அதிகரிக்கும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள்!
என்ன செய்யலாம்... எப்படி தடுக்கலாம்...
‘‘உலகம் முழுவதும் பாலியல் துன்புறுத்தல்களால் 15% பெண் குழந்தைகள் மற்றும் 8% ஆண் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்’’ என்கிறது புள்ளிவிவரம். அமெரிக்கா போன்ற அதீத பாதுகாப்புகளும், தீவிரமான தண்டனைகளும் இருக்கும் நாட்டிலேயே நான்கில் ஒரு பெண் குழந்தை மற்றும் இருபதில் ஒரு ஆண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் எனில் சிசிடிவி கேமராக்கள் மிகக் குறைவாக இருக்கும் மற்றும் தண்டனைகளும் நாம் எதிர்பார்த்தபடி தீவிரமாக இல்லாமல் இருக்கும் இந்தியா மாதிரியான நாடுகளில் எத்தனை பெண் மற்றும் ஆண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவார்கள் என நினைத்துப் பார்த்தால் தலை சுற்றும்.
 2022 ஆம் ஆண்டின் என்சிஆர்பி ( The National Crime Records Bureau) கணக்கீட்டின் படி, 8.7% குழந்தைகள் மீதான வன்கொடுமை இந்தியா முழுவதும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 1,62,000 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ( The Protection of Children from Sexual Offences (POCSO), 2012) ஆகிய இரு வழக்குகளின் கீழ் இந்தக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு வருடமும் இதன் விகிதாச்சாரம் மற்றும் புள்ளிவிவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படுகின்றன.

கல்வி அறிவின்மை, ஏழ்மை, குழந்தைகள் முக்கியத்துவம் குறித்த போதிய அறிவின்மை, மன அழுத்தம் நிறைந்த வாழ்வியல், தீவிர தண்டனையின்மை, பாதுகாப்புக் குறைவு, அலட்சியம் என இப்படி பல காரணங்களால் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.
வீடு, பள்ளிக்கூடங்கள், குழந்தைகள் பயிற்சி மையங்கள், உறவினர்கள் இருப்பிடம், திருவிழாக்கள், பொது இடங்கள், குறிப்பாக பண்டிகை நாட்களில் இந்த குற்றங்கள் அதிகமாக பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கிறது என்சிஆர்பி. அரசு, இந்தியக் கல்வி, பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்தால் நிச்சயம் இந்தக் குற்றங்களை சுலபமாக தவிர்க்கலாம் என்கிறது அமெரிக்காவின் ‘JAMA Pediatrics ’ என்னும் குழந்தைகளுக்கான சிறப்பு இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு. ஒருங்கிணைந்த, சமூக அளவிலான தடுப்பு முயற்சிகள், முன்கூட்டியே கொடுக்கப்படும் பாதுகாப்புப் பயிற்சிகள் மூலம் குழந்தைகள் பாலியல் குற்றங்களைக் கணிசமாகக் குறைக்கலாம்.
இந்த ஆய்வறிக்கையை 110 பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆய்வுக்குட்படுத்தி சமர்ப்பித்திருக்கிறார் ஜென்னி நோல் (ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையின் பேராசிரியர் மற்றும் மவுண்ட் ஹோப் மையத்தின் நிர்வாக இயக்குநர்).இந்த ஆய்வின்படி குழந்தைகள் வன்கொடுமையைத் தடுக்க மூன்று விதமான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை வழங்குகிறது ஜென்னி நோல் ஆய்வு.
மேலும் பென்சில்வேனியாவில் உள்ள குறிப்பிட்ட பள்ளிகள் மற்றும் பயிற்சிக்கூடங்களில் 2018 முதல் 2020ஆம் ஆண்டு வரை இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பயிற்சிகள் மூலம் கொடுத்ததனால் பென்சில்வேனியாவில் குழந்தைகள் மீதான வன்கொடுமை எதிர்பாராத அளவிற்கு குறைந்திருப்பதாக தெரிவிக்கிறது இந்த ஆய்வின் முடிவு. இதனை மற்ற நாடுகளும் பின்பற்றினால் நிச்சயம் குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகள் குறையலாம். அவை என்னென்ன வழிமுறைகள் என்பதையும் பார்ப்போம்.
