வெளிநாட்டுக் கல்வி மோகம் இந்தியாவில் குறைந்திருக்கிறதா..?
திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது தமிழர்களின் முதுமொழி. திரவியம் என்பது வெறும் பணமும் பொன்னும் அல்ல. கல்வியைக் கூட தமிழர்கள் கல்விச் செல்வம் என்றுதான் அழைத்தனர்; அழைக்கின்றனர். 
அப்படி கல்விச் செல்வத்துக்காக தமிழர்கள் மட்டுமல்லாது இந்தியர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீத்தினர் வெளிநாடுகளுக்கு படையெடுத்துச் செல்வது வழக்கம். வெளிநாடுகளில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் பயில வேண்டும் என்பதற்காகவே பள்ளிக்காலம் முதல் தங்கள் உழைப்பைச் செலுத்தி வரும் பிள்ளைகளை காலம் காலமாக பார்த்து வருகிறோம்.
அப்படியிருக்க அண்மைக்காலமாக வெளிநாடுகளில் கல்வி கற்கும் ஆசை - லட்சியம் - மோகம் குறைந்து வருவதாக ஒன்றிய அரசின் ஒரு துறையே குறிப்பிடுகிறது.
ஒன்றிய அரசின் கல்விக்கான அமைச்சகம் அண்மையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளிக்கையில் 2024ம் ஆண்டில் எத்தனை இந்தியர்கள் வெளிநாட்டுக்கு படிக்கச் சென்றனர் என்ற புள்ளிவிவரத்தைக் கொடுத்திருந்தது.
 அந்த டேட்டாதான் இப்பொழுது பேசுபொருளாகியிருக்கிறது. அந்தப் புள்ளிவிவரம் என்ன சொல்கிறது?
 ‘2024ம் ஆண்டு நிலவரப்படி, 2023ம் ஆண்டைவிட இந்தியர்கள் வெளிநாட்டுக்குக் கல்விக்காக போவது 15.1 சதவீதம் குறைந்திருக்கிறது... கல்விக்காக அதிகம் புலம்பெயர்ந்த நாடான கனடாவுக்கு செல்வது இந்த ஆண்டில் - அதாவது 2024ல் - சுமார் 41 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆனால், ரஷிய நாட்டுக்கு செல்வது 2024ல் 33.7 சதவீதம் அதிகரித்திருக்கிறது’ எனச் சொல்லும் ஒன்றிய அரசின் கல்விக்கான அமைச்சகம், கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை இந்தியர்கள் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்றனர் என்ற விவரத்தையும் கொடுக்கிறது.

‘2022ம் ஆண்டு 7 லட்சத்து 50 ஆயிரத்து 365 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றார்கள். இதுவே 2023ல் 8 லட்சத்து 92 ஆயிரத்து 989 ஆக அதிகரித்தது. ஆனால், கடந்த வருடம், அதாவது 2024ம் ஆண்டில் மீண்டும் 7 லட்சத்து 59 ஆயிரத்து 64 ஆக குறைந்துபோனது.
2023ம் ஆண்டில் 8 லட்சத்து சொச்சம் மாணவர்களில் இருந்து 2024ம் ஆண்டில் 7 லட்சத்து சொச்சம் மாணவர்களாக குறைந்துபோனது 15 சதவீத வீழ்ச்சியைக் காண்பிக்கிறது’ எனச் சொல்லும் அமைச்சகம், என்னென்ன நாடுகளில் இந்த வீழ்ச்சி இருந்தது எனவும் பட்டியலிடுகிறது.
‘2023ல் கனடாவுக்கு சென்ற இந்திய மாணவர்கள் 2,33,532. இதுவே 2024ல் 1,37,608 ஆக குறைந்தது. 2023ம் ஆண்டில் அமெரிக்கா சென்ற மாணவர்கள் 2,34,473. இது கடந்த வருடம் 2,04,058 ஆக குறைந்தது. 2023ல் இங்கிலாந்துக்கு சென்றவர்கள் 1,36,921.
இது 2024ல் 98,890 ஆக குறைந்தது. 2023ல் ஆஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் 78,093. இது 2024ல் 68,572 ஆக குறைந்தது.
2023ல் சீனாவுக்கு சென்றவர்கள் 7,279. இது கடந்த வருடம் 4,978 ஆக குறைந்தது’ எனச் சொல்லும் அமைச்சகம் இந்தக் காலக்கட்டங்களில் வேறு சில நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் போவது அதிகரித்திருப்பதாகவே சொல்கிறது.
