சிறுகதை - சாக்லெட் சாவி
‘‘இது எந்த ஊருங்க?’’‘‘கிருஷ்ணாபுரம்...’’ அவன் கால் போன போக்கில் நடந்து போய்க்கொண்டிருந்தான்.
அவன் மன ஓட்டத்தைவிட கால் ஓட்டம் இன்னும் ஓட்டம்.பள்ளிக்காலங்களில் பரிசு வாங்கியதெல்லாம் கால்களுக்கு ஞாபகம் வந்து ஓட்ட நடைக்கு உற்சாகம் சேர்த்தது. ஒருகாலத்தில் இவன் கவிஞன்.ஆனால், அவனுடைய கவிதாமனம் இப்போது வறண்டு போய் ‘அற்ற குளத்தின் அறுநீர்ப்பறவை’ போல கவிதைகளும் வர மறுத்துப் பறந்தன. எனக்கு இந்த ஊர்களெல்லாம் புதுசாயிருக்கு. கிணற்றுத் தவளையாய் வாழ்ந்துவிட்டேன்.
 இல்லை இல்லை, வாழ்வைத் தொலைத்து விட்டேன். என் வீடு, என் மனைவி, என் மக்கள் என இருந்து விட்டேன். இனி என் வீடு இல்லை. என்மனைவி இல்லை, என் மக்கள் இல்லை.என் ஐம்பத்து எட்டு வருட வாழ்க்கையில் என் வாழ்க்கை மட்டுமல்ல உலகமே தலை கீழாகி விட்டிருக்கிறது.
முன்பெல்லாம் பெரியவர்கள் சொன்னால் சின்னவர்கள் கேட்பார்கள்.கல்யாணத்திற்கு ஆண்கள் கண்டிஷன் போடுவார்கள்.முன்பெல்லாம் கணவன்தான் ‘வாடி போடி’ போடுவான், முன்பெல்லாம் கணவன்தான் சம்பாதிப்பான், முன்பெல்லாம் மனைவி சமைப்பாள், முன்பெல்லாம் மற்றவர்கள்தான் தாயிடம் ‘உங்கள் குழந்தை விஷமக் கொடுக்கு’ என்பார்கள். இப்போது எல்லாமே தலைகீழ்.முன்பெல்லாம் நாம்தான் தியேட்டருக்குப் போவோம், இன்று நூறு தியேட்டர்கள் நம் வீட்டின் கூடத்தில். அவ்வளவு ஏன்? முன்பு ஆட்டுக்கல் நிற்க குழவி சுழலும், இப்போதெல்லாம் குழவி நிற்க ஆட்டுக்கல்லே சுழல்கிறது.முன்பெல்லாம் பிள்ளை வீட்டைவிட்டு ஓடுவான்; இப்போதெல்லாம் அப்பன்! எதிர்காலத்தில் தலைகீழாகத் தொங்கும் விளக்குகள் வரும் என்று சாலமன் அன்றே சொன்னான் என்று அன்றே ஜீபூம்பா சொன்னார்.
அதற்காக, அத்தனையுமா தலைகீழ்? அவன் நடையே ஓட்டப்பந்தய ஓட்டமாயிருக்க வழியெங்கும் சாப்பாட்டுக்கடைகள்.இவ்வளவு பேர்களிடம் சாப்பிட காசு இருப்பதே ஆச்சர்யமாய் இருந்தது.தன்னை யாருமே சாப்பிட அழைக்காதது அவனுக்கு மு.மேத்தாவின்,‘‘என் சாலையில் எத்தனையோ வாகனங்கள், ஒன்றில்கூட எனக்கு இடமில்லை என்கிறார்கள்’ என்ற காதல் கவிதை ஞாபகம் வந்தது. சத்தமாகவே சிரித்து விட்டான்.
யாரோ ‘பைத்தியம் பைத்தியம்’ என்றார்கள். தன்னைத்தானே பார்த்துக் கொண்டான்.அவன் தாடியும் மீசையும் இரண்டு நாள் நடந்த களைப்பும், பசியும், வாயில் பசியின் துர்மணமும், அழுக்குப்படர ஆரம்பித்த வேட்டியும், கோபத்தில் மகனின் சட்டையை போட்டுக் கொண்டு வந்துவிட்டதால் அதன் தொள தொளாவும், எந்த சுமையும் கையில் இல்லாததும், தன் நிலைமையை அவ்வப்போது வாய்விட்டுப் புலம்புவதும், தானே பைத்தியம்தானோ என நினைக்க வைத்ததை நினைத்து மறுபடி சிரித்தான்.
