சிறுகதை - பரிகாரம்



திருவொற்றியூர் கடற்கரையில் ஓயாமல் துரத்தும் அலைகளைப் பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருந்தாள் கலாவதி. அருகே கணவர் நடேசன் ஒரு நாவலில் மூழ்கியிருந்தார். அவள் நாலாபக்கமும் சுற்றிப் பார்த்தாள். பாறைகளால் உருவாக்கப்பட்ட மேடான பாதையில் சிலர் சமுத்திரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். மறுபக்கம் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக நிறுவப்பட்டிருந்த ‘கான்க்ரீட்’ தூண்கள் பிரம்மாண்டமான சதுரங்க யானைகளைப் போலக் காட்சியளித்தன.

வலது பக்கம் தொலைதூரத்தில் துறைமுகத்து பளுதூக்கிகள் தென்பட்டன. வங்காள விரிகுடாவில் படகு தள்ளாடிக் கொண்டிருந்தது.“என்ன... ஒண்ணும் பேச மாட்டேங்கறே...” என்றார் நடேசன், புத்தகத்தை மூடியவாறே.“நம்ம பொண்ணைப் பத்தின கவலைதாங்க. முப்பது வயசாயிடுச்சி. எப்பதான் கல்யாணம் ஆகுமோ தெரியலை... நாம பதிஞ்சு வெச்ச மேட்ரிமோனியில இருந்து நிறைய வரன் வந்தது.

எதுவுமே அமையலை...”“ஜோஸ்யர் குருபலன் வந்திடுச்சின்னு சொல்லிட்டாரே கலா... இந்த வருஷத்துக்குள்ள நடந்துடும்...”“நிறைய பேர்கிட்ட அவளோட ஜாதகத்தை காண்பிச்சாச்சு. ஸ்திரீ சாபம்... நாக தோஷம்... அது இதுன்னு ஒவ்வொருத்தரும் விதவிதமா சொல்றாங்க...”“எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கையில்ல. நீதான் அவங்க சொல்ற பரிகாரம் எல்லாத்தையும் ஒண்ணு விடாம பண்றியே...”“தண்டையார்பேட்டையில ஒரு தேவி உபாசகர் இருக்கார்.

அவர் வாக்கு அப்படியே பலிக்குதாம். கடைசியா ஒரு தடவை அங்கேயும் பார்த்துடலாங்க...”“இப்படிதான் போன வருஷம் மைசூர் பக்கத்துல தலக்காடு கூட்டிட்டு போக சொன்ன... அஞ்சு சிவன் கோவில்ல அபிஷேகம் செஞ்சு காவிரி தண்ணியை எடுத்துட்டு வந்தோம். வீட்டுல அய்யருங்களை வரவழைச்சு மந்திரம் ஓதி, ஏழு சுமங்கலிக்கு சாப்பாடு போட்டு சேலை, பணம் எல்லாம் குடுத்தே...”“அது ‘கர்ம பிராயச்சித்தம்’ங்க. மாம்பலத்துல ஒருத்தர்கிட்ட பிரஷ்னம் கேட்க போனோமே... 

அவர் சொன்னது...” என்றாள் கலாவதி.“அப்பறம்... வாராவாரம் கோயிலுக்குப் போயி துர்க்கைக்கு எட்டு எலுமிச்சம் பழ மூடியில பசும் நெய் விட்டு தீபம் ஏத்திட்டு வந்தே...”“கோயம்பேடுல ஆரூடம் பார்த்த ஒரு மாமி சொன்ன பரிகாரம் அது...”“வெள்ளிக்கிழமை அன்னிக்கு வரளி மஞ்சளை பத்மாவதி தாயார் படத்துக்கு முன்னாடி வெச்சு ஒரு மண்டலம்...” என்று ஆரம்பித்தவரை பாதியில் நிறுத்தினாள் கலாவதி.

“எல்லாமே நம்ம சபிதாவுக்கு நல்ல எடத்துல கல்யாணம் ஆகணும்கறதுக்காக செஞ்சது. சும்மா சொல்லிக் காட்டாதீங்க...”ஹெல்மெட்டை சுமந்தவாறே எழுந்தார் நடேசன். புடவையின் பின்பக்கம் ஒட்டிக்கொண்டிருந்த மணலைத் தட்டிவிட்டபடியே அவளும் புறப்படத் தயாரானாள். எண்ணூர் அதிவிரைவுச் சாலையில் நிறுத்தியிருந்த வண்டியை நோக்கிச் சென்றனர்.