2022 ல் ரஷியாவுக்கு சென்ற மாணவர்கள் 19,784. இது 2023ல் 23,503 ஆக அதிகரித்து 2024ல் மேலும் 31,444 ஆக உச்சத்தைத் தொட்டது. ஃபிரான்சை பொறுத்தளவில் 2022ல் 6,406. 2023ல் 7,484. 2024ல் 8,536 என அதிகரித்திருக்கிறது. ஜெர்மனியைப் பொறுத்தளவில் 2022ல் 20,684. 2023ல் 23,296. 2024ல் 34,702 என உயர்ந்திருக்கிறது. நியூசிலாந்தைப் பொறுத்தளவில் 2022ல் 1,605. 2024ல் 8,101 என எகிறியிருக்கிறது.
வெளிநாட்டில் கல்வி கற்கப் போகும் மாணவர்களின் வீழ்ச்சி, பாரம்பரியமாக படிக்கப் போகும் நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் போவது குறைந்திருப்பது, அதேநேரம் புதிய நாடுகளுக்குச் செல்வது அதிகரித்திருப்பது தொடர்பாக சென்னையில் இயங்கும் கல்வியாளர்களைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.
கேலக்சி அகாடமி எனும் வெளிநாட்டுக் கல்வி தொடர்பான ஆலோனை நிறுவனத் தலைவர் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம், ‘‘வெளிநாடுகளில் படிக்கப் போகும் மாணவர்களின் வீழ்ச்சி நிஜத்தில் கனடாவிலிருந்தே ஆரம்பிக்கிறது...’’ என்கிறார். ‘‘கனடாவுக்குப் படிக்க எனச் சொல்லிக்கொண்டு போன இந்திய மாணவர்களில் சிலர் 2023ம் ஆண்டு ஒரு சிறிய படகில் ஏறிக்கொண்டு அமெரிக்காவுக்குள் நுழைய முற்பட்டபோது கடலில் போட் கவிழ்ந்து தத்தளிக்க நேர்ந்தது. அப்போது கனடா மற்றும் அமெரிக்க கடற்படை வீரர்கள் அந்த மாணவர்களிடம் ஆங்கிலத்தில் விசாரித்திருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் அந்த மாணவர்களால் ஆங்கிலத்தில் சரியாகப் பேச முடியவில்லை.
அவர்களின் கல்விச் சான்றிதழ்களைப் பரிசோதித்தபோது அவர்கள் இந்தியாவின் ஆங்கில நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதுமாதிரி எல்லாம் இருந்திருக்கிறது.
மேலும் விசாரித்தபோது இதுமாதிரி இந்தியாவில் ஆள்மாறாட்டம் எல்லாம் செய்து கனடா வழியாக படிக்க எனும்போர்வையில் வந்த இந்திய மாணவர்களில் பலபேர் அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக நுழைகிறார்கள் எனும் ஒரு குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையொட்டி கனடாவும் அமெரிக்காவும் இந்திய மாணவர்களுக்கு வழங்கும் விசாவில் பெரிய கெடுபிடியைக் கொண்டுவந்தது...’’ எனச் சொல்லும் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம், கனடா, அமெரிக்காவின் இந்திய மாணவர்கள் பற்றியும் கூறினார்.
‘‘கடந்த ஆண்டு கனடாவில் நிஜார் எனும் ஒரு சீக்கியர் கொலையான சம்பவத்தை ஒட்டி கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இருந்த உறவில் விரிசல் வந்தது. இதனைத் தொடர்ந்தும் இந்திய மாணவர்களுக்கு வழங்கும் விசாவில் மீண்டும் ஒரு கெடுபிடியை கனடா செய்தது.
அமெரிக்காவைப் பொறுத்தளவில் டிரம்ப் அதிபராக களம் இறங்குவதற்கு முன்பாகவே இந்திய வம்சாவளி பற்றி ஒரு நெகடிவ்வான உணர்வே அமெரிக்க மக்களிடம் இருந்தது. சட்டத்துக்கு புறம்பாகவும் அல்லது சட்டத்துக்கு உட்பட்டு வந்தவர்களிடமும் அமெரிக்கா கொஞ்சம் ஒவ்வாமையை காண்பித்தது.
இது இந்திய மாணவர்கள் மேலும் கறையை ஏற்படுத்தியது.நிஜத்தில் கனடா, அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறையக் காரணம் இந்திய மாணவர்களுக்கு திறன் இல்லை என்பதல்ல.
மாறாக, திறன் இல்லாத பல மாணவர்கள் எந்தவித நுழைவுத் தேர்வும் இல்லாமலேயே சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பணத்தை மட்டுமே நம்பி படிக்கச் செல்வதில்தான் பிரச்னையே எழுகிறது. இதுமாதிரியான மாணவர்கள் பணத்தை மட்டுமே நம்பி திறன் இல்லாமல் போவதால் ஏதாவது பார்ட் டைம் வேலை பார்த்து வெளிநாட்டில் கல்விக் கடனை எல்லாம் அடைத்துவிடலாம் எனக் கனவு காண்கிறார்கள். இதுதான் பிரச்னையை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக, எல்லோருக்குமே பார்ட் டைம் வேலை கிடைக்கும் எனச் சொல்லமுடியாது. அப்படி வேலை கிடைக்காதவர்களை பாதுகாப்பது வெளிநாடுகளின் தலையில் விழுகிறது. தனிப்பட்ட ரீதியில் வேலை இல்லாத மாணவர்களின் கடன் தொல்லையால் மற்ற இந்திய மாணவர்களும் தங்கள் வெளிநாட்டுக் கல்வி என்ற கனவை குழி தோண்டிப் புதைத்து விடுகிறார்கள்.
