பெண்களிடம்தான் சாதி உணர்வு அதிகமா இருக்கு!
சொல்கிறார் எழுத்தாளரும் பாடலாசிரியரும் இயக்குநருமான தமயந்தி
இலக்கிய வட்டத்தில் பரிச்சயமானவர் எழுத்தாளர் தமயந்தி. ‘தடயம்’ படத்துக்குப் பிறகு இவர் இயக்கியுள்ள படம் ‘காயல்’. விரைவில் வெளியாகவுள்ள படம் குறித்து தமயந்தியிடம் பேசினோம்.‘காயல்’ அம்மா, மகள் கதையா?ஒரு பொண்ணு சரியானதை தேர்வு செய்வாள் என்பதை அவருடைய குடும்பம், அப்பா, அம்மா, புகுந்த வீடு என யாரும் நம்புவதில்லை. அவங்க சொல்லும் விஷயத்தை செய்யணும். சுயமாக தேர்வு செய்யத் தெரியாதவள் என்ற மனநிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.
 எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. நான் பார்த்தவரை தென் தமிழ்நாட்டில் சாதீய உணர்வு அதிகமாக இருப்பது பெண்களிடம்தான். ‘வெட்டிட்டு வந்தாதான் அவிழ்த்துவிட்ட முடியை கட்டுவேன்’ என கங்கனம் கட்டும் பெண்களைப் பார்த்துள்ளேன்.இந்த சாதீய அடுக்குமுறைகள் ஒரு பெண்ணின் தேர்வுகளை எப்படி சிதைக்கிறது, சிதைக்கப்படும்போது அவள் வாழ்க்கை எப்படி இல்லாமல் போகிறது, அதை அந்த குடும்பம் எப்படி பார்க்கிறது என்பதை டிராவல் பின்னணியில் சொல்லியுள்ளேன்.
 யாரெல்லாம் நடிக்கிறாங்க?
காயத்ரி ஷங்கர், லிங்கேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறாங்க. காயத்ரி முகம் கனிவு, இறுக்கம் கலந்தது. அது மென் அழகு கொடுக்கும். தேன்மொழி கேரக்டருக்கு அப்படியொரு முகம் தேவைப்பட்டுச்சு. ஏனெனில் என் மனசுல இருந்த தேன்மொழி முகமும், காயத்ரி முகமும் ஒண்ணு போல இருந்துச்சு.  அவருடைய ஸ்பெஷல் தேர்ந்த நடிப்பு. நுட்பமான உணர்வுகளை வடிச்சுக் கொட்டுவாங்க.ரஜினி சாருக்கு நான் ரசிகை. ‘கபாலி’ யில் ரஜினி சாருடன் லிங்கேஷ் இருந்த பைட்டை என்ஜாய் பண்ணியிருக்கிறேன். ஒருமுறை எதேச்சையாக லிங்கேஷை சந்திச்சேன். ஆதிதமிழ் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தார். அப்போது வேறு நடிகரையும் செலக்ஷன் லிஸ்ட்ல வெச்சிருந்தேன். லிங்கேஷ் பாடிலேங்வேஜ் அப்படியே தமிழ் சாயலில் இருந்துச்சு. படத்துக்காக கறுப்பாகணும்னு சொன்னேன். அதை அப்படியே செய்தார். ஸ்பாட்ல என்ன சொல்றோமோ அதை உள்வாங்கி டைரக்டர் எதிர்பார்க்கும் எக்ஸ்பிரஷனை கொடுப்பார். சில நேரத்தில் அவர் பேர் மறந்துபோகுமளவுக்கு ‘தமிழ் போதும்’னு கட் சொல்லியிருக்கிறேன். அந்தளவுக்கு தமிழாகவே மாறினார். இன்னொரு நாயகியாக ஸ்வாகதா செய்துள்ளார்.
ஹீரோயின்கள் அம்மா ரோலில் நடிக்க தயக்கம் காட்டுவாங்க... அனுமோள் எப்படி ?
அனுமோளிடம் எனக்கு ஃப்ரெண்ட்ஷிப் இருந்ததால் அவரிடம் கதை சொல்லியிருந்தேன். அப்போது படம் எடுக்கும் ஐடியா இல்லை. அவர் கேஷுவலாக ‘எனக்கு என்ன கேரக்டர்’ என்று கேட்டார். அம்மா ரோல் என்றதும் ஷாக்கானவர், ‘எப்ப செய்தாலும் கூப்பிடுங்க’ன்னு சொன்னார். அவர் சொல்லி 4 வருடங்கள் இருக்கும். படம் எடுக்கும்போது அவருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேன். ஒரு மாசம் கூடவே இருந்து முழு ஒத்துழைப்பு கொடுத்தார். நடிப்பு விஷயத்துல ராட்சஸி.
கார்த்திக் சுப்பிரமணியம் கேமரா ஹேண்டில் பண்றார். என்னுடைய மியூசிக் ஆல்பம் பண்ணியவர். இந்தி படமும் செய்துள்ளார். ஜஸ்டின் கெனன்யா மியூசிக் பண்ணியிருக்கிறார். சவுண்ட் நாலெட்ஜ் உள்ளவர். ‘தடயம்’ படத்துக்கும் அவர்தான் மியூசிக் பண்ணினார். ‘பாயும் ஒளி நீ எனக்கு...’ என்ற பாடலுக்கு சுதர்சன் என்.குமார் மியூசிக் பண்ணியுள்ளார். பிரவீன் பாஸ்கர் எடிட்டிங் கவனிக்கிறார். ஜேசு சுந்தர்மாறன் தயாரித்துள்ளார்.
