7 கண்டங்கள்... 7 உயரமான சிகரங்கள்... சாதித்த தமிழகப் பெண்!
முத்தமிழ்செல்விக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. பல வரலாற்று சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் இப்போது உலகம் அறிந்த ஒரு நபராக மாறியிருக்கிறார்.

ஏனெனில், ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைச் சிகரங்களை குறுகிய காலத்தில் தொட்ட முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார் அவர்.
அதுமட்டுமல்ல.  இந்த ஏழு சிகரங்களையும் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணும் இவர்தான். இதனை வெறும் இரண்டு ஆண்டுகளில் செய்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.
‘‘சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்துல உள்ள ஜோஹில்பட்டி என்ற குக்கிராமம். நான் வளர்ந்ததெல்லாம் கடலூர்ல. பள்ளியில் படிக்கும்போது அதலெட்டாக இருந்தேன். 400 மீட்டர் ரன்னிங், ஹை ஜம்ப், ஷட்டில், த்ரோ பால்னு எல்லாவற்றிலும் இருந்திருக்கேன். மாவட்ட அளவில் வெற்றியும் பெற்றிருக்கேன். பள்ளிப் படிப்பு முடிச்சதும் 18 வயதில் திருமணமாகி சென்னைக்கு வந்தேன். இப்ப ரெண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க. குழந்தைங்க கொஞ்சம் வளர்ந்து பள்ளிக்குப் போனதும் தொலைதூரக் கல்வி மூலம் பி.சி.ஏ. இளங்கலை படிச்சுக்கிட்டே ஜப்பானீஸ் மொழியும் கத்துக்கிட்டேன். ஜப்பானீஸில் இன்டர்மீடியட் வரை பாஸ் பண்ணினேன். அப்புறம், ஜப்பானீஸ் மொழி ஆசிரியராக இருந்தேன்.

பிறகு ஒரு எம்என்சி கம்பெனியில் வேலை கிடைச்சது. என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்றார். இந்நேரம் என் சின்ன வயசு தோழி, ‘எனக்கு வேலைக்குப் போகணும்னு ஆசையாக இருக்கு. ஆனா, குடும்பத்தில் உள்ளவங்க என்ன சொல்வாங்கனு தெரியல. பசங்களையும் கவனிக்க வேண்டியிருக்கு’ என்றாள்.
அவளுக்கு வீட்டுல சொல்ல தயக்கம். அப்பதான் எத்தனையோ பெண்கள் தங்கள் ஆசைகளை ஒளிச்சு வைச்சிருக்காங்கனு புரிஞ்சுது. ஒவ்வொரு பெண்ணுக்கும் பின்னால் ஒரு ஆண், அது அப்பாவாகவோ, அண்ணனாகவோ, கணவராகவோ ‘நாங்க இருக்கோம்’னு சொன்னால் எவ்வளவு தைரியம் கிடைக்கும்?! இதை வெளிஉலகத்துக்கு உரக்கச் சொல்லணும்னு ஆசைப்பட்டேன். அங்கிருந்து என் சாதனைப் பயணமும் தொடங்குச்சு...’’ என்கிற முத்தமிழ்ச்செல்வி அவற்றை அடுக்கினார். ‘‘உடனே மலையேற்றப் பயிற்றுநர்கிட்ட போய் கேட்டேன். அவர் ராப்பெல்லிங் (Rappelling) பண்ணுங்கனு சொன்னார். அதாவது கயிற்றைக் கட்டிக்கிட்டு இறங்குறது. அதனை பொதுவாகப் பண்ணினால் நல்லாயிருக்காதுனு கண்ணை மூடிக்கொண்டு செய்தேன்.
2021ம் ஆண்டு மார்ச் மாசம்
பெரும்புதூர்ல இருக்கிற மலைப்பட்டு மலையில் கண்ணைக் கட்டிக்கிட்டு 155 அடி உயரத்திலிருந்து 58 வினாடிகளில் இறங்கி உலக சாதனை பண்ணினேன். இது யூனிகோ வேர்ல்டு ரிக்கார்டு புக்ல இருக்கு. அடுத்து பெண்கள் வன்கொடுமைகளால் தற்கொலை செய்யும் சம்பவங்கள் கவலை தந்துச்சு. அப்படியொரு சம்பவத்தை செய்தியில் பார்த்த என் மகள், ‘ஏன் இப்படி எல்லாம் இருக்காங்க மம்மி’னு கேட்டாள்.
