எலான் மஸ்க்கின் புதிய கட்சி அமெரிக்காவை புரட்டிப் போடுமா..?



ஒரு அரசியல் கட்சி என்றால் அதன் பெயரில் இருந்தே அதன் கொள்கைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால், உலகப் பணக்காரர்களில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவின் எலான் மஸ்க், கடந்தவாரம் ஆரம்பித்திருக்கும் கட்சியின் பெயர் என்ன தெரியுமா.

‘அமெரிக்கன் கட்சி’ (American Party). உலகளவில் இரு கட்சி ஆட்சிதான் பல நாடுகளில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. மூன்றாவது அணி, சோட்டா கட்சி, புரட்டிப் போடப் போறேன், கவித்துவிடப் போறேன்... என்ற கட்சிக்கு எல்லாம் மக்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்றே பிரபல அரசியல் கோட்பாட்டாளர்கள் ஆதாரம் காண்பிக்கிறார்கள். உதாரணமாக இந்தியா, பிரிட்டன், தமிழ்நாட்டில் எல்லாம் இரு கட்சி ஆட்சிதான் மாறி மாறி வருகிறது.

அமெரிக்காவிலும் மூன்றாவது அணி என பல தேர்தல்களில் சிலர் முயன்று பார்த்திருக்கிறார்கள். ஆனாலும் அங்கேயும் டெமாக்ரடிக் கட்சி, ரிபப்ளிக் கட்சி என இருகட்சி ஆட்சிதான் மக்களின் சாய்ஸாக இருக்கிறது. 
இச்சூழலில் எலான் மஸ்க் ஆரம்பித்திருக்கும் ‘அமெரிக்கன் கட்சி’ வெறும் வாய்ச் சவடாலா இல்லை தாக்கத்தை ஏற்படுத்துமா என ஆராய்வதற்கு முன் அமெரிக்காவின் தேர்தல் முறையைப் பார்த்துவிடுவது நல்லது. ஏனென்றால் அமெரிக்க எலக்‌ஷனே ஒரு வித்தியாசமான தேர்தலாக இருப்பதாக அரசியல் நிபுணர்கள் பார்க்கிறார்கள்.

அமெரிக்கத் தேர்தல் முறை

அமெரிக்காவில் அதிபர் பதவிதான் முக்கியமானது. உச்சமானது. அமெரிக்க அதிபரை மற்ற நாடுகள் போல் மக்கள் நேரடியாகத் தேர்தல் மூலம் தேர்வு செய்வதில்லை. மறைமுகமாகத்தான் தேர்வு செய்கிறார்கள். அதேபோல் மற்ற நாடுகளைப் போல சில வாரங்களில் எல்லாம் தேர்தல் அங்கு நடந்து முடிவதில்லை. அதிபர் தேர்தல் ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெறும்.

காலேஜின் முக்கியத்துவம்

அமெரிக்க நாடு நம்ம நாட்டைப் போல ஒரு கூட்டாட்சி அமைப்பைக் கொண்ட நாடு. இங்கே மாநிலம் மாதிரி அங்கே மாகாணங்கள் முக்கியம். இங்கே மாநிலங்களை ‘ஸ்டேட்’ என்று சொல்வது மாதிரியே அங்கேயும் மாகாணங்களை ‘ஸ்டேட்’ என்றுதான் சொல்வார்கள். ‘ஸ்டேட்’ என்றால் அரசு என்று பொருள். அமெரிக்காவில் ஒரு மாகாணத்தின் நிர்வாகம், சட்டம், நிதி எல்லாமே அந்தந்த மாகாணத்தின் கைக்குள்தான் இருக்கும்.

இப்படியாக அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உண்டு. ஒவ்வொரு மாகாணத்திலும் நம்ம சட்டமன்றம் மாதிரி ஒரு சட்டமன்றம் இருக்கும். இதை அவர்கள் ‘அசெம்பிளி’ என்று அழைப்பார்கள்.