இப்படித்தானே ஃப்ரான்ஸிஸ் க்ருபாவுக்கு இருந்திருக்கும்?
வீதியெங்கும் பழக்கடைகள்.
‘‘இது என்ன ஊரு தம்பி?’’
‘‘திண்டுக்கல். பைத்தியமாய்யா நீ? கடையோட போர்டுல ஊருபேரு, நீ தாண்டி வந்த வழியெல்லாம் போர்டுல ஊருபேரு... எதையுமே கவனிக்காம அப்படி எங்கேய்யா அவசரமா ஓடறே?’’
அட! தோணலையே! தோணும்படியாவா இருக்கு என் நிலைமை? மனசுல ஒரே படம்தானே ஓடிகிட்டிருக்கு திரும்பத் திரும்ப.அன்னிக்கு டிவியில பாத்தது ஞாபகம் வந்தது.முதியோர் இல்லத்தில் மதியம் ரெண்டுமணிக்கு வரவேற்பறையில் அமர்ந்திருந்த அம்மாவை சாப்பிடக் கூப்பிட்டார்கள்.
‘‘என்கூட வந்த மகளும், மருமகனும் பேரனும் வரட்டும்... ஒண்ணா சாப்பிடலாம்...’’ ‘‘அவங்க வரமாட்டாங்கம்மா...’’‘‘வரேன்னுட்டுதானே போனாங்க?’’
‘‘என்கிட்டே வரமாட்டேன்னுட்டுதான் போனாங்க...’’‘‘வரமாட்டாங்களா? இல்லத்துக்கு என்னமோ கொடுக்கணும்ன்னுதானே என்னை அழைச்சுட்டு வந்தாங்க..?’’ ‘‘குடுத்துட்டாங்கம்மா. உங்களைத்தான் இல்லத்துக்கு கொடுத்துட்டுப் போயிட்டாங்க...’’அந்த அம்மாளின் அதிர்ச்சி, முகத்தில் அம்மாவின் அதிர்ச்சி மனமும் தெரிந்தது. இதை நினைக்க நினைக்க வெறியேறி இன்னும் நடை துரிதமாயிற்று.
ஏன் மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்?
பெரியவர்களுக்கு சாப்பிட பெரிய இலையும் சின்னவர்களுக்கு சின்ன இலையும் போடுகிறார்கள். நியாயமாக பெரிவர்களுக்கு சின்ன இலையில் சாப்பிடத் தெரியும். குழந்தைகளுக்குத் தெரியுமா? தொழிலாளியின் கல்யாணத்திற்கு இருநூறு ரூபாயும் முதலாளி கல்யாணத்திற்கு 2000 ரூபாயும் மொய் எழுதுபவர்கள்தாமே நாம்? இந்த வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சு எங்கே பிசகிற்று?
‘‘சாவுகிராக்கி, ஓரமா போ. பைத்தியத்தின் மேல வண்டி ஏத்தினாலும் போலீஸ்காரன் என்னைத்தானே பிடிப்பான்?’’
லாரி டிரைவர் குலைத்தான்.லாரியின் பின்னால் நாலு மாடுகள் நிற்க வேண்டிய இடத்தில் பதினாறு மாடுகள் நெருக்கியடித்தபடி நகர முடியாமல் நின்றிருக்க அவற்றின் அத்தனை தலைகளும் லாரிக்கு வெளியே நீட்டப் பட்டு வரிசையாக கயிற்றால் இணைக்கப்பட்டிருந்தன.அவற்றின் எல்லாக் கண்களிலும் முதியோர் இல்லத்து அம்மாவின் பார்வை இருந்தது.
அத்தனை மாடுகளும் ஒருகாலத்தில் எத்தனை லிட்டர் பால் கொடுத்திருக்கும்? சேலம் ஐந்து ரோடு. இன்று அநாவஸ்ய நடைப்பயணத்தின் ஐந்தாவது நாள். எங்கே போகிறான் என்று தெரியவில்லை, தெரிந்துதான் என்ன ஆக வேண்டும்?
கண்போன போக்கிலே கால் போகிறதே கால்போன போக்கிலே மனம் போகிறதே! மனம் போன போக்கிலே மனிதன் போகிறேனே இதெல்லாம் மனிதன் போன பாதையை மறந்துபோனதால்தானே?
