எந்த நாட்டில் குடியேறலாம்? ருசிகர தகவல்கள்
எந்த நாடு சிறந்த நாடு? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் எல்லோருமே தங்களுடைய தாய்நாட்டைத்தான் முதலில் சொல்வார்கள். ஏனெனில் பிறந்து, வளர்ந்த மண்ணை அவ்வளவு எளிதில் யாரும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.  ஆனால், வேலை நிமித்தமாகவும், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் இன்று பலரும் பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இதில் சட்டத்திற்குப் புறம்பாக புலம்பெயர்பவர்களின் கதை தனி.  இந்நிலையில் 2025ம் ஆண்டில் எந்த நாட்டிற்கு புலம்பெயர்வது அல்லது குடியேறுவது சிறப்பானது என்கிற பட்டியலை புலம்பெயர நினைப்பவர்களுக்காக வெளியிட்டுள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்லைனில் பணம் அனுப்பும் நிறுவனத்தை நடத்தும் ‘ரெமிட்லி’.இதில் இந்தியா உள்ளிட்ட 82 நாடுகளைக் கையிலெடுத்து, முக்கியமான 24 காரணிகளை ஆய்வுக்கு உட்படுத்தி இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளது அந்நிறுவனம்.
 அதாவது சுகாதாரப் பராமரிப்பு, பொருளாதார வலிமை, பாதுகாப்பு அளவீடுகள், டிஜிட்டல் இணைப்பு மற்றும் குடும்பங்களுக்கு ஏற்றது உள்ளிட்ட முக்கியமான காரணிகள் இதில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஹைலைட்டே, இந்த ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்புகள்தான். முதல் தலைப்பில் 2025ம் ஆண்டில் குடியேற சிறந்த நாடுகள் எவை எனப் பார்க்கப்பட்டுள்ளன.
 பிறகு இண்டர்நெட் பிராட்பேண்ட் சிறப்பாக உள்ள முதல் பத்து நாடுகள், சிறந்த சுகாதார வசதிகளைக் கொண்ட முதல் பத்து நாடுகள், புலம்பெயர்ந்த சமூகங்களைக் கொண்ட முதல் பத்து நாடுகள், பொருளாதார ரீதியாக வலுவான முதல் பத்து நாடுகள், கல்வியில் சிறந்த முதல் பத்து நாடுகள், மகிழ்ச்சியில் சிறந்த முதல் பத்து நாடுகள், சிறந்த பொதுப் போக்குவரத்து கொண்ட முதல் பத்து நாடுகள், வங்கிச் சேவையை எளிதாக அணுகும்படியான முதல் பத்து நாடுகள், காஸ்ட் ஆஃப் லிவிங்கில் முதல் பத்து நாடுகள் என எல்லாவற்றையும் அக்கு வேறு ஆணி வேறாக அடுக்கியுள்ளது அந்நிறுவனம். இதில் எந்தெந்த நாடுகள் இருக்கின்றன என்பது குறித்து கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
 குடியேற சிறந்த நாடுகள்
குடியேற அல்லது புலம்பெயர சிறந்த நாடுகள் பட்டியலில் முதலில் இருப்பது ஐஸ்லேண்ட். வடஅட்லாண்டிக் கடலில் கிரீன்லாந்து அருகே இருக்கிறது ஐஸ்லேண்ட் தீவு. சுமார் 4 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டில் வங்கிச் சேவை, மகிழ்ச்சி அளவீடு, இணைய வசதி, சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றை ஆராய்ந்ததில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. மொத்தமாக நூற்றுக்கு 58.4 மதிப்பெண்களை எடுத்துள்ளது.

