மனிதர்களுக்கு மட்டுமல்ல, வன உயிரினங்களுக்கும் தெரு நாய்களால் ஆபத்துதான்!



லதானந்த் 
(உதவி வனப் பாதுகாவலர் - ஓய்வு)

எங்கு பார்த்தாலும் தெரு நாய்களால் ஏற்படும் பல விதப் பிரச்னைகளைப் பற்றிய விவாதங்கள் பொறிபறக்கின்றன. ஆனால், மிக மிக முக்கியமான சில பாதிப்புகள் அதிகமாகக் கவனத்தை ஈர்க்கவில்லை.பராமரிப்பார் இன்றித் தெருவில் அலையும் நாய்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இணையாக - ஏன், அதைவிடவும் அதிகமான பாதிப்புகளுக்கு வன உயிரினங்களும் சுற்றுச் சூழலும் ஆளாவது அதிர்ச்சியூட்டும் உண்மை!

பழக்கப்படுத்தப்பட்ட யானைகளைப் பராமரிப்பு முகாம்களில் வனத் துறையினர் வளர்ப்பது வழக்கம். அப்படிப் பட்ட யானைகளை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வனத்தில் மேய விடுவதும் உண்டு. காலாற அவை நடப்பதற்கும், இயற்கையாக வளர்ந்த தீவனங்களைத் தின்பதற்கும், நீர் நிலைகளில் தண்ணீர் குடிப்பதற்கும், தண்ணீரைத் தங்கள் மேல் பீச்சியடித்து விளையாடிக் கொள்வதற்கும் இது வழி வகுக்கும். 

அப்படிப்பட்ட யானைகளை அக்கம் பக்கத்துக் கிராமங்களில் தெருவில் சுற்றித் திரியும் வெறி நாய் ஒன்று கடித்துவிட்டால் அது அப்போதைக்கு எவருக்கும் தெரியாமலேயே போய்விடும். 

கடித்த நாயை அடுத்த வினாடியே காலால் தேய்த்துக் கொன்று விட்டு, சாதுவாக முகாமுக்கு யானை திரும்பிவிடும். வலியும் அவ்வளவாக இருக்காது. 

ஆனால், குறிப்பிட்ட காலத்தில் ரேபிஸ் வைரஸ் யானையின் மூளையைத் தாக்கி, அந்தப் பெரிய மிருகத்துக்குச் சொல்லொணா வேதனையைத் தந்து, அணு அணுவாகச் சித்ரவதை செய்துவிடும்.  

காலம் கடந்துவிட்டால் எந்த சிகிச்சையும் பலன் தராது. துடிதுடித்து யானை இறப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அதைப் பராமரித்த பாகன், உதவிப் பாகன், மருத்துவம் பார்த்த கால்நடை மருத்துவர், முகாமில் இருந்த ஏனைய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டாக வேண்டும். 
அருகில் நடமாடிய இதர விலங்குகள், அந்த யானை பயன்படுத்திய நீர்நிலையின் நீரை உபயோகித்தவர்கள் என யாரை வேண்டுமானாலும் ரேபிஸ் தாக்கக்கூடும். ராஜநாகம் தீண்டினாலும் யானைக்கு உயிர் பிழைக்க வழியுண்டு. 

ஆனால், வெறி நாய் கடித்து, கவனிக்கப்படாவிட்டால் யானை உயிரிழப்பது நிச்சயம்! அதனால் முகாமை விட்டு யானைகளை வனத் துறையினர் வெளியே அழைத்துச் செல்லும்போது மிகக் கவனத்துடன் நாய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வார்கள்.

சரி... முகாம் யானைகளுக்காவது பாதுகாப்பு இருக்கிறது. காட்டு யானைகளையோ மற்ற மிருகங்களையோ வெறிநாய் கடித்தால்..? இப்படி வெறிநாய் கடித்து இறந்துபோகும் மிருகங்கள் மிக அதிகம். உலகிலேயே நாய்களின் எண்ணிக்கையில் இந்தியா நான்காம் இடத்தை வகிக்கிறது. இந்தியாவில் சுமாராக 6 கோடி நாய்கள் இருக்கின்றன என்றும் அவற்றில் மூன்றரைக் கோடி நாய்கள் தெருநாய்கள் எனவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

உலகெங்கும் கிட்டத்தட்ட ஒரு டஜன் அரிய வகை வன விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒட்டுமொத்த அழிவுக்கும் தெரு நாய்கள் காரணமாகி இருப்பதாக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். 