மாட்டிலிருந்து மனிதன் வரை வயதாவது ஒரு குற்றமா? வயோதிகம் என்பது தகுதியிழப்பா? வயோதிகத்தின் வயது வரம்புதான் என்ன?
பணி ஓய்வு கொடுப்பதே பணிக்குப்பின் ஓய்வுக்குத்தானே? ஆனால், ஓய்வுக்குப்பின்தானே பணிச்சுமை அதிகமாகிறது?
முதுமையின் முதல்பலி மானம்தான். உடலாலும் மனதாலும் மானம்தான்.
கொஞ்சதூரத்தில் ஒரு கார் நின்றது.காரிலிருந்து பிரம்மாண்ட நாய் குதித்திறங்கியது. காரிலிருந்தே ஓனர் ரெண்டு பிஸ்கட்டை விட்டெறிந்தான். ரெண்டு பிஸ்கட் கேட்டுப் பாக்கலாமா?
வேண்டாம். ஏதோ தடுத்தது.அந்த நாய் குனிந்த தலை நிமிராமல் ரசித்து ருசித்து சாப்பிட்டதில் இவனுக்கு பசித்தது.கார் கிளம்பும் ஒலி கேட்டது.நாய் தலை நிமிர்ந்ததும், டிரைவர் சீட் பக்கமிருந்து முழு பாக்கட் பிஸ்கட்டும் நாய் மேல் கொட்டியது.
நாய் மறுபடி குனிந்தபோது கார் பறந்தது.ஐய்யோ... ஐய்யோ... கூட்டிப்போக மறந்துட்டானா?
நாய் காரைத் துரத்த, கார் விரைய...
மிருகத்தின் கால்களை இஞ்சின் வென்றது. கார் சக்கரங்களுக்கும் நாயின் கால்களுக்கும் இடைவெளி குறையக் குறைய நாய்க்கு இரைத்தது.அதற்குள் அவன் நாய் திகைத்து நிற்கும் இடம் வரை வந்து விட்டான்.நாய்க்கு ஒன்றும் புரியவில்லை, அவனுக்கு தன்னைப் புரிந்தது போல நாயையும் புரிந்தது. நாய் அவனைப் பார்த்த ஒற்றைப்பார்வையில் லாரியின் அத்தனை மாடுகளின் மொத்தப் பார்வையும் இருந்தது.நாயும் அவனுடன் நடக்க ஆரம்பித்தது.
தர்மபுரிக்குள் நுழைந்தான்.சொந்த ஊரைத் தாண்டாதவன் எத்தனை ஊர்களைத் தாண்டியிருக்கிறான். சர்வீஸ் ரோடில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கோடா ஸ்லேவியாவின் டிக்கி மேல் நாலைந்து டிபன் பாக்ஸ்கள் திறந்திருக்க, ஒரு குடும்பம் பாக்குத் தட்டில் புளியோதரை சிப்ஸ் சாப்பிட ஆரம்பித்திருந்தது.
அதைப் பார்த்தே பசிவசம்... ‘‘ஐயா சாப்பிட்டு நாலு நாளாச்சு. நிஜம்மாவே. சாப்பிடக் கிடைக்குங்களா?’’ அம்மாவுக்கு மனதாகவில்லை.
‘‘அமாவாசையும் அதுவுமா பயணம் கிளம்பிட்டமேன்னு நெனைச்சேன். இவரு, தானா வந்து சாப்பிடக் கேக்கறாரு. இந்தாப்பா...’’தட்டு நிறைய புளியோதரையும் சிப்சும். அடுத்த ஐந்து நிமிடத்தில் லெமன் ரைஸ். அப்புறமா அதே அளவு தயிர்சாதம். அவன் சாப்பிட்ட வேகத்தில் பிச்சைக்காரன் தோத்தான்.அம்மாவுக்கு அவன் கடைசியாக நிஜம்மாவே என்றது நினைவுக்கு வந்தது. அம்மாவுக்கு திருப்தி.
ஐயா சொன்னார், ‘‘இவனை எங்கேயோ பாத்திருக்கேன்...’’ மருமகப்பிள்ளை அவனை விசாரித்ததில் அவனுக்கு தைராய்டு, ஷுகர், ப்ரஷர், ப்ராஸ்டேட்... இன்னும் என்னென்னவோ இருக்காம். இதனால் வேலை செய்யுமிடத்தில் இனிமேல் முடியாது என்று வீட்டிற்கு வந்துவிட்டதை வீட்டில் யாருமே விரும்பவில்லையாம்.