மட்டுமல்ல. காலநிலை நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் சிறந்த நாடாக உள்ளது ஐஸ்லேண்ட். மின்சாரத்திற்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலைத்தான் பயன்படுத்துகிறது. இதனால், குடியேற சிறந்த நாடு எனச் சொல்லப்படுகிறது.  இதற்கடுத்தபடியாக சுவிட்சர்லாந்து 55.8 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்திலும், லக்சம்பர்க் 55.7 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்திலும், நார்வே 53.7 மதிப்பெண்களுடன் நான்காம் இடத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 52.5 மதிப்பெண்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன. இதில் இந்தியா 30.5 மதிப்பெண்களுடன் 75வது இடத்தைப் பிடித்துள்ளது. அண்டை நாடுகளான சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தானைவிடவும் இந்தியா பின்தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. சீனா 41வது இடத்திலும், பங்களாதேஷ் 68வது இடத்திலும், பாகிஸ்தான் 70வது இடத்திலும் உள்ளன.
இணைய தொடர்பில் சிறந்த நாடுகள்
இதேபோல சக்திவாய்ந்த பிராட்பேண்ட் வசதி உள்ள முதல் பத்து நாடுகளின் பட்டியலிலும் ஐஸ்லேண்டே முதலிடத்தில் உள்ளது. அங்கே சராசரியாக பிராட்பேண்டின் வேகம் 279.6 Mbps ஆக உள்ளது. உதாரணத்திற்கு 5ஜிபி உள்ள ஒரு திரைப்படத்தை டவுன்லோடு செய்ய இரண்டரை நிமிடத்திற்கும் குறைவாகவே ஆகும். இதில் அடுத்தடுத்த இடங்களில் டென்மார்க், நெதர்லாந்து, பிரான்ஸ், தென்கொரியா முறையே 210.5, 188.5, 177, 172.5 என பிராட்பேண்ட் வேகம் வைத்துள்ளன.
இதனால் புலம்பெயர்ந்தவர்கள் வீடியோ அழைப்புகள் மூலம் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்புகொள்வதும், தங்களது சக ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்களுடன் இணைவதும் எளிதாகும். தவிர, ஓய்வு நேரங்களில் கேமிங் அல்லது இணையத்தில் நேரத்தை செலவிடவோ உதவும் என்கிறது ‘ரெமிட்லி’ நிறுவன ஆய்வு. சுகாதாரத்தில் மேம்பட்ட நாடுகள்
மூன்றாவதாக சுகாதார வசதியைச் சுட்டிக் காட்டுகிறது. இது மருந்துகள் கிடைக்கும் தன்மை மற்றும் செலவு, அரசாங்கத்தின் தயார்நிலை, மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் நிபுணர்களின் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதில் தென்கொரியா 56.2 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதாவது பராமரிப்பு, உள்கட்டமைப்பு, குறைந்த செலவில் மருந்து கிடைப்பது ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. இதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா, கனடா, ஸ்வீடன், ஜெர்மனி நாடுகள் உள்ளன. அதிக புலம்பெயர்ந்த சமூகங்கள் கொண்ட நாடுகள்
நான்காவதாக புலம்பெயர்ந்த சமூகங்களை அதிக அளவில் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலிடத்தில் உள்ளது. அதாவது, புதியதாக ஒரு நாட்டிற்குச் செல்லும்போது, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலான மக்களைக் கண்டுபிடிப்பது குடியேற உதவும்.
இந்தக் காரணத்திற்காக, எந்த நாடுகளில் அதிக புலம்பெயர்ந்த சமூகங்கள் உள்ளன என்பதைக் கருத்தில் கொண்டுள்ளது இந்த ஆய்வு. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, குவைத், சவுதி அரேபியா, ஓமன் ஆகிய நாடுகளும் உள்ளன. ஃபேமிலி-ஃப்ரண்ட்லி நாடுகள்
ஐந்தாவதாக ஃபேமிலி-ஃப்ரண்ட்லி நாடுகள் என்ற வகையினையும் ‘ரெமிட்லி’ நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. அதாவது, ஒருவர் குடும்பமாக புலம்பெயர்ந்து குடியேறினால் குடும்பத்திற்கு எவ்வளவு நட்பாக இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டுள்ளனர். கூடவே குழந்தைகள் பராமரிப்பு செலவையும் மதிப்பிட்டுள்ளனர்.
