கோலிவுட்டின் அடுத்த அனிருத்!?
ஒரே ஒரு இசை ஆல்பத்தின் மூலம் பிசி மியூசிக் டைரக்டராக மாறியுள்ளார் சாய் அபயங்கர். இவருடைய முதல் ஆல்பமான ‘கட்சி சேரா’ இரு நூறு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது.அடுத்த ஆல்பமான ‘ஆச கூட’ அதே சாதனையைப் படைத்தது. லேட்டஸ்ட் ஆல்பமான ‘சித்திர புத்திரி’ வெளியான சில நாட்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடைந்தது.
 கடந்த ஆண்டு இவருடைய ‘கட்சி சேரா’ பாடல் யூடியூப் வரலாற்றில் அதிகம் தேடிய பாடலாக சாதனை படைத்தது.பாப் இசை உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வரும் சாய் அபயங்கர், இப்போது கோலிவுட் மியூசிக் டைரக்டர். ஆம்; சூர்யா, சிம்பு போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இவர்தான் இசையமைப்பாளர்.
 மிகவும் இளம் வயதிலேயே தன் திறமையை வெளிப்படுத்தியுள்ள சாய் அபயங்கர் பாரம்பரியமான இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரபல பாடகர்கள் திப்பு-ஹரிணியின் மகன் இவர். கம்போசிங்கில் பிசியாக இருந்த சாய் அபயங்கர் பிரத்யேகமாக நம்மிடம் பேசினார். ஒவ்வொரு வார்த்தையும் அளந்தெடுத்த மாதிரி இருந்தது.
 மியூசிக் டைரக்டராக வர வேண்டும் என்பதுதான் உங்கள் லட்சியமாக இருந்ததா? யாரிடம் இசை கற்றுக்கொண்டீர்கள்?

சின்ன வயசிலேயே இசை மீது நாட்டம் இருந்துச்சு. இசை அமைப்பாளராக வரவேண்டும் என்பதுதான் லட்சியமாகவும் இருந்துச்சு.என்னுடைய குருநாதர் ராம் பார்த்தசாரதி. அவரிடம் தான் வாய்ப்பாட்டு கத்துக்கிட்டேன்.
ரொம்ப கண்டிப்பானவர். அவரிடம் கற்ற இசை தான் இசை அமைப்பாளராக நான் உருவாக காரணமாக இருந்தது. ஏனெனில் இசை மீது அளவில்லாத ஆர்வத்தை தூண்டியது அவர்தான்.ஏ.டி.ராமமூர்த்தி சாரிடம் பியானோ கத்துக்கிட்டேன். மியூசிக் புரொடக்ஷனை ‘மியூசிக் போர்ட்’ ஹென்றி குருவில்லா சாரிடம் கத்துக்கிட்டேன். இப்போது நான் மியூசிக் டைரக்டராக உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் குருநாதர்களிடம் நான் கற்ற இசை, அப்பா அம்மாவின் வழிகாட்டுதல், கடவுள் அனுக்கிரகம் மட்டுமே. இதில் என்னுடைய தனிப்பட்ட சாதனை என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. உங்கள் ஆல்பங்கள் பல நூறு மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது.
அதன் வெற்றி ரகசியம் என்ன?
சாதகம் இல்லாமல் சாதனை இல்லை. சின்ன வயசுல இசைக் கருவிகளை உடனே வாசிக்கணும்னு ஆசைப்படுவேன். குருநாதர் போல் என்னால் ஏன் வாசிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருக்கும்.தேர்ந்த இசையைத் தர வேண்டும் என்றால் அதன் பின்னால் பல மணி நேர சாதகம், பயிற்சி இருக்கிறது.
அத்துடன் பொறுமை ரொம்ப அவசியம்னு தெரிஞ்சுக்கிட்டேன். அது புரியவே எனக்கு பல நாள் ஆச்சு.அப்படி என் குருமார்களிடம் கற்ற பொறுமையும், பயிற்சியும்தான் என்னை இதுவரை வழி நடத்துகிறது. இதுல வெற்றி ரகசியம்னு எதுவுமில்லை. சூர்யா படம், லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படங்களுக்கு இசை அமைத்து வருகிறீர்கள். அந்த அனுபவம் சொல்லுங்கள்?
அதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாகவும், ஸ்பெஷலாகவும் பார்க்கிறேன். ஏனெனில், இதைவிட சிறந்த அறிமுகத்தை என்னால் கனவிலும் கற்பனை செய்து பார்க்க முடியாது.
பெரிய படங்களில் வேலை செய்வது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், பெரிய பொறுப்புகள் இருப்பதையும் உணர்த்தியுள்ளது.
‘பென்ஸ்’ பட வாய்ப்பை வழங்கிய பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் சார், லோகேஷ் கனகராஜ் சார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி சார் ஆகியோருக்கு எனது நன்றி எப்போதும் இருக்கும்.‘பென்ஸ்’ படத்துக்கு இசையமைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.லோகேஷ் கனகராஜ் சாரின் படங்களுக்கு நான் ரசிகன். அவரின் யுனிவர்ஸில் இசையை உருவாக்குவது எனக்கு உண்மையிலேயே பெரிய கனவு.
