20 லட்சம் புத்தகங்களைக் கொண்ட தனியார் நூலகம்!
முண்டா பனியனும், வேட்டியும் அணிந்திருந்த அந்த மனிதர், புத்தகங்களால் நிரம்பி வழிந்த மாபெரும் அறையைத் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்துகொண்டிருந்தார். 20 லட்சம் புத்தகங்களுக்குச் சொந்தக்காரர் என்று சொல்ல முடியாதபடி, அவ்வளவு எளிமையாக இருந்தார். அவரது பெயர், அங்கே கவுடா. ஐம்பது வருடங்களாக புத்தகங்களையும், பத்திரிகைகளையும் வாங்கி, மிகப்பெரிய ஒரு நூலகத்தை உருவாக்கியிருக்கிறார் இவர்.
இந்த உலகம் முழுவதும் சுமார் 28 லட்சம் நூலகங்கள் இருக்கின்றன. இதில் பள்ளிகளில் மட்டுமே 22 லட்சம் நூலகங்கள் உள்ளன. பொது நூலகங்களின் எண்ணிக்கை, 4.10 லட்சம். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள நூலகங்களின் எண்ணிக்கை, 85,623. இவற்றிலிருந்து முற்றிலும் வேறான தனித்துவமான ஒன்று, அங்கே கவுடாவின் நூலகம். இதை புத்தக சொர்க்கம் என்று சொல்வதே சரியாக இருக்கும். இந்த நூலகத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.
 விருப்பப்பட்ட புத்தகங்களை எடுத்து நூலகத்திலேயே வாசிக்கலாம். கட்டணம் எதுவும் கிடையாது.கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு அருகிலிருக்கும் சிறு கிராமமான ஹரலஹல்லியில் அமைந்திருக்கிறது கவுடாவின் புத்தக சொர்க்கம். 20 விதமான இந்திய மற்றும் அயல்நாட்டு மொழிகளில், ஏராளமான வகைமைகளில் இங்கே புத்தகங்கள் குவிந்துள்ளன.
ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், போட்டித் தேர்வு எழுதுபவர்கள், ஆசிரியர்கள், புத்தகக் காதலர்கள் என பலரும் அடிக்கடி வந்துபோகின்ற ஓர் இடமாக இருக்கிறது இந்த நூலகம். வெறுமனே 10 பக்கங்களைக் கொண்ட புத்தகங்கள் முதல் 3 - 4 கிலோ வரை எடை கொண்ட புத்தகங்கள் வரையில் இங்கே இருக்கின்றன. கன்னடப் புத்தகங்களுக்கு என்று பிரத்யேகமான ஓர் இடத்தை ஒதுக்கியிருக்கிறார். 1832ம் வருடம் அச்சான புத்தகங்கள் முதல் கடந்த வாரத்தில் வெளியான புதிய புத்தகங்கள் வரை அனைத்தையும் சேகரித்து தனது நூலகத்தில் வைத்திருக்கிறார் அங்கே கவுடா.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள், நாவல்கள், சிறு கதைகள், சுயசரிதைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் சார்ந்த புத்தகங்கள், தொன்மங்கள், ஜோதிட நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், பயண நூல்கள், விமர்சன நூல்கள் என இந்த நூலகத்தில் இல்லாத புத்தகங்களே இல்லை. தினமும் புத்தகங்களில் படியும் தூசுகளைத் துடைத்து, மாபெரும் அறையைச் சுத்தம் செய்து வைப்பதை ஒரு கடமையாகவே செய்து வருகிறார் அங்கே கவுடா.
யார் இந்த அங்கே கவுடா?
மாண்டியா மாவட்டத்தில் வாழ்ந்து வந்த ஓர் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், அங்கே கவுடா. ஆனால், புத்தக வாசிப்பின் மீது தீராத காதல் கொண்டிருந்தார்.
ஏழ்மையைத் தாண்டி கன்னட இலக்கியத்தில் எம்.ஏ படித்தார். கர்நாடகாவில் உள்ள ‘பண்டவபுரா சுகர் ஃபேக்டரி’யில் டைம் கீப்பராக 30 வருடங்களுக்கு மேல் வேலை செய்திருக்கிறார்.
