13 வயது சூழலியல் போராளி!
உலகளவில் குறிப்பிடத்தக்க இளம் சூழலியல் போராளிகளில் ஒருவர், ஆறு வருடங்களுக்கு முன்பு ஸ்பெயினில் நடந்த ஐக்கிய நாடுகளின் சபையின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்துகொண்ட இளம் போராளி, அப்துல் கலாமின் சில்ட்ரன்ஸ் விருது, உலக சில்ட்ரன்’ஸ் அமைதிக்கான விருது, நோபல் சிட்டிசன் விருது, ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் இந்தியாவின் சிறந்த 30 வயதுக்குட்பட்ட 30 நபர்களின் பட்டியலில் இடம், டெல்லி அரசின் சர்வதேச மகளிர் தின விருது என லிசிபிரியா கங்குஜத்தின் சிறப்புகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
 யார் இந்த லிசிபிரியா கங்குஜம்?
இந்தியாவின் கிரேட்டா தன்பர்க் என்று அழைக்கப்படும் சூழலியல் போராளி இவர். ஆனால், தன்னை கிரேட்டாவுடன் ஒப்பிடுவதில் லிசிபிரியாவுக்கு உடன்பாடில்லை. மணிப்பூரில் உள்ள பாசிக்ஹாங் எனும் இடத்தில் பிறந்தார், லிசிபிரியா. ஆறு வயதிலேயே பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கைச் சீற்றங்களுக்குப் பின்னணியில் இருக்கும் மனிதச் செயல்பாடுகள் குறித்தும் பொதுவெளியில் பேச ஆரம்பித்துவிட்டார்.

கடந்த 2018-ம் வருடம் மங்கோலியாவில் ஐக்கிய நாடுகள் சபை ஒருங்கிணைத்த இயற்கைப் பேரழிவு குறித்த மாநாடு நடந்தது. இதில் தனது தந்தை கனர்ஜித் கங்குஜத்துடன் கலந்துகொண்டார் லிசிபிரியா.
அப்போது அவரது வயது 7. கனர்ஜித் ஒரு இயற்கை ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது. “அந்த மாநாட்டில் பேசியவர்கள்தான் சூழல் சார்ந்த பல விஷயங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தனர். என் வாழ்க்கையை மாற்றிய நிகழ்வு அது…” என்று மங்கோலியாவில் நடந்த மாநாடு குறித்துப் பகிர்கிறார் லிசிபிரியா. மங்கோலியாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய லிசிபிரியா, பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கைப் பேரழிவிலிருந்து பூமியைக் காப்பாற்றுவதற்காக ஓர் அமைப்பை உருவாக்கிச் செயல்பட ஆரம்பித்தார். ஆறு வயது சிறுமியாக இருந்ததால் லிசிபிரியாவின் குரல் பலரது கவனத்துக்குள்ளாகியது.
கடந்த 2018-ம் வருடம் கேரளாவில் வெள்ளப் பாதிப்பால் நிறைய பேர் பல இன்னல்களுக்கு உள்ளாகினர். அப்போது தனது சேமிப்பில் இருந்து ஒரு லட்ச ரூபாயை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நன்கொடையாக வழங்கினார் லிசிபிரியா.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக அந்த தொகையைப் பயன்படுத்தும்படி கோரிக்கையும் வைத்திருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு கேரள அரசிடமிருந்து ஒப்புதல் கடிதம் வந்தது.
லிசிபிரியா கொடுத்தது சிறிய தொகை தான். ஆனால், பேரழிவு சமயங்களில் அந்த சிறிய தொகை கூட மிகவும் பெரிய பங்களிப்புசெய்ததைக் கவனித்தார். இது அவருக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது. சூழலியல் சார்ந்து தான் கொடுக்கும் சிறு குரல் கூட வருங்காலத்தில் ஏற்படப்போகும் மாற்றத்தில் முக்கிய பங்களிப்பு செய்யலாம் என்ற நம்பிக்கையை லிசிபிரியாவுக்குக் கொடுத்தது.
கடந்த 2019-ம் வருடம் ஆப்பிரிக்காவில் உள்ள அங்கோலா நாட்டில் நடந்த சூழலியல் மாநாட்டில் பருவநிலை மாற்றம் குறித்து பேசினார் லிசிபிரியா. இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த ‘யுனெஸ்கோ’ அமைப்பு, லிசிபிரியாவை அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் அங்கோலாவின் அதிபர் முதல் ஆப்பிரிக்க நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 2019-ம் வருடம் அக்டோபர் 4-ம் தேதியன்று காற்று மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கும் ஒரு கருவியை அறிமுகப்படுத்தினார் லிசிபிரியா. மாசுபட்ட காற்றிலிருந்து, தூய்மையான காற்றைப் பிரித்துத் தரும் இந்தக் கருவி குப்பையிலிருந்து வடிவமைக்கப்பட்டது.
யார் வேண்டுமானாலும் ஒரு பைசா செலவின்றி, குப்பைகளை மறுசுழற்சி செய்து இந்தக் கருவியை வடிவமைக்க முடியும் என்பது இதன் சிறப்பு. இதனை பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் சட்டசபை முன்பு அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வு டெல்லியின் காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வை பரவலாக்கியது.
டெல்லியின் காற்று மாசுபாடு தான் லிசிபிரியாவின் இந்தச் செயல்பாட்டுக்கு மூல காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோக தாஜ்மஹாலின் சுற்றுப்புறத்தில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதிலும் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். இப்போது லிசிபிரியாவின் வயது 13. அவரது சூழலியல் போராட்டப் பயணம் தொடர்கிறது.
த.சக்திவேல்
|