“பட்டினத்தார் சமாதி இங்கேயிருந்து எவ்வளவு தூரம்ங்க..?”
“இதே வாடையிலதான் இருக்கு கலா. பத்து நிமிஷத்துல போயிடலாம். எதுக்கு கேட்கறே..?”“யூடியூப்ல ஒரு வீடியோ பார்த்தேங்க. அந்தக் கோயில்ல ‘பேய்க்
கரும்பு’ இருக்காம். அதுகிட்ட நம்ம குறையை மனமுருகி சொன்னா உடனே நிவர்த்தி ஆகுதாம். நாம நினைச்ச காரியம் சீக்கிரமா நடக்குமாங்க...”
நடேசன் சிரிப்பை மறைக்க தலைக்கவசத்தை அணிந்து கொண்டு ‘பைக்’கை உயிர்ப்பித்தார். கலாவதி பின்னிருக்கையில் ஏறி அவருடைய வலது தோளைப் பற்றிக் கொண்டு உட்கார்ந்தாள்.

தண்டையார்பேட்டை ஜோதிடரின் அறை ஐம்பத்தோரு சக்தி பீடங்களைச் சேர்ந்த இறைவியின் திருவுருவப் படங்களால் நிறைந்திருந்தது. ராஜராஜேஸ்வரி, மாசாணியம்மன், வாராஹி போன்ற தெய்வ மூர்த்தங்கள் பூஜையில் வைக்கப்பட்டிருந்தன. 

தசாங்கம் நறுமணத்துடன் கமழ்ந்து கொண்டிருக்க, அபிராமி அந்தாதி, லலிதா சஹஸ்ரநாமம் முதலான ஆன்மீகப் புத்தகங்கள் காணப்பட்டன.சந்தனம், திருநீறு, செந்தூரம் சேர்ந்த கலவையான நெற்றியுடன் மணையில் உட்கார்ந்திருந்த தேவி உபாசகர் “சொல்லுங்கம்மா...” என்றார். கழுத்தில் ஒற்றை ருத்ராட்ச மாலை தொங்கியது.

கலாவதி ஒரு தாளை அவரிடம் கொடுத்தாள். அதன் நான்கு முனைகளிலும் மஞ்சள் தடவியிருந்தது. “அய்யா... இது என் பொண்ணு சபிதாவோட ஜாதகம். அவளுக்குக் கல்யாணம் தள்ளிப் போயிட்டேயிருக்கு. எப்போ நடக்கும்னு நீங்க பார்த்து சொல்லணும்...”அவர் கோகிலாம்பிகை படத்தின் முன்னால் அதை வைத்து கண் மூடி தியானித்து விட்டு, பிரித்துப் படித்தார்.

“உத்திர நட்சத்திரம் நாலாம் பாதம்... கன்யா ராசி... லக்னத்துல சந்திரன்... இரண்டாம் எடத்துல கேது... களத்திர ஸ்தானத்துல குரு பகவான்... அஷ்டமத்துல ராகு... பத்துல சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய்... பதினொண்ணுல சனி...” என்றவாறே நோட்டுப்புத்தகத்தில் பென்சிலால் கணக்குகள் போட்டார்.  “இந்த ஜாதகக்காரர் வேற தேசத்துல இருக்கணுமே..”
கலாவதி வியப்புடன் “ஆமாங்க... அவளுக்கு வேலை மேற்கு ஆப்பிரிக்காவுல...” என்று திரும்பி கணவரைப் பார்த்தாள்.

“‘ஸெனகல்’ங்கற நாட்டுல...” என்றார் நடேசன்.“ஏழுல வியாழன் இருக்கறதால நல்ல எடத்துல விவாகம் நடக்கும். ரெண்டு குழந்தை பாக்கியம் உண்டு. எண்பத்தெட்டு வயசு வரைக்கும் தீர்க்காயுசோட இருப்பா. கெஜகேசரி யோகமிருக்கு. இன்னும் ஆறு வருஷத்துக்கு சந்திர தசை. கல்யாணத்துக்கு பிடி குடுக்க மாட்டா. ஏன்னா ரெண்டுல கேது நீச்சமா உட்கார்ந்திருக்கான். கால சர்ப்ப தோஷமும், திருஷ்டியும் இருக்கு. எளிமையான பரிகாரம் சொல்றேன்.

