இசை உரிமத்தில் ஏன் இவ்வளவு குழப்பங்கள்?இசை உரிமச் சட்டங்கள் என்ன சொல்கின்றன?
செய்திச் சேனல்கள், இணைய பிரேக்கிங் என எதை எப்போது திறந்தாலும் இசை உரிமம், காப்புரிமை குறித்து யாரோ ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார் அல்லது சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இசைஞானி இளையராஜா வரை இசை உரிமத்துக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக இசைக்கலைஞர்களும், இசையமைப்பாளர்களும் காப்புரிமை என்னும் பிரச்னையை கிளப்பி வருவதை பார்க்கலாம். இந்த இசை உரிமத்துக்கான போராட்டமும் காத்திருப்பும்தான் இன்று இந்திய இசை உலகத்திற்கு வேறு ஓர் அங்கீகாரத்தை உலக அரங்கில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 
அதாவது 2022ம் ஆண்டு கணக்கின்படி ரூ.12 ஆயிரம் கோடி வருமானம் இசையால் மட்டும் கிடைத்திருக்கிறது. எனவே முறைப்படி இசை உரிமம் பெறுவதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்களும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால், இதன் முறைப்படுத்தப்பட்ட சட்டம் என்ன சொல்கிறது, உண்மையில் இசை உரிமம் என்பது என்ன, எப்படிப் பெற வேண்டும், யாருக்கு உண்மையான உரிமை உண்டு, மீண்டும் பயன்படுத்த யார் யாரிடம் கேட்க வேண்டும்... உள்ளிட்ட முழுமையான இசை காப்புரிமை குறித்த சட்ட ரீதியான தகவல்கள் கொடுக்கிறார் வழக்கறிஞரும் காப்புரிமை வழக்குகளின் நிபுணர், ஆலோசகர் மற்றும் காப்புரிமை வழக்குகளை கையாளும் KRIA Law நிறுவனருமான பரத் எம்.எஸ். இசை காப்புரிமை என்பது என்ன?
அசல் இசை அமைப்புகள் மற்றும் பதிவுகளை உருவாக்கியவர்களுக்கு சட்டபூர்வமாக வழங்கப்படும் ஒரு பாதுகாப்பு உரிமம். இது உரிமையாளருக்கு இசையைப் பயன்படுத்த, விநியோகிக்க மற்றும் பணம் சம்பாதிப்பதற்கான பிரத்யேக உரிமைகளை வழங்குகிறது.
உங்கள் பாடல் அல்லது பதிவை நீங்கள் என்ன செய்ய முடியும், உங்கள் வேலையை யார் லாபத்திற்காகப் பயன்படுத்தலாம், உங்கள் இசைக்கு நீங்கள் எவ்வாறு பணம் பெறுகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்த உங்கள் நாட்டில் இருக்கும் காப்புரிமை சட்டத்தின் படி பாதுகாப்புகளை உருவாக்கி பலன்களை பெறுவது. இசை பதிப்புரிமை மற்றும் காப்புரிமையில் உள்ள அடிப்படை அடுக்குகள் என்னென்ன?
ஒரு பாடல் உரிமத்தை இசையமைப்பாளர் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. இதில் பல அடுக்குகள் இருக்கின்றன. பாடலுக்கு இசையமைத்த இசையின் உரிமம் இசையமைப்பாளருக்கும், பாடலுக்கு வரிகள் எழுதிய பாடல் ஆசிரியருக்கு வரிகளுக்கான உரிமமும், பாடல் இசையில் மற்றும் கம்போசிங்கில் தங்களது இசையைக் கொடுத்த இசைக்கலைஞர்களுக்கும் உரிமம் உண்டு.
ஆனால், இவர்களுக்கு யார் மூலம் சம்பளம் கொடுக்கப்படுகிறதோ அவர்தான் முதல் உரிமையாளர். ஒருவேளை தனி இசைப் பாடல் அல்லது ஆல்பம் எனில் அந்த மொத்த ஆல்பத்தையும் இசையமைப்பாளர், தானே செலவு செய்து குழுவை இணைத்து உருவாக்கியிருக்கிறார் எனில் அவர் மற்ற கலைஞர்களுக்கு சம்பளம் கொடுத்து விடும் பட்சத்தில் அந்த ஆல்பம் மற்றும் பாடலுக்கு முதலாளி இசையமைப்பாளர்தான்.
