முழுவதும் பார்வையற்ற பாங்கி கருணாகுமாரி... டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வான கதை!



பாங்கி கருணாகுமாரி... பார்வையற்றவர்களுக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஆந்திராவைச் சேர்ந்த முதல் வீராங்கனை இவர்.  
இதில் சிறப்பு என்னவென்றால், ஆந்திராவின் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தொலைதூர பழங்குடி கிராமம் ஒன்றில் இருந்து வந்து இந்த இடத்தை பாங்கி கருணாகுமாரி பிடித்திருக்கிறார் என்பதுதான்! அதுமட்டுமல்ல, பார்வையற்றோர் கிரிக்கெட்டில் பி1, பி2, பி3 என மூன்று வகையினராக பிரிக்கப்படுவார்கள். 

பி1 என்றால் முழுவதும் பார்வையற்றவர். இவர்கள் பந்தின் ஒலியை நம்பியே விளையாடுவார்கள். பி2 என்றால் குறைந்த பார்வைத் திறன் உடையவர். பி3 என்பது ஓரளவு பார்வையுடன் இருப்பவர். இதில் கருணாகுமாரி முழுவதும் பார்வையற்றவர் என்ற பி1 பிரிவில் வருகிறார். 

அவர் எப்படி இந்த இடத்தைப் பிடித்தார் தெரியுமா? 

அவர் அடித்த ஓர் அதிரடி சதமே காரணம். ஆம். முழுவதும் பார்வையற்ற கருணாகுமாரிதான் பந்து வரும் ஒலியைக் கணித்து அந்த சதத்தை குறைந்த பந்துகளில் அசால்ட்டாக விளாசி, டி20 கிரிக்கெட்டில் வரலாற்றுச் சாதனை படைத்ததுடன் இன்று எல்லோரையும் பேச வைத்திருக்கிறார்.  ஆந்திராவின் அல்லூரி சீதாராமா ராஜு மாவட்டத்திலுள்ள பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாங்கி கருணாகுமாரி. பிறக்கும்போதே பார்வைக் குறைபாட்டுடன் பிறந்தவர். 

ஆனால், கிரிக்கெட்டில் அதீத ஆர்வம். அவரின் கிரிக்கெட் கனவு உண்மையில் யாராலும் நம்பமுடியாதது. ஏழாம் வகுப்பு வரை எல்லோரையும்போல் வழக்கமான பள்ளியிலேயே படித்து வந்தார். ஆனால், வகுப்பறையில் கரும்பலகையையும், பாடப் புத்தகங்களையும் வாசிப்பதற்கு ரொம்பவே சிரமப்பட்டார். 

இதனால், பள்ளியிலிருந்து விலக வேண்டியதானது. இந்நேரம், விசாகப்பட்டினத்தில் பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி பெண்களுக்கான அரசு உண்டு உறைவிடப் பள்ளி இருப்பதை அறிந்து அங்கு சேர்ந்தார். அங்குதான் அவருக்கு புது வெளிச்சம் கிடைத்தது. 

கிரிக்கெட் மீதிருந்த காதலால் தொடர்ந்து தீவிர பயிற்சி செய்தார். இடைவிடாத முயற்சியின் காரணமாக ஹைதராபாத், ஹூக்ளி, கொச்சி என இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று விளையாடினார். அப்படியாக கடந்த 2023ம் ஆண்டு அவரின் கிரிக்கெட் திறமை வெளி உலகுக்குத் தெரிய ஆரம்பித்தது.

ஒவ்வொரு போட்டியும் அவரை மெருகேற்றியது. மாநில அளவில் விளையாடி முத்திரை பதித்து வந்தார் பாங்கி கருணாகுமாரி. இந்நிலையில், இந்திய பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கம் டி20 உலகக் கோப்பைக்கான வீராங்கனைகளைத் தேர்ந்தெடுக்க சமீபத்தில் பெங்களூரில் போட்டிகளை நடத்தியது.

இதில் இந்தியாவின் 16 மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த பார்வையற்ற கிரிக்கெட் வீராங்கனைகள் 56 பேர் கலந்துகொண்டனர். பின்னர் இவர்கள் இந்தியா ரெட், ஆரஞ்சு, புளூ, மஞ்சள் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர்.

இதில் இந்திய ரெட் அணியில் களம் கண்டார் கருணாகுமாரி. இந்திய புளூ மற்றும் இந்திய ரெட் அணிகளுக்கு இடையில் போட்டி நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய புளூ அணியினர் 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தனர். நார்மல் கிரிக்கெட் போட்டியிலேயே இந்த இலக்கு மிகப்பெரியது. 

பார்வையற்றவர் கிரிக்கெட்டில் இந்த இலக்கோ இமாலய ஸ்கோர். இந்நிைலயில் இந்திய ரெட் அணி சார்பில் தொடக்க வீராங்கனைகளாக கருணாகுமாரியும் (பி1), அனேகா தாக்கூரும் (பி2) களம் இறங்கினர்.  

இதில் 58 பந்துகளில் 114 ரன்கள் விளாசினார் கருணாகுமாரி. அனேகா தாக்கூர் 62 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து இந்த இமாலய ஸ்கோரை 17.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி எட்டினர். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.போட்டியின் சிறந்த வீராங்கனையாக கருணாகுமாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்புறமென்ன? தேர்வுக் குழுவினர் கருணாகுமாரியின் பெயரை உடனே ‘டிக்’ அடித்தனர். 

வரும் நவம்பர் 11ம் தேதி முதல் 25ம் தேதி வரை புது தில்லி மற்றும் பெங்களூரில் பார்வையற்றோருக்கான முதல் டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது. 

இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், அமெரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகளுடன் இந்தியா பங்கேற்கிறது. இதில் இந்திய அணிக்காக தற்போது பத்தாம் வகுப்பு படித்துவரும் மாணவியான பாங்கி கருணாகுமாரியும் ஆடுகிறார்.      

இப்போது கருணாகுமாரிக்கு அவரின் பள்ளி முதல்வர் உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கருணாகுமாரியின் தந்தை ராம்பாபு, ‘பாங்கி தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவளுைடய திறமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது’ என நெகிழ்வாகச் சொல்கிறார்.சாதிப்பதற்கு குறை ஒரு தடையில்லை. அதற்கு உதாரணமாக நம்முன் நிற்கிறார் பாங்கி 
கருணாகுமாரி!

பேராச்சி கண்ணன்