அடுத்த தலாய் லாமா யார்..? சீனா ஏன் இதை தடுக்கிறது..?
முக்கோண சிக்கலில் திபேத்திய மக்கள்
கடந்த வாரம் தன் 90வது பிறந்த நாளை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தன் வீடு மற்றும் அலுவலகமான தர்மசாலாவில் உலகத் தலைவர்கள் பலருடன் கொண்டாடினார் தலாய் லாமா. உலகவில் ஆன்மீகத் தலைவர்களில் முக்கியமானவராக கருதப்படும் இவர், வயது முதிர்வு காரணமாக தனக்குப் பின் யார் வாரிசு என அறிவிப்பார் என உலக மீடியாக்கள் கருதின. அதனாலேயே இவரது இந்த 90வது பிறந்தநாளை இவரைவிட உலகம் அதிகம் எதிர்பார்த்தது.
 அதற்கேற்ப தன் இறப்புக்குப் பிறகு ஒரு தலாய் லாமா ஒரு சுதந்திரமான நாட்டில் மறுபிறப்பாக அவதரிப்பார் என தலாய் லாமா தன் பிறந்தநாள் பேச்சில் குறிப்பிட்டார்.
உடனே திபெத்தை மையமாகக் கொண்ட மூன்று நாடுகள் தலாய் லாமாவின் பேச்சுக்கு அர்த்தம் சொல்லத் தொடங்கியிருக்கின்றன.  அந்த மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சீனாவும், அமெரிக்காவும் மற்ற இரு நாடுகள். சீன ஆக்கிரமிப்பால் 1950ம் ஆண்டு முதல் அல்லல்படும் திபெத்திய மக்கள், சொந்த ‘நாட்டில்’ (ஊரில்) மட்டுமல்லாமல் உலகளவில் அகதிகளாக வாழ்கிறார்கள். 
சீன ஆட்சியின் கீழ் இருந்தாலும் ஒரு சுதந்திரமான திபெத்திய ஆட்சியாகத்தான் அது இருக்கவேண்டும் என பல ஆண்டுகளாக ‘அத்தேசத்து’ மக்களும், தலாய் லாமாவும் கருதுகிறார்கள்.
ஆனால், இதையெல்லாம் சீனா காது கொடுத்து கேட்பதாக இல்லை. இந்தப் பிரச்னையில் மேலே குறிப்பிட்ட மூன்று நாடுகளின் நிலை என்ன என்பதைவிட தலாய் லாமா என்ன சொல்கிறார் என்பதைத்தான் திபெத்திய மக்கள் எப்பொழுதும் ஆவலாக எதிர்பார்ப்பார்கள்; உன்னிப்பாக கவனிப்பார்கள்.
எதனால் திபெத்திய மக்கள் தலாய் லாமாவுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்?
லாமாக்களின் வரலாறு
1350ம் ஆண்டு முதல் திபெத்தில் இந்த தலாய் லாமா முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இப்போது இருப்பவர் 14வது தலாய் லாமா. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட ஒரு மதில் போல திபெத் இருப்பதால் இந்தியாவின் வடகிழக்குப் பகுதி எப்போதுமே ஒரு பதற்றமான சூழ்நிலையிலேயே இருக்கும். திபெத் ஒரு பவுத்த நாடு.
திபெத்தில் தலாய் லாமாக்களை புத்தரின் மறுபிறப்பாக மட்டும் பார்ப்பதில்லை. கூடவே ஒரு லாமா இறந்ததும் அவரின் மறுபிறப்பாகவும் அடுத்த லாமா இருப்பார் எனும் நம்பிக்கை திபெத்திய மக்களிடம் உண்டு.
அந்தளவுக்கு பவுத்த பக்தியில் திளைத்தவர்கள் திபெத்திய மக்கள். 1950ம் ஆண்டு வரை திபெத் ஒரு சுயேச்சையான பிரதேசமாகத்தான் இருந்தது. மலைக் குன்றுகள், அதன் இடைப்பட்ட பகுதியில் பவுத்த மடாலயங்கள், பவுத்த பிக்குகளின் செல்வாக்கு என ஒரு ஆன்மீக பிரதேசமாகத்தான் திபெத் அதுவரை இருந்தது. ஆனால், 1950ம் ஆண்டு சீனா, திபெத்தை ஆக்கிரமித்தது. இதை எதிர்த்து 1959ம் ஆண்டு திபெத்திய மக்கள் கிளர்ச்சியில் இறங்கினார்கள். சீன அரசு இந்தக் கிளர்ச்சியை ஒடுக்கியது. அத்துடன் அப்போது தலாய் லாமாவாக இருந்த இன்றைய தலாய் லாமாவை கைது செய்யவும் சீனா முயற்சித்தது. இதை முன்கூட்டியே எதிர்பார்த்த இன்றைய தலாய் லாமா, தன் புத்தியையும், தன் ஆன்மிக பலத்தையும் பயன்படுத்தி இமய மலையைத் தாண்டி தப்பினார்.
