ஒரே பந்தில் 286 ரன்கள்!



கிரிக்கெட் என்றுமே ஆச்சரியங்களும், சுவாரஸ்யங்களும், சாதனைகளும் நிறைந்த விளையாட்டுதான். ஏனெனில், வெற்றி பெறமுடியாத இமாலய இலக்கு என நினைக்கும்போது அதனை எளிதாக எட்டிப்பிடித்து வெற்றியை ஈட்டும் தருணம் ஒருபுறம் என்றால்... எளிதாக வெற்றி பெறும் என நினைத்த நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் சொற்ப ரன்னிற்குள் பறிகொடுத்து கோட்டைவிடுவதையும் மறுபுறம் பார்க்கலாம்.

ஒரு பந்தில் ஆறு ரன்கள் தேவை எனும் நிலையில் சிக்சர் அடித்து வெற்றியை தன்வசமாக்கும் நிகழ்வுகளும் இதில் நடந்தேறும். சமயங்களில் ஆறு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் என்ற நிலையில் அதனை அடிக்க முடியாமல் தோல்வியடைவதும் நடக்கும். இப்படி எக்கச்சக்க ஆச்சரியங்கள் கிரிக்கெட்டில் இருக்கின்றன.

ஒரு பந்தும் 286 ரன்களும்...  

ஆனால், சமீபத்தில் வெளியான ஒரு கிரிக்கெட் செய்தி இதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை ஆச்சரியத்தை பலருக்கும் கொடுத்துள்ளது. உண்மையில் இது நடந்ததா அல்லது கற்பனையா என்று தெரியவில்லை. 
இது நடந்தது 1894ம் ஆண்டில். பொதுவாக ஒரு பந்தில் அதிகபட்சம் ஆறு ரன்கள் அடிக்கலாம். ஆனால், இந்தக் ‘கதை’யில் 286 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. 1894ம் ஆண்டு லண்டனில் இருந்து வெளியாகும், ‘The Pall Mall Gazette’ என்ற மாலை பத்திரிகையில் இந்தச் செய்தி வெளிவந்ததாகச் சொல்லப்படுகிறது.  

அதாவது மேற்கு ஆஸ்திரேலியாவின் பான்பரி மைதானத்தில் விக்டோரியா அணிக்கும், ஸ்கிராட்ச் லெவன் அணிக்கும் கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது. இதில் ஸ்கிராட்ச் லெவன் அணி பவுலிங் செய்துள்ளது. அப்போது வீசப்பட்ட முதல் பந்தினை விக்டோரியா அணியின் பேட்ஸ்மேன் தூக்கி அடிக்க, அது மைதானத்தின் உள்ளே இருந்த உயரமான ஜாரா மரத்தின் கிளைகளில் மாட்டிக் கொண்டது.

 இதனால் விக்டோரியா அணி பேட்ஸ்மேன்கள் ஓடத் தொடங்கினர். பந்து கைகளுக்கு வராததால் அவர்கள் ஓடிக்கொண்டே இருந்தனர்.இந்நிலையில் செய்வதறியாது திகைத்த ஸ்கிராட்ச் லெவன் அணியினர் பந்து தொலைந்துவிட்டதாக அறிவிக்கும்படி நடுவரிடம் முறையிட்டுள்ளனர்.

ஆனால் நடுவரோ, பந்து கண்களுக்கு நன்றாகத் தெரிவதால் முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் ரன் வேட்டை தொடர்ந்துள்ளது. பின்னர் ஸ்கிராட்ச் லெவன் அணியினர் கோடரி கொண்டு வந்து மரத்தை வெட்டிப் பார்த்துள்ளனர். அது முடியாமல் போகவும் துப்பாக்கியை வைத்து பந்தினை நோக்கிச் சுட்டுள்ளனர். பல கட்ட சுடுதலுக்குப் பிறகு பந்து கீழே விழுந்துள்ளது.

