தமிழ் சினிமா சந்திக்கும் ரிலீஸ் பிரச்னை...படம் வெளியீட்டில் என்னதான் நடக்கிறது..?



அண்மைக்காலங்களில்  இந்தத் தேதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்படும் திரைப்படங்கள் சொன்னபடி அந்த நாளில் வெளியாவதில் சிக்கல் ஏற்படுவது அதிகரித்துள்ளது.

வெளியீட்டு நாளன்று காலைக் காட்சி தொடங்கும் வரை அப்படத்துக்கான கேடிஎம் (Key Delivery Message) எனப்படும் ஒளிபரப்பு அனுமதி கிடைக்காமல் இருக்கும். 
இதனால் திரையரங்குக்காரர்கள் பதற்றத்துடனும் பரபரப்புடனும் விநியோகஸ்தர்களைத் தொடர்பு கொள்வார்கள். விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளரைத் தொடர்பு கொள்வார்கள். அவர்களோ அழைப்பை ஏற்கவியலா நிலையில் இருப்பார்கள்.

ஏன் இப்படி?

பொதுவாக ஒரு படம் வெளியாகும் முன்பு அப்படம் தயாரிப்பதற்காக வாங்கிய கடன்களை மொத்தமாகத் திருப்பிக் கொடுத்தாக வேண்டும், அப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் என அனைவருக்கும்  உரிய ஊதியத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.

வாங்கிய கடனைத் திருப்பித் தந்திருக்காவிட்டால் பணம் கொடுத்தவர் தன்னிடம் அடமானம் வைக்கப்பட்டிருக்கும் படத்தின் உரிமையைத் தரமாட்டார். தொழிலாளர்களுக்கு ஊதியம் தரவில்லையென அவர்கள் புகாரளித்தால் படத்தை வெளியிடும் இடத்தில் அதை நிறுத்திவைத்துவிடுவார்கள். இதுதான் பொதுவான நடைமுறை.

வெளியீடு தடைபடுவது ஒவ்வொரு படத்துக்கும் மாறுபடும்.படத்தின் வியாபாரம் நல்லபடியாக முடிந்திருந்தாலும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கடைசிநேரத்தில் பணம் கொடுக்க முடியாமல் போவது, ஒரே விநியோகப் பகுதிக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் தயாரிப்பாளர்கள் பணம் வாங்கிவிடுவது, படத்தின் செலவை அதிகப்படுத்திவிட்டார்கள் என்பதால் கடைசி நேரத்தில் பேசிய சம்பளத்தைத் தராமல் விடுவது, கதாநாயகனின் சந்தை மதிப்பை நம்பி செலவு செய்துவிடுவது; ஆனால், படம் வெளியாகும் நேரத்தில் அவர் மதிப்பு குறைந்துவிடுவது.இப்படி படத்துக்குப் படம் மாறுபட்ட பல்வேறு சிக்கல்கள் வரும்.

ஒரு சில தயாரிப்பாளர்கள், முந்தைய படங்களில் ஏற்பட்ட நட்டத் தொகையை இந்தப் படத்தில் சரிசெய்துவிடுகிறேன் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், படத்தின் வியாபாரம் மூலம் கிடைத்த தொகையில் இந்தப்படத்தை வெளியிடத்தான் முடியும், பழையதைத் தரவியலாது என்று சொல்வார்கள். அதனால் முந்தைய படத்தில் நட்டமடைந்த விநியோகஸ்தர்கள் அப்படத்துக்குத் தடை விதிப்பதும் உண்டு.

அதேபோல் முன்தொகையாகப் பெரிய பணம் கொடுத்து படங்களைத் திரையிடும் திரையரங்குக்காரர்கள், அத்தொகையை ஈடுகட்டும் அளவுக்கு வசூல் வரவில்லையெனில் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்பார்கள். 

அதைப் பேசியபடி திருப்பித் தராவிட்டால் குறிப்பிட்ட விநியோகஸ்தர் வெளியிடும் படத்தைத் திரையிட மாட்டோம் என்று தடைபோடுவார்கள். சில நேரங்களில் சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் உட்பட யாராலும் எந்தச் சிக்கலும் இல்லாதபோதும் விநியோகஸ்தரால் இப்படி ஒரு சிக்கல் வந்துவிடும்.

இவை எல்லாம் இயற்கையாக, அதாவது நன்றாக ஓடும் என்று நம்பி எடுக்கப்படும் படங்கள் தோல்வியைத் தழுவுவதால் ஏற்படும் சிக்கல்கள்.

சில செயற்கையான சிக்கல்களும் அவ்வப்போது உண்டாக்கப்படுவதுண்டு.படம் எடுக்கும்போதே இந்தப் படத்தின் செலவுக்கு ஏற்ற வியாபாரம் இருக்காது என்று தெரிந்தே எடுப்பார்கள். 

