தண்டகாரண்யம் சொல்லும் உண்மை தேசத்தை அதிரவைக்கும்!
சொல்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை
சருகுகள் உதிர்ந்த காட்டில் உதிரம் சிந்திய அம்புகள்...அதிகாரம் உடையும் முன்னே மலை உடைத்து, நிலம் சுரண்டி, நீர் உறிஞ்சும் ஏகாதிபத்தியத்தின் கூட்டாட்சி நீண்டிடுமோ..?பலமறியா எளியவர்களின் தோழமையின் வலிமை இவ்வுலகம் அறியாதோ..?பூட்ஸ் நரம்புகளின் நச்சுப்பின்னலின் அழுத்தம் சொல்லும் சேதிகள் ஆயிரம் இந்தக் காட்டிலுண்டு...இப்படி ஒவ்வொரு போஸ்டரும் ப்ரொமோஷன் வெளியீடுகளும் படத்தின் கதை என்னவாக இருக்கும் என நம் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அதியன் ஆதிரை. விமர்சன ரீதியாகவும் அந்தப் படம் நல்ல பாராட்டுகளை பெற்றது. இதோ தற்போது ‘தண்டகாரண்யம்’ படத்தை கொடுக்க தயாராக இருக்கிறார்.‘தண்டக + ஆரண்யம்’... இதிகாசப் புகழ் பெற்ற தலைப்பை இந்தப் படத்திற்கு வைக்கக் காரணம் என்ன?
 உங்க கேள்வியிலேயே பதில் இருக்கு. பதில்தான் அந்தக் காரணமே. ‘தண்டம்’ என்றால் தண்டனை. அதற்கான காரணம். இப்படியும் ஒரு பொருள் உண்டு. ஒரு குற்றத்தை உடைத்த காரணத்தால்தான் ‘தண்டாயுதபாணி’ அப்படின்னு முருகனையும் குறிப்பிடுவாங்க. இந்தியாவில் 6 மாநிலங்களை ஒருசேர கொண்ட ஒரு வனப்பகுதியை ‘தண்டகாரண்யம்’ அப்படின்னு குறிப்பிடுவாங்க.
90,000 சதுர கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதி. மேற்கே அபூஜ்மார்மலை, கிழக்கே கிழக்குமலைத் தொடர், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிசா, ஆந்திரா மாநிலங்களின் எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள காட்டுப்பகுதிகளை உள்ளடக்கியது தண்டகாரண்யம்.
இந்தியாவின் 40 சதவீத வளம் இந்த வனப்பகுதியில்தான் இருக்கு. இந்தக் கதை அங்கே நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனால் ‘தண்டகாரண்யம்’ டைட்டில்.தினேஷ் மற்றும் கலையரசன்... இந்தக் கதை நாயகர்கள் காம்போ எப்படி வந்திருக்கு..?  நிறைவா வந்திருக்கு. ஏற்கனவே தினேஷ் கூட ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் சேர்ந்து வேலை செய்திருக்கேன். அப்போதிருந்தே நட்பு ரீதியா தொடர்ந்து பேசிட்டு இருக்கோம். எத்தனை படங்கள் வேண்டுமானாலும் அவர் கூட வேலை செய்யலாம். அதனால்தான் அடுத்த படமே மீண்டும் அவர் கூட பயணம்.
கதைப்படி தினேஷ் கதாபாத்திரத்துக்கு இயக்குநர் அமீர் அண்ணன்தான் தேர்வாகி இருந்தார். அவர் நேரமெல்லாம் ஒதுக்கித் தயாராகத்தான் இருந்தார். ஆனால், படப்பிடிப்பு நேரத்தில் ஒரு நெருக்கடி. அதனால் அவர் நடிக்க முடியாமல் போயிடுச்சு. கதை நாயகனா ஏற்கனவே கலையரசன் தேர்வாகிட்டார். தினேஷ் கதையைக் கேட்காமல் என் மேல இருந்த நம்பிக்கை காரணமாக நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடைய கேரக்டர் ரொம்ப பெரிய அதிர்வை உண்டாக்கும். காதல், கனவு, ஆசைகள் சூழ ஓர் இளைஞர் இந்த அதிகார வர்க்கத்துப் பிடியில் சிக்கினால் அவருடைய கனவு கலைக்கப்பட்டு வாழ்க்கை என்னவாகுது என்பதை உணர்த்தும் கதாபாத்திரத்தில் கலையரசன் ரொம்ப அருமையா நடிச்சுக் கொடுத்திருக்கார்.