இந்த அசெம்பிளியில் இருப்பவர்களை ‘எலக்டோரல் காலேஜ்’ என்கிறார்கள். ஒவ்வொரு மாகாணத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப இந்த அசெம்பிளியில் உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்கள் மாகாணத்தின் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்களை சுருக்கமாக ‘எலக்டர்ஸ்’ (electors - தேர்வாளர்கள்) என்றும் சொல்வார்கள்.

மக்கள்தொகைக்கு ஏற்ப அசெம்பிளி உறுப்பினர்கள் என்று சொன்னாலும் சில மாகாணத்தில் அதிகமான எலக்டர்களும் சில மாகாணத்தில் குறைந்த எலக்டர்களும் இருப்பது அமெரிக்காவில் சமமின்மையாக பார்க்கப்படுகிறது.

சரி... இந்த எலக்டர்களின் முக்கியப் பங்கு என்ன?

ஒரு மாகாணத்தின் நிர்வாகம், சட்டம் மற்றும் நிதி தொடர்பான முடிவுகளை எடுப்பதோடு இவர்கள்தான் மக்கள் சார்பாக நாட்டின் அதிபரையும் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுதான் அமெரிக்காவின் தேர்தலை மற்ற நாடுகளில் இருந்து வித்தியாசப்படுத்துகிறது.

தேர்தல் எப்படி நடக்கிறது?

அமெரிக்கத் தேர்தல் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. ஒரு தேர்தல் ஒரு வருடத்துக்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது என்று பார்த்தோம். இந்த ஒரு வருடத்தில் என்ன எல்லாம் நடக்கிறது என்பதை வைத்துதான் அமெரிக்காவின் அதிபர் தேர்வாகிறார். உதாரணமாக தேர்தல் தேதி அறிவித்தவுடன் ஒவ்வொரு கட்சி சார்பிலும் யார் அதிபர் பதவிக்குபோட்டி போடப்போகிறார் என்ற யூகங்கள் அமெரிக்காவில் கொடி கட்டிப் பறக்கும்.

மட்டுமல்ல. ஒவ்வொரு கட்சிக்குள்ளேயும் போட்டி பொறாமைகள் உச்சத்தைத் தொடும். கட்சிக்குள்ளேயே ஒரு நபருக்கு ஆதரவு இருந்தால் மட்டுமே அவரால் அதிபர் போட்டியில் பங்கேற்க முடியும். ஒரு மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களும் அமெரிக்க தலைநகரில் அந்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் காங்கிரசில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

காங்கிரஸ் கூட இரண்டு வகையாக இருக்கும். உதாரணமாக மேலவை ‘செனட்’ (senate) என்று அழைக்கப்பட, கீழவை ‘ஹவுஸ் ஆஃப் ரிப்ரசென்டேடிவ்’ (மக்கள் பிரதிநிதிகள்) என்று அழைக்கப்படுகிறது.

காலேஜ் எப்படி அதிபரை தேர்வு செய்கிறது?

அதிபர் பதவிக்காக போட்டிபோடுபர்களுக்கு காலேஜ் உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும். காலேஜிலும் இரண்டு வகையான உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒருவர் ‘ப்ரைமரி’ என்று அழைக்கப்படுகிறார். மற்றவர் ‘காக்கஸ்’ (caucus) என்று அழைக்கப்படுகிறார். முதலில் அதிபர் பதவிக்குப் போட்டி போட விரும்புபவர்கள் அந்தப் பதவிக்கு தகுதியானவர்களா என்று கட்சிக்குள் விவாதம் நடக்கும்.

இந்த விவாத்தின் அடிப்படையில் ஒரு நபர் போட்டியிடலாம் என்று டிக் செய்யப்படுவது ப்ரைமரி உறுப்பினர்களால் நடைபெறும். ஒருவேளை விவாத முறையால் இல்லாமல் கட்சி உறுப்பினர்களிடையே நடைபெறும் வாக்கு மூலம் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதை காக்கஸ் என்று அழைப்பார்கள். இதில் ஏதோ ஒருமுறை ஒரு மாகாணத்தில் பின்பற்றப்படும்.

