நான் அழகா இருக்கேன்னு என்னையே உணர வைச்சது தமிழ் சினிமாதான்!
‘‘‘நான் அழகா இருக்கேன்... வசீகரமா இருக்கேன்...’ இந்த வார்த்தைகள் எல்லாம் தமிழ் மக்களாகிய நீங்கள் சொல்லிதான் கேட்கறேன். தமிழ் சினிமா எனக்கு மரியாதை கொடுத்திருக்கு...’’ உண்மையாகவே வசீகரிக்கும் கண்களால் சிரிக்கிறார் செஷ்விதா (எ) கனிமொழி.‘மார்கன்’ படத்தின் கதை நாயகி, கதைக் கரு இவர்தான்.  கதையின் திருப்பு முனையாக விஜய் ஆண்டனி முதல் அத்தனை கதாபாத்திரங்களையும் ஓட விட்டிருப்பார் செஷ்விதா. ஆனால், தமிழ் சினிமாவை விடாமல் பின்பற்றுவோருக்கு செஷ்விதாவின் அழகு ‘பரமசிவன் பாத்திமா’ படத்திலேயே பரிச்சயம் ஆகியிருக்கும். ‘என் விரதங்கள்...’ பாடலில் காந்தப் பார்வையும், கையில் மைக்குமாக கவர்ந்திருப்பார்.  வெல்கம் டூ தமிழ் சினிமா?
நிஜமாகவே எனக்கு அழகான வரவேற்பு கொடுத்திருக்கு தமிழ் சினிமா. மரியாதையா நடத்துறாங்க. பேட்டி எடுக்க வரும் எல்லோருமே நான் சில்க் மாதிரி இருக்கிறதா சொல்றாங்க.
ரொம்ப பெரிய பாராட்டு அது. அதுக்கு நான் தகுதியானவளா தெரியலை. எங்கேயும் தோல் நிறம் ஒரு பிரச்னையாகவே இல்ல.  ‘அழகா இருக்கே, மேக்கப் இல்லாமலேயே உங்க முகம் நல்லா இருக்கு...’ இந்த வார்த்தைகள் எல்லாம் நான் இங்கே தமிழ் நாட்டில் தான் கேட்கறேன். ‘பரமசிவன் பாத்திமா’ எனக்கு தமிழில் நல்ல அறிமுகம் கொடுத்தது. ‘மார்கன்’ படம் மூலமா அடையாளமும், அங்கீகாரமும் கிடைச்சிருக்கு.  உங்களைப் பற்றி..?
சொந்த ஊர் கர்நாடகா, பெங்களூர். பிறந்த ஊர் சேலம். எனக்கு முதலில் வச்ச பெயர் கனிமொழி. ஆனா, அம்மா கொஞ்சம் நியூமராலஜி எல்லாம் பார்ப்பாங்க. அதனால செஷ்விதா பெயர்.
நான் பி.எஸ்சி பிசிக்ஸ் படிச்சேன்.
கர்நாடகாவில் +1, +2 கான்செப்ட் கிடையாது. பியுசிதான். அம்மா காந்தி. அவங்களுக்கு சேலம் சொந்த ஊர். அப்பா ராஜா. அவர் மெட்டீரியல் கான்ட்ராக்டர். நான் சின்ன வயதா இருக்கும்போதே அப்பா எங்களை விட்டுட்டு போயிட்டார். ஒரு தம்பி ஆகாஷ், பிபிஏ படிச்சிட்டு இருக்கார். இயற்பியல் படிப்பு... என்ன ஐடியாவில் இருந்தீங்க ?
ஏதாவது வேலை, அது ஐடி ஆக இருந்தால் டபுள் ஓகே. காரணம் பெங்களூரு... அதனால் ஐடி என்கிற ஐடியா. குறிப்பா கஷ்டப்பட்டு ஒரு லேடியா இருந்து எங்களை அம்மா வளர்த்திருக்காங்க.
 அப்போ அடுத்து நான்தான் ஒன்லி பிரெட்வின்னர். நான் சம்பாதிச்சே ஆகணும். அதனால் துபாயில் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை செய்தேன்.
ஒரு வருஷம் வேலை, சம்பளம், அதில் அம்மா, தம்பியை பார்த்துக்கிட்டேன். முதலில் ஒரு வீடு... அதைக் கொடுத்தால் அம்மா கொஞ்சமாவது ரிலாக்ஸாக இருப்பாங்கன்னு தோணுச்சு. அதை என் குறிக்கோளாக எடுத்திட்டு வீடு வாங்கிக் கொடுத்திட்டேன். தம்பி படிக்கிறார்.
எங்கே சினிமா பயணம் துவங்கியது ?