ஒரேயொரு தடவை செஞ்சா போதும்...”“எதுவானாலும் பண்றேன் அய்யா...”“உங்க வீட்டு பக்கத்துல நவக்கிரக சன்னிதி எந்தக் கோயில்ல இருக்குன்னு பார்த்து வெச்சுக்குங்க. அந்த ஒன்பது சிலைகளைச் சுத்தி எந்தக் கம்பித் தடுப்பும் இல்லாம இருக்கணும். அதுல ராகு, கேது யாருன்னு தெரிஞ்சுக்கோங்க. 

செவ்வாய்க்கிழமை காலையில எந்திரிச்சி வெறும் வயித்துல தலைக்கு குளிச்சுட்டு சாமி அறையில விளக்கு ஏத்தணும். அப்பறம் எண்ணி நாலே நாலு மிளகு... சமையலுக்கு தினமும் பயன்படுத்தற கல் உப்பு ஒரு கைப்பிடி...”‘எங்க வீட்டுல டேபிள் சால்ட் தான்...’ என்று நடேசன் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

“ரெண்டையும் ஒரு உறையில போட்டு வெச்சுக்கோங்க. இந்தப் பரிகாரத்தை உங்க மகள் சார்பா நீங்க செய்யலாம். அவளோட உடுப்பு ஏதாச்சும் இருந்தா அதையும் எடுத்துக்குங்க. கோயிலுக்கு போயி எந்தெந்த சாமியை கும்பிடணுமோ எல்லா சன்னிதிக்கும் போயிட்டு கடைசியா நவக்கிரத்துக்கு வாங்க.

ஏன்னா இதைச் செஞ்சு முடிச்சவுடனே நேரே வீட்டுக்குதான் வரணும். இடது கையில பொண்ணோட ஆடையை வெச்சுகிட்டு, வலது கையால கல்லுப்பு, மிளகு ரெண்டையும் ராகு பகவானோட திருவடியில போட்டுட்டு திருஷ்டி கழியணும்னு நல்லா வேண்டிக்கோங்க. அப்பறம் நவக்கிரகத்தை பிரதட்சணமா ஏழு வாட்டியும் வலமிருந்து இடமா ரெண்டு தடவையும் சுத்தி வரணும்...”“சரிங்கய்யா...” என்றாள் கலாவதி.

“ஒன்பது முறை ஆனவுடனே கிரகங்களைத் திரும்பிப் பார்க்காம அந்த எடத்தை விட்டு நகர்ந்துடுங்க. நேரே உங்க வீட்டுக்குதான் வரணும். வேறெங்கயும் போகக் கூடாது.
இப்ப நான் சொல்லப் போற விஷயம் ரொம்ப முக்கியம். கோயில்ல இருந்து கிளம்பி வீடு வந்து சேர்ற வரைக்கும் யார் கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்கக் கூடாது. எதுவும் பேசாதீங்க. மௌன விரதம் மாதிரி இருக்கணும்...”நடேசன் தலைகுனிந்து வாய்மூடி தனக்குள் நகைத்துக் கொண்டார்.

“வீட்டுக்கு வந்தவுடனே காலைக் கழுவக் கூடாது. தண்ணியை மூணு தடவை வாயில ஊத்தி கொப்பளிச்சு துப்புங்க. கண்ணாடியில உங்க முகத்தை நீங்களே பார்த்துக்கணும். அவ்வளவுதான். 

இந்தப் பரிகாரத்தை காலையில ஆறே முக்கால் மணியிலருந்து எட்டே முக்காலுக்குள்ள செஞ்சு முடிச்சுடணும்...”“அப்படியே பண்றேன்...”“இதே மாதிரி வெள்ளிக்கிழமை கேதுவுக்கு செய்யணும். அன்னிக்கு மட்டும் சாயங்காலம் கோயில்ல பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சாத்திட்டு பன்னெண்டு வாட்டி சுத்தி வாங்க.