இதன் பிறகே தேர்தல் நடைபெறும். இந்த நேரத்தில் மக்கள் வாக்கெடுப்பும், காலேஜ் உறுப்பினர்களின் அதிபர் தேர்வும் ஒருசேர நடைபெறும். இதுதான் அமெரிக்காவின் அதிபர் தேர்தலை பலமுறை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.  

உதாரணமாக 2016ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டன் மக்கள் செலுத்திய வாக்கில் முன்னணியில் இருந்தார். ஆனால், எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களின் அடிப்படையில் டிரம்ப் ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது. உண்மையில் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்ததும் வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களின் ஆதரவு எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும். இது சிலவேளை பொய்த்துப் போவதால்தான் அமெரிக்க தேர்தலை அரசியல் நிபுணர்கள் காமெடியாக பார்க்கிறார்கள்.

எலான் மஸ்க் ஜெயிப்பாரா?

எலான் மஸ்க் கடந்தவாரம் கட்சி ஆரம்பித்தபோதே காங்கிரஸ் செனட்டில் 2லிருந்து 3 சீட், அத்தோடு எலக்டோரல் காலேஜில் 8லிருந்து 10 சீட் என்று கணக்குப் போட்டிருக்கிறார். அப்படித்தான் செய்திகள் வருகின்றன.பொதுவாக அமெரிக்கத் தேர்தல்களில் மூன்றாவது அணி என்பது பலவேளை ஸ்பாய்லர் என்று சொல்லப்படும் கட்சிகளை உடைக்கும் செயலாக  இருந்திருப்பதைப் பல நிபுணர்கள் சுட்டிக்  காண்பித்திருக்கிறார்கள்.

அண்மையில் கூட எலான் மஸ்க்கின் கட்சிக்கு எந்தளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பதை ஆய்வு செய்த ஒரு நிறுவனம், அவருக்கு, அவர் இதுவரை இருந்த டிரம்ப்பின் கட்சியான ரிபப்ளிக் கட்சியின் உறுப்பினர்களில் சுமார் 62 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், டெமாக்ரடிக் கட்சி சார்பில் 3 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் சர்வே எடுத்துச் சொல்லியிருக்கிறது.

இதன் அடிப்படையில் ஒருவேளை அதிபர் தேர்தல் நடக்கும் சமயத்தில் எலான் மஸ்க், டிரம்ப் அங்கம் வகிக்கும் ரிபப்ளிக் கட்சியில்தான் ஓட்டையை ஏற்படுத்தலாம் என ஆருடம்
சொல்கிறார்கள். பொதுவாக எலான் மஸ்க் ஒரு தடவை சொன்ன வார்த்தையை மறுபடியும் சொன்னதில்லை என்பதையும் ஆதாரத்துடன் காண்பிக்கிறார்கள் விமர்சகர்கள்.
இதை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அமெரிக்கத் தேர்தல் முறையே மஸ்க்குக்கு ஆப்பு அடிக்கும் என்று மட்டும் சொல்லலாம்.

சுமார் 20 வருடங்களாக விண்வெளிப் பயணத்துக்கு இலவச பாஸ் என்று எல்லாம் பீலா விட்டுக்கொண்டிருந்த எலான் மஸ்க்கின் அரசியல் என்ட்ரியை எல்லாம் காமெடியாகத்தான் அமெரிக்க மக்கள் பார்க்கிறார்கள். 

எடுத்துக்காட்டாக ஒரு கட்சியின் பெயரில் ‘அமெரிக்கா’ என்று இருப்பதை தடை செய்கிறது அமெரிக்கச் சட்டம். இப்படி இருக்கையில் எலான் மஸ்க் அந்த பெயரிலேயே கட்சி ஆரம்பித்திருப்பதை முதல் கோணலாகத்தான் பார்க்கிறார்கள். பார்ப்போம் மேலும் என்ன காமெடிகளை எல்லாம் மஸ்க் செய்கிறார் என்று.

டி.ரஞ்சித்