கிரிக்கெட் வீரர்களின் சமையல் பிசினஸ்!



உணவு நம் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. உலகமயமாக்கலின் விளைவாக இன்று எல்லா நாட்டு உணவுகளையும் உணவகங்களில் உண்டு மகிழ்கிறோம். இதனால் உணவக வணிகமும் பல்கிப் பெருகி உள்ளன.  
இந்த உணவக வணிகத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்களும் இருப்பதுதான் ஹைலைட்! உலகில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான விராட் கோலி, பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹாசன், இலங்கையின் மகிளா ஜெயவர்த்தனே, பாகிஸ்தானின் சோயிப் மாலிக் எனப் பலரும் உணவகங்கள் நடத்தி வருகின்றனர். அதைப்பற்றிய ஒரு சிறிய தொகுப்பு இது.

விராட் கோலி

இந்தியாவின் டாப் மோஸ்ட் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு வீரர்களில் ஒருவரும்கூட. கோடிக்கணக்கானவர்கள் சமூக ஊடகங்களில் இவரை ஃபாலோ செய்து வருகின்றனர். 
உணவுப் பிரியரான விராட் கோலி கடந்த 2019ம் ஆண்டு உணவக வணிகத்திற்குள் வந்தார். முதன்முதலாக தலைநகர் தில்லியில், ‘One8 Commune’ என்ற ரெஸ்டாரண்டைத் தொடங்கினார்.

பின்னர் புனே, கல்கத்தா, மும்பை என இந்த ரெஸ்டாரண்டை விரிவுபடுத்தினார். தொடர்ந்து பெங்களூரில் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு எதிரிலுள்ள கட்டிடத்தின் மாடியில் ஆரம்பித்தார். கடந்த ஆண்டு பஞ்சாபின் மொகாலி நகரில் ‘One8 Commune’ உணவகத்தின் பத்தாவது கிளையைத் திறந்துள்ளார் விராட் கோலி.  இதில் கோலிக்குப் பிடித்தமான உணவுகளுடன் மற்ற உணவுகளும் பரிமாறப்படுகின்றன.

விராட் கோலி 2018ம் ஆண்டுக்குப் பிறகு அசைவத்திலிருந்து சைவ உணவுகளுக்கு மாறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால், அவருக்குப் பிடித்தமான மஷ்ரூம் கூக்லி டிம் சம்ஸ் மற்றும் அவகேடோ டார்ட்டரே உள்ளிட்ட உணவுகள் இங்கே முக்கியத்துவமாக இடம்பிடித்துள்ளன. 
இதில் மஷ்ரூம் கூக்லி டிம் சம்ஸ் என்பது உருளைக்கிழங்கு, கோதுமை ஸ்டார்ச் மாவுகளுடன் காளான், பூண்டு ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தமாகும். இதுதவிர, அசைவ உணவுகளும் விராட் கோலி உணவக மெனுவில் சுவைகூட்டுகின்றன.  

ஷாகிப் அல் ஹாசன்

பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் ஷாகிப் அல் ஹாசன். சுழற்பந்து வீச்சாளராகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும் வலம் வந்தவர்.பங்களாதேஷ் அணியில் சிறந்த வீரராக கலக்கிக் கொண்டிருந்த சமயத்தில் 2015ம் ஆண்டு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ‘ஷாகிப்ஸ் 75’ என்ற ரெஸ்டாரண்ட்டை தொடங்கினார் ஷாகிப்.

கடந்த பத்து ஆண்டுகளாக இந்த உணவகம் விதவிதமான ஆரோக்கிய உணவு வகைகளை வழங்கி வருகிறது. இந்த ரெஸ்டாரண்டிற்கான டிசைன் அனைத்தையும் வடிவமைத்தவர் ஷாகிப்பின் மனைவி உம்மே அகமது ஷிஷிர்தான். ஆனால், உணவு மெனுக்களை ஷாகிப்பே பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ளார்.

சோயிப் மாலிக்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக். சிறந்த பேட்ஸ்மேன், பவுலர் எனப் பெயரெடுத்தவர். இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிஸ்ராவின் முன்னாள் கணவரான இவர், கடந்த 2022ம் ஆண்டு லாகூரில், ‘த ரைஸ் பவுல்’ என்ற ரெஸ்டாரண்டைத் தொடங்கி நடத்தி வருகிறார். அரிசி சார்ந்த உணவு வகைகள் இங்கே பிரதானமாக பரிமாறப்படுகின்றன.

இந்த உணவகத்தின் தொடக்க விழாவில் இன்சமாம்-உல்-ஹக், கம்ரான் அக்மல், வக்கார் யூனிஸ், பாபர் அசாம் உள்ளிட்ட சக கிரிக்கெட் வீரர்களை அழைத்து பார்ட்டி கொடுத்தார் சோயிப்.

இவர்களுடன் பாகிஸ்தானின் பிரபல பாடகர் அதிஃப் அஸ்லாமும் திடீரென அந்தப் பார்ட்டடியில் கலந்துகொள்ள சோயிப் மாலிக்கின் ‘த ரைஸ் பவுல்’ உணவகம் அங்கே மிகப் பிரபலமாகிவிட்டது.  

