பறக்கும் மிதுன்!



‘பறந்து போ’ திரைப்படத்தின் மூலம் பலரின் மனங்களில் அன்பாய் நிறைந்திருக்கிறான் பத்து வயது சுட்டிப் பையன் மிதுல் ரயான். கதையின் நாயகனாக ஜொலிக்கும் அவனின் குறும்புத்தனங்களும் நடிப்பும் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளன. 
சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் தங்கையுடன் ஜாலியாக விளையாடியபடி பறந்து போய்க்கொண்டிருக்கும் மிதுலிடம் பேசுவதற்கு எதுவுமில்லை. அவனின் சுட்டித்தனங்களே போதும். நம்மை அவ்வளவு ரசிக்க வைக்கின்றன!

‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. இவ்வளவு தூரம் மிதுல் பேசப்படுவான்னு நினைக்கல. இதுக்கு இயக்குநர் ராம் சார், நடிகர் மிர்ச்சி சிவா சார் உள்ளிட்ட அனைத்து படக்குழுவினருக்கும் நாங்க நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கோம்...’’ என நெகிழ்வாய் பேசுகின்றனர் மிதுலின் அப்பா மயூதரனும், அம்மா கிரேஸும். ‘‘எனக்கு விழுப்புரம். 
என் கணவருக்கு ஓசூர். திருமணத்திற்குப் பிறகு சென்னையில் செட்டிலாகிட்டோம். மூத்தவன் மிதுல் ரயான். அடுத்து மகள் மிலா. இரண்டு பேருமே பயங்கர சுட்டிகள். மிதுல் இங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்.

என் கணவர் தாய்லாந்து கம்பெனிக்கு இங்கிருந்தே ஜாப் வொர்க் செய்றார். தவிர, நானும் அவரும் ஒரு ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்திட்டு வர்றோம். மிதுலின் முதல் பிறந்தநாள் செலிபிரேஷன்ல இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சோம். 

இப்ப சிறப்பா போயிட்டு இருக்கு. அப்புறம், கணவர்சோஷியல் சர்வீஸும் பண்ணிட்டு இருக்கார். விழுப்புரத்துல சோஷியல் சர்வீஸ் சென்டரில்மாற்றுத்திறனாளி மையம் வைச்சிருக்கோம். அதன் வழியா தொழில் சார்ந்த வேலைகளை இலவசமாகக் கற்றுக் கொடுக்குறோம்.

என் கணவர் அவர் வேலை ப்ளஸ் என்னுடைய வொர்க்னு இரண்டிலும் இருக்கிறதால பல இடங்களுக்கு போயிட்டு வருவார். அப்போ, மிதுலையும் அழைச்சிட்டு போவார்.
கிராமப்புறப் பகுதிகளுக்கு எல்லாம் அவனைக் கூட்டிட்டு போயிருக்கார். இரண்டு பேரும் நிறைய சுத்துவாங்க. 

அதனால் மிதுலுக்கு எல்லோர் கூடவும் இயல்பாகப் பழகும் தன்மை வந்திடுச்சு. ஈஸியா மிங்கிள் ஆகிடுவான். வெளியாட்களுடன் பேசிப் பழக ரொம்ப விரும்புவான். அவன் கேரக்டருக்கு ஏற்றமாதிரி இந்தப் படமும் அமைஞ்சதால் நல்லா பண்ணியிருக்கான்னு நினைக்கிறேன்...’’ என அம்மா கிரேஸ் அத்தனை உற்சாகமாகப் பேச, அப்பா மயூதரன் இந்த வாய்ப்பு கிடைத்தது பற்றித் தொடர்ந்தார்.

‘‘என் மனைவி கிரேஸின் ஃபேஸ்புக் குரூப்ல ராம் சார் படத்துக்கு ஆடிசன் பண்றாங்கனும், குழந்தைகளைப் பத்தின கதைனும் ஒரு நண்பர் டேக் செய்திருந்தார். அதைப் பார்த்திட்டுதான் என் மனைவி ஒரு ஆர்வத்துல மிதுலின் புகைப்படங்களை அனுப்பி வைச்சாங்க. 

அப்புறம், ஒரு மாசத்திற்குப் பிறகு ஆடிசன் வந்தது. ராம் சார் ஆபீசுக்குப் போனோம்.அவன் எல்லோர் கூடவும் மிங்கிள் ஆவானானு கேட்டார். நாங்க கிராமப் பகுதியில் எல்லோரிடையும் பழகின வீடியோவை அவரிடம் காட்டினோம். அவனும் ஆடிசன்ல நல்லா பண்ணியிருக்கான். நாலு ஐந்து நாட்கள் இந்த ஆடிசன் நடந்தது.

அவங்க சொல்றதை புரிஞ்சிக்கிட்டு பண்றானா, எமோஷனல் கேரக்டரை எப்படி செய்றான்னு பல டெஸ்ட்கள் வச்சாங்க. பிறகே ஓகேனு சொன்னாங்க. அப்படியாக மிதுலுக்கு, ‘பறந்து போ’வில் நடிக்க சான்ஸ் கிடைச்சது. அப்புறம், ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி நிறைய ட்ரைனிங்கும்  கொடுத்தாங்க. இவனுக்கு நீச்சல் தெரியாது. அதைக் கத்துக் கொடுத்தாங்க. அப்புறம், வேவ்போர்டு கத்துக்கிட்டான். கூடவே ஃபுட் பால் விளையாடவும் சொல்லித் தந்தாங்க. அதையும் படிச்சான். பிறகே ஷூட்டிங் போனான்.

அங்கேயும் மிர்ச்சி சிவா சார் இவனிடம் ரொம்பப் பாசம் காட்டினார். ராம் சாரும் மிதுல் கிட்ட பழகும்போது ஒரு குழந்தையாகவே மாறினார். மொத்தத்தில் மிதுலை மொத்த செட்டும் ஜாலியாக வச்சிக்கிட்டாங்க.அவனும் அன்பு கேரக்டரை நல்லா புரிஞ்சிக்கிட்டான். கோவை, மைசூர், பாலக்காடு னு பல இடங்கள்ல ஷூட்டிங் நடந்துச்சு. இதுக்கு முன்னாடி அவன் நடிச்சதில்ல. எங்க சொதப்பிடுவானோனு எங்களுக்கு ஒரே பயம்.

ஆனா, இன்னைக்கு, ‘நல்லா பண்ணியிருக்கான்’னு கேட்குறப்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு...’’ என அவர் அப்பா நிறுத்த, சட்டென இடைமறித்த சுட்டிப் பையன் மிதுல், ‘‘படத்திலும் கிரேஸி ஆன்டிதான் எனக்கு அம்மா. இங்கேயும் என் அம்மாபேரும் கிரேஸிதான். அதனால் எனக்கு பயமே வரல...’’ எனச் சொல்லி அனைவரையும் கலகலப்பூட்டினான்.

‘‘ஷூட்டிங் ரொம்ப சூப்பரா இருந்தது. எல்லோருமே பாராட்டுறாங்க. இப்ப ஸ்கூல் போயிட்டு இருக்கேன். அங்கேயும் நல்லா நடிச்சிருக்கேன்னு சொன்னாங்க. ரொம்ப ஹேப்பியா இருக்கு அங்கிள்...’’ எனச் சிரிக்கும் மிதுலின் கண்களில் அத்தனை சந்தோஷமும் உற்சாகமும் மின்னுகிறது.  

ஆர்.சந்திரசேகர்