இந்தியாவின் உயர்ந்த குடும்பம்!



உயர்ந்த மனிதர் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உயர்ந்த குடும்பம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? புனேவைச் சேர்ந்த குல்கர்னி குடும்பத்தை இந்தியாவின் உயர்ந்த குடும்பம் என்று அழைக்கின்றனர். 
ஆம்; குல்கர்னி குடும்ப உறுப்பினர்களின் மொத்த உயரம், 26 அடி. இந்தக் குடும்பத்தை இந்தியாவின் மிக உயரமான குடும்பமாக அங்கீகரித்துள்ளனர். அப்படி என்ன ஆச்சரியப்படும் உயரமா என நீங்கள் கேட்கலாம்.

ஆம்; ஆச்சர்யமான உயரம் தான். வீட்டின் தலைவர் முதல் கடைக்குட்டி வரை அண்ணாந்து பார்க்கக் கூடிய உயரத்தில் உள்ளனர். குடும்பத் தலைவர் ஷரத் குல்கர்னியின் உயரம்,  7 அடி, 1.5 அங்குலம், அவரது மனைவி சஞ்சோத் குல்கர்னியின் உயரம்,  6 அடி, 2.6 அங்குலம், இவர்களின் மகள்களான மிருகா குல்கர்னியின் உயரம், 6 அடி, 1 அங்குலம், சான்யா குல்கர்னியின் உயரம், 6 அடி, 4 அங்குலம்.

கடந்த 1989-ல் திருமணம் செய்து கொண்ட ஷரத் மற்றும் சஞ்சோத் தம்பதியினர்,  இந்தியாவின் மிக உயரமான தம்பதியராக ‘லிம்கா’ சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தனர். உலகின் மிக உயரமான ஜோடி என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்போம் என்று ஷரத்-சஞ்சோத் தம்பதியினர் நினைத்தனர். 

ஆனால், வெய்ன் மற்றும் லாரி ஹால்கிஸ்ட் தம்பதியினரால் அந்த சாதனை நிகழாமல் போனது.  இதில் சோகம் என்னவென்றால் நம் இந்திய குல்கர்னி குடும்பத்துக்கும், வெய்ன் குடும்பத்துக்கும் ஒரு அங்குல உயரம் தான் வித்தியாசம்.

‘‘என்னுடைய பதின்பருவ வயதை எட்டும்போது என்னைச் சுற்றி இருந்த அத்தனை நண்பர்களுக்கும் இடையே நான் மிக உயரமானவனாக நிற்பேன். பெரிய கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளானேன். ஆனால், என்னுடைய உயரத்தைப் பயன்படுத்தி விளையாட்டில் ஈடுபடத்தொடங்கினேன். 

குறிப்பாக கூடைப்பந்து விளையாட்டில் அதீத ஆர்வம் காட்டி நாட்டுக்காக என்னுடைய உயரத்தை அர்ப்பணிக்கத் துவங்கினேன். அங்கும் சில இடங்களில் என்னுடைய உயரம் அதிகமான தகுதியாகக் கருதப்பட்டு மற்ற சாதாரண உயரத்தில் இருந்த வீரர்களுடன் விளையாட அனுமதி மறுக்கப்பட்டது...’’ என்கிற ஷரத்தைவிட, அதீத கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கிறார் அவருடைய மனைவியான சஞ்சோத்.

‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கிராமத்தில் தான். பொதுவாக ஆண்கள் உயரமாக இருப்பதை கௌரவமாகவும், பெண் அதீத உயரம் என்றால் அது கல்யாண மார்க்கெட்டில் சிக்கலாகவும் தான் பார்ப்பாங்க. இதனாலேயே நிறைய மாப்பிள்ளைகள் என்னை நிராகரித்தனர். ஒரு கட்டத்தில் நானே ஒரு முடிவாக என்னைவிட ஒரு அங்குலமாவது உயரமாக இருக்கும் ஆணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற முடிவுக்கு மாறிவிட்டேன்.

ஏனெனில் சொந்த வீட்டிலேயே உறவினர்களால் கேலிகளைச் சந்தித்தேன்.  என்னை விட உயரம் குறைவான ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு சென்றால் அங்கே இன்னும் அதிக அவமானத்திற்கு ஆளாகக்கூடும். 

இதன் காரணமாகவே என்னை விட உயரமான மனிதரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். அப்போது வந்தவர் தான் ஷரத். எங்களுக்கு இரண்டு மகள்கள். அவர்களும் எங்களின் வழித்தோன்றலாக மிக உயரமாக நின்றார்கள்...’’ என்கிறார் சஞ்சோத்.

இவர்களின் சிக்கல் இத்துடன் நிற்கவில்லை. வீட்டின் கூரை முதல் கழிப்பறை வரை அத்தனையும் இவர்கள் உயரத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டிய நிலை இருந்தது. உயரமான மேற்கூரை, அதாவது மேலே ஃபேன் அல்லது அலங்கார விளக்குகள் மாட்டினால் கூட இவர்கள் தலையில் தட்டாத அளவிற்கு உயரத்தில் இருக்கும்படி மேற்கூரை அமைக்க வேண்டியது அவசியமானது. தொடர்ந்து படுக்கையறை, கட்டில், சோபா, நாற்காலிகள், ஏன் போர்வை , மெத்தை, என அனைத்துமே உயரம் அதிகமாக இவர்களுக்கு தேவைப்பட்டது.

 வீட்டின் வாயில் உட்பட, அனைத்தையும் தன்னுடைய குடும்பத்தினருக்கு ஏற்ற வகையில் உயரத்திற்கு அமைத்திருக்கிறார் குல்கர்னி.  அவர்களுக்கு ஏற்ற உடைகள் மற்றும் காலணிகள் கிடைப்பது மிகவும் சிரமம். 

அவற்றை ஐரோப்பாவின் கடைகளில் இருந்து ஆர்டர் கொடுத்து வாங்குகிறார்கள். மேலும் பொது இடங்களில், கடை வீதிகளில் அலைந்து திரிந்து எதுவும் வாங்க முடியாது. பெரிதாக எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதில்லை. அரசாங்க போக்குவரத்து வசதிகளையும் பயன்படுத்த முடியாது.

ஒருவேளை பயணம் செய்ய வேண்டும் என்றால் கூட விமானத்தில் முன் இருக்கை அல்லது அவசர வழி அருகே இருக்கும் இருக்கையைக் கேட்டு வாங்கி உட்கார்ந்து கொள்கின்றனர் குல்கர்னி குடும்பத்தார். 

இந்த உயரம் மாடலிங் துறையில் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படும் நிலையில் குல்கர்னியின் மகள்கள் மாடலிங் துறையில் கால் பதிக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், இன்றுவரை அதற்கான வாய்ப்புகள் பெரிதாக கதவைத் தட்டவில்லை. இப்போது, ‘‘தங்களுடைய இரு மகள்களுக்கும் அவர்களை விட உயரமான மாப்பிள்ளைகளைத் தேட வேண்டும்...’’ என்கிறார்கள் ஷரத் மற்றும் சஞ்சோத் குல்கர்னி.

ஷாலினி நியூட்டன்