கை எலும்பை வளரச் செய்து சாதனை படைத்த தமிழக அரசு மருத்துவர்...



வளர்ச்சி குன்றியிருந்த ஓர் இளம் பெண்ணின் கை எலும்பை வளரச் செய்து சமீபத்தில் திண்டிவனம் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இப்படி கை எலும்பை வளரச் செய்யும் சிகிச்சை தமிழ்நாட்டில் அதுவும் குறிப்பாக அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை!  
இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் திண்டிவனம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ்குமார். நீண்டகாலமாகவே எலும்பை வளரச் செய்யும் அளப்பரிய சிகிச்சையை மேற்கொண்டு வருபவர். இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த ஆர்த்தோ டாக்டர் விருதும் பெற்றுள்ளார்.  

‘‘பொதுவாக எலும்பை வளரச் செய்ய முடியும்னு சொன்னால் இங்க யாரும் நம்பமாட்டாங்க. ஆச்சரியமாகவே பார்ப்பாங்க. இப்ப அறுவை சிகிச்சை செய்திருக்கிற கோமதி என்ற பெண்ணுக்கு இருந்த குறைபாடுபோல் நான் நிறைய பேர்களை பார்த்திருக்கேன்.சிலரிடம் அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிடும்னு சொல்லியிருக்கேன். 

ஆனா, யாருமே நம்பிக்கையாக முன்வந்ததில்ல. இந்தப் பெண்தான் அறுவை சிகிச்சைக்கு ஓகே சொன்னாங்க. இதனை முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாகச் செய்திருக்கோம்…’’ என அத்தனை உற்சாகமாகப் பேசுகிறார் டாக்டர் சுரேஷ்குமார்.

‘‘கோமதி, திண்டிவனத்திலுள்ள காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவங்க. பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவங்க. இவங்களுக்கு இடதுகையின் மேல் கை எலும்பு, சிறு வயதில் இருந்தே வளர்ச்சி பெறல. 

இதனை humerus boneனு சொல்வோம். ஆனா, முழங்கைக்குக் கீழுள்ள பகுதி நல்ல வளர்ச்சி பெற்றிருந்தது. அதேபோல் வலதுகையும் நார்மலாக இருக்குது. அதனால், அவங்க வீட்டுல உள்ளவங்க இதனை போலியோனு நினைச்சிட்டாங்க. ஆனா, அது போலியோ கிடையாது. ஒரு மரபணு குறைபாடால் வரக்கூடியது.  இதனால் அந்த எலும்பு மட்டும் வளர முடியாமல் இருக்கும்.

அந்தப் பெண்ணைப் பார்த்தால் கையின் வளர்ச்சி குறைவாக இருக்கும். நாம் அரைக்கை சட்டையை முழங்கை மூட்டுக்கு மேல் போடுவோம் இல்லையா... அந்தளவுக்குதான் அந்தப் பெண்ணுக்கு மேல் கை வளர்ச்சி இருந்தது. இதுக்குக் காரணம் எலும்பில் அந்த வளர்ச்சித் தன்மை இல்லாததுதான். 

அதனால், அந்தப் பெண் பலரின் கேலிகளுக்குப் பயந்து தன்னுடைய துப்பட்டா ஷாலால் கையை மறைத்துக் கொண்டு போவதும் வருவதுமாக கஷ்டப்பட்டார். இந்தப் பெண்ணின் அப்பா குமார் ஆட்டோ டிரைவராக இருக்கார். அவர் ஒரு விபத்தில் இடும்பெலும்பு உடைந்து நம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தப் பெண், அவரின் அப்பாவுக்கு உதவியாக மருத்துவமனைக்கு வந்திருந்தார்.   

