அஜித்துக்கு டஃப் கொடுக்கும் 10 வயது காஷ்மீர் சிறுமி!
உலகளவில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் ஒரு விளையாட்டு, கார் பந்தயம். இந்நிலையில் ஒரு பெண், அதுவும் பத்து வயதான சிறுமி ஒருவர் கார் பந்தயங்களில் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து வருகிறார். இந்தியாவைச் சேர்ந்த அந்தச் சிறுமியின் பெயர், ஆதிகா மீர். வாழ்க்கையில் ஒருமுறையாவது கார் ஓட்ட வேண்டும் என்பது பல இந்தியப் பெண்களின் கனவாக இருக்கும் சூழலில், ஆதிகாவின் சாதனைகள் பெண்களுக்கு உந்துதலளித்து வருகிறது.
 சமீபத்தில் ‘டிஸ்கவர் யுவர் டிரைவ்’ எனும் சிறப்புமிகுந்த திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறார் ஆதிகா. கார் பந்தயங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காகவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் ‘ஃபார்முலா ஒன் அகாடமி’யால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம்தான், ‘டிஸ்கவர் யுவர் டிரைவ்’.
 மைதானத்துக்குள் மட்டுமல்லாமல், வெளியேயும் கார் பந்தயங்களின் மீதான ஆர்வத்தைப் பெண்களிடம் தூண்டுவதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். கார் பந்தயம் உட்பட பலவிதமான மோட்டார் ஸ்போர்ட்ஸ்களில் தங்களது எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான உந்துதலையும், வழிகாட்டலையும் பெண்களுக்கு வழங்குவதுதான் இதன் முக்கியப் பணி.
மோட்டார் ஸ்போர்ட்ஸில் தங்களது திறமையை நிரூபிக்கும் பெண்களுக்கு மட்டுமே ‘டிஸ்கவர் யுவர் டிரைவ்’ திட்டத்தில் பங்குபெற வாய்ப்பு கிடைக்கும். சமீபத்தில் இந்தத் திட்டத்தில் பங்குபெறுவதற்காக உலகளவில் மோட்டார் ஸ்போர்ட்ஸில் சிறந்து விளங்கும் மூன்று பெண்களைத் தேர்வு செய்தனர். இதில் ஆதிகாவும் ஒருவர். ‘டிஸ்கவர் யுவர் டிரைவ்’ திட்டத்தில் பங்குபெறுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய மற்றும் ஆசியப் பெண்ணும் இவரே.
யார் இந்த ஆதிகா மீர்?
‘‘நவீன ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் போட்டியிடும் முதல் பெண்ணாக இருக்க வேண்டும் என்பது எனது கனவு...’’ என்கிற ஆதிகா, ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரமான நகரில் பிறந்தவர். சிறு குழந்தையாக இருந்தபோதே, ஆதிகாவின் குடும்பம் துபாய்க்கு இடம்பெயர்ந்துவிட்டது.
ஆதிகாவின் தந்தையான ஆசிப் நசீர் மீர் ஒரு புகழ்பெற்ற கார் பந்தய வீரர். இந்தியாவில் நடந்த தேசிய அளவிலான கார்ட் ரேஸிங் எனும் மோட்டார் ஸ்போர்ட்ஸில் சாம்பியன் பட்டம் பெற்றவர் இவர். மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆதிகாவின் குரு ஆசிப்தான். அப்பாவைப் போலவே மகளும் கார்ட் ரேஸிங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஃபார்முலா ஒன் மாதிரியான சிறப்பு வாய்ந்த கார் பந்தயங்களில் கலந்துகொள்வதற்கான முதல் படிக்கட்டே கார்ட் ரேஸிங்தான்.
