Jane Street... ஒரே நாளில் ரூ.735 கோடி...ஒட்டு மொத்தமாக ரூ.36,000 கோடி...



சுறா மீன் வேட்டையில் இந்திய பங்குச் சந்தை!

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது தெரியும். இது பெரிய மீனைப் போட்டு அதைவிட பெரிய மீனைப்பிடிப்பது. Jane street என்பது ஒரு அமெரிக்க நிறுவனம். ‘ரூல்ஸ் வழியாவே ரூல்ஸை மீறுவேன்’ என்பதைப்போல, கடந்த ஒரு சில ஆண்டுகளில் இந்திய பங்குச் சந்தையின் F&O வணிகத்தில் தடாலடியாக உள்ளே புகுந்து இந்நிறுவனம்  ஈட்டியிருக்கும் பெருந்தொகை, கிட்டத்தட்ட 36,000 கோடி ரூபாய்.

தற்போது SEBI இந்நிறுவனத்தை தடை செய்திருக்கிறது. ஆனால், ஒரு சுறா மீன் தாக்குதல் போல Jane street effect இன்னும் சந்தையில் எதிரொலிக்கிறது. இதை புரிந்துகொள்ள F&O மற்றும் Option trading பற்றிய அடிப்படை புரிதல் அவசியம்.Nifty என்பது இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்களில் ஒன்று. BankNifty என்பது, சில முக்கியமான வங்கித் துறை பங்குத் தொகுப்பின் குறியீட்டு எண். எப்படி ஒரு பங்கை வாங்கி விற்கிறோமோ, அதேபோல் இந்த Nifty, BankNifty போன்ற indexகளையும் வாங்கி விற்கலாம். 
வேறு சில indexகளும் உண்டு. ஒரு பங்கு ஏறும் என நினைத்து வாங்குவது வழக்கமானது. அதைப்போலவே ஒரு பங்கு இறங்கும் என நினைத்தும் வாங்கலாம் / விற்கலாம். இறங்க இறங்க லாபம். ஏறும் என நினைத்து வாங்குவதற்கு பெயர் Call option. இறங்கும் என நினைத்து வாங்கினால் அதன் பெயர் Put option.

தனிப்பட்ட பங்கின் ஏற்ற, இறக்கத்தை வாங்குவதற்கு Stock option என்று பெயர். இதையே Nifty, BankNifty போன்ற indexகளில் செய்தால் அதன் பெயர் index option. மொத்தமாக இந்த வகை யூக வணிகத்தின் பெயர் option trading. வேறு சில யூக வணிகங்களும் உண்டு. அவற்றையும் சேர்த்து டெரிவேட்டிவ்ஸ் என்று சொல்வார்கள். 

நேரடி பங்குகளை எப்போது வேண்டுமானாலும் வாங்கி விற்கலாம் என்பதைப்போல இதை செய்ய முடியாது. இவற்றுக்கு மாதாந்திர மற்றும் வாராந்திர expiry தேதிகள் உண்டு. அதற்குள் அதன் கணக்கை முடித்தாக வேண்டும். இல்லையெனில் சந்தையே கணக்கை முடித்து square off செய்துவிடும்.

F&O எனப்படும் இந்த யூக வணிகத்தில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் கோடிகள் புரள்கிறது. Quick money. இப்படி என்பதற்குள் ஏறும்; இறங்கும். 90%க்கு மேலானோர் இதில் பணத்தை இழக்கிறார்கள். 

எனினும் அதிவேக அதிக பணம் என்பது ஒரு வசீகரமிக்க தூண்டில் என்பதால் இந்த மாயச்சுழலில் சிக்கித் தவிப்போர் நிறைய. Jane street-க்கு வருவோம். இவர்கள் என்ன செய்தார்கள் என்றால்... BankNifty என்ற இன்டெக்ஸில் அதிக வெய்ட்டேஜ் கொண்ட ஒரு வங்கிப் பங்கை எடுத்துக்கொள்வது. அதை திடீரென 1000 கோடிக்கு வாங்குவது. என்ன நடக்கும்? BankNifty கடகட என ஏறும்.

அதற்கு முன்பே BankNifty-யின் Call option-ஐ, ஹெவியாக வாங்கி குவித்து வைத்திருப்பார்கள். இது சாதாரண retail traders-க்கு தெரியாது. எனவே BankNifty ஏறுகிறதே என அந்தப் பக்கம் ஓடுவார்கள். எல்லாரும் வாங்கும்போது இன்னும் ஏறும். 