‘பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் ஒரு பிணைப்பு இல்லை. அப்படி இருந்தால் தங்கள் பிரச்னைகளை பெற்றோரிடம் பகிர்ந்திருப்பாங்க’னு சொன்னேன். உடனே என் மகள் ‘இதுக்காக ஒரு உலக சாதனை ஏன் செய்யக்கூடாது’னு கேட்டாள். அதனால் நாங்க மூணு பேரும் சேர்ந்து 2021ம் ஆண்டு டிசம்பர் மாசம் இமாச்சலப்பிரதேசம் குலுமணாலியில் உள்ள ஒரு மலையில் கண்ணைக்கட்டிக்கிட்டு கயிறு மூலம் கீழிறங்கினோம்.
இதன்வழியாக ‘பெற்றோர் குழந்தைகளுக்கு நம்பிக்கை கொடுக்கணும். இருவருமே பரஸ்பரம் நம்பிக்கையை வளர்க்கணும்’னு ஒரு மெசேஜ் சொன்னேன். இதுவும் யூனிகோ வேர்ல்டு ரிக்கார்டுல பதிவாகியிருக்கு.
இதன்பிறகு இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் காரணம் பெண்களுக்கு வீரமில்ல என்கிற எண்ணம். அப்ப, 2022ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் வீரமங்கை வேலுநாச்சியார் இடம்பெற்ற ஊர்தியைப் புறக்கணிச்சாங்கனு ஒருசெய்தியைப் பார்த்தேன்.
உடனே வேலுநாச்சியார் மாதிரி குதிரையில் அமர்ந்து மூன்று மணி நேரத்தில் 1389 வில் அம்பு எய்து 87 புள்ளிகள் பெற்று உலக சாதனை செய்தேன்.
இவை எல்லாமே பெண்கள் சார்ந்தே செய்தேன்.இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் சொல்ல ஒரு உலக சாதனை செய்ய வேண்டியிருக்கு. உலக சாதனை முடிஞ்சதும் அப்படியே அது போயிடும். அப்போ, தொடர்ந்து பேசப்படணும்னு நினைச்சேன்.
இதுக்காக இமயமலை பத்தின விஷயங்களை இணையத்தில் தேடிப் படிச்சேன். குறிப்பா, தமிழ்நாட்டிலிருந்து யாராவது ஏறி இருக்காங்களானு பார்த்தேன். பெண்களில் யாரும் செய்யல. அப்பதான் எவரெஸ்ட் ஏறி சரித்திரத்தில் இடம்பிடிக்கணும்னு தோணுச்சு.
பொதுவா எவரெஸ்ட் ஏறணும்னா அடிப்படை கோர்ஸ், அட்வான்ஸ் கோர்ஸ் எல்லாம் பண்ணணும். எனக்கு ரெண்டு பெண் பிள்ளைங்க இருக்காங்க. நான்கு மாதம் தனியாகக் குழந்தைகளை விட்டுட்டு பயிற்சி என்பது முடியாத காரியம். இதுக்கு வேறு வழியில்லையானு கேட்டப்ப, ‘5,500 மீட்டருக்கு மேல் உள்ள ஒரு பனிமலையை ஏறிட்டு வாங்க. நாங்க அனுமதிக்கிறோம்’னு சொன்னாங்க.
சரினு லடாக்ல ஒரு மலையை ஏறிட்டு வந்தேன். பிறகே எவரெஸ்ட் ஏற தேர்வானேன். பல சிரமங்களுக்கு இடையில் 58 நாட்கள்ல 8 ஆயிரத்து 848 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட்டில் ஏறி சாதிச்சேன்...’’ என்கிறவர், அந்த வாழ்வா சாவா தருணத்தை பகிர்ந்து கொண்டார். ‘‘சரியாக உச்சிமலைக்கு முன்னாடி ஹிலாரி ஸ்டெப்னு ஓர் இடமிருக்கு.