இதற்குள் விக்டோரியா அணி பேட்ஸ்மேன்கள் 286 ரன்கள் ஓடி எடுத்தனர் என்கிறது அந்தப் பத்திரிகைச் செய்தி. மொத்தமாக பிட்ச்சில் ஆறு கிமீ தூரம் பேட்ஸ்மேன்கள் ஓடியுள்ளதாகக் குறிப்பிடுகிறது.ஆனால், சில ஆஸ்திரேலிய பத்திரிகைகள் இது, ‘The Pall Mall Gazette’ பத்திரிகையின் கண்டுபிடிப்பே தவிர வேறில்லை என கண்டிக்கின்றன. ஏனெனில் எந்த ஆஸ்திரேலிய பத்திரிகைகளிலும் இதுகுறித்த செய்திகள் அப்போது வரவில்லை என்பதுதான்.  

சரி, ஒரு பாலுக்கு எத்தனை ரன்கள் எடுக்கமுடியும்?

2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் டி20 தொடரில் டிராவிஸ் பிர்ட் என்ற வீரர் ஒரு பந்தில் 20 ரன்கள் குவித்துள்ளார். அதாவது முதல் பந்தில் சிக்சரும், அடுத்த இரண்டு பந்துகளும் நோ-பாலாக அமைய அதில் இரண்டு சிக்சர்களுடன் 20 ரன்கள் அடித்துள்ளார். அது இணையத்தில் ஒரு பந்தில் 20 ரன்கள் என உலா வருகின்றன. 

இதேபோல் 2004ம் ஆண்டு இந்தியாவின் வீரேந்தர் சேவாக் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடர்ந்து போடப்பட்ட நோ-பால்களில் பவுண்டரிகளாக விளாசி ஒரு பந்தில் 17 ரன்கள் எடுத்தார் என்ற செய்தியும் வைரலாகியுள்ளன. இவையெல்லாம் அதிகாரபூர்வ உலக சாதனைகள் கிடையாது என்றாலும் கேட்பதற்கு ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் தருபவை.

கிரிக்கெட் விளையாட கோவேறு கழுதையில் பயணம்...

இது மற்றொரு ஆச்சரியமான செய்தி. தென் அமெரிக்கா கால்பந்து விளையாட்டுக்கு ரொம்பவே புகழ்பெற்றது என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அங்கேயும் கிரிக்கெட் நீண்டகாலமாகவே பரவலாக விளையாடப்பட்டு வருவது பலர் அறியாதது.தென் அமெரிக்காவில் அர்ஜென்டினா, பிரேசில், சிலி, உருகுவே, பனாமா, மெக்ஸிகோ, வெனிசுலா, கொலம்பியா, ஈகுவேடார் உள்ளிட்ட நாடுகளில் இன்றும் கிரிக்கெட் விளையாடப்படுகிறது.

இந்த நாடுகளில் கிரிக்கெட் அசோசியேஷன்களும் செயல்பட்டு வருகின்றன. தென் அமெரிக்க கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் அர்ஜென்டினா நாடு 1868ம் ஆண்டு முதன்முதலாக உருகுவேயுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. பின்னர் 1888ம் ஆண்டு பிரேசில் அணியுடனும், 1893ம் ஆண்டு சிலியுடனும் விளையாடியது.

இதில் 1893ம் ஆண்டு சிலியுடனான போட்டிக்காக சான்டியாகோ நகருக்குச் செல்ல அர்ஜென்டினா அணி வீரர்கள் ஆண்டிஸ் மலையை கோவேறு கழுதையில் கடந்து சென்றுள்ளனர். இதற்கு மூன்றரை நாட்கள் ஆனதாகச் சொல்கின்றன தகவல்கள். இதன்பிறகே அவர்கள் சான்டியாகோ நகரை அடைந்து சிலி அணியுடன் விளையாடியுள்ளனர். கோவேறு கழுதையில் பயணித்து கிரிக்கெட் விளையாடிய அந்த நாட்கள் இன்றும் பேசப்பட்டு வருகின்றன.

பி.கே.