வேட்டைப் பறவைகள்!
கடந்த வாரம், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மக்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது. இதில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப், ஒரு லட்சம் ஏழைகளுக்கு வீடுகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் பணப்பலன் சலுகை, 40 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
 இதனுடன் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அறிவிப்புகளும் இருக்கின்றன. குறிப்பாக வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையம் ஒரு கோடி ரூபாயில் உருவாக்கப்படும் என்பது சூழலியல் ஆர்வலர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
 இந்நிலையில் வேட்டைப் பறவைகள் என்றால் என்ன? அதன் ஆராய்ச்சி மையம் ஏன் தேவை? போன்ற கேள்விகளுடன் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் மேகா சதீஷிடம் பேசினோம். ‘‘வேட்டைப் பறவைகளை ஆங்கிலத்தில் ‘ரேப்டர்ஸ்’ எனச் சொல்வார்கள். கழுகுகள், பருந்துகள், வல்லூறுகள், ஆந்தைகள் உள்ளிட்ட வேட்டையாடி உண்ணும் பறவைகளை நாம் ரேப்டர்ஸ் அல்லது வேட்டைப் பறவைகள் என்கிறோம்.

இவற்றில் சில ரேப்டர்ஸ், பறவைகளை உண்ணும். சில மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாடியும், செத்துப்போன விலங்குகளையும் இரையாக எடுத்துக்கொள்ளும்.
இவற்றில் பிணந்தின்னிப் பறவைகளும் (பாறுக் கழுகுகள்) உள்ளன. அப்படியாக இயற்கையைத் துப்புரவு செய்யும் பணிகளைச் செய்பவை இந்தப் பறவைகள். அதனால், உணவுச் சங்கிலியில் முதன்மை இடம் வகிக்கின்றன’’ என்றவர், தொடர்ந்து பேசினார்.
‘‘இயற்கையான பகுதிகளில்தான் ரேப்டர்ஸ் அதிகம் வாழும் என எல்லோரும் நினைக்கலாம். ஆனால், எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு ரேப்டரின் கணக்கு இருக்கும். அப்போதுதான் அந்த இடத்திலுள்ள பறவைகளின் கணக்கை சமநிலையில் வைக்கமுடியும்.
தமிழகத்தில் பொதுவாக காணப்படும் ரேப்டர்ஸ் எனப் பார்த்தால் கரும்பருந்து (Black kite), வைரி (Shikra), சிவப்பு பருந்து (Red kite), கூகை (Barn owl), புள்ளி ஆந்தை (Spotted owlet), விராலடிப்பான் (Osprey), பூனைப்பருந்து(Marsh Harrier) இருக்கின்றன. அரிதாக காணப்படுபவையாக எகிப்தியன் பாறுக் கழுகு (Egyptian Vulture), வெண்முதுகு பாறுக் கழுகு (White-rumped Vulture), இந்திய பாறுக் கழுகு (Long-billed Vulture), செந்தலை பாறுக் கழுகு (Red headed Vulture), வெண்மார்பு கடற்கழுகு (White bellied Sea Eagle), கருங்கொண்டை வல்லூறு (Black baza), புல்வெளிக் கழுகு (Steppe Eagle), பொரி வல்லூறு (Peregrine Falcon), அமுர் வல்லூறு (Amur Falcon) உள்ளிட்டவற்றைச் சொல்லலாம்.
சென்னையில் நிறைய வேட்டைப் பறவைகள் உள்ளன. பள்ளிக்கரணையில் எகிப்தியன் பாறுக் கழுகினை 2016ம் ஆண்டு பார்த்துள்ளனர். மார்ஷ் ஹாரியர் எனும் ரேப்டர் சதுப்புநிலத்தில் பொதுவாகக் காணப்படும்.
இதுவும் பள்ளிக்கரணையில் இருந்துள்ளது.அப்புறம், பொரி வல்லூறுவும் பள்ளிக்கரணையில் பார்த்திருக்கிறேன். இது உலகின் அதிவேகமான பறவைகளில் ஒன்று. நமக்கு ரொம்ப பரிச்சயமான பெயர் பாறுக் கழுகுகள்தான். இவை இன்றுஅழிவின் விளிம்பில் உள்ளன.
அதனால் புல்வெளியாக இருந்தாலும் சரி, தேரிக்காடாக இருந்தாலும் சரி, பழவேற்காடு போன்ற உவர்நிலப் பகுதியாக இருந்தாலும் சரி அந்தந்த இடத்திற்கு ஏற்ப ரேப்டர்ஸ் இருக்கும். இதைப் பாதுகாக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.
