இமயமலையில் மட்டும் இருந்தது இப்போது இங்கும் வந்தாச்சு.. மேக வெடிப்பு அபாயத்தில் சென்னை!
சின்னத்திரையில் முதன்முறையாக என சொல்வதுமாதிரி சென்னையில் கடந்தவாரம் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சில மணி நேரங்களில் மழை கொட்டித் தீர்த்தது. அதாவது சென்னை மணலி உள்ளிட்ட ஏரியாக்களில் ஒரு சில மணிநேரங்களில் மழை சராசரியாக 150 செமீ-க்கும் மேலாக கொட்டியது. இதை இந்திய வானிலையும், மழை நிபுணர்களும் மேக வெடிப்பால் ஏற்பட்ட மழையாகவே அடையாளம் கண்டனர். சென்னையில் இப்படி மேக வெடிப்பு ஏற்பட்டது இதுவே முதன்முறை.  பொதுவாகவே மேக வெடிப்பு என்பது உலகளவிலும் இந்தியாவிலும் மலை அல்லது மலைப் பிரதேசம் சார்ந்த இடங்களில்தான் ஏற்படும் என்பது இதுவரையிலான வரலாறு.
தமிழகத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டிய நீலகிரி, கொடைக்கானலை தழுவிய பிரதேசங்களில்தான் இதுவரை மேக வெடிப்பு மழை சரித்திரம் படைத்திருக்கிறது.
ஆனாலும் 1977களில் நிலப்பகுதியான திருச்சியை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட மேக வெடிப்பு நிகழ்வு ஒன்று காவிரி படுகையை வெள்ளக் காடாக மாற்றியது. இந்த மேக வெடிப்புக்கு ‘நீரிடி’ எனும் பெயரை வைத்து டெல்டா மக்கள் இன்றும் நினைவுகூர்கிறார்கள்.
 இப்படியிருக்க சென்னையில் முதன்முறையாக வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட மேக வெடிப்புக்கு காரணம் என்ன?
அறிவதற்காக சூழலியல் அமைப்பான ‘பூவுலகின் நண்பர்கள் குழு’வின் லோகேஷை தொடர்பு கொண்டோம். காலநிலை ஆய்வாளரான லோகேஷ் முதலில் மேக வெடிப்பு அதிகமாக நடைபெறும் மலைப்பிரதேசத்தைப் பற்றி விவரித்தார். அதிலும் இந்தியாவின் இமாலய மலைப் பிரதேசத்தில் இந்த மேகவெடிப்பு அதிகமாக நிகழ்வதின் மர்ம முடிச்சையும் அவிழ்த்தார்.
‘‘மார்ச், ஏப்ரல், மே அல்லது ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்கள் என்பவை வடமாநிலங்களில் சம்மர் காலம். நிலப் பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும். காலையிலும் மாலையிலும் நிலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் அவை காற்றில் கலந்து, அதிலிருக்கும் நீர்த்தன்மையை (moisture) ஆவியாக்கும்.
இந்த நீராவி மேலே மட்டும் போகாது. மாறாக நாலா பக்கமும் பரவியபடியே மேலே எழும். அப்படிச் செல்கையில் மலைகள் அதைத் தடுக்கும். அதையும் மீறி அந்த நீராவி மலைகளின் சரிவு வழியாக மேலே செல்லும்.
இப்படி மலைச்சரிவின் மூலம் மேலே போகும் நீராவிதான் மேகக்கூட்டங்களில் புகுந்து நீராவியாகவும், நீராகவும், நீர்க்கட்டியாகவும் மாற்றம் பெறும்.
இப்படி நிலத்தின் வெப்பம் தொடர்ச்சியாக நீரை மேகமாக உருவாக்கும்போது சில நேரங்களில் அந்தத் தொடர்ச்சி அறுபடலாம். உதாரணமாக நீராவியை உருவாக்கும் வெப்பத்தின் அளவில் மாற்றம் ஏற்படும்போது, நீராவி உருவாவது தடைபடலாம். ஒரு மேகத்தை மேகமாக வைத்திருப்பது அந்த மேகத்துக்குள் இருக்கும் நீராவி, நீர் மற்றும் நீர்க் கட்டிகள்தான்.
நீராவி தொடர்ச்சியாக உருவாகும்போது மேகங்கள் கலையாமல் இருக்கும். உதாரணமாக ஒரு மலை 2 கிலோமீட்டர் உயரமுடையது என்றால் இந்த மேகங்கள் சுமார் 15லிருந்து 20 கிமீ வரை உயரமுடையதாக இருக்கும்.
அப்படி 20 கிமீ உயரமுடைய மேகத்தில் எவ்வளவு நீர் இருக்கும் என்று கணக்கு போட்டுக்கொள்ளுங்கள். இப்படி தொடர்ச்சியாக மேகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நீராவியின் உருவாக்கத்தில் பங்களிக்கும் நிலத்தின் வெப்பத்தில் சலனம் ஏற்படும்போது என்ன நிகழும்? அந்த மேகக்கூட்டங்களால் மேலும் வளர முடியாமல் போகும். இந்த நேரத்தில்தான் மேகமானது இடி, மின்னலுடன் பெரும் மழையாக கொட்டித் தீர்க்கும்...’’ என்று சொல்லும் லோகேஷ், இந்த மேக வெடிப்பின் மூலம் பெய்யும் மழையைப் பற்றியும் விளக்கினார்.‘‘எல்லா கனமழையும், அதிதீவிர கனமழையும் மேக வெடிப்பு மழை அல்ல. சுமார் 25 சதுர கிலோ மீட்டரிலிருந்து 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு மணிநேரத்துக்குள் சராசரியாக 100 மிமீ அல்லது 10 செமீ மழை பெய்தால் மட்டுமே அது மேக வெடிப்பால் ஏற்பட்ட மழை.