ஆனால், எங்கு தங்குவது? அவரது மனதில் இருந்த ஒரே இடம் இந்தியாதான். எனவே அடைக்கலம் வேண்டி அப்போது இந்திய பிரதமராக இருந்த நேருவுக்கு தலாய் லாமா விண்ணப்பம் வைத்தார்.தலாய் லாமாவுக்கு அடைக்கலம் தரக் கூடாது என இந்தியாவுக்கு பலவிதங்களில் சீனா அழுத்தம் கொடுத்தது. அதையும் மீறி, எதிர்ப்புகளை சமாளித்து தலாய் லாமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்தார் நேரு.
அப்பொழுது முதல் சுமார் 65 ஆண்டுகளாக இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா எனும் இடத்தில்தான் தலாய் லாமா வாழ்கிறார். தர்மசாலாவில் இரண்டுவகையான அமைப்புகள் இருக்கின்றன.
ஒன்று திபெத்துக்கான நாடு கடந்த அரசு; மற்றொன்று ஆன்மீகத் தளம். இவையிரண்டும் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில்தான் செயல்படுகின்றன.ஆனால், சீனா இவ்விரு அமைப்புகளுக்காக பயப்படவில்லை. மாறாக தலாய் லாமாவைக் கண்டுதான் அஞ்சுகிறது. ஏனெனில் தலாய் லாமாதான் சீனாவின் சிம்ம சொப்பனம். மறுபிறப்பா, லாட்டரியா?
பொதுவாக திபெத்தில் இருக்கும் ஒரு தலாய் லாமா இறந்தவுடன் அடுத்த லாமா அவர் சாயலிலேயே மறுபிறப்பாக பிறப்பார் என்ற ஒரு நம்பிக்கை உண்டு. ஒரு லாமா, தன் இறக்கும் தருவாயில், அவர் சாயலில் யார் மறுபிறப்பாக பிறப்பார்கள் என்று பூடகமாக சொல்லிவிட்டுதான் மூச்சை நிறுத்துவார்.
பிறகு இறந்த லாமா சொல்லிய அடையாளங்களை வைத்து மறுபிறப்பாக பிறந்திருக்கும் குழந்தையைத் தேடி சீனியர் பவுத்த குருக்கள் பயணப்படுவார்கள். இந்த முறையைப் பின்பற்றுவதால்தான் திபெத், திபெத்தாக திகழ்கிறது; லாமாக்கள் சிறுவயதிலேயே லாமாக்களாக உருவாவதும் நிகழ்கிறது.
சீனா இதை ஏற்பதில்லை; அங்கீகரிப்பதில்லை. திபெத்தின் சுதந்திர பிரதேச உரிமைக்கும் இந்த தலாய் லாமா தேர்வுக்கும் இருக்கும் தொடர்பை துண்டிக்கும் விதமாகவே இந்தத் தேர்வு முறையை சீனா ஏற்காமல் - அங்கீகரிக்காமல் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
மட்டுமல்ல, வழி வழியாக பின்பற்றப்படும் முறைக்கு மாறாக ‘இன்னொரு முறை’யில் ‘லாமா’வை தேர்வு செய்து திபெத்திய மக்களின் முன் வைக்கவும் சீனா முற்படுகிறது.அதுதான் ‘அர்ன்’ (Urn) முறை என்கிறார்கள். அதாவது சில பெயர்களை பேப்பரில் எழுதி வைத்துவிட்டு அதை குலுக்கி தேர்வு செய்யும் முறைதான் இது. இதன் வழியாக ‘மறுபிறப்பு’ எனும் திபெத்திய மக்களின் மத நம்பிக்கையை துடைத்தெறிய - துண்டிக்க - சீனா முற்படுகிறது.ஆனால், இந்த மதம் சாராத லாட்டரி முறை பவுத்தத்துக்கு மட்டுமல்லாமல் ‘எங்கள் நம்பிக்கைக்கும் எதிரானது’ என திபெத்திய மக்கள் கொந்தளிக்கிறார்கள்.எல்லாவற்றுக்கும் சிகரமாக சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. அது எப்படி மதத்தையும் மறுபிறப்பையும் மதிக்கும் என்றும் திபெத்தின் சாதாரண குடிமக்கள் கேட்கிறார்கள்.
