NO நெட்... NO சிம்... But மெசேஜ் அனுப்பலாம்!



ஜாக் டோர்சி நினைவில் இருக்கிறதா?

டுவிட்டர் செயலியின் நிறுவனர். பிறகு இதை எலான் மஸ்க்குக்கு விற்றுவிட்டார். வாங்கிய மஸ்க், டுவிட்டர் என்ற தலைப்பை ‘எக்ஸ்’ என மாற்றியும்விட்டார்.இதன் பிறகு ஜாக் டோர்சி என்ன ஆனார் என்ற கேள்வி இருந்து வந்தது.அதற்கு இப்பொழுது பதில் கிடைத்திருக்கிறது.

அதுதான் ‘பிட்சாட்’ என்ற புதிய செயலி.மற்ற மெசேஜிங் செயலிகளில் இணையச் சேவை இருந்தால் மட்டுமே செய்தி அனுப்ப முடியும். ஆனால், இதில் இணைய வசதியோ அல்லது சிம் கார்டோ இல்லாமலேயே மெசேஜ் அனுப்பலாம். டுவிட்டர் நிறுவனத்தைக் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கினார் ஜாக் டோர்சி. 

இன்று டுவிட்டர் இந்தளவுக்குப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளதற்கு இவர்தான் காரணம். 2007 முதல் 2011ம் ஆண்டு வரை டுவிட்டர் நிறுவனம் முழுமையாக இவரது கண்ட்ரோலில்தான் இருந்தது.

2021ல் சில காரணங்களால் அவர் டுவிட்டரில் இருந்து விலகினார். பிறகு எலான் மஸ்க் வசம் டுவிட்டர் போனது தனிக்கதை!

ஏற்கனவே வாட்ஸ்அப், ஸ்னாப்சாட், டெலிகாரம் எல்லாம் இருக்கும் போது இது என்ன ‘பிட்சாட்’?

இது முற்றிலும் தனித்துவமானது என்கிறார்கள். அதாவது ப்ளூடூத் மெஷ் நெட்வொர் மூலம் இயங்கும். இணையம், தொலைபேசி எண்கள் அல்லது சர்வர்கள் கூட இல்லாமல் இதனால் இயங்க முடியும். இப்போது இந்த பிட்சாட், டெஸ்ட்ஃப்ளைட் மூலம் பீட்டா வெர்ஷனில் உள்ளது. டோர்சி இது தொடர்பான அறிவிப்பைத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பிட்சாட் பற்றிய விவரங்களைத் தெளிவாக விளக்கியுள்ளார்.

பிட்சாட் என்பது தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு செயலி. இது ஆஃப்-கிரிட் தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நாம் அனுப்பும் அனைத்து மெசேஜ்களும் என்கிரிப்ட் செய்யப்பட்ட பிறகே அனுப்பப்படும். இந்த மெசேஜ்கள் ப்ளூடூத் மூலம் அருகிலுள்ள சாதனங்களுக்கு இடையே அனுப்பப்படுகின்றன.

மக்கள் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லும்போது, ப்ளூடூத் கிளஸ்டர்களுக்கு இடையில் இந்த மெசேஜ்கள் செல்லும். இதனால் இதில் எந்தவொரு மத்திய சர்வரும் இருக்காது.

சில சாதனங்கள் நெட்வொர்க்கின் வரம்பை நீட்டிக்கப் பாலங்களாகச் செயல்பட முடியும் என்பதே இதன் கான்சப்ட். இதில் யூசர்கள் கணக்கு தொடங்கும்போது, அவர்களின் பெயர், விவரங்கள் என எந்தொரு தகவலும் சேகரிக்கப்படாது.இந்த கான்சப்ட்டில் வரும் முதல் செயலி இதுவல்ல. ஏற்கனவே ப்ளூஸ்கை மற்றும் டாமஸ் ஆகிய செயலிகள் இதே வெர்ஷனில் இயங்கி இருக்கின்றன. 

2019ம் ஆண்டு ஹாங்காங் போராட்டங்களின்போது இதே டெக்னாலஜியில் இயக்கும் பிரிட்ஃஜ்பை செயலிதான் அங்கு பயன்படுத்தப்பட்டது. அதாவது அப்போது இணைய சேவை மொத்தமாக முடக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாற இந்த பிரிட்ஜ்ஃபை மெஷ் செயலியையே பயன்படுத்தினர்.

இந்த பிட்சாட் செயலியில் பாஸ்வர்ட் மூலம் இயங்கும் க்ரூப் சாட்களும் இருக்கின்றன. இந்த க்ரூப்பில் இணையவே குறிப்பிட்ட பாஸ்வர்ட் தேவை. மேலும், யூசர் ஆஃப்லைனில் இருந்தாலும்கூட, தாமதமான செய்திகளைப் பெறும் வசதியும் இருக்கிறது. இப்போது இது ப்ளூடூத் மூலம் மட்டுமே இயங்கும். வருங் காலத்தில் வைஃபை டைரக்ட் சேர்க்கப்படும். இது மெசேஜிங் வரம்பை கணிசமாக அதிகரிக்கும்.

மெட்டாவின் வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் போன்ற செயலிகளுக்கு இது மாற்றாகவே இருக்கும். ஏனென்றால் வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் ஒரு சென்ட்ரல் செயலி. அதில் நிறுவனத்திற்கு ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்கும். ஆனால், பிட்சாட்டில் அதுபோல சென்ட்ரல் அதிகாரம் இருக்காது. டேட்டா கலெக்‌ஷனும் இருக்காது. இருப்பினும், பிட்சாட் எந்தளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

ஜான்சி