அந்த இடத்துல நான் கீழ சறுக்கிட்டேன். அவ்வளவுதான் வாழ்க்கை முடிஞ்சதுனு நினைச்ச நேரத்தில் என்னை ஒரு இறந்த பிணம் காப்பாத்தியது. அது ஒரு பெண்ணுடைய உடல். நான் கால் இடறி கீழே விழும்போது என் கால் ஷூ அந்த உடலில் போய் குத்திடுச்சு. அதனால் மேற்கொண்டு நான் கீழ விழல.
பிறகு, என் கைடு என்னை மேலே கஷ்டப்பட்டு தூக்கினார். இதன்பிறகுதான் நான் எவரெஸ்ட்டின் உச்சியை அடைஞ்சேன். இதனையடுத்து கீழிறங்கும்போது ஆக்ஸிஜன் இல்லாமல் உயிருக்கு போராடினேன்.
இந்நேரம் மெக்ஸிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவர் என்னை ஆக்ஸிஜன் கொடுத்து காப்பாத்தினார்.அவர் காப்பாத்தும்முன் நான் மகாராஷ்டிராவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிக்கு என்னுடைய ஆக்ஸிஜனைக் கொடுத்துட்டேன். அதனால் நான் உயிருக்குப் போராட வேண்டியதாகிடுச்சு. பிறகு நல்ல படியாக வந்து சேர்ந்தேன். என்னுடைய ஆரம்ப கோல் எவரெஸ்ட் மட்டும்தான்னு இருந்தது. ஆனா, இதுக்கும் மேல என்ன செய்யலாம்னு யோசிச்சேன். அப்ப 14 சிகரங்கள்னு இருக்கு. அதாவது 8 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கும் மேல் இந்த சிகரங்களில் ஏறி சாதிக்கலாம்னு தோணுச்சு. ஆனா, இதில் கே 2னு ஒரு மலை பாகிஸ்தானில் இருக்கு. அங்கே போக நமக்கு அனுமதி கிடையாது.
அதனால், ஏழு கண்டத்தில் உள்ள ஏழு உயரமான சிகரங்களில் ஏறலாம்னு முடிவெடுத்தேன்.இதில் இந்தியாவில் பெண்களில் ஐந்து பேர் முடிச்சிருந்தாங்க. எல்லோருமே ஏழெட்டு ஆண்டுகள்னு நீண்ட காலம் எடுத்து இந்த சாதனையைச் செய்திருந்தாங்க. அப்ப அவங்களவிட குறுகிய காலத்தில் வேகமாக முடிக்கணும்னு முடிவெடுத்தேன்.
இதனை ஒன்றரை ஆண்டுகள்ல முடிச்சிருந்தால் நான் உலக அளவில் குறுகிய காலத்தில் வேகமாக முடிச்ச டாப் 3 பெண்களில் ஒருவராக வந்திருப்பேன். ஆனா, விசா கிடைக்க சில நாடுகளில் தாமதமானதால் இரண்டு ஆண்டுகள் ஆகிடுச்சு. எவரெஸ்ட் முடிச்சதும் 2023ம் ஆண்டு ஜூலை மாசமே ஐரோப்பா கண்டத்தில் ரஷ்யாவில் 5 ஆயிரத்து 642 மீட்டர் உயரமுள்ள மலைச் சிகரமான எல்பர்ஸில் ஏறி சாதிச்சேன்.
அடுத்து அதே ஆண்டு செப்டம்பரில் ஆப்ரிக்கா கண்டத்தில் 5 ஆயிரத்து 895 மீட்டர் உயரமுள்ள கிளிமஞ்சாரோ மலைச் சிகரத்தைத் தொட்டேன். 2024ம் ஆண்டு பிப்ரவரி மாசம் தென்அமெரிக்கக் கண்டத்தில் 6 ஆயிரத்து 962 உயரமுள்ள அகோன்காகுவா மலைச் சிகரத்தை முடிச்சேன். பிறகு, மார்ச் 2024ல் ஆஸ்திரேலிய கண்டத்தில் 2 ஆயிரத்து 228 மீட்டர் உயரமுள்ள கொஸ்கியஸ்கோ மலைச் சிகரத்தையும், டிசம்பரில் அண்டார்டிகா கண்டத்தில் 4 ஆயிரத்து 892 மீட்டர் உயரமுள்ள வின்சன் மலைச் சிகரத்தையும் தொட்டேன். கடைசியாக ஜூன் 16, 2025ல் வட அமெரிக்க கண்டத்தில் அலாஸ்காவில் உள்ள தெனாலி எனும் மெக்கின்லே மலைச் சிகரத்தை அடைஞ்சேன். இதில் ரொம்ப கஷ்டப்பட்டது முதலில் போன எவரெஸ்ட் மலையும், தெனாலி எனும் மெக்கின்லே மலையும்தான்.