200 வகை வன உயிரினங்களுக்குத் தெரு நாய்களால் அச்சுறுத்தல் உள்ளது.இந்தியாவில் 80 வகையான வன உயிரினங்கள் தெரு நாய்களால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. பாதிக்கப்பட்டவற்றில் பாதி  எண்ணிக்கை அழிவை நோக்கி உள்ளன. இவற்றில் சுமாராக 48% பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்றிருக்கின்றன.

வன விலங்குகளுக்கான உணவு, நீர், இருப்பிடம் ஆகியவற்றைத் தெருநாய்கள் பங்குபோட்டுக் கொள்வதால் வனத்தில் வாழ்பவை திண்டாட நேரிடுகிறது. உணவுக்காகக் காட்டில் வாழும் இதர மிருகங்களுக்கு இடைஞ்சல் செய்வதில் நாய்கள் மூன்றாம் இடத்தில் இருக்கின்றன. பூனைக் குடும்ப மிருகங்கள் முதலிடத்திலும், வளைவாழ் உயிரினங்கள் (Rodents) இரண்டாம் இடத்திலும் உள்ளன.

காலங் காலமாக இரை மற்றும் வேட்டையாடும் மிருகங்கள் என்று பேணப்படும் சமநிலையில் தெருநாய்களின் குறுக்கீடு குளறுபடியை ஏர்படுத்திவிடும். மகரந்தச் சேர்க்கைக்குக் காரணமான சிறு பறவைகளைக் கொன்று தின்பதன் மூலம் தாவரங்களின் இனப்பெருக்கத்துக்கும் தெருநாய்கள் அச்சுறுத்தலாகவே விளங்குகின்றன. 

மொத்தத்தில் இயற்கைச் சமநிலையை இவை குலைக்கின்றன; சுற்றுச் சூழலின் நிலைத்தன்மையைப் பாதிக்கின்றன. காட்டை அடுத்துத் திரியும் நாய்களால்  தானிய விளைச்சல் பாதிக்கப்படும் என்று சொன்னால் ஆச்சரியமாகத்தானே இருக்கும்?  காட்டினுள் நுழையும் நாய்கள் அங்கே வசிக்கும் நரிகளைக் கொல்வது வழக்கம். நரிகளுக்குப் பெரு விருப்பமான உணவு மயில் முட்டைகளும் மயில் குஞ்சுகளும்தான். 

நரிகளின் எண்ணிக்கை நாய்களால் குறையும்போது மயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது; அவை தானிய வயல்களின் மீது படையெடுக்கின்றன: பெருமளவு தானியங்களைச் சேதப்படுத்துகின்றன!புலிகள் காப்பங்கள், தேசியப் பூங்காக்கள் வனவிலங்கு சரணாலயங்கள் என்று எந்தப் பதுகாக்கப்பட்ட பகுதியையும் பொருட்படுத்தாமல் தெரு நாய்கள் ஊடுருவி பாதிப்புகளைச் செய்கின்றன.

காட்டு நாய்களுக்கும் காட்டு ஓநாய்களுக்கும் இடையிலான இனக்கலப்பும் விஞ்ஞானிகளைக் கவலை கொள்ள வைக்கிறது. இது மரபணு நீர்த்தல், வேட்டையாடும் விலங்குகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்குலைவு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்பது அவர்கள் கருத்து.

தெருநாய்களின் மேல் ஒட்டியிருக்கும் உண்ணி வகை ஒட்டுண்ணிகளும் சொறி சிரங்கும் அப்பாவி வன விலங்குகளுக்கும் பரவுவதற்கு நாய்களே காரணம்!
பதுங்கிப் பதுங்கி மானை வேட்டையாட வரும் புலியின் வாசனையைத் தனது மோப்ப சக்தியால் உணர்ந்த - காட்டுக்குள் நுழைந்த நாய் - குரைக்கத் தொடங்கும். 