அப்ப நானும் என் சக மருத்துவரும் வார்டு ரவுண்ட்ஸ் வந்தோம். அந்தப் பெண்ணின் கையைக் கவனித்தோம். உடனே அந்தப் பெண் கோமதியிடம், ‘இதனை சரிசெய்ய முடியும்மா. எக்ஸ்ரே எடுத்து பார்க்கட்டுமா’னு கேட்டேன். உடனே சரினு சொன்னார். அதில் கையை வளர வைக்கலாம்னு தெரிந்தது. அப்புறம், அந்தப் பெண்ணிடம் வலதுகை போல் இந்த இடதுகையையும் நார்மலாகக் கொண்டு வரலாம்னு சொன்னேன். இதற்கு குறைந்தது 250 நாட்களிலிருந்து ஓராண்டு வரை டைம் தேவைப்படும். அதுவரைக்கும் காத்திருக்கலாமானு கேட்டேன்.

எல்லாவற்றுக்கும் ஒப்புக் கொண்டார். எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அப்ப அவங்க அம்மாவும் கூட இருந்தாங்க. இவர் எப்படி சம்மதித்தார்னா, நான் 2023ம் ஆண்டு ஒரு போலியோ நோயாளிக்கு காலை வளர்த்து நடக்க வைத்திருந்தேன்.அது பத்திரிகையில் செய்தியாக வந்தது. அதனை இந்தப் பெண் படித்திருக்கார். அந்த நம்பிக்கையில் சரினு சொல்லியிருக்கார். இதனை பின்னாடி அவரிடம் கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். இதனால் உடனடியாக ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தோம்...’’ என்கிற டாக்டர் சுரேஷ்குமார் இந்த அணுகுமுறையை விவரித்தார்.

‘‘இதனை இலிஸாரோவ் (Ilizarov) டெக்னிக்னு சொல்வோம். அதாவது எலும்பு பகுதியை மட்டும் நீட்டி நீட்டி வளர்க்கலாம். இலிஸாரோவ் டெக்னிக் என்பது எலும்பியல் மருத்துவத்தில் எலும்பு குறைபாடுகளை சரிசெய்வதற்கும், கை-கால்களை நீளமாக்குவதற்கும், எலும்பு முறிவுகளுக்குச் சிகிச்சையளிப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு முறை. 

உதாரணத்திற்கு உடல் ஒல்லியான ஒருவர் எடை அதிகரிக்கும்போது சதை விழும். அப்போ இயல்பாகவே அவரின் தோலும் நீட்டிக்கிட்டே போகும். அதாவது தசை பெரிதாகும். அதேபோல் எலும்பையும் நீட்டி வளரச் செய்யலாம். நீண்டகாலமாகவே இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருது.

இந்த பெண்ணைப் பொறுத்தவரை அவரின் இடதுகை வெறும் 14 சென்டிமீட்டருடனும், வலதுகை 28 சென்டிமீட்டர் அளவிலும் இருந்தன. நாம் இப்போது சிகிச்சை மூலம் இடதுகையையும் 28 செமீ நீளத்திற்குக் கொண்டு வந்திருக்கோம். இதற்காக அந்த கை எலும்பை உடைத்து, எல்ஆர்எஸ் (Limb Reconstruction System) எனப்படும் சாதனத்தின் வழியே வெளிப்புறமாக கம்பி போட்டு ஒவ்வொரு நாளும் ஒரு மில்லிமீட்டர் அளவில் எலும்பை வளர்த்தோம்.

ஒரு சென்டிமீட்டர் வளர்க்க நமக்கு பத்து நாட்கள் எடுக்கும். அப்படியாக இந்தப் பெண்ணுக்கு 14 சென்டிமீட்டர் வளர்க்க 140 நாட்கள் ஆனது. இதற்கிடையில் அவர் எலும்பிற்கான சத்துப் பொருட்கள் எல்லாம் சாப்பிட்டார். 