அதே சமயம் ஒரு பாடலாசிரியர் தனது வரிகளுக்கு இசையமைப்பாளர் மற்றும் இசைக் கலைஞர்களை ஒன்றிணைத்து ஒரு பாடலை உருவாக்கி அவர்களுக்கு சம்பளம் கொடுத்திருந்தால் அந்தப் பாடல், பாடல் ஆசிரியருக்கு சொந்தம்.
இங்கே ஒரு பாடல் உருவாக யார் பணம் செலவு செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் முதல் உரிமை. காப்புரிமை சட்டம் இப்படித்தான் செயல்படுகிறது. அதற்கு ஆதாரமாக சம்பளம் கொடுத்த தகவல்கள், ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்தும் வைத்திருப்பது அவசியம். திரை இசை காப்புரிமையில் முழுமையான உரிமம் யாருக்கு?
திரை இசையைப் பொருத்தவரை ஒரு பாடல் உருவாக முதல் புள்ளி வைப்பவர் தயாரிப்பாளர் மட்டுமே. தயாரிப்பாளர் அந்தப் பாடலை யாருக்கு எந்த உரிமத்தில் பயன்படுத்திக் கொள்ள எப்படி விதிகளை உருவாக்கி இருக்கிறார்... யாரெல்லாம் எங்கே பயன்படுத்திக் கொள்ளலாம்... என வரையறை வைத்திருக்கிறார் என்பது அனைத்தும் அவருடைய இசை உரிமம் பெற்றிருக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யும்.
ஒருவேளை அந்தத் தயாரிப்பாளர் அனுமதி கொடுக்கும் பட்சத்தில் பாடலை உருவாக்கிய இசையமைப்பாளராகவே இருந்தாலும் அந்தத் தயாரிப்பாளர் எங்கே பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறாரோ அங்கே எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்திய காப்புரிமை சட்டம் என்ன சொல்கிறது..?
1847ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய பதிப்புரிமைச் சட்டத்தை இயற்றியது. காலப்போக்கில் அச்சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
எனவே 1914ம் ஆண்டு மத்திய சட்டசபை, பிரிட்டனில் இருந்த சட்டத்தை அடிப்படையாக வைத்து சில மாற்றங்களுடன் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. இந்த சட்டமே இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் நீடித்தது.
இந்திய பதிப்புரிமைச் சட்டம் 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1984, 1994, 1999, 2010 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது. கடைசியாக 2012ம் ஆண்டில் மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இப்போது டிஜிட்டல் மற்றும் AI தொழில் நுட்பங்களும் இசை உருவாக்கத்தில் வந்திருப்பதால் இதில் இன்னும் சில திருத்தங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக இந்த இசை உரிமத்திற்காக இசையமைப்பாளர்கள் பலரும் சொந்தம் கொண்டாடுவதும் அதற்காக சண்டையிடுவதும் என சர்ச்சைகள் நிகழ்கின்றதே..?
நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். உங்கள் கற்பனையில் ஒரு கட்டுரையோ அல்லது கதையோ உருவாகிறது. அந்தக் கற்பனையும் உருவாக்கமும் உங்களுடையதுதான்.
ஆனால், அந்தக் கட்டுரைக்குரிய சம்பளத்தை அல்லது நீங்கள் கேட்ட பணத்தை உங்கள் நிறுவனம் கொடுத்து விட்டது எனில் அந்தக் கட்டுரையும் அதற்கான அதிகாரமும் உங்கள் நிறுவனத்துக்குதான்.
இந்தக் கட்டுரையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது இங்கே எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என உங்கள் நிறுவனம் அனுமதிக்கும் பட்சத்தில் உங்களுக்கு அதில் சில உரிமைகள் கொடுக்கப்படும்.
ஆனால், அவர்கள் அனுமதியின்றி அல்லது கொடுக்கப்பட்ட அனுமதியைத் தாண்டி நீங்கள் மற்ற இடங்களில் இந்தக் கட்டுரையை பயன்படுத்த முடியாது.
