42 எக்ஸாம்ஸ்... 20 டிகிரி... இந்தியாவின் அதிக தகுதி வாய்ந்த நபர்!



கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் ஸ்ரீகாந்த் ஜிச்கர் என்பவரைப் பற்றிய தகவல்கள் வைரலாகிக் கொண்டிருந்தன.  இன்று நாம் ஒரு டிகிரி வாங்குவதற்கே கஷ்டப்படும்போது, அவர் இருபதுக்கும் மேற்பட்ட பட்டங்களைப் பெற்று அசத்தியிருக்கிறார் போன்ற விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகின. 

இத்தனைக்கும் ஸ்ரீகாந்த் மரணமடைந்து இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இறந்த பிறகும் கூட இன்ஸ்பிரேஷனாகியிருக்கும் ஸ்ரீகாந்தின் சாதனைகள் சாதாரணமானதல்ல. 

யார் இந்த ஸ்ரீகாந்த் ஜிச்கர்?கடந்த 1954ம் வருடம் மகாராஷ்டிராவில் வாழ்ந்து வந்த ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார், ஸ்ரீகாந்த் ஜிச்கர். 

முதலில் எம்பிபிஎஸ், எம்டி பட்டங்களைப் பெற்று மருத்துவரானார். அந்தக் காலத்தில் இந்த இரண்டு பட்டங்களைப் பெறுவதே ஒரு சாதனை. ஆனால், ஸ்ரீகாந்தோ வேறு துறைகளைப் பற்றியும் அறிந்துகொள்ள விரும்பினார். 

சட்டத்தில் இளம் கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். குறிப்பாக சர்வதேச சட்டப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இதுபோக எம்பிஏ, டிபிஎம், ஜர்னலிசத்தில் இளங்கலைப் பட்டம், சமஸ்கிருத இலக்கியத்தில் முனைவர் பட்டம் உட்பட கலைத்துறையில் பத்து பட்டங்களைப் பெற்றிருக்கிறார். 

ஆக மொத்தம் வெவ்வேறு துறைகளில் இருபதுக்கும் மேற்பட்ட பட்டங்களைப் பெற்று, இந்தியாவிலேயே கல்வி ரீதியாக அதிக தகுதி வாய்ந்த மனிதராகப் புகழ் பெற்றார்.
வெறுமனே பாஸ் மார்க் வாங்கி எல்லா பட்டங்களையும் பெறவில்லை காந்த். ஒவ்வொரு பட்டப்படிப்பிலும் முதன்மையான மதிப்பெண்களை வாங்கியிருக்கிறார். அதற்காக அவருக்கு ஏராளமான தங்கப் பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன. 

கடந்த 1973ம் வருடத்துக்கும் 1990க்கும் இடைப்பட்ட வருடங்களில் 42 பல்கலைக்கழகத் தேர்வுகளை எழுதியிருக்கிறார். மட்டுமல்ல, தேசிய அளவில் நடந்த போட்டித் தேர்வுகளிலும் கலக்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த். 

1978ல் யுபிஎஸ்சி நடத்திய போட்டித் தேர்வில் கலந்துகொண்டு ஐபிஎஸ் பதவிக்குத் தேர்வானார். விரைவிலேயே ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தேர்வெழுதி 1980ல் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 

ஐஏஎஸ் பதவியையும் ராஜினாமா செய்து விட்டு, அரசியலில் குதித்தார். 26 வயதிலேயே சட்டமன்ற உறுப்பினராகி, இந்தியாவின் முதல் இளம் எம்எல்ஏ என்ற சிறப்பைத் தன்வசமாக்கினார். 

இதுபோக பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்திருக்கிறார். 2004ல் நடந்த ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார் காந்த்.

த.சக்திவேல்