Must Watch



அனோரா

இந்த வருடத்துக்கான சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங் என ஐந்து ஆஸ்கர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை அள்ளிய ஆங்கிலப்படம், ‘அனோரா’. இப்போது ‘ஹாட் ஸ்டாரி’ல் பார்க்கலாம்.  இளம் பாலியல் தொழிலாளி அனோரா. 
ரஷ்யாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவரின் மகனைச் சந்திக்கும் வாய்ப்பு அனோராவுக்குக் கிடைக்கிறது. அந்தச் சந்திப்பும், அந்த பணக்கார இளைஞனுடனான உறவும் அனோராவின் வாழ்க்கை திசையை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறது திரைக்கதை.

பதினெட்டு வயதை அடைந்தவர்களுக்கான இப்படத்தின் இயக்குனர் ஷான்  பேக்கர். இவர் பாலியல் தொழிலாளிகளின் பல்வேறு பக்கங்களைக் குறித்து படங்களை எடுப்பவர். அவரது முந்தைய படம் பாலியல் தொழிலாளிகளுடைய குழந்தைகளின் உலகைச் சித்தரித்திருந்தது.
 இந்தப் படத்துக்கும்கூட நூற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளிகள், கிளப் டான்ஸர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். “ஒரு பணக்காரனைப் பார்த்து கல்யாணம் செய்தால், இந்த தொழிலை செய்ய வேண்டியிருக்காது” என்று பல பாலியல் தொழிலாளிகள் சொல்லியிருக்கின்றனர்.  இந்த கல்யாண விருப்பம் அவரைப் பாதிக்க, அதையே படமாக்கிவிட்டார்.

பொன்மேன்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலை அள்ளிய மலையாளப்படம், ‘பொன்மேன்’. இப்போது தமிழில் ‘ஹாட்ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது. ஒரு நகைக்கடையில் விற்பனை முகவராக வேலை செய்து வருகிறார் அஜீஷ். நகை வாங்க முடியாத நிலையில் இருக்கும் பெண் வீட்டார்களுக்கு நகையை விற்பனை செய்வது அவரது வேலை. அதாவது, திருமணம் நடப்பதற்கு முந்தையை நாளில் பெண் வீட்டார் கேட்கும் நகையைக் கொடுத்து விடுவார் அஜீஷ்.

 நகைக்கான தொகையைத் திருமணத்தின் போது கிடைக்கும் மொய் பணத்திலிருந்து கொடுத்தால் போதும். இப்படி கடற்கரை கிராமத்தில் நடக்கும் ஸ்டெபியின் கல்யாணத்துக்காக 25 பவுன் நகையைக் கொடுக்கிறார் அஜீஷ். கல்யாணம் முடிந்த பிறகு 13 பவுனுக்கான தொகையை மட்டுமே ஸ்டெபியின் குடும்பத்தினர் தருகின்றனர். 

மீதி 12 பவுனுக்கான தொகையைத் தருவதில்லை. மீதித் தொகையை அஜீஷ் எப்படி வாங்குகிறார் என்பதே திரில்லிங் திரைக்கதை. தங்க நகையைப் பற்றிய படமென்றாலும் கூட, நகையின் மீது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது இந்தப் படம். அஜீஷாக கலக்கியிருக்கிறார் பேசில் ஜோசப். படத்தின் இயக்குனர் ஜோதிஷ் சங்கர்.

கிளாடியேட்டர் 2

உலகமெங்கும் வசூலில் பட்டையைக் கிளப்பிய ஆங்கிலப் படம், ‘கிளாடியேட்டர்’. இதன் இரண்டாம் பாகம்தான் இது. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.

 மார்க்கஸ் அரிலீயஸ் மரணமடைந்த பிறகு, ரோமை ஊழல்வாதிகளான இரட்டையர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். வட ஆப்பிரிக்காவின் நுமிடியாவில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் ஹன்னோ. மார்க்கஸ் அரிலீயஸின் பேரன் மற்றும் மாவீரன் மேக்ஸிமஸின் மகன் தான் ஹன்னோ.

 ரோமின் இராணுவம் நுமிடியாவின் மீது படையெடுக்கிறது. ஹன்னோவின் மனைவியைக் கொல்கிறது. ஹன்னோ உட்பட பலரை அடிமையாக்கி ரோமிற்கு அழைத்து வருகிறது. அடிமைகளுக்குப் பயிற்சி கொடுத்து, அவர்களைக் கிளாடியேட்டராக மாற்றுவதுதான் திட்டம். அதிகாரமும், ஊழலும், பேராசையும் பிடித்த ரோமின் அதிகார வர்க்கத்தை அடிமையான ஹன்னோ எப்படி எதிர்க்கிறான் என்பதே மீதிக்கதை. ஆக்‌ஷன் பிரியர்கள் தவறவிடக்கூடாத படம் இது. முதல் பாகத்தைப் பிரதியெடுத்ததைப் போல இரண்டாம் பாகம் இருந்தாலும் ஆக்‌ஷனில் அதிரடி காட்டியிருக்கின்றனர். இப்படத்தின் இயக்குனர் ரிட்லி ஸ்காட்.

பி ஹேப்பி

‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகியிருக்கும் இந்திப்படம், ‘பி ஹேப்பி’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. இந்தியாவிலேயே பெரிய டான்ஸராக வேண்டும் என்ற கனவில் இருப்பவள், சிறுமி தாரா. அவளுடைய கண்டிப்பான அப்பா, ஷிவ். ஜாலியான தாத்தா, நாடார். ஒரு விபத்தில் தாராவின் அம்மா இறந்துவிட்டார். அப்பாவும், தாத்தாவும் ஒரே வங்கியில் முக்கியமான பொறுப்பில் இருக்கின்றனர்.

 ஒரு மலைப்பிரதேசத்தில் வாழ்ந்துவரும் தாரா, வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் பள்ளியில் படித்து வருகிறாள். மனைவியின் இழப்பிலிருந்து மீண்டு வராத ஷிவ், மற்றவர்களிடம் கறாராக நடந்துகொள்கிறார். இந்நிலையில் தாரா படிக்கும் பள்ளிக்கு புகழ்பெற்ற டான்ஸரான மேகி வருகிறார்.

 மேகியின் முன்பு தாரா உட்பட பல பள்ளிக்குழந்தைகள் நடனமாடுகின்றனர். தாராவின் நடனத்தில் மயங்கிப்போகிறார் மேகி. மும்பையிலிருக்கும் தன்னுடைய நடனப் பள்ளிக்கு வந்து, டான்ஸ் கற்றுக்கொள்ளும்படி தாராவுக்கு அழைப்பு விடுக்கிறார் மேகி. தாராவும் மும்பைக்குப் போக விரும்புகிறாள். ஆனால், மகளை வெளியூருக்கு அனுப்ப ஷிவ்விற்கு விருப்பமில்லை. தாரா மும்பைக்குச் சென்று பெரிய டான்ஸராக மாறினாளா? என்பதை அறிய படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.

தொகுப்பு த.சக்திவேல்