வின்சு ரேச்சல் சாம்... பெரிய மாடல் அவங்க. இந்தப் படத்தில் கலையரசனுக்கு ஜோடியா நடிச்சிருக்காங்க. வெறுமனே காதல், டூயட்னு இல்லாமல் கதையில் அவருக்கு முக்கியமான
பங்கிருக்கு.
கலையரசன் என்னவெல்லாம் பிரச்னைகளை சந்திக்கிறாரோ அது அத்தனையும் வின்சும் சந்திப்பாங்க. சபீர் கல்லரக்கலுக்கு எமோஷனலான ஒரு கதாபாத்திரம். ரித்விகா, தினேஷுக்கு ஜோடி. நல்ல கேரக்டராகவும் இருக்கும். பாலசரவணன், சரண்யா... என எல்லாருமே கதைக்கு ரொம்ப பெரிய பலமா இருப்பாங்க.
‘குண்டு’ திரைப்படத்திற்குப் பின் ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கிட்டீங்க?
‘குண்டு’ படம் வெளியானது 2019ல. தொடர்ந்து கதைகள் தயாராதான் இருந்தது. இடையில வந்த கொரோனா ஒரு மூணு வருடங்களை வீணாக்கிடுச்சு. அப்பவும் சரி... இப்பவும் சரி... பா.இரஞ்சித் அண்ணன்தான் பெரும் பலமாக எனக்கு நிற்கிறார். இந்தப் படத்தையும் அவருடைய ‘நீலம்’தான் தயாரிச்சிருக்கு.
கேமராமேன் பிரதீப் கே ராஜா... எனக்கும் அவருக்கும் 15 வருடங்கள் பழக்கம். ‘கபாலி’ படத்தில் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தோம். நான் அசிஸ்டென்ட் இயக்குநராக இருந்தபோது அவர் கேமராமேனுக்கு உதவியாளரா இருந்தார்.
அவரும் ‘ரைட்டர்’, ‘சேத்து மான்’ உள்ளிட்ட படங்கள் செய்திருக்கார். இப்போ நாங்க சேர்ந்து இந்தப் படம் செய்திருக்கோம். விஷுவல் எல்லாம் ரொம்ப அருமையா வந்திருக்கு. எடிட்டர் பிரவீன் கே எல்-கிட்ட அசிஸ்டென்டாக இருந்தவர்தான் செல்வம் ஆர்கே. அவரும் எங்க கூட இத்தனைக் காலமும் பயணிக்கும் நண்பர். ‘சார்பட்டா பரம்பரை’, ‘கர்ணன்’ இப்படி நிறையப் படங்களில் வேலை செய்திருக்கிறார். இந்தப் படத்துக்கும் அவர்தான் எடிட்டர்.
பாடல்கள் எல்லாமே ரொம்ப அருமையா வந்திருக்கு. ஜஸ்டின் பிரபாகரன் இசை பத்தி நான் என்ன சொல்ல! ‘குண்டு’ படத்திலேயே நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலை செய்ய வேண்டி இருந்தது. இந்தப் படத்தில் அது சாத்தியமாகி இருக்கு.
உங்களுடைய அடுத்த படம்..? படம் பார்த்திட்டு பா.இரஞ்சித் என்ன சொன்னார்?
‘எப்போதுமே உன்கிட்ட இருந்து வித்தியாசமான கதைகள்தான் வருது. எங்கே எப்படி புடிக்கிற என்பதே தெரியலை. இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா என எனக்கே தோணுது...’ அப்படின்னு பாராட்டினார். என்கிட்ட ஒரு ஐந்தாறு கதைகள் இருக்கு. அத்தனையுமே பா.இரஞ்சித் அண்ணனுக்குத் தெரியும். அத்தனை கதைகளையும் கேட்டுட்டு என்னைப் பாராட்டி இருக்கிறார். கதைகள் தயாராக இருக்கு. இந்தப் பட ரிலீசுக்குப் பிறகுதான் அடுத்தடுத்த படங்கள் பற்றி யோசிக்கணும்.
ஷாலினி நியூட்டன்
|