எவரெஸ்ட் மலையைவிட தெனாலி ரொம்ப சிரமம். ஏன்னா, தெனாலியில் 18 நாட்களுக்குத் தேவையான சாப்பாடு, டென்ட்னு 80 கிலோ எடையை நாமே சுமந்திட்டு போகணும்.
பொதுவாக இதுக்கு 18 நாட்கள் எடுக்கும்.
நான் ஏழாவது நாளில் உச்சியை அடைந்தேன். என்னுடன் கேரளாவைச் சேர்ந்த ஷேக் ஹாசன் கான் என்பவரும் வந்திருந்தார். ஆனா, இறங்கும்போது காத்து எங்களைத் தள்ளியது. நாங்க தூக்கி வந்த எடையை வச்சுக்கிட்டு எங்களால் இறங்க முடியல. எனக்கு மாதவிடாய் காலம் வேறு. இந்த வலியும், காத்தும் சேர என்னால் நடக்கமுடியல. அங்கேயே உட்கார்ந்திட்டோம்.
தண்ணீர் பாட்டிலும் காலியாகிடுச்சு. ஆக்ஸிஜன் குறைவாக இருந்ததால் என்னால் மூச்சுவிட முடியல. அந்நேரம் அந்தக் கேரளக்காரர் உடனே சேட்டிலைட் போன் மூலம் கேரள அரசுக்கு மெசேஜ் கொடுத்தார். அவர் கேரளத் தலைமைச்செயலகத்தின் நிதித்துறையில் இருக்கார்.
அவங்க அதைப் பார்த்திட்டு கேரள முதல்வருக்குச் சொல்லியிருக்காங்க. அவர் உடனடியாக பிரதமர் மோடிக்கு சொல்ல அங்கிருந்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் வந்திருக்கு. அவங்க எங்களுக்குக்கால் பண்ணி என்ன பிரச்னைனு கேட்டாங்க. பிறகு, அவங்க ரேஞ்சர்ஸிற்கு இன்பார்ம் பண்ணினாங்க. அவங்க நாங்க இருந்த இடத்திற்கு தேடி வந்து எங்களுக்குத் தண்ணீர் கொடுத்து பாதுகாப்பாக அழைச்சிட்டு வந்தாங்க. இவ்வளவு விஷயங்களும் நடக்கும்வரை நாங்க 16 மணிநேரம் அங்கேயேதான் உட்கார்ந்திருந்தோம். இதுக்கிடையில் அங்கிருந்து நான் சேட்டிலைட் போன் மூலம் என் மகளுக்கு போன் பண்ணி ‘ஸாரி, என்னை மன்னிச்சிருங்க. இது கடைசி நிமிஷமானு தெரியல’னு சொல்லிட்டேன். என்னால் அதுக்கு மேல் பேசவும் முடியல’’ என நிறுத்தியவர், நிதானமாகத் தொடர்ந்தார்.
‘‘இந்தச் சாதனைகளுக்கு தமிழக அரசு உள்ளிட்ட பலருக்கு நான் நன்றி சொல்லணும். தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எனக்கு நிறைய உதவிகள் செய்தாங்க. அப்புறம், படப்பை மனோகரன் அண்ணானு இருக்காங்க.
அவங்களும் நிறைய ஸ்பான்சர்ஷிப் உதவிகள் செய்தாங்க. எல்லோருக்குமே கடமைப்பட்டிருக்கேன்.குறிப்பா,தமிழக முதல்வரும், துணை முதல்வரும் செய்த சப்போர்ட் ரொம்பவே அலாதியானது. அவங்களைச் சந்திச்சு வாழ்த்து பெற்றது சந்தோஷமா இருக்கு...’’ என்று சொல்லும் முத்தமிழ்ச்செல்வி, அடுத்து கார் ரேஸில் கலக்கப் போகிறாராம்!
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|