உலகின் சிறந்த காபி!



உலகம் முழுவதும் தினமும் 100 கோடிக்கும் அதிகமானோர் காபியை அருந்துகின்றனர். அதாவது, மொத்த மக்கள் தொகையில் 12.6 சதவீதம் பேரின் முக்கிய பானமாக காபி இருக்கிறது. தினமும் சராசரியாக குறைந்தபட்சம் இரண்டு கோப்பை காபியை இவர்கள் அருந்திவிடுகின்றனர். 
வாரத்துக்கு ஒரு முறை அல்லது விருந்து நிகழ்ச்சி என்று எப்போதாவது காபி குடிப்பவர்களின் எண்ணிக்கையும் சில கோடிகளில் இருக்கும். உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் காபியில் 90 சதவீதத்தை வளர்ந்த நாடுகள் தான் உற்பத்தி செய்கின்றன. அமெரிக்காவில் மட்டுமே தினமும் காபி குடிப்பவர்களின் எண்ணிக்கை 15 கோடியைத் தாண்டும்.

இந்நிலையில் உணவு மற்றும் பயணம் சம்பந்தமான ‘டேஸ்ட் அட்லஸ்’ என்ற தளம் உலகின் தலைசிறந்த 10 காபி வகைகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. தரம், சுவை மற்றும் தனித்துவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயாராகியுள்ளது. இதில் இரண்டாம் இடத்தை இந்தியாவின் பில்டர் காபி பிடித்துள்ளதுதான் ஹைலைட்.

முதல் இடத்தில் கியூபாவின் கியூபன் எஸ்பிரஸ்ஸோ என்ற காபி உள்ளது. இரண்டாம் இடத்தில் தென்னிந்தியாவின் அடையாளங்களில் ஒன்றான பில்டர் காபியும், மூன்றாம் இடத்தில் கிரீஸ் நாட்டின் எஸ்பிரஸ்ஸோ ஃபிரெட்டோவும், நான்காம் இடத்திலும் கிரீஸின் ஃப்ரெட்டோ காப்போசினோவும் உள்ளன.

ஐந்தாவது இடத்தில் இத்தாலியின் காப்போசினோவும், ஆறாவது இடத்தில் துருக்கியின் டர்கீஷ் காபியும், ஏழாம் இடத்தில் இத்தாலியின் ரிஸ்டிரெட்டோவும், எட்டாம் இடத்தில் கிரீஸின் ஃப்ராப்பேவும், ஒன்பதாவது இடத்தில் ஜெர்மனியின் இஸ்காப்பியும், பத்தாம் இடத்தில் வியட்நாமின் வியட்நாமிஸ் ஐஸ் காப்பியும் உள்ளன.

த.சக்திவேல்