கிடைத்த வருமானத்தில் 80 சதவீதத்தைப் புத்தகங்கள் வாங்க செலவழித்திருக்கிறார் அங்கே கவுடா. மட்டுமல்ல, புத்தகங்களை வாங்குவதற்காக மைசூரில் இருந்த சொத்தைக்கூட விற்றிருக்கிறார்.
‘‘நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில், பாடப்புத்தகத்தைத் தாண்டி மற்ற புத்தகங்களைப் படிக்கக்கூடிய வாய்ப்பே கிடைக்கவில்லை. ஆம்; அருகில் எந்த நூலகமும் இல்லை. அதனால் எனக்கான நூலகத்தை நானேதான் உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டேன்.
ஆரம்ப நாட்களில் ராமகிருஷ்ணா ஆசிரமம் வெளியிட்ட புத்தகங்களைச் சேகரித்தேன். நாளடைவில் புத்தகங்களின் மீதான விருப்பம், வெறியாக மாறியது. சுகர் ஃபேக்டரியில் வேலை செய்கையில், எப்போதெல்லாம் நகரத்துக்குச் செல்வேனோ, அப்போதெல்லாம் பை நிறைய புத்தகங்களை வாங்கி வருவேன்...’’ என்கிற அங்கே கவுடா, 21 வயதிலிருந்து புத்தகங்களைச் சேகரித்து வருகிறார். 2004லேயே இரண்டு லட்சம் புத்தகங்களைச் சேகரித்து விட்டார்.
அங்கே கவுடாவின் புத்தகச் சேகரிப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டார் தொழிலதிபர், ஸ்ரீஹரி கோடே. உடனே நூலகம் அமைப்பதற்காக பெரிய கட்டடத்தைக் கட்டுவதற்கு ஸ்ரீஹரி உதவி செய்தார். அந்தக் கட்டடம்தான் இப்போது மாபெரும் தனியார் நூலகமாக மிளிர்கிறது.
பெங்களூருவில் உள்ள பெரும் பதிப்பகங்களுக்கும், புத்தகக் கடைகளுக்கும் சென்று நேரடியாகவே புத்தகங்களைக் கொள்முதல் செய்தார். இதுபோக நூலகங்களிலும், வீடுகளிலும் வேண்டாம் என்று எடைக்குப் போடப்படுகின்ற புத்தகங்களில் நல்லவற்றைச் சேகரித்து, தனது நூலகத்தில் வைத்தார். நூலகம் ஆரம்பத்ததிலிருந்து, இன்று வரை அங்கே கவுடாவின் மனைவி விஜயலட்சுமியும், மகன் சாகரும் அவருக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
மனைவியுடன் நூலகத்திலேயேதான் வசித்து வருகிறார் அங்கே கவுடா. சமையல் உட்பட மற்ற தேவைகளுக்கு என்று தனியாக அறைகள் இருக்கின்றன.
‘‘வரலாறு சம்பந்தமான அரிய புத்தகங்களை இவரது நூலகத்தில்தான் பார்த்தேன்...’’ என்கிறார் மகடேஷ்வரா. வரலாற்று ஆய்வாளரான இவரைப் போல ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்களுக்கும், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும், ஐஏஎஸ் போன்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் உதவியாக இருக்கிறது அங்கே கவுடாவின் நூலகம்.
அங்கே கவுடாவின் நூலகத்தில் இருக்கும் 20 லட்சம் புத்தகங்களில், 5 லட்சம் புத்தகங்கள் வெளிநாட்டைச் சேர்ந்த அரிய புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோக பல்வேறு மொழிகளில் 5 ஆயிரம் டிக்ஷனரிகள் இருக்கின்றன. இவையெல்லாம் அங்கே கவுடாவின் நூலகத்தைத் தனித்துவமாக மாற்றுகின்றன. இவரது வயது ஜஸ்ட் 75தான்.
த.சக்திவேல்
|