அதே அடிப்படைதான் இசைக்கும். தயாரிப்பாளர் உங்களுக்கு சம்பளம் கொடுத்து அந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறார். ஒருவேளை அவர் உங்களுக்கு சில அனுமதிகளையும் உரிமைகளையும் கொடுத்து ஒப்பந்தம் செய்திருந்தால் அந்த உரிமைகளையும் அனுமதிகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இசைஞானி இளையராஜா கேட்கும் இசையுரிமம் நியாயமானதுதான். ஒருவேளை அவர் சொல்லும் பாடல்களுக்கு எல்லாம் அவரும் காப்புரிமை வைத்திருந்தால் இந்திய காப்புரிமை சட்டத்தின்படி அது செல்லுபடியானால் அவர் அந்த அடிப்படையில் அந்தப் பாடலுக்கான பலனைப் பெறலாம். அதாவது அறிவுசார் திருட்டு அல்லது அறிவுசார் சொத்துக்களை அனுமதியின்றி பயன்படுத்திய சட்டத்தின் கீழ் அவர் அதற்கான இழப்பீடு பெறலாம்.
ஒருவேளை இந்தப் பாடலுக்கான உரிமம் முழுமையும் தயாரிப்பாளர் தரப்பில் இருப்பின் இளையராஜா நிச்சயம் சொந்தம் கொண்டாட முடியாது. ஒருவேளை ஏற்கனவே அவர் உருவாக்கிய ஒரு இசையை இப்போதைய இசையமைப்பாளர் அல்லது தயாரிப்பாளர் தங்களது படத்தில் பயன்படுத்தி இருந்தால் ஒருவேளை அவர்கள் அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி பெற்றிருந்தால் இங்கே இசையமைப்பாளர் மேற்கொண்டு வாதிட வாய்ப்பில்லை.
ஏற்கனவே உருவான ஒரு பாடல், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவருமே உயிரோடு இல்லை. இப்போது அந்தப் பாடல் யாருக்கு சொந்தம்?
வாரிசுகளுக்குச் சொந்தம். இந்திய காப்புரிமை சட்டத்தின்படி தயாரிப்பாளரின் வாரிசோ அல்லது இசையமைப்பாளரின் வாரிசோ ஒருவேளை காப்புரிமை வைத்திருந்தால் யாரிடம் காப்புரிமை இருக்கிறதோ அவர்களுக்குத்தான் அந்தப் பாடல் மற்றும் பாடலால் கிடைக்கும் பலன்கள் சேரும். மறுபடியும் சொல்கிறேன் அத்தனைக்கும் ஒப்பந்த விபரம் மிகவும் முக்கியம். 2022 மற்றும் 2023ம் காலகட்டத்தில் இந்திய இசை ரூ.12,000 கோடி வருமானத்தை ஈட்டி இருக்கிறது.
எனில் இந்தக் காப்புரிமை சட்டங்கள் சீரமைக்கப்பட்டால் இன்னும் எவ்வளவு வருமானம் தோராயமாகக் கிடைக்கும்?
எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று சொல்வது கடினம். ஆனால், இன்னமும் சில இடங்களில் எவ்வித காப்புரிமை மதிப்பும் கொடுக்காமலே இசை பயன்படுத்தப் படுகிறது.
உதாரணத்திற்கு ஒரு ரெஸ்டாரண்டில் நாள் முழுக்க பயன்படுத்தப்படும் பாடல்களுக்கான வருமானத்தில் ஒரு பங்கை அந்தப் பாடலை உருவாக்கியவர்களுக்கு கொடுப்பதில்லை.
இது மட்டுமல்ல, சலூன், ஸ்பா, பார், பப், ஏன் ஒரு சில ஷாப்பிங் மால்களில் கூட இசை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதற்கான பங்கை யாரும் தருவதில்லை. உண்மையில் இசையின் உரிமையாளருக்கு எங்கு அவர்களது இசை, பாடலைப் பயன்படுத்தினாலும் அதற்கான பணம் கொடுத்துதான் ஆக வேண்டும்.
அப்படி சட்டம் கொண்டு வந்தால் காதில் விழுந்தாலே உரிமம் கோரும்படி மாறிவிடுமே?
