்க வெச்சிட்டதால அவங்க தலைகளும்  தப்பிச்சது.இப்ப அஞ்சாவது ஆளு ஜோக் சொல்லிட்டாரு. ராஜாவுக்கு சிரிப்பு வரல. அதனால அந்த அஞ்சாவது ஆள உடனே சிரச்சேதம் பண்ணிட்டாங்க...
- ஐயோ... அப்புறம் தாத்தா..?

- அப்புறம் ஆறாவது ஆள் முறை. அந்த ஆறாவது ஆள் ராஜா முன்னாடி வந்து நிக்கிறதுக்கு முன்னாடியே ராஜா கபகபன்னு விழுந்து விழுந்து சிரிக்கிறாரு... 

சபைல சுத்தி நிக்கிறவங்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சர்யம். அந்த ஆச்சர்யம் விலகாமலேயே அந்த சபைல இருந்த ஒருவர், ‘மரியாதைக்குரிய ராஜாவே... அந்த நபர் இன்னும் ஜோக் சொல்லல. ஆனா, அதுக்குள்ள சிரிச்சிட்டீங்களே’ன்னு கேட்டார்.

அதுக்கு அந்த ராஜா... ‘தெரியும்... தெரியும்... ஆனா, நான் சிரிச்சது அந்த அஞ்சாவது நபர் சொன்ன ஜோக்குக்கு’னு சொன்னாராம்...
- ஐயோ பாவம் தாத்தா அந்த அஞ்சாவது ஆளு... ஆமா... அந்த ராஜா இன்னமும் இருக்காரா தாத்தா..?

- இருக்காரும்மா...

- இருக்காரா... அவரு இப்ப என்ன பண்ணிட்டு இருக்காரு..?

- ஒரு புது வரி விதிப்பை அமல்படுத்தி கடந்த ஏழெட்டு வருஷங்களா மக்களை பிதுக்கு பிதுக்குன்னு பிதுக்கி எடுத்துட்டு இப்ப கொஞ்சம் வரியை குறைச்சிட்டு ‘எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க... வரியை குறைச்சிட்டேன்’னு சொல்லிட்டு அவருக்கு அவரே ஹை ஃபை பண்ணிட்டு திரியுறாரு...

பொம்மையா முருகன்