பேயா... ஃபேண்டஸியா..?
‘‘ரூம் மேட், கிளாஸ்மேட், ஸ்கூல் மேட், ஆபீஸ் மேட்... இப்படி கேள்விப்பட்டிருப்போம். ‘ஹவுஸ் மேட்ஸ்’ இதை நிச்சயம் ரியல் வாழ்க்கையில் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். எதனால் ‘ஹவுஸ் மேட்ஸ்’ என்பதுதான் கதை...’’ முதல் படம் வெளியாகவிருக்கும் உற்சாகத்துடன் பேசத் துவங்கினார் அறிமுக இயக்குநர் ராஜவேல்.
 ‘ஹவுஸ் மேட்ஸ்’..?
தர்ஷன் - அர்ஷா சாந்தினி பைஜு ரெண்டு பேரும் இளம் ஜோடி, அவங்க வாழ்ற வீட்ல விசித்திரமான சில சம்பவங்கள் நடக்குது.  அதே போல் காளி வெங்கட் - வினோதினி வைத்தியநாதன் இவங்க வீட்டிலும் அதே மாதிரியான அமானுஷ்ய சம்பவங்கள். எதனால் நடக்குது, இது பேயா, அறிவியலா, அமானுஷ்யமா... இதற்கான கேள்விகள் படம் முழுக்க கதையை நகர்த்தும். இங்கே அந்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ யார் என்கிற கேள்விக்கு கிளைமாக்சில் பதில் கிடைக்கும். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்..?
தர்ஷன் சினிமா ஆர்வம், ஆசை இருக்கும் ஒரு நடிகர். கொஞ்சம் மாடர்ன், அபார்ட்மெண்ட் தர்ஷனை இந்தப் படத்தில் பார்க்கலாம். அடுத்து காளி வெங்கட் சார், வினோதினி மேடம் தமிழ் சினிமாவுடைய முக்கியமான குணச்சித்திர நடிகர்கள். இந்தப்படத்தில் அவங்க காம்போ கதைக்கு மிகப்பெரிய பலமா இருந்துச்சு.
அர்ஷா சாந்தினி பைஜுவுக்கு தமிழில் முதல் படம். மலையாளத்தில் ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’, சமீபத்தில் வெளியான ‘துடரும்’ உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருக்காங்க. சிங்கிள் டேக் பொண்ணு. இவங்க இல்லாம சுரேஷ் சார், தீனா, அப்துல் லீ நடிச்சிருக்காங்க.
இந்த ரெண்டு வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை சுற்றித்தான் கதை நகரும். நிறைய டாஸ்க் இருந்துச்சு. சின்ன லொகேஷன், அதற்குள் உணர்வுகளை கேப்சர் செய்யணும். அதற்கு சதீஷ் எம். எஸ் ஒளிப்பதிவு கை கொடுத்தது.
அவர் என்னுடைய நீண்ட நாள் நண்பர். எடிட்டர் நிஷார்ஷரெப், இதற்கு முன்பு ‘ரத்தம்’, ‘வீரா’, ‘தமிழ்ப் படம் 2.0’, ‘சபாநாயகன்’ உள்ளிட்ட பல படங்களில் வேலை செய்திருக்கார். இதுதான் அவருக்கு முழுமையான எடிட்டிங் படமாக வெளியாக இருக்கு. நாங்க மூணு பேரும் ஒண்ணா சேர்ந்து கோலிவுட்டில் சான்ஸ் தேடிய நண்பர்கள்தான்.
ராஜேஷ் முருகேசன் மியூசிக். இவர் ‘பிரேமம்’, ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு’, ‘வசந்த முல்லை’ உள்ளிட்ட 20 படங்களுக்கு மேல் இசையமைச்சிருக்கார். இந்தப் படத்துக்கு மியூசிக் அவர்தான். பேக்ரவுண்ட் ஸ்கோரும் அருமையா கொடுத்திருக்கார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பு எப்படி சாத்தியமானது?
இந்த இடத்துக்கு வர 12 வருடங்களுக்கு மேல் ஆகிடுச்சு. ‘தமிழ்ப் படம் 2.0’ படத்தில் சி.எஸ்.அமுதன் சார்கிட்ட வேலை செய்தேன். தொடர்ந்து சந்தானம் சாருடைய ‘டகால்டி’ படத்தில் இயக்குநர் விஜய் ஆனந்த் சார் அசிஸ்டென்ட். ‘டிமாண்டி காலனி 2’ படத்தில் அஜய் ஞானமுத்து சார் கூட ரைட்டராகவும், அசிஸ்டென்ட் இயக்குநராகவும் வேலை செய்திருக்கேன்.
சென்னைதான் சொந்த ஊர்.
இன்ஜினியரிங் படிச்சேன். ஒரு வருடம் ஐடியில் வேலையும் செய்தேன். சின்ன வயதில் இருந்தே சினிமா மேல் அதீத ஆர்வம். அதனால் வேலையை விட்டுட்டு முழுமையா சான்ஸ் தேட ஆரம்பிச்சு, ஷார்ட் ஃபிலிம், அசிஸ்டென்ட் இயக்குநர், தேடல் இப்படி போன பயணம் இப்ப ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தில் கனவு நினைவாகியிருக்கு.
என்னை நம்பி இந்தப் படத்தைக் கொடுத்த விஜயபிரகாஷ் சார், சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றி. இணை தயாரிப்பாக சக்திவேல் சார். சிவாண்ணா படத்துக்குள் வந்ததும் படத்தினுடைய மார்க்கெட் லெவல் அடுத்த கட்டத்துக்கு போயிடுச்சு.
அவரைப் பொருத்தவரை கதைதான் நாயகன். அது அவரை இம்ப்ரெஸ் செய்திட்டா உடனே ஓகே சொல்லிடுவார். அதேபோல் எதிலும் தலையிட மாட்டார். இது சமூகத்துக்கு கருத்து சொல்ற கதை எல்லாம் கிடையாது. ஒரு படமாக நல்ல தியேட்டர் அனுபவம் கொடுக்கும்.
ஷாலினி நியூட்டன்
|