சம்பாதிக்காதவன் இனி வேண்டாம் என்று மனைவி, மகள், மகன் மூவரும் சேர்ந்தே துரத்திவிட்டதால், சுசீந்தரத்தில் இருந்து ஒத்த பைசா கையில் இன்றி, ரோசத்தில் கையில் கிடைத்த சட்டையை மாட்டிக் கொண்டு நடந்தே வந்து கொண்டிருக்கிறானாம்.உருகிப்போய், (சாப்பிட்டுக் கொண்டிருப்பதால் இடது கையில் கொடுக்கக்கூடாது என்று) அவன் சட்டைப்பையில் ஐந்து நூறு வைத்து விட்டு அம்மா ஆதங்கத்துடன் கேட்டாள்.
‘‘எவ்ளோ பைசா வெச்சிருக்கேப்பா?’’
‘‘நீங்க என் பாக்கெட்ல, இதை வெக்கலைன்னா என்கிட்ட எதுவும் கிடையாது. ரோசத்துல, வேகத்துல ஒத்த பைசாகூட எடுத்துக்க ஞாபகம் வரலை...’’ ஐயாவோ இவனை சமீபமாய் எங்கோ பார்த்திருப்பதாக யோசித்துக் கொண்டிருக்கையில், மருமகப் பிள்ளை ஒரு பை நிறைய மூன்று ரொட்டி மற்றும் பிஸ்கட் பாக்கட்டுகள், மிக்ஸர், தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தார்.
அவன் கண்களில் நிறைவு.‘‘அம்மா, குறையொன்றுமில்லை. மனசும், வயிறும் நிம்மதியாயிருக்குது. என் மகள், மகன், மனைவி செத்துப் போயிட்டாலும் எங்கேயோ கருணையும் கனிவும் உயிரோடதானிருக்குது...’’ தன் சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு ஒற்றைசாவியை எடுத்து மருமகனிடம் நீட்டினான்.
‘‘இது எதுக்கு எனக்கு?’’
‘‘தெரியலைங்க ஐயா. எனக்கும் இது என்ன சாவின்னு தெரியாது. மனசு நெறவா இருக்கும்போது, உங்களுக்கு திருப்பி எதாவது செய்யணும்ன்னு தோணிச்சு. வெச்சுக்குங்க...’’
கார்புறப்பட்டு நெடுஞ்சாலையில் மிதந்தது.கார் மறையும் வரை அவன் கைகள் நன்றிக்கூப்பலில் குவிந்திருந்தது.
அவனுக்கு துரோகம் இழைத்த குடும்பத்தின் மேல் ஐயாவுக்கு வெறி ஏறியது. அவருக்கும் அவனுடைய வயதுதான்.காரினுள் ஐயா திடீரென நினைவுக்கு வந்தவராக ‘‘அந்த நியூஸ் பேப்பரை எடுத்து நாலாவது பக்கத்தின் வலது கீழ்ப்பக்கம் காண்பி...’’ அவனுடைய படம் இருந்தது. ‘கீழ்க்கண்ட நபர் புத்தி சுவாதீனம் இல்லாதவர். அவருடைய மகனுடைய பாங்க் லாக்கர் சாவியுடன் காணாமல் போய்விட்டார். கண்டவர்கள் இந்த நம்பருக்கு கூப்பிடவும்...’ கார் கிருஷ்ணகிரி வனாந்திரத்தில் சென்று கொண்டிருந்தபோது மருமகனை நோக்கி கையை பிச்சை போல நீட்டினார். மருமகன் அந்த சாவியை அவர் கையில் வைத்தான். ஹெட்லைட்ஸை அணைத்ததால் கும்மிருட்டு. அமாவாசை இருட்டு.
அந்த சாவியை ஐயா முத்தமிட்டபோது, சாவி ஜில்லென்று இனித்தாற் போலிருந்தது.ஐயா ஓடும் காரிலிருந்து பலம் கொண்ட மட்டும் தூரத்தில் காட்டினுள் சாவியை வீசி எறிந்தார். அவனைப்போலவே அவருக்கும் மனசுக்கு நிறைவாயிருந்தது.
- சப்தரிஷி லா.ச.ரா.
|