சோஷியல் மீடியா வழியாக நடிகையானேன்!



மலையாளத்தில் நடிகையாக தடம் பதித்தவர் கோபிகா ரமேஷ். இப்போது ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். ஏற்கனவே இவர் ‘சுழல்’ வெப் தொடரில் நடித்தது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். 
புரோமோஷனுக்காக சென்னை வந்தவரிடம் நேரில் சந்தித்துப் பேசினோம். குறுகிய காலத்தில் தனக்கு வாய்ப்புகள் அளித்த இயக்குநர்களுக்கும், ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் நன்றியுள்ளவராக இருக்கிறார் என்பது  அவருடைய உரையாடலில் தெரிந்தது.

யார் இந்த கோபிகா ரமேஷ்?

சொந்த ஊர் கோட்டயம் மாவட்டம், வைக்கம். படிச்சது ஃபேஷன் டிசைனிங். ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போதுதான் சினிமா மீது ஆசை வந்துச்சு. எனக்கு சினிமா பேக்ரவுண்ட் எதுவும் கிடையாது. அதனால் எப்படி அந்தத் துறைக்குள் போவது என்று தெரியாமல் இருந்தேன்.அந்தச் சமயத்தில் சோஷியல் மீடியாவில் சில காஸ்டிங் கால் வந்தது. அதைப் பார்த்து ஏன் நடிக்கப்போகக் கூடாது என்றெல்லாம் எனக்குள் கேள்வி வரும்.

வீட்டைப் பொறுத்தவரை படிக்கிற சமயத்துல படிப்பில் மட்டுமே கவனம் இருக்கணும்னு படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார்கள்.ஒரு கட்டத்தில் எனக்கு நானே தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு வீட்டுக்குத் தெரியாமல் ஆடிஷன்களில் கலந்துக்க ஆரம்பிச்சேன். 
அப்போதுதான் சினிமா சான்ஸ் என்பது அவ்வளவு சுலபம் இல்லைன்னு நினைச்சேன். பல முறை என்னை ரிஜக்ட் பண்ணினார்கள்.‘முகம் சின்னதா இருக்கு, உயரம் குறைவு’ன்னு பல காரணங்களைச் சொல்லி திருப்பி அனுப்பினார்கள். அந்தச் சமயத்துல நான் எடுத்த அத்தனை முயற்சியும் ஃபெயிலர் ஆனதால காலேஜ் கன்டினியூ பண்ணலாம்னு படிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.

அப்போது எதிர்பாராதவிதமா ‘தண்ணீர் மதன் தினங்கள்’ பட வாய்ப்பு வந்துச்சு. தொடர்ந்து மலையாளத்துல பல பட வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால், அந்த வாய்ப்புகள் அவ்வளவு எளிதில் கிடைச்சதுன்னு சொல்ல முடியாது.

சினிமாவுக்கு வரணும்னு நினைக்கிற எல்லோரும் என்னவெல்லாம் போராட்டங்களையும், பின்னடைவுகளையும் சந்திப்பார்களோ அதையெல்லாம் நானும் சந்திச்சேன். பட வாய்ப்புக்காக காத்திருக்கும் காலகட்டம் என்பது மிகுந்த கடினம்.

மீண்டும் தமிழில் நடித்த ‘ஸ்வீட் ஹார்ட்’ அனுபவம் எப்படி?

‘சூழல்’ வெப் சீரீஸ்தான் என்னுடைய முதல் தமிழ் சினிமா அனுபவம். இப்போது மீண்டும் தமிழில் நடிப்பது மகிழ்ச்சி. டீமைப் பொறுத்தவரை எல்லோரும் பழகுவதற்கு இனிமையானவர்கள். 

மறக்க முடியாதளவுக்கு எல்லோருடைய நட்பும் இருந்துச்சு. உதவி இயக்குநர்கள் தொடங்கி மொத்த யூனிட்டும் என் மீது தனி அன்பு செலுத்தினார்கள். ஷூட்டிங் போவதற்கு முன் ரிகர்சல் நடந்துச்சு. அதனால் படப்பிடிப்பில் எல்லோரிடமும் தயக்கமில்லாமல் பேசவும், பழகவும் முடிஞ்சது.

இப்போது படமும் வெளியாகிவிட்டது. ஆனாலும் என்னால் படப்பிடிப்பு நாட்களை மறக்க முடியவில்லை. படம் பார்த்துவிட்டு மனு கேரக்டர் நல்லா இருந்துச்சுன்னு சொன்னாங்க. அதை என்னுடைய திறமைக்கான அங்கீகாரமா பார்க்கிறேன்.

‘சூழல்’ வெப் சீரீஸ்ல நடிச்சது ஞாபகம் இருக்கிறதா?

என்ன அப்படி சொல்லிட்டீங்க! சினிமா பழகுவதற்கு அந்த அனுபவம்தான் எனக்கு கை கொடுத்துச்சு. என்னுடைய மலையாளப் படத்தைப் பார்த்துவிட்டுதான் ‘சூழல்’ வாய்ப்பு
வந்துச்சு. மொத்தம் மூன்று வருட பயணம் அது. ‘சூழல்’ மாதிரி வெப் சீரீஸில் பல்வேறு திறமையான நடிகர், நடிகைகளுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு என்பது என்னைப்போன்ற வளர்ந்து வரும் நடிகைகளுக்கு மிகப் பெரிய வாய்ப்பு.