தொடக்கப்பள்ளியிலேயே கொடுக்கப்படும் பயிற்சிஎந்த பயிற்சியும் தொடக்கப்பள்ளி வயதிலேயே கொடுக்கும்பொழுது அது ஆழமாக மனதில் பதியும். பொதுவாக ஒரு குழந்தைக்கு அவர்கள் மீதான பயிற்சியை வழங்கும்பொழுது அவர்கள் வளர்ந்து பெரியவர்களாக மாறிய பிறகும் அது மனதில் நீங்காமல் இருந்து மற்ற குழந்தைகளை துன்புறுத்தக்கூடாது என்கிற எண்ணத்தை உருவாக்கும்.
அதாவது முளையிலேயே நல்ல மரமாக வளர உதவுவது. குழந்தைகளுக்கு வாய் வழியாக அல்லது எழுத்துபூர்வமாக கொடுக்கும் பயிற்சியை விட செயல் விளக்கம்தான் ஏற்றது. அவர்களுக்குப் பிடித்த பொம்மைகளைக் கொண்டு தொடுதல் குறித்த( Good Touch & Bad Touch) பயிற்சியை வழங்கலாம். வயதுக்கு ஏற்ப கார்ட்டூன் வீடியோ ஆதாரங்கள் மூலமும் பயிற்சிகள் கொடுக்கலாம்.
உடலின் எந்த பாகத்தை தொடுவது நல்லது, எதைத் தொட்டால் பெரியவர்களிடம் அல்லது நம்பிக்கையானவர்களிடம் சொல்ல வேண்டும் என்கிற பயிற்சி. யாரிடம் சொல்ல வேண்டும், எப்போது சொல்ல வேண்டும், உண்மையாகவே நம்பிக்கைக்குரிய வீட்டு பெரியவர்கள் யார்... இவற்றையெல்லாம் குழந்தைகளுக்குப் பயிற்சியாக கொடுக்கலாம். தனக்கு எது நடந்தாலும் முதலில் அமைதியாக இருக்கக்கூடாது என்கிற பயிற்சி அவசியம்.
அவர்களுக்கு யாரோ ஒருவரால் பிடிக்காத சம்பவங்கள் அசௌகர்யமான தருணங்கள் நடந்தால் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். யாராவது அவர்களை மிரட்டுகிறார்களா, இந்த ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது என எச்சரித்து வருகிறார்களா போன்ற உண்மைகளையும் தெரிவிக்க பயிற்சி கொடுக்கலாம். பெற்றோர்களுக்கான பயிற்சி
குழந்தைகள் முன்பு என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம், எதை அவர்களுக்குப் போதிக்கிறோம் உள்ளிட்ட அனைத்திலும் கவனமாக இருக்கும் பயிற்சி. குழந்தைகள் யாரிடம் அதிகம் பேசுகிறார்கள், வீட்டு பெரியவர்கள் தவிர்த்து வெளியில் அவர்களுக்கு பழக்கமாகும் பெரியவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன உள்ளிட்ட கண்காணிப்பு அவசியம்.
இன்று பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்வதால் வீட்டில் குழந்தைகளைக் கவனிக்க பணியாளர்களை அமர்த்துவதுண்டு அல்லது டே கேர் போன்ற மையங்களில் குழந்தைகளை விட்டுவிட்டு செல்வதும் நிகழ்கிறது. பணியாளர்கள் தேர்வு மற்றும் டே கேர் தேர்வு இவற்றிலும் பின்னணி விவரங்களை அறிந்து குழந்தைகளை ஒப்படைப்பது அவசியம். குழந்தைகளின் நண்பர்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், ஆன்லைனில் அவர்கள் எதை அதிகம் பார்க்கிறார்கள், சமூக வலைத்தளச் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றையும் தொடர்ந்து கண்காணிப்பது மிக அவசியம். குறிப்பாக சாதாரணமாக இருந்த குழந்தை ஏதாவது விசித்திரமாக அல்லது வித்தியாசமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறதா, குடும்பத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறதா, எந்நேரமும் ஏதாவது ஒரு சிந்தனையில் அல்லது சோகமான மனநிலையில் குழந்தைகள் இருக்கிறார்களா என கவனிப்பது அவசியம்.