சரி... இப்போது நீங்கள் எந்த வகையில் எல்லாம் இசையை கேட்கிறீர்கள்? ரேடியோ, Spotify, Gaana, Wings, Amazon Music , டிவி, ஓடிடி, யூடியூப் உள்ளிட்ட ஏதோ ஒரு வகையில் பாடலை கேட்கிறீர்கள் எனில் அதில் வரும் விளம்பரங்களை பார்க்கிறோம் அல்லது சப்ஸ்கிரைப் செய்கிறோம். அந்தப் பணத்தைத்தான் தங்கள் பட்டியலில் வைத்திருக்கும் இசைக்கு அந்தந்த டிஜிட்டல் சார்ந்த செயலிகள், ரேடியோக்கள் என காப்புரிமையாக கொடுக்கிறார்கள். எனவே நாமும் ஏதோ ஒரு வகையில் கேட்கும் பாடலுக்கு பணம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
காப்புரிமை சட்டத்தை முழுமையாகப் பெற்று அதன் மூலம் பலனடைய இனி எதிர்காலக் கலைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?
புகைப்படம், இசை, ஓவியம், கண்டுபிடிப்பு... இப்படி எதுவானாலும் உங்களின் கற்பனையில் உருவான அறிவுசார் சொத்து எனில் நிச்சயம் அதற்கான சரியான காப்புரிமம் பெற்று வைத்துக்கொள்வது நல்லது.
துவக்கத்திலேயே இதன் பலன்களை யார் யார் எப்படி பயன்படுத்தலாம்... அனுமதி இன்றி பெற்றால் எப்படிப்பட்ட இழப்பீடு தன்னால் பெற முடியும் உள்ளிட்ட அத்தனையும் ஒப்பந்தமாக பதிவு செய்து அங்கீகாரம் பெற்று வைத்துக் கொள்வது அவசியம். யூடியூபில் பாடல் வெளியிட்டால் கூட நீங்கள் உரிமம் பெறுவது அவசியம். இசைக்கான லேபிள் உரிமம் முறையாக இருக்கிறதா?
சிலர்தான் இன்று கிட்டத்தட்ட மாஃபியாக்களாக இருக்கிறார்கள். ஏனெனில் இந்த லேபிள் நிறுவன அதிகாரத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் எதிர்காலத் தொழில்நுட்பம் எப்படி வளரும், எதை சார்ந்து இசை உலகம் பயணிக்கும் என்பது குறித்த போதுமான அறிவு இருக்கும். இவர்களிடம் ஏதோ ஒரு தருணத்தில் தயாரிப்பாளர் அல்லது இசையமைப்பாளர் ஒரு பாடலை எந்தவித கட்டுப்பாடுகளும், ஒப்பந்தமும் இல்லாமல், வெறும் ஐந்து வருடங்கள் அல்லது 10 வருடங்கள் என காண்ட்ராக்ட் அடிப்படையில் ஓர் இசையை விற்று விட்டால்...
தற்காலிக முதலாளியாக இருப்பினும் அவர்கள் இன்று யாருக்கும் எப்படியும் விற்கலாம் என்கிற மனநிலையில் புதிதாக இசையமைக்கும் அல்லது புதிய படங்களுக்கும் கூட அப்பாடலை கொடுத்து பணம் பெற்று விடுகிறார்கள்.
அப்படித்தான் இந்த ரீமேக் மற்றும் ரீமிக்ஸ் இசை உருவாகி இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் பிரச்னையை உண்டாக்குகிறது. சம்பந்தப்பட்ட புதிய இசையமைப்பாளர் அல்லது படக்குழு நாங்கள் லேபிளுக்கு பணம் கொடுத்து விட்டோம் என்கிறார்கள்.
எனவே இனிவரும் காலங்களில் லேபிள்களுக்கு என்னென்ன அனுமதி உண்டு என ஒப்பந்தத்துடன் தயாரிப்பாளர்கள் தரப்பு அல்லது இசையமைப்பாளர் அல்லது யார் முதலாளியோ அவர் பாடல்களை விற்றால் இந்த சர்ச்சைகள் வராது.
ஷாலினி நியூட்டன்
|