இதுதான் இந்திய மாணவர்களின் வெளிநாட்டு கல்வியில் வீழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறது...’’ எனச் சொல்லும் சம்பந்தம் சில நாடுகளில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கான காரணத்தையும் விவரித்தார்.‘‘எம்.பி.பி.எஸ் படிப்புக்கு பலகாலமாகவே ரஷ்யா பிரபலம். இதுதான் இந்திய மாணவர்கள் ரஷ்யாவுக்கு படிக்கச் செல்வதற்கான காரணம்.
ஜெர்மனியைப் பொறுத்தளவில் எஞ்சினியரிங் துறைக் கல்விக்கு அந்த நாடு மிகப் பிரபலமாக இருக்கிறது. ஃபிரான்சைப் பொறுத்தளவில் குறைந்தளவில் எஞ்சினியரிங்கும், பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிப்புகளும் அங்கே பிரபலமாக இருக்கின்றன.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவில் வட இந்திய மாணவர்களின் தொல்லை அதிகமென்றால் இங்கிலாந்தில் தென்னக மாணவர்களின் தொல்லை அதிகம் என்றே சொல்ல வேண்டும். நாமக்கல், புதுக்கோட்டை மற்றும் பட்டுக்கோட்டையில் இருந்து லண்டன் செல்லும் தமிழ் மாணவர்களும் மற்ற இந்திய மாணவர்கள் மாதிரியே பார்ட் டைம் வேலை செய்து கல்விக் கடனை எல்லாம் அடைத்துவிடலாம் என நம்புகின்றனர்.
இது வெளிநாடுகளின் கல்வியிலும், பொருளாதாரத்திலும் பாதிப்பை எற்படுத்துகிறது. அவர்களுக்கு ஒருவேளை பார்ட் டைம் வேலை கிடைத்தால் அதில் வரும் வருமானம் இந்தியாவுக்குத்தான் வரும். இது தங்கள் நாட்டு பொருளாதாரத்தை எப்படி உயர்த்தும் என இங்கிலாந்து கேட்கிறது...’’ என ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் முடிக்க, இன்னொரு வெளிநாட்டுக் கல்வி ஆலோசகரான ராஜராஜன் இந்தப் பிரச்னையை வேறொரு கோணத்தில் இருந்து அலசுகிறார்.
‘‘வெளிநாடுகளில் இந்திய மாணவர்களுக்கு பொருளாதார ரீதியான பிரச்னை ஏற்பட்டபோது இந்தியக் கல்வி மிகவும் மேம்பட ஆரம்பித்தது. ஆகவே வெளிநாட்டுக் கல்வியைவிட உள்நாட்டுக் கல்வியிலேயே கவனம் செலுத்தலாம் என மாணவர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். இதுவும் வெளிநாட்டுக் கல்வியில் தேக்கம் ஏற்பட காரணம்.
உதாரணமாக, ஓர் இந்திய மாணவன் ஒரு மனக் கணக்கில் கடனை வாங்கி வெளிநாட்டுக்கு செல்கிறான் என வைத்துக்கொள்வோம். சில வருடங்களில் டாலர் மதிப்பு உயர்ந்ததால் அவன் செலுத்த வேண்டிய கல்விக் கடனின் தொகை அதிகரிக்கிறது. இது அந்த மாணவனின் குடும்பக் கடன் சுமையை அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டும் வெளிநாட்டுக் கல்வி மோகம் குறைந்திருக்கிறது எனக் கருதலாம்.
இப்போது எல்லாம் நம் பல்கலைக்கழகங்களே வெளிநாடுகளுக்கு இணையான தரத்தில் உயர்ந்திருக்கின்றன. இதோடு வெளிநாட்டு, உள்நாட்டு பல்கலைக்கழகங்களிடையே ஏற்படும் கல்வி ஒப்பந்தங்கள், வெளிநாட்டுப் படிப்பு ஆன்லைனில் வெற்றிகரமாக இயங்குவது, நாடுகளுக்கு இடையே மாணவர் பரிமாற்றம்... உள்ளிட்டவை எல்லாம் சேர்ந்துதான் இந்திய மாணவர்களின் வெளிநாட்டு மோகத்தை குறைத்திருக்கிறது. இது பாசிடிவான மாற்றம் எனவும் சொல்லலாம்...’’ என்கிறார் ராஜராஜன்.
டி.ரஞ்சித்
|