உங்கள் குழந்தைகளின் நண்பர்கள் அவர்களின் வயதில் அல்லது சிறுவர்களாக இருந்தாலும் அவர்களையும் சந்தேகித்துப் பின்னணி விவரங்கள் மற்றும் குடும்ப விவரங்களையும் கவனியுங்கள். ஏனெனில் ஏதோ ஒரு பெரியவர் அல்லது ஒரு கூட்டம் சிறுவர்களை வைத்து உங்கள் குழந்தைகளைக் குழப்பும் செயல்களையும் செய்து வரலாம். ஒருவேளை அந்தக் குழந்தையும் அவர்கள் பிடியில் சிக்கி இருக்கலாம். இப்படியான கண்காணிப்பில் உங்கள் குழந்தை மற்றும் அவர்களுடன் பழகும் குழந்தையின் பாதுகாப்பும் சேர்ந்து உறுதி செய்யப்படும்.
பொதுமக்களுக்கான பயிற்சி
அரசாங்கமும் சட்டமும் ஒன்றிணைந்து குழந்தைகளின் முக்கியத்துவம் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை குறித்த விளம்பரங்களை அதிகரிக்கலாம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரச்சாரங்கள், சிறப்புப் பயிற்சி முகாம்களை நடத்தலாம். திரையரங்குகள், சலூன், மால்கள் இவற்றில் அரசு சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்களை ஒளிபரப்பலாம்.
இவை தவிர ஏதேனும் ஒரு குழந்தை உங்கள் முன்பு விசித்திரமாகக் காணப்பட்டால் அல்லது சோகமான மனநிலையில் இருந்தால் உடனடியாக அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்ன பிரச்சனை, யாரேனும் அவர்களை மிரட்டுகிறார்களா என கண்டறிய முயற்சி செய்யலாம்.
உங்கள் முன்பு ஏதோ ஒரு குழந்தை வித்தியாசமான அறிகுறிகளை காட்டுகிறார்களா அல்லது தான் ஆபத்தில் இருப்பதாக உணர்த்துகிறார்களா என கண்காணித்து நீங்கள் தனியாக செயல்பட்டால் ஆபத்து என்கிற பட்சத்தில் காவல்துறை உதவியை நாடலாம்.இப்படி மூன்று விதமான பயிற்சிகளைப் பேராசிரியர் ஜென்னி நோல் வழங்கியிருக்கிறார்.
ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் பெற்றோர்கள் இது குறித்து தமது குழந்தைகளிடம் வெளிப்படையாக பேசவே தயக்கம் காட்டுகிறார்கள். வளர்ந்த குழந்தைகளிடமே பாலியல் துன்புறுத்தல், பாலியல் சார்ந்த பிரச்சினைகள் குறித்துப் பேச யோசிக்கும் சூழலில் இதை எப்படி இங்கே பின்பற்ற முடியும்.
இந்தியா போன்ற நாட்டில் இந்த பயிற்சிகளை எப்படி செயல்படுத்தலாம் என விளக்குகிறார் எஸ். வந்தனா ( Clinical Psychologist, Counselling Psychologist)‘‘பேராசிரியர் ஜென்னி நோல் ஆய்வறிக்கை நிச்சயம் எல்லா நாடுகளும் பின்பற்ற வேண்டிய மற்றும் பின்பற்றக்கூடிய வகையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் குழந்தைகளின் மீதான வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் அடிப்படையில் பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால், இருபதில் ஒரு ஆண் குழந்தையும் இந்தப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
பெண் குழந்தைகள் ஓரளவிற்கு குடும்பத்தில் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதால் குற்றவாளிகளின் சுலபமான டார்கெட் ஆண் குழந்தைகள் என்கிற பட்சத்தில் அவர்கள் மிகச் சுலபமாக இந்தப் பிரச்சனையில் மாட்டிக்கொள்வார்கள். இந்தப் பிரச்சனை பள்ளியில் மட்டுமல்ல, கல்லூரிகளிலும் நடக்கிறது.