இப்படியே ஏற்றி உச்சத்துக்கு கொண்டு செல்வார்கள். அந்த சமயத்தில், BankNifty இறங்கும் என யாரும் நினைக்க மாட்டார்கள் இல்லையா? அதனால, Put option விலை ரொம்பவும் குறைவாக கிடைக்கும். அதை சில ஆயிரம் கோடிக்கு வாங்கி வைத்துக்கொண்டு, முன்பு  வாங்கிய Call option-களை கொள்ளை லாபத்தில் படார் என விற்பார்கள்.

யாரும் எதிர்பாராத நேரத்தில் சந்தை படபட என கீழே வரும். அப்போது அவர்கள் வாங்கி வைத்திருக்கும் put option-கள் கண்மண் தெரியாமல் ஏறும். அதாவது ஏறும்போதும் அதில் லாபம். இறங்கும்போதும் இதில் லாபம். சுருக்கமாக சொல்வதென்றால் சந்தையை ஏற்றி லாபம் பார்த்தார்கள். 

இறக்கியும் லாபம் அடைந்தார்கள்.இப்படி இவை நாள்கணக்கில் நடக்கும் என நினைக்க வேண்டாம். ஒரு சில நிமிடங்களில் நடந்துவிடும். பெருந்தொகையை கையில் வைத்துக்கொண்டு குபீர், குபீர் என உள்ளே போடுவதால் சந்தையின் போக்கையே சில நிமிடங்களுக்கு இவர்களால் கட்டுப்படுத்த முடியும். அப்படித்தான் செய்திருக்கிறார்கள்.  

2024, ஜனவரி 15 அன்று மட்டும் இவர்கள் இப்படி சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா?

735 கோடி ரூபாய். இந்த ஆண்டு - 2025 - மே மாதத்தில், ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா பிஸியாக இருந்தபோது Jane street, இங்கே அடித்து ஆடியுள்ளது. சட்டத்தை மீறி எதுவும் செய்திருக்கிறார்களா என்றால் அப்படி சொல்ல முடியாது. ஆனால், பணம் கொட்டிக்கிடந்தால் பங்குச் சந்தையையே ஆட்டுவிக்க முடியும் என்று காட்டியிருக்கிறார்கள்.
 
பங்குச் சந்தையில் ஒருவரின் நஷ்டம்தான் இன்னொருவருக்கு லாபம். அதிலும் option trading போன்ற டெரிவேட்டிவ்ஸ் மார்க்கெட்டுக்கு இந்தக் கூற்று முற்றிலும் பொருந்தும்.
Jane street போன்ற நிறுவனம் பெருந்தொகையை உள்ளே போட்டு சந்தையை ஏற்றி, இறக்கி விளையாடும்போது, சாதாரண நபர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். நாமும் இதில் சுலபமாக பணமீட்ட முடியும் என நம்பி இருப்பதை கழுவித் துடைத்து உள்ளே போட்டு, மொத்தமாக இழந்து நிற்கிறார்கள்.

F&O வகையில் 2021 - 2024க்கு இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் சிறு முதலீட்டாளர்கள் இழந்த தொகை 1.8 லட்சம் கோடி ரூபாய். இவை அனைத்தையும் விழுங்கி ஏப்பம் விடுவது Jane street போன்ற நிறுவனங்களே. 

தற்போது இந்நிறுவனத்தை unfair trade, manipulative trade போன்ற வகைகளில் தடை செய்திருக்கிறது SEBI.ஆனால், இந்திய பங்குச் சந்தையில் ஒரே ஒரு Jane street மட்டும் இல்லை. ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டி ரோலர் கோஸ்டர் நடத்தும் பல நிறுவனங்கள் இங்குள்ளன. Optiver, Da Vinci, Tibra, Quadeye, Graviton, JPMC Quant, Maverick போன்றவை சில உதாரணங்கள்.

ஐஐடி வளாகத்துக்குச் சென்று கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்களை எடுக்கின்றனர். Jane street கொஞ்சம் அதிகப்படியாக போனதால் சிக்கிக்கொண்டது. 