இதையெல்லாம் நம்பிக்கையோட பண்ணீங்கன்னா பொண்ணுக்கு ஒரு வருஷத்துக்குள்ள நிச்சயமா கல்யாணம் நடக்கும்...”“ரொம்ப சந்தோஷம்யா...” என்ற கலாவதி பழங்களுடன் தட்டில் ஆயிரம் ரூபாய் தட்சணையும் வைத்து ஜோதிடரிடம் கொடுத்துவிட்டு, மகளின் ஜாதகத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டாள்.நடேசன் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வரும்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலால் காலடிப்பேட்டை மெட்ரோ நிலையத்தைத் தாண்டி இடப்பக்கம் வண்டியைத் திருப்பினார்.

கலாவதியின் கைபேசி நான்கைந்து முறை ஒலித்தது. சமீபத்திய மோசடிகளால் புதிய எண்களிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்கப் பயந்து அவற்றைத் துண்டித்தாள். ஓடியன் மணி தியேட்டர் வழியாகச் சென்று குறுகலான வீதிகளைக் கடந்து வண்ணான் குளம் அருகில் அவர்களுடைய நேதாஜி நகர் இல்லத்தை அடைந்தனர்.

செவ்வாய்க்கிழமை வைகறையில் எழுந்த கலாவதி குளித்து பூசையறையில் விளக்கேற்றி விட்டு, ஏற்கெனவே வாங்கி சமையலுக்குப் பயன்படுத்திய கல்லுப்பையும் நான்கு கருமிளகையும் ஒரு கவரில் போட்டுக் கொண்டாள்.

ஆப்பிரிக்கா செல்வதற்கு முன்பாக சபிதா விட்டுச் சென்ற முழங்கால் கிழிந்த ஜீன்ஸ் பேன்ட்டையும், ஸ்லீவ்லெஸ் டாப்ஸையும் ஞாபகமாக எடுத்துக் கொண்டாள்.தூங்கிக் கொண்டிருந்த கணவரைத் தொந்தரவு செய்யாமல் வாசலில் இரும்புக் கதவை மெதுவாகச் சாத்தினாள். அதிலிருந்த தபால் பெட்டிக்குள் பல நாட்களாக விழுந்து கிடக்கும் கடிதத்தை அப்போதும் அவள் கவனிக்கவில்லை.

ஏற்கெனவே வரச்சொல்லியிருந்த பரிச்சயமான ஆட்டோவில் ஏறிக் கொண்டாள். பிரதான சாலையில் ஒண்ணாம் நம்பர் பேருந்தை ஓவர்டேக் செய்து திருவொற்றியூர் மார்க்கெட், சுகம் மருத்துவமனை ஆகியவற்றைக் கடந்து தேரடி அருகே வடக்கு மாட வீதியில் திரும்பி குளத்தங்கரை மார்க்கமாக வடிவுடையம்மன் கோவிலை அடைந்தது வண்டி. டிரைவரை அங்கேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு ஆலயத்திற்குள் பிரவேசித்தாள் கலாவதி.

முதலில் தியாகராஜ சுவாமியின் கருவறையை அடைந்தவள், “ஈஸ்வரா... சுந்தர மூர்த்தி நாயனாருக்கு ரெண்டாவது கல்யாணம் கூட பண்ணி வெச்சியே... என் பொண்ணுக்கும் நீதான் ஒரு நல்ல வழி காட்டணும்...” என்று பிரார்த்தித்தாள்.குணாலய கணபதி, வட்டப்பாறை அம்மன், ஏகபாத மூர்த்தி, ஜெகந்நாதர் என்று சகல கடவுளர்களையும் வணங்கிவிட்டு, குங்கும அர்ச்சனை நடந்து கொண்டிருந்த திருபுரசுந்தரி அம்பாளையும் கண்குளிர தரிசித்தாள்.

பின்னர், இருபத்தேழு சிவலிங்கங்களில் மகளின் உத்திர நட்சத்திரத்திற்கு உரிய சன்னதியில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டாள்.மறைமலை அடிகளின் தீராத வயிற்று வலியைக் குணப்படுத்திய முருகப் பெருமானிடம் தன்னுடைய மனவேதனையையும் போக்குமாறு வேண்டிக் கொண்ட கலாவதி மணல்வெளியில் நடந்து இறுதியாக நவக்கிரகம் இருக்கும் கிழக்குப் பிராகாரத்தை வந்தடைந்தாள்.