அப்படம் வெளியாகும் நேரத்தில் பணம் இல்லை என்கிற காரணத்தைச் சொல்லி நடிகர்களின் சம்பளத்தைத் திரும்பப் பெறுவது, கடன் கொடுத்தவர்களிடம் வட்டியை மொத்தமாகத் தள்ளுபடி செய்யக் கேட்பது, முடிந்தால் அசலிலும் குறைக்கச் சொல்லிக் கேட்பது என்பதெல்லாம் நடக்கும்.

இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும் நேரங்களில் தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு சம்பந்தப்பட்ட படத்தின் சிக்கல்களைப் பட்டியலிட்டு அது தொடர்பானவர்களுடன் சமரசம் பேசி படம் வெளியாக உதவி செய்வார்கள்.சில படங்களில் அப்படத்தின் நாயகனே களமிறங்கி படத்தை வெளியிட முயற்சி எடுப்பார். 

தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து அல்லது குறைத்துக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி அவர்களுக்குத் தேவை பணமோ அல்லது அவர் நடிப்பில் ஒரு படமோ தருவதாக ஒப்புக்கொண்டு படத்தை வெளியிடத் துணை புரிவார்கள். இப்படித்தான் பல படங்கள் வெளியாகின்றன. சில படங்கள் வெளியாக முடியாமல் முடங்கிக்கிடக்கின்றன. இந்த சிக்கல்கள் குறித்து இத்துறையைச் சார்ந்தவர்களின் பதில்கள்:

எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பாளர்

சினிமாவைப் பொறுத்தவரை எல்லாமே முதலீடு சம்பந்தமான பிரச்சனைகள். இங்கு சொந்த பணத்தை முதலீடு செய்து படம் தயாரிக்கும் கம்பெனிகள் ஓரிரு கம்பெனிகள் மட்டுமே உள்ளது. மற்ற நிறுவனங்கள் வட்டிக்குப் பணம் வாங்கி, படம் தயாரிக்கிறார்கள். ‘காஸ்ட் ஆஃப் மணி’ என்று சொல்வார்கள். அதாவது படத்தோட வேலைகள் அதிகமாக, அதிகமாக காஸ்ட் ஆஃப் மணி அதிகரிக்க ஆரம்பிக்கும்.

 சில சமயங்களில் பிசினஸ் முழுமையாக நடக்காத சூழ்நிலை, பிசினஸைத் தாண்டி ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்கள் காஸ்ட் அதிகமாகுதல் என பல காரணங்களால் பிரச்சனைகள் ஏற்படும். அந்த மாதிரியான காலகட்டங்களில் இந்த மாதிரி பிரச்சனைகள் ஏற்படுகிறது. இங்கு ஸ்டூடியோ மாடல் என்று ஒன்றில்லை. அதாவது, ரிலீஸுக்குப் பிறகு என்ன வருமானம் வருகிறதோ அந்த வருமானத்திலிருந்து லாப, நட்ட கணக்கு பார்க்கும் முறை.

ஆனால், இங்கு ரிலீஸுக்கு முந்தைய இரவுதான் லாப, நட்ட கணக்குப் பார்த்து செட்டில்மென்ட் செய்யப்படும் முறை உள்ளது. அதில் சிக்கல் வரும்போது, அது பட வெளியீட்டைப் பாதிக்கிறது. ஸ்டூடியோ மாடல் சிஸ்டம் எப்போது வருகிறதோ அல்லது படத்துக்கான மொத்தப் பணத்தை ஏற்பாடு செய்தபிறகு படம் எப்போது தயாரிக்கப்படுகிறதோ, பேசப்பட்ட பட்ஜெட்டில் படம் எப்போது தயாரிக்கப்படுகிறதோ அல்லது பிளான் பண்ணிய பட்ஜெட்டுக்கு எப்போது வியாபாரம் அமைகிறதோ என எல்லாம் சேர்ந்து நடக்கும்போதுதான் ரிலீஸ் பிரச்சனையைத் தவிர்க்க முடியும்.

இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, எல்லா இண்டஸ்டிரியிலும் நடக்கக் கூடியது. இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் நேரிடும். அதை தயாரிப்பாளர்கள் சமாளித்துதான் ஆகவேண்டும்.

ஸ்ரீதர் செயலாளர், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்

ரிலீஸ் சமயத்தில் இரண்டு விஷயம் பார்க்கப்படும். ஒண்ணு பொருளாதாரப் பற்றாக்குறை. தயாரிப்பாளர் படம் வெளியாகும்போது யார், யாருக்கு செட்டில் பண்ணணும் என்ற கணக்கும், எந்தெந்த இடங்களில் இருந்து பணம் வர வேண்டும் என்ற கணக்கும் வைத்திருப்பார். 