ராகிங், சக மாணவர்களின் கிண்டல், கேலி, கல்லூரியின் கவனக்குறைவால் நடக்கும் மாணவர்கள் செயல்பாடுகள் காரணமாகவும் பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். என்னுடைய பெற்றோர்களே எனக்கு எது சரியான தொடுதல், எது தவறான தொடுதல் என எனக்கு பயிற்சி கொடுத்ததில்லை. பெரும்பாலும் இந்தியப் பெற்றோர்கள் இது குறித்து தன் பிள்ளைகளிடம் பேச யோசிப்பார்கள்.
ஜென்னியின் மிக முக்கியமான ஒரு ஆலோசனை பொம்மைகளைக் கொண்டு குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுப்பது. சாதாரணமாகஒரு விஷயத்தை எடுத்துச்சொல்வதை விட பொம்மைகளைக் கொண்டு குழந்தைகளுக்கு மிகச் சுலபமாக பயிற்சி கொடுக்க முடியும். மேலும் அவர்களின் கவனத்தையும் சுலபமாக ஈர்க்க முடியும். இதே பயிற்சியை பெற்றோர்களும் வீட்டில் செய்யலாம்.
அதேபோல் இந்திய கல்விச் சட்டமும் இதற்குரிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பயிற்சி வகுப்புகளை உருவாக்கலாம். பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவரையும் ஒன்றிணைத்து கூட இப்படியான பயிற்சிகளை வழங்கும்பொழுது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான பிணைப்பும் அதிகரிக்கும். நன்றாக படித்துக்கொண்டிருந்த ஒரு குழந்தை திடீரென படிப்பில் கவனமின்மை, பரீட்சையில் தோல்வி போன்ற மிகப்பெரிய வித்தியாசத்தை காட்டுகிறார்கள் எனில் உடனுக்குடன் அவர்கள் மீதான கவனத்தை அதிகரிக்க வேண்டும் என்று அர்த்தம். எல்லாவற்றிற்கும் மேல் பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேச வேண்டும், குறிப்பாக அவர்களுக்கென நேரம் ஒதுக்கி குடும்பத்தாருடன் குழந்தைகள் பொழுதைக் கழிக்க நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
அப்போதுதான் என் அம்மா அல்லது என் அப்பா நான் என்ன சொன்னாலும் நம்புவார்கள், எனக்கு பாதுகாப்பு வளையமாக நிற்பார்கள் என்கிற நம்பிக்கை உண்டாகும். எதைச் சொன்னாலும் இவர்கள் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள், மாறாக என்னைத்தான் திட்டுவார்கள் என்கிற எண்ணம் குழந்தை மனதில் பதிந்துவிட்டால் அவர்களுக்கு என்ன நடந்தாலும் உங்கள் பார்வைக்குக் கொண்டுவர தயங்குவார்கள். மனம் விட்டுப் பேசி இந்த தயக்கங்களை உடைத்தால் மட்டுமே குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்க்க முடியும்.
இனிவரும் காலத்தில் நம்மைச்சுற்றி இருக்கும் மனிதர்கள் மட்டுமல்ல, அவர்களின் ஆன்லைன் மற்றும் டிஜிட்டலில் கூட இப்படியான அரக்கர்கள் ஏதோ ஒரு வழியில் குழந்தைகளைக் கட்டுப்படுத்தி, அவர்களை மன ரீதியாகவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கலாம். கண்ணுக்குத் தெரிந்த அரக்கர்களை விட, இப்படி கண்ணுக்குத் தெரியாத அரக்கர்கள் இன்னும் ஆபத்தானவர்கள்.
எனவே இனியும் அமைதி காப்பது எதிர்கால சமூகத்துக்கு சரிவராது . கல்வி நிலையங்களில் இது போன்ற பயிற்சிகளைக் கொடுப்பது மிகவும் எளிது. ஏனெனில் பெற்றோர்கள், குழந்தைகள் இருவரையும் ஒன்றிணைத்து ஒரு பயிற்சியைக் கொடுக்கும்போது இதற்கு நிச்சயம் பெற்றோர்கள் தரப்பில் ஆதரவு அதிகரிக்கும்...’’ என அழுத்தமாகச் சொல்கிறார் டாக்டர் எஸ்.வந்தனா.
ஷாலினி நியூட்டன்
|