இதில் இந்தியாவின் அண்டை நாடான ஸ்ரீலங்கா முதலிடத்தில் இருக்கிறது. அங்கே ஆண்டுக்கு குழந்தைப் பராமரிப்புச் செலவு என்பதுஇந்தியமதிப்பில் சுமார் 31 ஆயிரம் ரூபாய்தான் வருகிறதாம். அதனால், குடும்பத்திற்கு உகந்த நாடாக ஸ்ரீலங்கா இருக்கிறது. இதற்கடுத்த நான்கு இடங்களில் ஸ்வீடன், நார்வே, நியூசிலாந்து, ஐஸ்லேண்ட் நாடுகள் உள்ளன.
வங்கிச் சேவைக்கு சிறந்த நாடு தாய்லாந்து
மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் வழக்கம்போல பின்லாந்தும், சிறந்த போக்குவரத்தில் லக்சம்பர்க் நாடும் முதலிடங்களில் உள்ளன. வங்கிச் சேவை என்று வரும்போது முதலிடத்தில் தாய்லாந்து உள்ளது.
ஒரு நாட்டில் புதிதாகக் குடியேறும்போது வங்கிச் சேவைகளுக்கான அணுகல் எளிதாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும். தாய்லாந்து வெறும் நான்கு ஆவணங்களின் வழியே இரண்டு நாட்களுக்குள் விரைவான கணக்கு திறக்கும் செயல்முறையை வைத்துள்ளதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. பங்களாதேஷில் செலவு குறைவு
அடுத்து காஸ்ட் ஆஃப் லிவிங்கை, அதாவது வாழ்க்கைச் செலவு குறித்து கணக்கிட்டுள்ளது இந்த ஆய்வு. வருமானத்திற்குத் தகுந்த வாடகை வீடு, உணவு, செலவினங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளனர். இதன்படி பங்களாதேஷ் முதலிடத்தில் உள்ளது. அதாவது வாழ்க்கைக்கான செலவு மிகக் குறைந்த நாடாக பங்களாதேஷ் உள்ளது.
சராசரியாக ஒரு ரெஸ்டாரண்டில் மதிய உணவு விலையேஇந்தியமதிப்பில் 148 ரூபாய்தான் என்கிறது இந்த ஆய்வு. இதற்கடுத்து சவுதி அரேபியாவும், பாகிஸ்தானும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும், அமெரிக்காவும் குறைந்த வாழ்க்கைச் செலவு நாடாக மதிப்பிடப்பட்டுள்ளன. அதிக வருமானம் மற்றும் பாதுகாப்பான நாடுகள்
இதுதவிர, அதிக வருவாய் ஈட்டமுடியும் என்கிற இடத்தில் உள்ள நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. இங்கே குறைந்தபட்ச வருடாந்திர ஊதியம் இந்திய மதிப்பில் 51 லட்ச ரூபாய். இதற்கடுத்த இடங்களில் ஐஸ்லேண்ட், லக்சம்பர்க், அயர்லாந்து, நெதர்லாந்து நாடுகள் உள்ளன.
நிறைவில் புலம்பெயர்ந்தவர்களுக்குப் பாதுகாப்பான நாடுகள் என்ற வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸும், ஓமனும், ஆர்மேனியாவும், ஜப்பானும், சிங்கப்பூரும் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதன் கடுமையான சட்டங்கள் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகளால் பாதுகாப்புக்கான புகலிடமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதாக இந்த ஆய்வு சொல்கிறது. இதனையெல்லாம் அடிப்படையில் அளவீடுகளாகக் கொண்டே குடியேற சிறந்த நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது ‘ரெமிட்லி’. இதில் இந்தியா எந்த பட்டியலிலும் முதல் பத்து இடங்களுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பேராச்சி கண்ணன்
|