அயர்டன் சென்னா, ஷூமேக்கர், லீவிஸ் ஹேமில்டன் போன்ற புகழ்பெற்ற கார் பந்தய வீரர்கள் எல்லாம் கார்ட் ரேஸிங்கில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு வயதிலேயே கார்ட் ரேஸிங்கில் களமிறங்கிவிட்டார், ஆதிகா. 2022 - 23ல் நடந்த ‘யுஏஇ ஐஏஎம்இ நேஷனல் கார்ட்டிங் சாம்பியன்ஷிப்’ போட்டியில் ‘மினி ஆர்’ எனும் வகைமையில் போட்டியிட்ட ஆதிகா, இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
கடந்த பிப்ரவரி, 2025ம் வருடம் அபுதாபியில் உள்ள யாஸ் மரினா சர்க்கியூட்டில் நடந்த ‘ஐஏஎம்இ கோடைகால கோப்பை’க்கான கார்ட் ரேஸிங்கில் பங்குபெற்று, வெற்றி பெற்றார். மட்டுமல்ல, கடந்த 2024ம் வருடம் இத்தாலியில் நடந்த, ‘ரோடக்ஸ் யூரோ டிராபி’க்கான கார்ட் ரேஸிங்கில் பங்கேற்று, இறுதிப்போட்டி வரைக்கும் முன்னேறினார் ஆதிகா. இந்தப் போட்டியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்தியப் பெண் போட்டியாளர் என்ற பெருமையையும் தன்வசமாக்கினார்.
இதற்குப் பிறகு ஃபிரான்ஸில் நடந்த ‘ரோடக்ஸ் மேக்ஸ் சேலஞ்ச் இன்டர்நேஷனல் டிராபி’க்கான மைக்ரோமேக்ஸ் வகைமைப் போட்டியில் கலந்துகொண்டு, வெற்றிபெற்றார். இப்போட்டியில் வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் படைத்தார்.
தவிர, ‘அயர்ன் டேம்ஸ் யங் டேலன்ட்’ திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்ட முதல் ஆசியப் பெண் என்ற சிறப்பையும் தன்வசமாக்கினார் ஆதிகா. 2025ம் வருடத்தின் ஆரம்பத்தில் இத்தாலியில் உள்ள ‘பேபிரேஸ் டிரைவர் அகாடமி’யில் சேர்ந்து, ‘விஎஸ்கே கார்ட்டிங் சீரிஸ்’ போட்டியில் பங்குபெற்றார். இதில் பங்குபெறுவதே பல கார் பந்தய வீரர்களின் கனவு என்பது குறிப்பிடத்தக்கது.
‘டிஸ்கர் யுவர் டிரைவ்’ திட்டத்தில் ஆதிகா தேர்வானதும் அவரைத் தேடி ஏராளமான ஸ்பான்ஸர்கள் வரத் தொடங்கினர். ‘ஃபார்முலா ஒன் அகாடமி’யுடன் இணைந்து செயல்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கார்ட்டிங் அணியான ‘அக்செல் ஜிபி’யின் ஸ்பான்ஸரை ஏற்றுக்கொண்டார். ஆதிகாவின் கார் பந்தயக் கனவுகளுக்கு எல்லா வகையிலும் துணையாக நிற்கிறது ‘அக்செல்’.
சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ‘யூஏஇ மினிமேக்ஸ் கார்ட்டிங் ரேஸ்’ என்ற சர்வதேச அளவிலான கார்ட் ரேஸிங் நடந்தது. இதில் ஐரோப்பிய சாம்பியன்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர்.
‘அக்செல்’லின் துணையுடன் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு, வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறார் ஆதிகா. இதுவரை ஒரு பெண் போட்டியாளர் கூட இந்தப் போட்டியில் வென்றதில்லை. ‘யூஏஇ மினிமேக்ஸ் கார்ட்டிங் ரேஸி’ல் வென்ற முதல் பெண் என்ற பெருமையைத் தன்வசமாக்கியுள்ளார். இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பெண்கள் மோட்டார் ஸ்போர்ட்ஸில் களமிறங்குவதற்கான உந்துதலையும் ஆதிகா ஏற்படுத்தியுள்ளார் என்று அவரைப் புகழ்கின்றனர்.
த.சக்திவேல்
|