மான் உஷாராகி ஓட்டம் பிடிக்கும்; விளைவு? புலி பட்டினி கிடக்க வேண்டி யதுதான்! உணவுச் சங்கிலியை இப்படியெல்லாம் தெருநாய்கள் பாதிக்கின்றன. லடாக் பகுதியில் பனிக் கரடிகள் வசிக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்ததற்குத் தெருநாய்கள்தான் காரணம்.

ராஜஸ்தானில் பிணம் தின்னிக் கழுகுகள் உண்டு. இறந்த உடல்களை அவை உண்ண முடியாதபடி தெருநாய்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. நாய்களை மீறிக் கழுகுகளால் தங்களது உணவை அடைய முடிவதில்லை. இது அந்த வகைக் கழுகுகளின் வாழ்வாதாரத்துக்கே சவாலாக இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட வனப் பகுதியின் பூர்வ குடிகளான விலங்குகளின் இருப்புக்கே தெருநாய்கள் சவால் விடுகின்றன. சான்றாக ராஜஸ்தானின் மாநில விலங்கான சிங்காரா (Chinkara) என்னும் சிறு மான் வகை இனம் தெருநாய்களின் வேட்டைப் பண்பால் பெருமளவு அழிவைச் சந்திக்கின்றன.

ஆலிவ் நிறச் சிற்றாமை (Olive ridley turtle) என்பது இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் காணப்படும் கடல் ஆமை வகையாகும். 
இந்த ஆமைகள் இதய வடிவம் கொண்டு ஆலிவ் பச்சை நிறத்தில் இருப்பதால் ‘ஆலிவ் நிறச் சிற்றாமை’ என்று பெயர் பெற்றன. இவை முட்டையிடும் பகுதிக்கு அருகில் திரியும் தெருநாய்கள் முட்டைகளைத் தின்றுவிடுவதால் இந்த ஆமை இனத்துக்குப் பெரும் பாதிப்பு உண்டாகிறது.

‘அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அறக்கட்டளை’ என்பது பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை ஆராய்ச்சி செய்யும் குறிப்பிடத்தக்க நிறுவனம். 

பாதுகாக்கப்பட்ட வனங்களில் வாழும் கோல்டன் லங்கூர் என்ற அரியவகைக் குரங்கினம், த கிரேட் இந்தியன் பஸ்டார்ட் என்ற நெருப்புக்கோழியைப் போன்றதொரு பறவை இனம், பச்சை நிற ஆமைகள் போன்றன தெருநாய்களால் வேகமாக அழிந்து வருகின்றன என்ற உண்மை இந்த நிறுவனத்தின் ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.

மகாராஷ்ட்ராவில் உள்ள ‘த கிரேட் இந்தியன் பஸ்டார்ட்’ சரணாலயத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி 95% தெரு நாய்களுக்கு கேனைன் டிஸ்டம்பர் வைரஸ் மற்றும் கேனைன் பார்வோவைரஸ் ஆகிய கிருமித் தொற்றுகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.கருத்த கழுத்துக் கொக்கு (Black-necked crane) என்பது அரிய வகைப் பறவை இனம். இதன் குஞ்சுகள் உயிர்வாழும் சதவீதம் 60%லிருந்து 33% ஆகக் குறைந்திருப்பதற்குக் காரணம் தெருநாய்கள் அவற்றைத் தின்று தீர்த்ததுதான்! 

மேற்கு வங்காளத்தில் கோல்டன் ஜக்கால் மற்றும் ஸ்பிடி பள்ளத்தாக்கின் இமாலய ஓநாய்கள் தெருநாய்களுடன் இணைவதால் வன உயிரினங்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதுடன் வன உயிரினங்களின் அசல் மரபிலும் விரும்பத்தகாத மாற்றங்கள் நிகழுகின்றன.தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதும், நாயின் உரிமையாளர்கள் நாய்களை வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்ப்பதும், உரிய விழிப்புணர்வோடு செயல்படுவதும் பாதிப்புகளை நிச்சயம் குறைக்கும்.