உதாரணமாக இப்போது இருக்கும் தலாய் லாமா 1935ல் திபெத்தில் பிறந்தாலும், 1937ல், அதாவது தன் இரண்டாவது வயதில்தான் லாமாவின் மறுபிறப்பாக அடையாளம் காணப்பட்டார். ஐந்தாவது வயதில், அதாவது 1940ம் ஆண்டு தலாய் லாமாவாக பதவி ஏற்றார்.
1950ல் சீன ஆக்கிரமிப்பு, 1959ல் திபெத்தை விட்டு இந்தியாவில் தஞ்சம் என நாடு அற்றவராக தலாய் லாமா வாழ்ந்தாலும் அவரை ஓர் ஆன்மிக குருவாக அங்கீகரிப்பதை எல்லா நாடுகளுமே பின்பற்றுகின்றன. இதை ஒட்டித்தான் 1989ல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. லாமாக்களை விழுங்க நினைக்கும் சீனா
‘தலாய் லாமா’ என்பவர் திபெத்தின் நம்பர் ஒன் ஆன்மிக குரு என்றால் ‘பஞ்சன் லாமா’ (Panchen lama) என்பவர் இரண்டாம் கட்ட லாமா. இந்த முறைப்படி 1995ம் ஆண்டு கெதுன் சொக்கி நிமா என்பவரை இன்றைய லாமா, 11வது பஞ்சன் லாமாவின் அவதாரமாக அவரின் 6வது வயதில் கண்டுபிடித்தார்.
ஆனால், சில நாட்களில் இந்த பஞ்சன் லாமாவை சீனா கடத்திக்கொண்டு போனது. பிறகு சீனாவே கால்ட்சன் நொர்பு என்பவரை பஞ்சன் லாமா என்று அறிமுகபடுத்தியது. ஆனாலும் திபெத்திய மக்கள் இந்த நொர்புவை பஞ்சன் லாமாவாக ஏற்கவில்லை.
இவை எல்லாம் சாம்பிள்தான். மொத்தத்தில் திபெத்திய மக்களின் மூச்சு இந்த லாமாக்களில் குடிகொண்டிருப்பதாகவே சீனா நம்புவதால்தான் ஒவ்வொரு முறையும் லாமா தேர்வில் மூக்கை நுழைக்கிறது. ஆனாலும் திபெத்திய மக்கள் அவதாரங்களைத்தான் நம்புகிறார்களே தவிர கம்யூனிஸ்ட் சீனாவின் அதிகாரத்தின் மேல் நம்பிக்கை வைப்பதில்லை.
இருந்தாலும் லாமா சர்ச்சை மூலம் திபெத்திய மக்களை ஒடுக்கும் முயற்சியில் வேதாளம் போல் சீனா ஒவ்வொரு முறையும் முயற்சிக்கிறது. ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது இன்றைய தலாய் லாமாவின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்துதான் பேசினார்.
அதேபோல் தலாய் லாமாவின் 90 வயது கொண்டாட்டத்திலும் அமெரிக்காவின் ஆதரவு திபெத்தின் சுயேச்சையான பிரதேசக் கனவுக்கு உயிரூட்டும் வகையில் வாழ்த்து வார்த்தைகளால் நிரம்பி இருந்தது.
இது சீனாவுக்கு ஓர் எச்சரிக்கை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்தியாவும் தலாய் லாமாவை ஒரு குருவாக ஏற்றுக் கொள்கிறது. திபெத்திய மக்களும், தலாய் லாமாவும் கேட்பது நியாயமற்ற கோரிக்கை அல்ல. ஒரு சுயேச்சையான பிரதேசமாக திபெத் விளங்கவேண்டும் என்றுதான் போராடுகிறார்கள்.
சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் இந்தியாவில் மட்டும் தஞ்சம் அடைந்துள்ளனர். சீனாவுக்கும் திபெத்துக்கும் கலாசார, மத அடையாளங்களில் பல வித்தியாசங்கள் உண்டு.
இந்த வித்தியாசங்களைப் பேணவேண்டுமென்றால் சீன ஆக்கிரமிப்பிலிருந்து திபெத் நீங்கவேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பமாக இருக்கிறது. இது நிறைவேறுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
டி.ரஞ்சித்
|