தமிழ்நாடு தியேட்டரிக்கல், ஆந்திரா தியேட்டரிக்கல், கேரளா தியேட்டரிக்கல், இந்தி ரைட்ஸ், வெளிநாடு உரிமம், சேட்டிலைட் அண்ட் டிஜிட்டல் உரிமம், ஆடியோ உரிமம் போன்றவை ஒரு படத்துக்கான முக்கிய வியாபாரமாகப் பார்க்கப்படுகிறது.

இதில் எதாவது ஒரு வருவாய் தாமதமாகும்போது அந்த வருவாயை நம்பியிருக்கும் தயாரிப்பாளரால் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் போய்விடும். ரிலீசுக்காக விடிய விடிய போராடுவார். அப்போது நெகடிவ் உரிமம் வைத்திருப்பவர் தயாரிப்பாளரின் நம்பகத்தன்மை சரியாக இருக்கும்போது சாதகமான முடிவு எடுப்பார். தயாரிப்பாளர் மீது நம்பிக்கை இல்லை என்றால் பாதகமான முடிவு எடுப்பார்.

இந்த நடமுறை பெயிலர் ஆகும்போது கேடிஎம் வராது. ஷோ ரத்து செய்யப்படும். சில சமயம் ரிலீஸ் ஒரு நாள் கூட தள்ளிப்போகும். அப்படியே தாமதமாக ரிலீஸ் ஆகும்போது அது படத்தோட வசூலையும் பாதிக்கும். சொன்ன தேதியில் படம் வெளியாகவில்லை என்றால் பிரபல நடிகரின் படம் திட்டமிட்டபடி வெளியாக வில்லை என்று பிரேக்கிங் நியூஸ் வரும். பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு மீண்டும் வரும்போது அதைப்பற்றி யாரும் பேசமாட்டார்கள். இதுதான் அடிப்படை பிரச்சனை.

சக்திவேலன் விநியோகஸ்தர்

தயாரிப்பாளருக்கு அவர் தயாரித்த படம் ஓவர் பட்ஜெட் ஆகும்போது அல்லது முந்தைய படத்தோட நிலுவையை கிளியர் பண்ண வேண்டிய கண்டிஷனில் இருக்கும்போது
நிதி நெருக்கடியில் இருப்பார். அவர் படம் பண்ணும்போது முதலீட்டுக்கு ஏற்ப பிசினஸ் ஆகாமல் இருப்பது, அவரால் மேற்கொண்டு செலவு செய்ய முடியாதபோது நிதி சிக்கல்களைத் தீர்க்க முடியாது.

வழக்கமாக அடுத்த படத்தில் சரி செய்து தருகிறேன் என்று பர்சனலாகப் பேசுவார்கள். அது சிலசமயம் ஏற்றுக்கொள்ளப்படும். சில சமயம் மறுக்கப்படும். நாலைந்து படங்கள் செய்கிற தயாரிப்பாளர்கள் அடுத்த படத்தில் சரி செய்கிறேன் என்று பைனான்ஸியரிடம் கிளியரன்ஸ் கேட்பர். நிதி கமிட்மெண்ட் சரியாக நடக்காதபோதுதான் சொன்னபடி ரிலீஸ் ஆவாமல் போவதற்கான சிச்சுவேஷன் ஏற்படுகிறது.

எப்படியாவது சரி செய்யலாம்னு நம்பி தேதி போடுவார். ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடி அதிகமாக இருக்கும் தயாரிப்பாளர் படத்துக்கு எதிர்பார்ப்பு நல்லாயிருக்கும்போது ரிலீஸ் சமயத்தில்தான் கிளியர் பண்ணமுடியும் என்று நம்புவார். அப்போது சில வியாபார விஷயங்கள் நடக்காதபோது ரிலீஸ் தள்ளிப்போவதை தவிர்க்க முடியாது.

முன்பு ரைட்ஸ் லேப்பில் இருக்கும். அங்கிருந்து கிளியரன்ஸ் கொடுத்தால் பிரிண்ட் வரும். முன்பு படப்பெட்டி வெளியே போய்விட்டால் படம் வெளியாகிவிடும். இப்போது கன்டன்ட் கையில் இருந்தாலும் கேடிஎம்மின் பாஸ்வேர்ட் சொன்னால்தான் ரிலீஸ் ஆகும். தயாரிப்பாளர் முடிந்தவரை ரைட்ஸ் வைத்திருப்பவரிடம் பேசிப் பார்ப்பார். அது நடக்காதபோது ரிலீஸ் தாமதம் ஏற்படுகிறது.

எஸ்.ராஜா