ரசிகர்களுக்கு என்ன மெசேஜ் சொல்லப்போறீங்க?
வாழ்க்கையில் தப்பு நடந்திருக்கும். அதை தப்புன்னு உணராம கடந்து வந்திருப்போம். ‘நீ தப்பு பண்ணியிருக்க’ன்னு சொல்லும்போது திருத்திக் கொள்ள மனப்பக்குவம் வேணும். அதை இந்தப் படம் கொடுக்கும்னு நம்புகிறேன். அந்த வகையில் எல்லாரும் படம் பாருங்கன்னு மிரட்டி சொல்லணும்போல தோணுது.
ஆங்கில இலக்கியம் படிச்ச உங்களுக்கு சினிமா ஆர்வம் எப்படி வந்துச்சு?
எனக்கு இரண்டு விதமான ரசனை உண்டு. ஒண்ணு, நான் ரஜினி சாரின் தீவிர ரசிகை. அடுத்து அடூர் கோபாலகிருஷ்ணன், சத்யஜித்ரே போன்ற ஆளுமைகளின் சீரியஸ் படங்களும் பிடிக்கும். ஆனால், சினிமா என்னுடைய விருப்பமாக இருந்ததில்லை.
என்னுடைய அப்பா மரணப் படுக்கையில் இருக்கும்போது நான் சினிமாவுக்கு வரணும்னு சொன்னார். அப்போது நான் எழுதிய சில திரைப்பாடல்கள் வெளிவந்துச்சு. தொடர்ந்து ‘தடயம்’ என்ற கதை பிரபல வார இதழில் வெளியாச்சு. அதைப் படிச்சுட்டு பாலாஜி சக்திவேல் திரைப்படம் எடுப்பதாக சொன்னார். இன்னும் சில இயக்குநர்கள் பேசினார்கள். எல்லாமே தள்ளிப்போச்சு. கடைசியில், என்னுடைய தோழி சித்ரா, 9ம் வகுப்பு ஆசிரியை பாலின், எழுத்தாளர் செளபா ஆகியோரின் முயற்சியில் என்னுடைய முதல் படம் ‘தடயம்’ வெளியாச்சு.
தமிழ் சினிமாவில் கதாசிரியர்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதாக நினைக்கிறீர்களா?
கேரளாவில் ஒவ்வொரு வருஷமும் ‘பம்பா லிட்ரேச்சர் ஃபெஸ்டிவல்’ நடக்கும். அவ்விழாவுக்கு இந்தியாவில் உள்ள பல எழுத்தாளர்கள் வருவார்கள். அங்கு ஏராளமான மலையாள சினிமா இயக்குநர்களைப் பார்க்க முடியும். இலக்கிய உலகில் என்ன நடக்குதுன்னு பல இயக்குநர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வதை பார்த்துள்ளேன்.
அது தமிழில் குறைவாக இருப்பதாகநினைக்கிறேன்.கதை வேறு, திரைக்கதை வேறு. அந்த வகையில் எழுத்தாளரின் கதையை அப்படியே திரைப்படமா எடுக்க முடியாது. இந்தப் புரிதல் அதிகரிக்கணும். ஆத்மாவை எடுத்துக்கொண்டு திரைக்கதை பண்ணும்போது நல்ல படைப்பை கொடுக்க முடியும். மலையாளத்தில் மட்டும் நல்ல சினிமா, நல்ல படைப்பாளிகள் இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. அதைவிட இங்கும் ஆகச் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். பாலாஜி சக்திவேல், சசி, ராம், வெற்றிமாறன் போன்றவர்கள் தமிழ் சினிமாவுக்கு முக்கியமானவர்கள். அவர்களுக்கு இன்னும் அதிக மதிப்புக் கொடுக்கணும்.
சினிமாவில் பெண் இயக்குநர்களின் வளர்ச்சி எப்படி உள்ளது?
அந்த டெர்முக்கு நான் எதிரான ஆள். இயக்குநர்கள் என்றால் அனைவரும் ஒண்ணுதான். பாலினம் எந்தவிதத்தில் பாகுபாடுகளை உருவாக்குகிறது என்றால் உங்களுக்கு ஒண்ணும் தெரியாது என்று வேலையில், அணுகும் முறையில் உருவாக்கும். வகைப்படுத்துவதாக இருந்தால் சாமான்ய இயக்குநர்கள், நட்சத்திர இயக்குநர்கள் என்று வகைப்படுத்தலாம்.
2019ம் ஆண்டில் ‘வெள்ளை இரவே...’ (விழித்திரு), ‘மைலாஞ்சி...’ (சிவப்பு மஞ்சள் பச்சை), ‘கொல்லாதே கொல்லாதே...’ (கொலைகாரன்) உட்பட பல ஹிட் பாடல்கள் எழுதினேன். தொடர்ந்து வாய்ப்பு வரவில்லை. சினிமாவில் ஜெயிக்க நம்மை நம்பும் இயக்குநர், இசையமைப்பாளர் வேண்டும். தாமரை - கெளதம் மேனன், உமா - ரஞ்சித் தோழர் போன்ற கூட்டணி அதை உணர்த்தும். சாமான்யர்கள் வெற்றி பெற்றால்தான் அடையாளம் கிடைக்கிறது. திறமையால் கிடையாது.
எஸ்.ராஜா
|