டான்ஸ் கிளாஸ் போவேன். அங்கே என் கண்ணு, முக அமைப்பு நல்லா இருக்கறதா ஃப்ரெண்ட்ஸ் சொல்வாங்க. அவங்க கொடுத்த நம்பிக்கையிலே கன்னட சினிமா கதவுகளைத் தட்டினேன்.
ஆனால், ஒரு கதவும் திறக்கலை. எடுத்த எடுப்பிலேயே ‘நீ ஹீரோயின் ஃபேஸ் கிடையாது...’ அப்படின்னு நேரடியாக சொன்னாங்க.
நான் ஹீரோயின் கேரக்டர் கேட்கவே இல்லையே... ஒரு ஹீரோயின் ஃப்ரெண்ட் கேரக்டர், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கூட இல்லைன்னு என் தன்னம்பிக்கைய முழுமையா உடைச்சாங்க. ஒரு கட்டத்தில் போதும்ன்னு வெறுத்துப் போயிட்டேன். இதிலே நாசுக்கா சொல்றாங்களாம்... ‘கருப்பா இருந்தாலும் கலையா இருக்கே...’ அதென்ன கருப்பா இருந்தாலும்? சமூகத்து மேல் ஒரு கோபமே வந்துச்சு.
தமிழ் சினிமா அறிமுகம் எப்படி இருக்கு ?
அழகாக இருக்கேன் என்கிற நம்பிக்கையையே எனக்குகொடுத்திருக்கு. முதல் படம்... அதிலும் முதல் காட்சியே என்னுடைய கிளாமர் பாடல்தான். நான் எந்த ஆங்கிளில் எல்லாம் நல்லா இருக்கேன்னு எனக்கே காண்பிச்சார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் சார். எனக்கு என் மேல் இல்லாத நம்பிக்கை அவருக்கு இருந்தது.
‘எப்படி சார் மேக்கப் கூட இல்லாம, அதுவும் புடவையில்’ அப்படின்னு கேட்டேன். அந்தப் பாட்டில் மேக்கப் கிடையாது ,வெறும் கண்மை மட்டும்தான். லிப்ஸ்டிக் கூட கிடையாது. ஆனால், பாடல் பார்த்த அத்தனை பேரும் என்னை பாராட்டுறாங்க. விஜய் ஆண்டனி கொடுத்த அட்வைஸ் என்ன ?
‘ரொம்ப எதிர்பார்க்காதீங்க. சினிமா கொடுக்கறதை அப்படியே எடுத்துக்கோங்க. அதிகம் எதிர்பார்த்து ஏதாவது ஒரு கட்டத்தில் அது கொடுக்கற அடியை நம்மால் தாங்க முடியாது...’
இதுதான் சார் சொன்ன அட்வைஸ். அவர் வாங்கின அடியெல்லாம் நிஜமாகவே நாமெல்லாம் வாங்கியிருந்தா மன அழுத்தத்தின் உச்சத்துக்குப் போயிருப்போம்.
அவரு சொன்னா சரியாதான் இருக்கும். இத்தனை படங்களுக்குப் பிறகும்கூட அறிமுக நடிகர்கள் கிட்ட இவ்வளவு பெரிய கேரக்டர்களை கொடுக்க விஜய் ஆண்டனி சாரால் மட்டும்தான் முடியும். எனக்கும் அஜய்க்கும் அப்படி ஒரு கேரக்டர் கொடுத்திருந்தார்.
உங்க அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க... கதை கேட்கும் ஸ்டைல் மாறி இருக்கா?
இப்ப நான் பெரிய ஸ்டார் ஆகிட்டேன்... ‘எனக்கு இந்தக் கதை வேண்டாம், இந்தக் கதை வேண்டாம்...’ இப்படி கேட்டால் உங்களுக்கே சிரிப்பா வரலையா?! கதை செலக்ட் பண்ற அளவுக்கு இன்னும் பெரிய ஆள் எல்லாம் ஆகலை. ஒரு கேரக்டர் இருக்கு அப்படின்னு சொன்னாலே அங்க போய் துண்டு போட்டு உட்கார்ந்திடுவேன்.
ஒரு படம் முடிஞ்சு தயாரா இருக்கு. அந்தப் படத்தில் நான் ஹீரோயினா நடிச்சிருக்கேன். ஆனால், ரொம்ப நாள் முன்பு எடுத்த படம். படத்தின் பெயர் மத்த விபரங்கள் எல்லாம் படக்குழு அறிவிப்பாங்க. ஷோபனா மேடம், ரேவதி மேடம் இவங்க நடிப்பு எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். பாலு மகேந்திரா சார், வெற்றிமாறன் சார் படங்கள் மாதிரி கதைகளில் நடிக்கணும்.
ஷாலினி நியூட்டன்
|