சபிதாவின் உடைகளை இடது கையில் வைத்துக் கொண்டு வலக்கரத்தால் உப்பையும் மிளகையும் ராகு பகவான் திருவடியில் சேர்த்து கண்மூடி தொழுதாள். ஏழு முறை இடமிருந்து வலமாகவும், இரண்டு தடவை அப்பிரதட்சணமாகவும் சுற்றி முடித்து அச்சிலைகளைப் பார்க்காமல் வேகமாக வெளியேறினாள்.

கொடிமரத்தின் அருகே “மேடம்...” என்ற ஆண் குரல் கேட்டது. ஜோதிடர் சொன்னது நினைவுக்கு வரவே, முகத்தைத் திருப்பாமல் விரைவாகச் சென்றாள் கலாவதி.
அவரே மீண்டும் “மிஸஸ் நடேசன்...” என்றவாறே பின்தொடர்ந்து வருவதைக் கவனிக்காத மாதிரி வேகமாக வெளியே வந்து காத்திருந்த ஆட்டோவில் ஏறியமர்ந்தாள்.
“யாரோ உங்களை கூப்பிடறாங்கம்மா...” என்ற ஓட்டுநரிடம் ‘சீக்கிரம் போ’ என்பதாக ஜாடை காட்டினாள். வண்டி புறப்பட்டது.

கலாவதியை அழைத்தவர் கோயிலின் உள்ளே சென்று மகிழ மரத்தருகில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நண்பரிடம் சினத்துடன் “அந்தப் பொம்பளைக்கு எவ்ளோ தலைக்
கனம்? கூப்பிடக் கூப்பிட திரும்பாம போறாங்க...” என்றார்.“என்னடா ஆச்சு...”“வெஸ்ட் ஆஃப்ரிக்காவுல இருக்கற பொண்ணோட ஜாதகம் என் பையனுக்கு வந்ததுன்னு சொன்னேன்ல...”
“ஜோஸ்யர்தான் அதுல காலசர்ப்ப தோஷம் இருக்கு... வேண்டாம்னு ஒதுக்கிட்டாரே...”“அதேதான்...” என்றார். 

“அவளோட பேரன்ட்ஸை ஜாதகப் பரிவர்த்தனை நிலையத்துல பார்த்திருக்கேன்ப்பா. இப்ப அந்தம்மா மட்டும் ராஜகோபுரத்தாண்டை போயிட்டிருந்தாங்க. கூப்பிட்டேன். கண்டுக்கவேயில்லை...”  “பொருத்தம் இல்லேன்னு ஆயிடுச்சேடா... எதுக்கு அவங்களை துரத்திட்டு போறே..?”

“கல்யாணமே வேண்டாம்னு பிடிவாதமா இருந்த என் மகன் அந்தப் பொண்ணு போட்டோவை பார்த்து ‘அழகாயிருக்கா... எனக்குப் பிடிச்சிருக்கு. இவளையே கட்டிக்கறேன்’னு சொல்லிட்டான்பா...”“இது எனக்குத் தெரியாதே...”“உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். மணலியில வேற ஒருத்தர்கிட்ட அவ ஜாதகத்தை காண்பிச்சோம். தோஷத்துக்குப் பரிகாரம் செஞ்சுட்டா போறும். தாராளமா கல்யாணம் பண்ணலாம்னு சொன்னாரு.

அதைத் தெரிவிக்கலாம்னு அன்னிக்கு அந்தம்மாவுக்கு போன் செஞ்சேன். எடுக்கவேயில்லை...”
“பொண்ணோட அப்பாவுக்கு கால் பண்ணேன்டா...”“ஒரேயொரு நம்பர்தான் குடுத்திருந்தாங்க. அவங்க வீட்டுக்கு லெட்டர் கூட போட்டேன். இப்ப யதேச்சையா பார்த்ததுனால சொல்லிடலாம்னு கூப்பிடறேன்... அலட்சியமா போறாங்க. பிள்ளையைப் பெத்தவன் நான்... இதுக்கு மேலயும் கெஞ்சிட்டு இருக்க முடியாது. இந்தச் சம்பந்தமே வேண்டாம்...” என்றார் ஆவேசமாக.

 - சித்ரூபன்