அந்த சீரீஸில் சினிமாவைப் பற்றி பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். குறிப்பாக பார்த்திபன் சாரின் மகளாக நடித்தது கிரேட் எக்ஸ்பீரியன்ஸ். என்னைப் போன்ற புதுமுகத்துக்கு லெஜண்ட் ஆர்ட்டிஸ்ட்டான அவருடன் சேர்ந்து நடிக்கும் அனுபவம் அற்புதமானது. 

படப்பிடிப்புத் தளத்தில் என்னுடைய வேலையே அவரிடம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று அவரையே கவனித்துக் கொண்டிருப்பேன். கேரக்டரை ஆர்ட்டிஸ்ட் சைட்ல இருந்து எப்படி இம்ப்ரவைஸ் பண்ணமுடியும் என்று பார்த்திபன் சாரிடமிருந்து கத்துக்கிட்டேன். படப்பிடிப்பு சமயத்தில் தினமும் அவர் எனக்காக சாக்லெட் வாங்கி வருவார்.

பிறமொழிகளில் நடிக்கும்போது உள்ளூர் மொழி தடையாக உள்ளதா?

ஆர்ட்டிஸ்ட்டுக்கு மொழி தடையாக இருக்க முடியாது என்பது என்னுடைய நம்பிக்கை. மொழி என்பது கம்யூனிகேஷன் தேவைக்காக மட்டுமே. மற்றபடி பிற மொழிகளில் நடிக்க உள்ளூர் மொழிகளை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. உதாரணத்துக்கு, நிறைய சர்வதேச படங்களைப் பார்க்கிறோம். 

அந்தப் படங்களை சப் டைட்டில் இல்லாமலேயே அந்தப் படம் சொல்ல வருகிற விஷயத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.கதை மாந்தர்களின் உணர்வுகளை நம் வாழ்க்கையோடு கனெக்ட் செய்துகொள்ள முடியும். அந்த வகையில் கலைஞர்களுக்கு உள்ளூர் மொழிகள் தெரிந்தால் மட்டுமே நடிக்க முடியும் என்று எந்த தேவையும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆடியன்ஸை கனெக்ட் பண்ணக்கூடிய அளவுக்கு திறமை இருக்கிறதா என்பதுதான் கேள்வி. அதுக்காக உள்ளூர் மொழியை கத்துக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லமாட்டேன். அது கலைஞர்களைப் பொறுத்தவரை கூடுதல் பலம். பிற மொழிகளைக் கற்றுக்கொள்வதில் எனக்கு தனிப்பட்ட விதத்தில் ஆர்வம் உண்டு. அப்படித்தான் தமிழ் சினிமாவுக்காக தமிழ் கத்துக்கிட்டேன்.

விஷ் லிஸ்ட்ல உள்ள இயக்குநர்கள் யார்?

என்னுடைய விஷ் லிஸ்ட்ல நிறைய டைரக்டர்ஸ் இருக்கிறார்கள். நான் நடித்த மலையாளப் படங்களின் இயக்குநர்களுடன் மீண்டும் ஒர்க் பண்ண ஆசையாக இருக்கிறேன்.
தமிழில் இயக்குநர்கள் வெற்றிமாறன் சார், பிரேம் குமார் சார், பா.இரஞ்சித், மணிகண்டன் சார்,  சுதா கொங்கரா மேடம் என எல்லோருடனும் ஒர்க் பண்ண ஆசையா இருக்கிறேன்.

மற்ற மொழிகளை ஒப்பி டும்போது தமிழ் சினிமா அதிக புகழ் வெளிச்சத்தை தருகிறது என்று நம்புகிறீர்களா?

ஆமா. தமிழ் சினிமாவும், தமிழ் ரசிகர்களும் நான் இதுவரை பார்க்காத அன்பையும் ஆதரவையும் கொடுத்து வருகிறார்கள். அதே சமயம் மலையாள ரசிகர்களுக்கு என்னால் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. 

ஏனெனில், அவர்களால்தான் நான் தமிழில் படங்கள் பண்ண ஆரம்பித்துள்ளேன். நல்ல படங்கள் பண்ணும்போது மலையாள ரசிகர்களிடமிருந்து நிச்சயம் பாராட்டு எதிர்பார்க்கலாம். அந்த வகையில் என்னை நடிகையாக ஏற்றுக்கொண்ட தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களுக்கு எப்போதும் என்னுடைய நன்றி இருக்கும்.

உங்களை அதிகம் பாதிச்ச நடிகை யார்?

சினிமாவுக்கு வருவதற்கு முன் யாரும் இன்ஸ்பிரேஷனாக இருந்ததில்லை. சினிமாவுக்கு வந்தபிறகு பல ஆளுமைகளை கவனிக்க ஆரம்பித்துள்ளேன். தற்போது ஊர்வசி மேடம் என்னுடைய மாபெரும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். காட்சிக்குத் தகுந்த மாதிரி அவர் வெளிப்படுத்தும் பெர்ஃபாமன்ஸ் அருமையாக இருக்கும். அவர் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

எஸ்.ராஜா