இந்த 140 நாட்களுக்குப் பிறகு, இன்னும் 140 நாட்கள்  இடைவெளி விடணும். அதன்பிறகுதான் அது நார்மலான எலும்பாக உருமாறும். மொத்தமாக 280 நாட்கள். இந்த வளர்ச்சியை நாங்கள் மானிட்டர் செய்துகொண்டே இருப்போம். ஏனெனில், எலும்பு நேராக வளராமல் வளைந்து போகவும் வாய்ப்பிருக்கு. அதைச் சரியாகக் கவனித்து நேர்கோட்டில் கொண்டு வரணும்.

இதில் இன்னொரு விஷயம், இந்த எலும்பு வளர்ச்சியுடன் ரத்தக்குழாயும், நரம்பும் சேர்ந்தே வளரும். இந்தத் தொழில்நுட்பத்தை  1940ம் ஆண்டு டிமிட்ரி இலிஸாரோவ் என்கிற ரஷ்ய மருத்துவர்தான் கண்டறிந்தார். 

அதனால்தான் இதற்கு இலிஸாரோவ் முறைனு பெயர். இதே இலிஸாரோவ் தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் 2023ம் ஆண்டு ஒரு போலியோ நோயாளிக்கு 5 சென்டிமீட்டர் கால் எலும்பை நான் வளரச் செய்தேன். ஆனா, 5 சென்டிமீட்டர் வளர்த்தது பெரிதாகல. இப்போ, 14 சென்டிமீட்டர் என்றதும் பலரும் ஆச்சரியப்படுறாங்க...’’ என டாக்டர் சுரேஷ்குமார் நிறுத்த, சிகிச்சையை முடித்துள்ள கோமதி பேசினார்.

‘‘ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இப்ப ரெண்டு கைகளும் ஒரே அளவுல இருக்கு. முன்னாடி ரொம்ப கஷ்டப்பட்டேன். வேலைகள் எதுவும் செய்யமுடியாது. எல்லாரையும் போல் கைநீட்டி நடக்கமுடியாது. 

எந்த ஒரு வேலையையும் சிரத்தையாகவே செய்ய வேண்டியிருந்தது. இப்ப இரண்டு கைகளும் சரி சமமா இருக்குது. மற்றவர்கள் போல் ஃப்ரீயாக கை வீசி நடக்க முடியுது. இப்ப கையை மூடின ஷாைலயும் எடுத்திட்டேன். அடுத்ததாக வேலைக்குப் போகப் போறேன்...’’ என உற்சாகமாகச் சொல்ல , டாக்டர் சுரேஷ்குமார் தொடர்ந்தார்.  

‘‘கையில் எலும்பு வளரச் செய்திருப்பது தமிழ்நாட்டில் இதுவே முதல் கேஸ். அதுவும் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட முதல் கேஸ். இது எந்த மருத்துவக் கல்லூரியிலும்கூட பண்ணப்படல.  ஆனா, என்னைப் பொறுத்தவரை இதை நான் சாதனையாக பார்க்கல. சாதனைக்காகவும் செய்யல. இந்தச் செய்தியைப் பார்த்தபிறகாவது இதுபோல் குறைபாடு உள்ள பலரும் சிகிச்சை பெற முன்வரணும் என்பதுதான் என் ஆசை.

இதுக்கு எந்தத் தீர்வும் கிடையாதுனு நினைத்து பலர் வீட்டுல முடங்கிடுறாங்க. அவங்களுக்கு கோமதிதான் ஓர் எடுத்துக்காட்டு. இவருக்கு கை எலும்பில் செய்யப்பட்டிருக்கு. இதுதவிர வளைந்த கால், வளைந்த மூட்டு உள்ளிட்ட எல்லா குறைபாடுகளையும் சிகிச்சை மூலம் சரிசெய்து நார்மலாக உள்ளவர்கள் போல் நடக்க வைக்கலாம். நோயாளிகள் நம்பிக்கையாக வந்தால் போதும்...’’ என முத்தாய்ப்பாய் சொல்கிறார் டாக்டர் சுரேஷ்குமார்.

பேராச்சி கண்ணன்