சினிமா இன்னும் என்னை கைவிடவில்லை...
நெகிழும் நடிகர் விக்னேஷ்
நடிக்க வந்து 35 வருடங்கள் ஆகின்றன. ஆனால், நடித்தால் ஹீரோதான், எடுத்தால் மாஸ் என்ட்ரிதான் என எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஒரு பக்கம் வில்லன் இன்னொரு புறம் குணச்சித்திர நடிகர், நாயகன்... இப்படி நடிப்புதான் பிரதானம் அது எதுவானாலும் பரவாயில்லை என ஓடிக்கொண்டிருக்கிறார் நடிகர் விக்னேஷ். சென்னையின் பிரதான சாலைகள் மற்றும் பொது இடங்களில் திடீரென தென்பட்ட பெரிய முத்தக்காட்சி போஸ்டர்கள் நம் கவனத்தை ஈர்க்க அவரை அழைத்தோம்.
 ‘ரெட் ஃபிளவர்’... தலைப்பு மற்றும் போஸ்டர் பற்றி சொல்லுங்க..?
கற்பனையாக மூன்றாம் உலகப் போருக்குப் பிறகு நடக்கும் சம்பவங்களின் தொகுப்பா இந்தக் கதை நகரும். ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரிய வல்லரசா மாறி அதற்குக் கீழே இருக்கும் நாடுகளின் மேல் அதிகமான வரி விதிக்கிறது. இந்த நேரத்தில் இரட்டை சகோதரர்கள் இராணுவத்தில் சேர விரும்புறாங்க.  அதைச் சார்ந்து நடக்கும் கதைக்களம்தான் படம். அதில் ஒரு சீக்ரெட் மிஷன் இருக்கு. அந்த சீக்ரெட் மிஷனின் பெயர்தான் ‘ரெட் ஃபிளவர்’.ஆங்... அந்த போஸ்டருக்கு பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்கு. ஹீரோயின் மனிஷா ஜஸ்னானி மும்பை வரவு. முதல் படம். ஆனா, அப்படித் தெரியாத அளவுக்கு அருமையா நடிச்சிருக்காங்க. அந்த முத்தக் காட்சியில் எனக்கு உடன்பாடே இல்லை. ஆனா, கதைக்குத் தேவை என்கிறதால் இயக்குநர் வற்புறுத்தி கேட்டார். நான் தலைமறைவா சுத்திட்டு இருக்கேன், யாருக்கு எதற்கு என்கிறதை படத்தில் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. இதற்கிடையில் ரொம்ப நாட்களாக பார்க்காமல் அன்றுதான் என் காதலியை நான் சந்திக்கிறேன். பார்த்தவுடன் எங்களுக்குள்ள பேச முடியாமல் இருவரும் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொள்கிறோம். அதுதான் அந்தக் காட்சி. 
அந்த சீன் முடிந்ததும் அவங்க மயங்கி விழுந்துட்டாங்க. அதன் பிறகு ஹாஸ்பிடலுக்கு அழைத்துப் போய் ஒரு பெரிய ஆர்ப்பாட்டமே நடந்துடுச்சு. ‘இதுதான் எனக்கு முதல் முறை சார், ஒரு மாதிரி நெர்வஸ் ஆகிட்டேன்’னு சொன்னாங்க.
‘உங்களுக்கு உடன்பாடு இல்லைனா வேண்டாம்னு சொல்லி இருக்கலாமே’னு கேட்டேன். ‘நடிக்க வந்துட்டு இப்படியெல்லாம் இருக்க முடியாது சார்... சரி முயற்சி செய்து பார்ப்போம்னு நினைச்சேன். என்னவோ திடீர்னு கண்ணைக் கட்டிடுச்சு’னு சொன்னாங்க. நீங்க டபுள் ரோல் செய்திருக்கீங்களாமே?
இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன், விஷுவல் எஃபெக்ட்சில் கைதேர்ந்தவர். இந்தப் படம் மூலமா டைரக்டரா அறிமுகமாகிறார். நான் இந்தப் படத்தில் டபுள் ஆக்ஷனில் நடிச்சிருக்கேன். நானே ஹீரோ... நானே வில்லன். 56 படங்கள் நடிச்சிருக்கேன். இதுதான் என்னுடைய முதல் டபுள் ஆக்ஷன் படம். நாசர் சார் ஒரு முக்கியமான ரோலில் நடிச்சிருக்கார். சுரேஷ் மேனன் சாருக்கு செம ஸ்டைலிஷ் கேரக்டர்.
ஜான் விஜய் ஒரு நெகட்டிவ் ரோல், ‘பில்லா’ படப் புகழ் யோக் ஜாபி, ஒய். ஜி. மகேந்திரன் சார்... இப்படி ஒரு பெரிய சீனியர் நடிகர்கள் பட்டாளம் இருக்காங்க. குறிப்பா தலைவாசல் விஜய் சார் மிக முக்கியமான கேரக்டரில் நடிச்சிருக்கார். படமும் ஜனரஞ்சகமா மிகப்பெரிய பட்ஜெட்டில் வந்திருக்கு. என்னை நம்பி இந்த பட்ஜெட் கொடுத்த தயாரிப்பாளர் மாணிக்கம் சாருக்கு நான் கடமைப்பட்டிருக்கேன்.
‘தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் எண்ணெய்க்கும்...’ இந்த டிரெண்ட் எப்படி இருக்கு?
இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்குதான் நன்றி சொல்லணும். உண்மையில் அந்தப் பாட்டு வந்த வேளையிலேயே பயங்கர ஹிட். ‘பசும்பொன்’ (1995) படத்தில் இடம் பிடித்த பாடல். அப்போவே ரேடியோ, ஏரியா திருவிழாக்கள் இப்படி எங்கேயும் கேட்டுக்கிட்டே இருக்கும்.
2004ம் ஆண்டு திரும்பவும் இந்திப் படமான ‘இஸ்க் மெய்ன் பியார் மெய்ன்’ படத்திலும் பயன்படுத்தினார் வித்யாசாகர். இப்போ ‘லியோ’ படத்தில் லோகேஷ் பயன்படுத்தியதற்குப் பிறகு இன்னமும் பெரிய ட்ரெண்டா மாறிடுச்சு. இதில் ரீல்ஸ், ஷார்ட்ஸ் கூட பார்த்தேன். சந்தோஷமா இருக்கு. அனேகமா இப்போ இருக்கிற தலைமுறை என்னை தெரிஞ்சுக்க இந்தப் பாட்டு ஒரு பெரிய அறிமுகமாகக்கூட இருக்கு. 35 வருடங்கள் சினிமா அனுபவம்... கற்றதும் பெற்றதும் என்ன?
இப்படித்தான் நடிக்கணும்... இந்த வேலைதான் செய்யணும்... இப்படி எந்த கட்டுப்பாடும் இல்லாமதான் வந்தேன். அதனால் இப்ப வரையிலுமே நடிச்சா ஹீரோ என்கிற கட்டாயம் எல்லாம் எதுவுமே கிடையாது. சினிமாதான் என்றில்லாமல் சீரியலில் கூட நடிச்சிட்டு இருக்கேன்.
ஒரே சமயத்தில் ஹீரோவாகவும் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் கூட நடிச்சிருக்கேன். என்ன... கால சூழ்நிலை காரணமா ஒரு சில முக்கியமான படங்கள் கையை விட்டுப் போனது அல்லது தவற விட்டுட்டேன். அப்படிதான் என் கரியரில் மிகப்பெரிய அறிமுகமாக இருக்க வேண்டிய ‘வண்ண வண்ண பூக்கள்’ எனக்கே தெரியாம என் கைமீறிப் போனது. தொடர்ந்து பாலா இயக்கத்தில் ‘சேது’ படத்தில் நடிக்க இருந்து அந்தப் படமும் நான் தவற விட்டுட்டேன். நிறைய அவமானங்கள், வாழ்க்கைப் பாடங்கள், நிறைய சோதனைகள்... அத்தனையும் கடந்து சினிமாவில் ஏதாவது ஒரு வகையில் என்னை வச்சிருக்கணும்னு நினைச்சுதான் இப்ப வரையிலும் ஓடிட்டு இருக்கேன்.