இதை வைத்து சென்னையில் ஏற்பட்ட மழையையும் மேக வெடிப்பு மழையாக சொல்வதே சரியாக இருக்கும்.இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கடைசி வாரத்தில் சென்னையின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. இது தென் மேற்கு பருவகாலம். தமிழகத்தில் ஆங்காங்கே தென் மேற்கு பருவகால மழையின் பாதிப்புகள் தெற்கே இருந்தன. ஆனால், சென்னையில் வெயில் கொளுத்தியது.
ஒருவிதத்தில் மற்ற தென் மாவட்டங்களைவிட சென்னை ஒரு வித்தியாசமான நகரம். நிலமும், கடலும் அருகருகில் இருக்கும் பிரதேசம். இதனால் நல்லதும் நடக்கும். கெட்டதும் நடக்கும்.
பகலிலும் மாலையிலும் சென்னையில் வெயில் என்றால்... அந்த வெப்பம் காற்றில் ஆவியாக நகரும். இந்த நகர்வும் மேலேயும், கீழ்மட்டத்திலுமாக பரவும். இப்படி ஈரக்காற்று நகரும்போது நிலத்தில் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும். அப்போது கடலில் இருக்கும் குளிர் காற்று நிலத்திலிருக்கும் காற்றில்லா வெற்றிடத்துக்கு நகரும்.
இதைத்தான் கடல்காற்று அல்லது ‘சீ ப்ரீஸ்’ என்கிறோம். பகலில் வெப்பம் இருந்தாலும் இரவில் சென்னை கூலாவிடும். ஆனால், இரவில் இது தலைகீழாக அரங்கேறும். அதாவது நிலத்தின் வெப்பத்தை உறிஞ்சியகடல் காற்று சீக்கிரமாக அந்த வெப்பத்தை விட்டு வெளியே வரமுடியாது. இந்நேரத்தில் சென்னை நிலத்தில் இருக்கும் குளிரான காற்று கடலை நோக்கி வீசும். இதை ‘லேண்ட் ப்ரீஸ்’ என்பார்கள்.
இப்படி மாறி மாறி வெயில் காலத்தில் நிகழும். இந்த இடம்தான் முக்கியமானது. கடல் காற்று வெப்பத்தை சீக்கிரம் குறைக்காதல்லவா? ஆகவே நிலத்திலும், காற்றிலும், கடலிலும் ஏற்படும் வெப்பக் காற்றின் மாற்றங்களும், அதனால் உண்டாகும் நீராவி உருவாக்கமும் மாறுபடும்போது அல்லது தடைபடும்போது மேக வெடிப்பு உண்டாகியிருக்கலாம்.
இதுதான் செனையிலும் நடந்தது. இந்தத் தடை பொதுவாக இரவில்தான் நிகழும். காரணம், காலை, பகல், மாலையெல்லாம் வெயில். இரவில் அதில் மாற்றம் என்றால் வெப்பத்திலும், நீராவியிலும் மாற்றம் ஏற்படும் அல்லவா? இதுதான் சென்னையிலும் நடந்தது...’’ என்ற கோகேஷ், இனி மேக வெடிப்பில் இருந்து சென்னை தப்பிக்கவே முடியாது என்கிறார்.
‘‘மேக வெடிப்பு எப்போது ஏற்படும்... எந்தப் பகுதியில் ஏற்படும்... என கணிக்கமுடியாது. உலகளவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் இனிமேல் கனமழை, அதிதீவிர கனமழை மற்றும் மேக வெடிப்பால் ஏற்படும் மழையை எல்லாம் நாம் சர்வசாதாரணமாகப் பார்க்கலாம்.
ஏற்கனவே நாம் பூமியை பல காரணங்களால் சூடாக்கி விட்டோம். சுமார் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை நாம் அதிகரித்திருக்கிறோம். இது மேலும் அதிகரிக்கும் என்றுதான் நிபுணர்கள் கருதுகிறார்கள். ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரித்தால் சுமார் 15 சதவீத பூமியின் நீர் ஆவியாகிவிடும் என்று கணித்திருக்கிறார்கள்.
இப்படி நீர் ஆவியானால் அது மேகங்களாக மாறி மழைப் பொழிவைத்தான் ஏற்படுத்தும். அது சாதாரண மழையா, கனமழையா, அல்லது மேக வெடிப்பு மழையா என்பதில்தான் வித்தியாசம் இருக்கும்.
மொத்தத்தில் இவை எல்லாம் நமக்கு நாமே வைத்துக் கொண்ட சூனியங்கள்தான்...’’ ஆற்றாமையுடன் சொல்கிறார் லோகேஷ்.
டி.ரஞ்சித்
|