Must Watch



மூன்வாக்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மலையாளப் படம், ‘மூன்வாக்’. இப்போது ‘ஹாட்ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. எண்பதுகளில் படத்தின் கதை நிகழ்கிறது. ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பையன், ஜேக். அவனுடைய அம்மா வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 

ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்கிறார் அப்பா. போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருகிறான் ஜேக். எந்தவித வசதியுமற்ற குடும்பத்தில் பிறந்தவன், சுரா. பாட்டி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வாழ்ந்து வருகிறான்.

இப்படி சமூகத்தின் பல்வேறு படிநிலைகளிலிருந்து வரும் ஜேக், சுரா, அருண், வருண், சிபு, ஷாஜி, சுதீப் ஆகியவர்களை நடனம் ஒன்றிணைத்து நண்பர்களாக மாற்றுகிறது.
நடன வீடியோக்களைப் பார்த்து நடனம் கற்றுக்கொள்கின்றனர். 

குறிப்பாக மைக்கேல் ஜாக்சனின் நடனம் இவர்களின் மீது பெரும் தாக்கத்தை உண்டாக்குகிறது. மைக்கேலைப் போல ஒரு டிரெண்டை இங்கே உருவாக்க நினைக்கிறார்கள். இந்த நண்பர்கள் நடனத்தில் சாதித்தார்களா என்பதே மீதிக்கதை. நடனப்பிரியர்கள் தவறவிடக்கூடாத ஒரு படம் இது. இதன் இயக்குநர் வினோத் ஏ.கே.

டிடெக்டிவ் உஜ்வாலன்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலை அள்ளிய மலையாளப்படம், ‘டிடெக்டிவ் உஜ்வாலன்’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது.

உள்ளூரில் ஒரு நூலகத்தை நடத்தி வருகிறான் உஜ்வாலன். ஊருக்குள் நடக்கும் திருட்டுச் சம்பவங்கள் உட்பட சின்னச் சின்ன வழக்குகளைத் தீர்த்து வைக்கிறான். அதனால் ஊர் மக்களிடம் அவனுக்கு நல்ல மதிப்பு.

ஆனால், சின்ன வயதில் நடந்த ஒரு சம்பவத்தின் காரணமாக இருட்டு என்றால் உஜ்வாலனுக்கு மிகவும் பயம். திரில்லர் படங்களைப் பார்த்தும், துப்பறியும் நாவல்களைப் படித்தும் தன்னை ஒரு டிடெக்டிவ்வாக கற்பனை செய்து கொள்கிறான். இந்நிலையில் ஸ்கூல் பிரின்சிபல் கொலை செய்யப்படுகிறார். அன்றிலிருந்து அமைதியான ஊரே நிலைகுலைந்து போகிறது.

தன்னுடைய டிடெக்டிவ் அறிவைப் பயன்படுத்தி  கொலைகாரனைக் கண்டுபிடிக்க உதவுகிறான் உஜ்வாலன். ஆனால், அடுத்த சில நாட்களில் பிரின்சிபல்கொலை செய்யப்பட்டதைப் போலவே இன்னொருவரும் கொலை செய்யப்படுகிறார். 

அப்படியென்றால் உண்மையான கொலைகாரன் யார்? உஜ்வாலனால் கொலையாளியைக் கண்டுபிடிக்கமுடிந்ததா என்பதே மீதிக்கதை. எங்கேயும் நிற்காமல் சுவாரஸ்யமாகச் செல்லும் இப்படத்தை இந்திரநீல் கோபிகிருஷ்ணனும், ராகுல் ஜியும் இணைந்து இயக்கியிருக்கின்றனர்.

பேடிங்டன் இன் பெரு

பத்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி, சக்கைப்போடு போட்ட ஹாலிவுட் படம், ‘பேடிங்டன்’. இதன் வெற்றியைத் தொடர்ந்து ‘பேடிங்டன் 2’ வெளியானது. இதுவும் வெற்றியடைய, சமீபத்தில் பேடிங்டன் பட வரிசையில் மூன்றாவது படமான ‘பேடிங்டன் இன் பெரு’ வெளியானது. இப்போது இந்தப் படத்தை ‘நெட்பிளிக்ஸி’ல் பார்க்கலாம்.

பெருவில் இருக்கும் ஓய்வுபெற்ற கரடிகளுக்கான இல்லத்திலிருந்து ஒரு கடிதத்தைப் பெறுகிறது பேடிங்டன் எனும் கரடி. பேடிங்டனை அத்தை லூசி ரொம்பவே மிஸ் பண்ணுவதாக அந்தக் கடித்ததில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

உடனே பேடிங்டனும், பிரவுன் குடும்பமும் பெருவுக்குச் சென்று, லூசியைக் காண முடிவு செய்கிறது. பயணம் ஆரம்பிக்கிறது.பெருவை அடைவதற்கு முன்பு லூசியைக் காணவில்லை என்ற அதிர்ச்சியான செய்தி பேடிங்டனுக்கும், பிரவுன் குடும்பத்தினருக்கும் தெரிய வருகிறது.

அத்தை லூசிக்கு என்ன நடந்தது? பேடிங்டன் லூசியைச் சந்தித்ததா? உண்மையில் என்ன நடந்தது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறது திரைக்கதை.
குழந்தைகளுடன் சேர்ந்து ஜாலியாக பெரியவர்களும் பார்க்கலாம். படத்தின் இயக்குநர் டவ்கல் வில்சன்.

ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்

‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகியிருக்கும் ஆங்கிலப்படம், ‘ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்’. தமிழ் டப்பிங்கிலும் காணக் கிடைக்கிறது. அமெரிக்காவின் சிஐஏ அதிகாரிகளும், இங்கிலாந்தின் சீக்ரெட் இண்டலிஜென்ஸ் சர்வீஸான எம் 16 ஏஜெண்டுகளும் இணைந்து ஒரு குழுவாகச் செயல்பட்டு வருகின்றனர். 

இவர்களை சீனியர் ஏஜெண்டான பிஸட் வழிநடத்துகிறார். ஸ்பெயினில் தக்காளித் திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. அங்கே பிஸட்டின் குழுவினர் ஒரு முக்கியமான மிஷனுக்காக முகாமிட்டிருக்கின்றனர்.

அங்கே ரஷ்யாவின் அணு ஆயுத வியாபாரி விக்டரும் இருக்கிறான். அவனைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் பிஸட் குழுவின் மிஷன். விக்டரையும், அவனது குழுவினரையும் துரத்துகிறது பிஸட்டின் குழு. புத்திசாலித்தனமாக செயல்பட்டு, பிஸட்டின் குழுவினரைக் கொல்கிறது விக்டரின் குழு. 

இதுபோக உலகையே கண்காணிக்கும் ஒரு திட்டத்தையும் கையகப்படுத்துகிறார் விக்டர்.
ஆயுத வியாபாரியான விக்டரின் திட்டங்கள் எப்படி முறியடிக்கப்படுகின்றன என்பதே மீதிக்கதை. ஆக்‌ஷன் படப்பிரியர்களுக்கு உரித்தான படம் இது. பிஸட் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. படத்தின் இயக்குநர் இல்யா நைசல்லர்.

தொகுப்பு: த.சக்திவேல்