இடையில் ‘ஆச்சார்யா’ உட்பட ஒன்று இரண்டு படங்கள் தயாரிப்பிலும் இறங்கினேன். ஆனா, பெரிய வருவாய் வராததால் இனி தயாரிப்பு வேண்டாம் என்கிற முடிவெடுத்தேன். அதேசமயம் எனக்குன்னு ஒரு பிசினஸ் இருக்கு. அதனால் பெரிய அளவில் நான் சரிவை சந்திக்கலை. வாழ்க்கைக்கான வருமானம் அதன் மூலம் கிடைச்சுட்டு இருக்கு.
இந்தக் காலகட்டத்தில் சினிமா எப்படிப்பட்ட மாற்றங்களை சந்திச்சிருக்குன்னு நினைக்கிறீங்க?
தொழில்நுட்ப ரீதியா மிகப்பெரிய மாற்றத்தை அடைஞ்சிருக்கு. இனி யார் நடிகர்கள் என்ற கேள்வியே கிடையாது. கதை எப்படி இருக்குனு ஆடியன்ஸ் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. நல்ல கதை கொடுத்தா நிச்சயம் எந்த மெனக்கெடலும் இல்லாம படம் வெற்றி அடையும்.
பலதரப்பட்ட மொழி படங்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்புகளும் வழிகளும் இப்ப மக்களுக்கு இருக்கு. அப்ப நமக்கு போட்டி வெறும் தமிழ் சினிமா மட்டும் கிடையாது. ஒவ்வொரு வாரமும் எத்தனையோ படங்கள் வெளியாகுது. அதில் நாம தனித்துவமா தெரியணும். அதற்கு கதை நல்லா இருக்கணும். இதைத்தான் புரிஞ்சுகிட்டேன். நிறைய இழப்புகள் இருக்கு. அதே சமயம் சினிமா இன்னமும் என்னை கைவிடவில்லை என்கிற சந்தோஷமும் இருக்கு.
இடையில் ஒரு சில சர்ச்சைகள் மற்றும் ஹாஸ்டல் சார்ந்த வதந்திகள் பரவியதே..?
மேக்கப் பாய் ஒருத்தர் கூட சண்டை... அதுதான் பெரிய சர்ச்சையாகிடுச்சு. பேசி எங்களுக்குள்ள காம்ப்ரமைஸ் ஆகிட்டோம். ஹாஸ்டல் பொருத்தவரை பெண்கள் மற்றும் ஆண்கள்னு ரெண்டு பேருக்குமே தனித்தனியா ஹாஸ்டல் நடத்திட்டு இருக்கேன். சுமுகமாதான் போயிட்டு இருக்கு. அதைச் சார்ந்த ஒன்று இரண்டு வதந்திகள் வந்துச்சு. ஆனா, அது உண்மை கிடையாது. ஒருவேளை உண்மையா இருந்தா இப்போது வரை என்னால் ஹாஸ்டலை வெற்றிகரமாக நடத்திட்டு வர முடியாதே!
அடுத்தடுத்த படங்கள்..?
‘ரெட் ஃபிளவர்’ ரொம்ப நல்லா வந்திருக்கு. கதையாகவும், பட்ஜெட் ஆகவும் நல்ல தியேட்டர் அனுபவம் கொடுக்கும். இந்தப் பட வெளியீட்டுக்குப் பிறகுதான் மற்ற படங்கள் பற்றி யோசிக்கணும். ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடிச்சிட்டு இருக்கேன். அதுகுறித்து படக்குழு அறிவிப்பதுதான் சரி.
ஷாலினி நியூட்டன்
|