காரணம், ரேப்டர்ஸ் என்பது ஒரு தனி இனம் கிடையாது. அதை கவனிக்கிறோம் என்றால் நம் ஒட்டுமொத்த சூழல் அமைப்பையும் கவனிக்கிறோம் என்றே பொருள். அதாவது, ஒரு இடத்தில் இருக்கிற உயிரினங்களில் ஏதாவது சமநிலை குறைந்தது என்றால் அது ரேப்டர்ஸில் இண்டிகேட் ஆகும்.
குறிப்பாக அதன் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகும் அல்லது குறைவாகும். அதைக் கொண்டு நாம் சூழல் அமைப்பில் என்ன பிரச்னை எனக் கண்டறிய முடியும்.
அதாவது, பயோ ஆக்குமிலேஷன் எனச் சொல்வார்கள். ஒரு உயிரினம் ஏதோ ஒன்றைச் சாப்பிடுகிறது. அதில் ஒரு கெமிக்கலோ அல்லது ஒரு நச்சுப்பொருளோ கலந்திருக்கிறது என்றால் அது அடுத்தடுத்து உணவுச்சங்கிலியில் சேர்ந்து கொண்டேபோய் நிறைவில் ரேப்டர்ஸில் இண்டிகேட் பண்ணும்.
காரணம், இறந்து போன விலங்குகளையோ, பறவைகளையோ ரேப்டர்ஸ் உண்ணுவதால் சூழல் அமைப்பில் உள்ள பிரச்னையை ரேப்டர்ஸ் சுட்டிக்காட்டும். நச்சு சூழலியல் பற்றி படிப்பவர்கள் ரேப்டர்ஸை ஆய்வு செய்துதான் இந்தச்சூழல் அமைப்பில் இந்த இடத்தில் பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டறிவார்கள். உதாரணத்திற்கு, டைக்ளோஃபினாக் என்ற மருந்தினை கால்நடைகளுக்குப் பயன்படுத்தியதால் அதை உண்ட பாறுக் கழுகுகள் அழிந்தது நமக்குத் தெரியும்.
அதனால் வேட்டைப் பறவைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். அதனை இதுபோன்ற ஆராய்ச்சி மையங்கள் மூலமே செய்யமுடியும். இல்லையென்றால் அவை அழிவின் பாதைக்கு போய், சூழல் அமைப்பில் மிகப்பெரிய பாதிப்பு உண்டாகும்.இதுதவிர, இன்று புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நாம் நகர்ந்து வருகிறோம்.
அமெரிக்காவில் காற்றாலைகள் எப்படி ரேப்டர்ஸ் எண்ணிக்கையைக் குறைக்கிறது என ஒரு ஆய்வு செய்துள்ளனர். காரணம், மேலே வட்டமிடும்போது இந்த காற்றாலைகளால் அதன் சர்குலேஷன் பாதிக்கப்படுகிறது எனக் கண்டறிந்துள்ளனர். நாம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்வதால் நமக்கும் இதுபோன்ற ஆய்வுகள் எல்லாம் தேவை. அதனை இந்தமாதிரி ஆராய்ச்சி மையங்களால் மட்டுமே முன்னெடுக்க முடியும் தமிழக அரசு இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கு பட்ஜெட்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பது உண்மையில் இந்தியாவே திரும்பிப் பார்க்கக்கூடிய விஷயம் என்றே சொல்ல வேண்டும். அதனாலேயே, ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பான நாங்கள் சூழலியல் பார்வையில் இருந்து இதனை வரவேற்று ஆதரிக்கிறோம்.
இப்படி நிதி ஒதுக்கும்போது இதுசார்ந்து நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். வேட்டையாடிப் பறவைகளின் வசிப்பிடங்கள் பாதுகாக்கப்படும். அப்படியாக இயற்கை பாதுகாக்கப்படும். தவிர. ஆய்வின் வழியே தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் வளம் பற்றிய நிறைய தகவல்களும் நமக்குக் கிடைக்கும்.
உணவுச்சங்கிலியில் எல்லா பறவையினங்களுக்கும் முக்கியமான இடம் இருக்கிறது. இதில் ரேப்டர்ஸ்தான் முதன்மையானது. அதனை பாதுகாத்தால் மட்டுமே சூழல் அமைப்பு பற்றிய புரிதல் நமக்குத் தெரியவரும். அதற்கு வேட்டைப் பறவைகளின் ஆய்வு மையம் மிக முக்கியம்’’ என்கிறார் மேகா சதீஷ்.
பேராச்சி கண்ணன்
|