மற்றபடி F&O என்ற இந்த யூக வணிகத்தின் தன்மையே இப்படிப்பட்டதுதான். இங்கு மட்டுமல்ல... உலகம் முழுக்கவே இது இவ்வாறுதான் செயல்படுகிறது. ஆனால், பங்குச் சந்தை என்ற சிஸ்டத்தை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள இந்த யூக வணிக முறைதான் கை கொடுக்கிறது என்ற வாதமும் உண்டு.

F&O என்பது ஒரு யூக வணிக முறை என்று கொண்டால் யார் அந்த யூகத்தை ஓரளவுக்கு சரியாக செய்ய முடியும்?

‘அறிவு உள்ளவன்’ என்பது மேலோட்டமானது. ‘காசு உள்ளவன்’ என்பது துல்லியமானது. அப்படித்தான் நடக்கிறது. இதிலும் அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டார்கள். சில காலம் முன்பு ‘ஹிண்டன்பர்க்’ என்ற பெயர் இந்தியாவில் பரபரப்பாக அடிபட்டது நினைவிருக்கலாம். 

அதானி நிறுவனம் செய்த முறைகேடுகளை ஆதாரங்களுடன் வெளியிட்டது அந்நிறுவனம். இதனால், அந்த சமயத்தில் அதானி குழும பங்குகள் மளமளவென சரிந்தன. பெருத்த நஷ்டம். ஆளாளுக்கு அதானியை விமர்சித்தார்கள்.

இப்போது, அதிலிருந்து மீண்டு வந்து அதானி குழும பங்குகளின் விலை புதிய உச்சத்தை தொட்டுவிட்டது என்பது வேறு கதை. ஆனால், அப்போது நாம் எல்லோரும் அதானி முறைகேடுகளை விமர்சித்துக் கொண்டிருந்தபோது... அந்த விமர்சனத்துக்கு காரணமான ஹிண்டன்பர்க் நிறுவனம் பல்லாயிரம் கோடி லாபத்தை அள்ளியதை கவனிக்கத் தவறி விட்டோம். ‘இது என்னப்பா கதை. நீயே குண்டு வைப்பே... நீயே அதை எடுப்பியா’ என்று கேட்டால் அப்படித்தான் நடந்தது.

ஹிண்டர்ன்பர்க் என்பது ஒரு Short selling கம்பெனி. முக்கியமான நிறுவனங்களின் முறைகேடுகளை கண்டுபிடிப்பார்கள். அதை வெளியிடும் முன்பு, அந்நிறுவனத்தின் Put option-களை வாங்கி வைத்துக்கொள்வார்கள். இவர்கள் அறிக்கை வெளியிட்டதும் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு விலை மளமளவென சரியும். அவர்களின் லாபம் கொட்டோ கொட்டென்று கொட்டும்.

ஹிண்டன்பர்க் அதானி விவகாரத்தில் இப்படித்தான் லாபம் பார்த்தது. தற்போது இன்னொரு Short selling கம்பெனி, வேதாந்தா நிறுவனத்தின் இதேபோன்ற முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்து, அதன் பங்குகள் சரிந்து, அந்த கம்பெனி கொள்ளை லாபம் பார்த்துள்ளது.

இதில் யாரை தப்பு சொல்வது?

‘ஒரு நிறுவனத்தின் தப்பை கண்டுபிடித்துச் சொல்வேன். அதன்மூலம் நானும் ஆதாயம் பார்ப்பேன்’ என்பது அடிப்படை இயங்குதன்மையாகவே இருக்கிறது. ‘நீ உள்நோக்கத்தோட சொல்லியிருக்கிறாய்’ என்றால் அவர்கள் மறுக்கப்போவது இல்லை.

இதில் நம்மைப்போன்ற சாதாரண மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?

பங்குச் சந்தை முதலீடு, நல்ல பங்குகளில் முதலீடு செய்வது... இவையெல்லாம் சரிதான். அந்த அளவோடு இதை நிறுத்திக்கொள்வது நல்லது. F&O போன்ற சுறா மீன்களின் வேட்டைக்காட்டில் போய் சிக்க வேண்டாம். பிறகு, அடுத்த மாதம் பைக் தவணை கட்டுவதற்கு வைத்திருக்கும் காசையும் பிடுங்கிக்கொண்டு விடுவார்கள், ஜாக்கிரதை!

பாரதி தம்பி