மங்களூர் பாயா!



சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘குமார சம்பவம்’ படம் மூலம் கோலிவுட்டிற்குக் கிடைத்த புதுவரவு நடிகை பாயல் ராதாகிருஷ்ணா. ஏற்கனவே தெலுங்கில் நான்கைந்து படங்களில் நடித்து ரசிகர்களின் அப்ளாஸை அள்ளியவர். இப்போது தமிழில் தனது பாய்ச்சலைச் செலுத்தி வருகிறார். 

‘‘பூர்வீகம் மங்களூர். அப்பா ராதாகிருஷ்ணா, கொங்கணி. அம்மா சேத்தனா, துளு. என்னுடைய படிப்பை மைசூரில் முடிச்சேன். அம்மா கிளாசிக்கல் டான்ஸர். பரதநாட்டியப் பள்ளியை மங்களூர், மாண்டியா, மைசூர் பகுதிகளில் நடத்திட்டு வர்றாங்க. அவங்களைப் பார்த்து நானும் பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். பிறகு மும்பையில் ஆக்டிங் கிளாஸ் படிச்சேன். அப்படியே மாடலிங், விளம்பரப் படங்களில் நடிப்பதுமா இருந்தேன். 

சென்னைக்கு விளம்பரப் படங்களுக்காக நிறைய முறை வந்திருக்கேன். த்ரிஷா மேடம், ஊர்வசி மேடம் கூட எல்லாம் நடிச்சிருக்கேன். அப்புறம், டோலிவுட்டில் வாய்ப்பு 

கிடைச்சது.  அங்க, ‘தாரகாதி காதி தாதி’ என்ற வெப்சீரிஸில் அறிமுகமானேன். என்னுடன் ஹீரோ ஹர்ஷித்தும் அறிமுகம். அடுத்து, ‘பிரசன்ன வதனம்’, ‘ஆலா நின்னு சேரி’, ‘செளரிய பாதம்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோயினா நடிச்சேன். 
தொடர்ந்து தெலுங்கில் வாய்ப்புகள் வந்துச்சு. அங்க இப்ப, ‘பாப்பம் பிரதாப்’னு ஒரு படம் பண்ணி முடிச்சிருக்கேன்.  இதுக்கிடையில் கன்னடத்தில் ஒரே ஒரு படம் பண்ணினேன். அது அவார்டு மூவி மாதிரி இருக்கும். தமிழில், ‘குமார சம்பவம்’தான் எனக்கு முதல்படம்...’’ என்கிற, பாயலுக்கு தமிழ் உச்சரிப்பு அத்தனை சுலபமாக வருகிறது.   

‘‘இந்தப் படத்தின் வாய்ப்பு எனக்கு ஒரு காஸ்டிங் சினிமா கம்பெனி மூலம் கிடைச்சது. அவங்கதான் என்னுடைய புகைப்படங்களை எல்லாம் பார்த்திட்டு கேட்டாங்க. பிறகு, இயக்குநர் பாலாஜி வேணுகோபால் சார் ஆடிஷன் வச்சார். ஒரு சின்ன டயலாக்கை போன்ல வீடியோவாக பேசி அனுப்பி வைக்கச் சொன்னார். அப்புறம் சென்னைக்கு அழைத்து போட்டோ ஷூட் பண்ணினாங்க. அந்த பவித்ரா கேரக்டருக்கு ஏத்தமாதிரி சரியாகப் பொருந்தினதால இயக்குநர் செலக்ட் பண்ணினார். 

அப்போ, எனக்கு தமிழ்ல ‘வணக்கம்’ மட்டும்தான் சொல்ல வரும். அப்புறம் பல்வேறு படங்கள் பார்த்துப் பார்த்து, எல்லாரிடமும் பேசிப் பேசியே தமிழைக் கத்துக்கிட்டேன். எனக்கு கன்னடமும், ஆங்கிலமும் நல்லா தெரியும். அதை வச்சு மேனேஜ் பண்ணிக்கிட்டு அவங்க உச்சரிப்பைக் கவனமாகப் பார்த்து தமிழைப் பழகினேன். 

இப்ப அடுத்த படத்தில் என்னால் தமிழில் தனியாக டப்பிங் பேச முடியும்!’’ எனத் தலைகோதி சிரிப்பவருக்கு தமிழில் த்ரிஷாவையும், நயன்தாராவையும் ரொம்பப் பிடிக்குமாம். 
‘‘நயன்தாரா மேடம் மாடலாக ஜர்னியைத் தொடங்கி இன்னைக்கு சக்சஸ்ஃபுல் நடிகையாக இருக்காங்க. அதேபோல் த்ரிஷா மேடமும் சிறப்பா பண்றாங்க. இவங்களைப் பார்த்து ரொம்ப இம்ப்ரஸ் ஆகியிருக்கேன். 

அதேபோல் நடிகர்களில் விஜய் சார், அஜித் சார், தனுஷ் சார், சிவகார்த்திகேயன் சார் ஆகியோரை ரொம்பப் பிடிக்கும். விஜய் சார் கூடவும், அஜித் சார் கூடவும் ஒரு படமாவது நடிக்கணும்னு ஆசையிருக்கு. 

அந்த ஆசை நிறைவேறும்னு நம்புறேன். நான் சின்ன ஹீரோ, பெரிய ஹீரோனு எல்லாம் பார்த்து நடிக்கமாட்டேன். எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கவே ஆசைப்படறேன். எனக்கு அந்த கேரக்டர் பிடிக்கணும். அவ்வளவுதான். எல்லா மொழிகளில் உள்ள ஹீரோக்களுடனும் நடிக்கும்போது நமக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கும்.

‘குமார சம்பவம்’ படத்துல ஹீரோ குமரன் கூட நடிச்ச அனுபவம் அலாதியானது. எனக்கு தமிழில் எப்படி பேசணும்னு சொல்லிக் கொடுத்தார். ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய சப்போர்ட் பண்ணினார்...’’ என்கிற பாயலுக்கு செல்லப் பிராணிகள் என்றால் அத்தனை உயிர். ‘‘எங்களுக்கு மங்களூர்ல எஸ்டேட் இருக்கு. 

அங்கே பசுமாடுகள், பறவைகள் எல்லாம் வளர்க்கிறோம். ஷூட்டிங் இல்லாதப்ப அங்கதான் இருப்பேன். அப்புறம், ஒரு குட்டி நாய் இருக்கு. அதுகூட விளையாடுவேன். எனக்கு ஒரு தம்பி இருக்கான். அவனுடன் விளையாடி நேரத்தைக் கழிப்பேன்...’’ என்கிற பாயல் ராதாகிருஷ்ணா, இப்போது தமிழில் அடுத்தடுத்து கதைகளைக் கேட்டு வருகிறார். 

ஆர்.சந்திரசேகர்