சூர்யா சார், ராகவா லாரன்ஸ் சார் படங்களில் சிறந்த பாடல்கள் மற்றும் நடனத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். சிறந்த இசையை வழங்குவதற்கான எனது பொறுப்பு அதிகமாகி இருக்கிறது. இந்தப் படங்களில் வேலை செய்ய எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள் பாக்கியராஜ் கண்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருக்கு நன்றி.பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்கள் படங்களில் வேலை செய்யும்போது ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியுடன் கமர்ஷியல் சினிமாவுக்கான டெக்னிக்கல் அம்சங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது.
அப்பா, அம்மா பாடிய பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பாடல் எது?
அம்மா பாடியதில் ‘சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது’, ‘மூங்கில் தோட்டம்’, ‘நிலா காய்கிறது’, ‘தீக்குருவி’, ‘ஆலங்குயில் கூவும் ரயில்’, ‘பூக்கள் பூக்கும் தருணம்’ உட்பட் பல பாடல்கள்.
அப்பா பாடியதில் ‘ரா… ரா…’, ‘சூரத் தேங்கா அட்ரா… அட்ரா…’, ‘வெண்மதி… வெண்மதி…’, ‘மேற்கே விதைத்த சூர்யன்’ உட்பட பல பாடல்கள்.
சிம்புவின் இரண்டு படங்களுக்கு அடுத்தடுத்து இசை அமைக்கிறீர்களாமே?
சிம்பு சார் என்னுடைய இசை ஆல்பங்களைக் கேட்டு, பாராட்டியுள்ளார். என்னுடைய புகழ் பெற்ற மூன்று ஆல்பங்களைக் கேட்டதோடு மட்டுமல்ல, அதிகம் பேசப்படாமல் இருந்த ‘வலம் வரவேண்டும்’ ஆல்பத்தையும் கேட்டிருக்கிறேன் என்று சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். சிம்பு சார் படங்களுக்கான பேச்சுவார்த்தை இன்னும் முழுமையடையவில்லை. விரைவில் அப்டேட் தருகிறேன்.
திரையுலகில் நுழையும்போதே பெரும் எதிர்பார்ப்பு. எப்படி சமாளிப்பீர்கள்?
என்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து வருகிறேன். மற்றவை கடவுளின் கையில் உள்ளது.
ஒரு பாடல் உருவாக்குவதும் ஒரு படத்துக்கு இசையமைப்பதும் சமமா?
இரண்டும் வெவ்வேறு அல்ல. கிட்டத்தட்ட தனி ஆல்பத்துக்கும், சினிமாவுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. சினிமாவைப் பொறுத்தவரை பாடல்கள் மற்றும் பின்னணி இசை இயக்குநர்களின் பார்வை, கதையைப் பொறுத்து அமைந்திருக்கும். அப்படி வேலை செய்வது எனக்குப் பிடிக்கும்.
சூர்யா நடிக்கும் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பதிலாக உங்களை ஒப்பந்தம் செய்தபோது எப்படியிருந்தது?
ரஹ்மான் சார் தான் என்னுடைய குரு. அவருடைய இடத்துக்கு வேறு யாரையும் தேர்வாக வைக்க முடியாது. அவருடைய சம்மதத்தோடும், ஆசீர்வாதத்தோடும்தான் என்னுடைய பணியைத் துவங்கியுள்ளேன்.
பெரிய படங்களில் இயக்குநர், கதாநாயகன், தயாரிப்பாளர் என பல தரப்பிலிருந்தும் அழுத்தம் இருக்குமே?
கடவுள் அனுக்கிரகத்தால் சினிமா மீது பேரன்புள்ளவர்களுடன் இணைந்து வேலை செய்து வருகிறேன். அவர்கள் என்னையும், எனது திறமையையும் நம்புவதால் எந்த அழுத்தமும் இல்லாமல் வேலை செய்ய முடிகிறது.எல்லோரும் சப்போர்ட்டாக இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஷூட்டிங் போகும்போதே பாடல்களைக் கொடுக்கணும்னு நினைப்பேன். ஏனெனில், அதன் பிறகு அந்தப் பாடல்களையும், பின்னணி இசையையும் இம்ப்ரவைஸ் பண்ண முடியும்.
உங்களை குட்டி அனிருத் என்கிறார்களே?
அனிருத் அண்ணன் கடின உழைப்பு, நீண்ட பயணத்துக்குப் பிறகு புகழின் உச்சம் தொட்டுள்ளார். வித்தியாசமான இசை முலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அவருடன் என்னை இணைத்துப் பேசுவதற்கு நான் நிறைய உழைக்க வேண்டும்.
எஸ்.ராஜா
|