மகிளா ஜெயவர்த்தனே அண்ட் குமார சங்ககரா

இலங்கை அணியில் மிகச் சிறந்த வீரர்களாக ஜொலித்தவர்கள் மகிளா ஜெயவர்த்தனேவும், குமார சங்ககராவும். இருவருமே அதிரடி கிரிக்கெட்டுக்குப் புகழ்பெற்றவர்கள். அதுமட்டுமல்ல. சம வயதுடைய இருவருமே ஸ்ரீலங்கா அணியின் கேப்டன்களாகவும் திகழ்ந்தவர்கள். 

விளையாட்டில் ஜொலித்துக் கொண்டிருக்கும்போதே இவர்கள் இருவரும் இணைந்து உணவக வணிகத்திற்குள் நுழைந்தனர். அப்படியாக கடந்த 2011ம் ஆண்டு கொழும்புவில் கடல் உணவுகளுக்கான ஒரு பிரத்யேக உணவகத்தைத் தொடங்கினர். இதன் பெயர், ‘Ministry of Crab’.

குறிப்பாக இந்த உணவகம், ஏற்றுமதி குவாலிட்டி கொண்ட லகூன் நண்டுகளை உணவாக வழங்குகிறது. இதற்கான ஆலோசனைகளை வழங்கி, இந்த உணவகத்தின் கிச்சனை தலைமையேற்று கவனித்து வருகிறார் பிரபல ஜப்பானிய - இலங்கை செஃப்பான தர்ஷன் முனிதாசா. 

தற்போது கொழும்புவிற்குப் பிறகு மணிலா, ஷாங்காய், மும்பை, மாலத்தீவு ஆகிய இடங்களிலும் இந்த உணவகத்தை இவர்கள் விரிவுபடுத்தியுள்ளனர். அதுமட்டுமல்ல. ஆசியாவின் சிறந்த 50 உணவகங்களின் பட்டியலிலும் இந்த உணவகம் உள்ளது.

ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான். 2022ம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மட்டுகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.

இதற்கிடையில்தான் ஷிகர் தன்னுடைய புதிய இன்னிங்ஸையும் தொடங்கினார். அதாவது துபாயின் ஜுமேராவில் 2023ம் ஆண்டு ‘Flying Catch Sportz Cafe’ எனும் புதிய ரெஸ்டாரண்ட்டை திறந்தார் அவர். துபாயில் கால்பந்து கஃபேக்களுக்கு மத்தியில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு விருந்தினை படைக்கும் நோக்கில் இந்த கஃபே அமைந்துள்ளதாக மெச்சுகின்றனர் அங்குள்ளவர்கள். இதில் சைவம், அசைவம் என இரண்டும் கலந்து பரிமாறப்படுகிறது.

மற்றவர்கள்...

இவர்கள்தவிர, இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஜாகிர் கான் கடந்த 2005ம் ஆண்டிலிருந்து புனேவில், ‘Zaheer khan’s dine fine’ என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார்.இதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ‘Jaddu’s Food Field’ எனும் உணவகத்தை குஜராத்தின் ராஜ்கோட்டில் நடத்தி வருகிறார்.

இதுமட்டுமல்ல. கிரிக்கெட் ஜாம்பவான் ‘தல’ தோனி ‘Shaka Harry’ ரெஸ்டாரண்ட்டின் பின்புலமாக செயல்பட்டு வருகிறார். இந்த உணவகம் கடந்த 2022ம் ஆண்டு சைவ உணவை ஊக்குவிக்கும் நோக்கில் பெங்களூர் விமான நிலையத்தில் தனது முதல் விற்பனையைத் தொடங்கியது.

தவிர, வெஸ்ட்இண்டீஸ் அணியின் அதிரடி ஜாம்பவான் வீரரான கிறிஸ் கெயில் ஜமைக்காவில், ‘Triple Century Sports Bar 333’ என்ற பெயரில் பாருடன் இணைந்த ரெஸ்டாரண்டை நடத்தி வருகிறார். 2010ம் ஆண்டு லங்கா அணியுடன் டெஸ்ட்டில் 333 ரன்கள் குவித்தார். அந்த நினைவாக உணவகத்திற்கு இந்தப் பெயர் சூட்டியுள்ளார். 

சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல்லிலும் சென்னை அணியில் கலக்கி வந்தார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். பின்னர் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருபவர், 2023ம் ஆண்டுதான் உணவக வணிகத்திற்குள் வந்தார்.

ஏனெனில் சுரேஷ் ரெய்னாவிற்கு கிரிக்கெட்டிற்குப் பிறகு ரொம்பப் பிடித்தது உணவு. அதனால், 2023ம் ஆண்டு ‘ரெய்னா இந்தியன் ரெஸ்டாரண்ட்’ என நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் ஆரம்பித்தார்.இதில் தென்னிந்திய உணவுகள், வடஇந்திய உணவுகள், சைனீஸ் வகைகள், கடல் உணவுகள், ஆம்ஸ்டர்டாம் பிரட் ஐட்டங்கள் என அனைத்தையும் தரமான செஃப்களைக் கொண்டு கொடுக்கிறார். நம்மூர் மெதுவடை, சாம்பார் வடையும்கூட இதில் அடக்கம். தன்னுடைய நீண்டகால கனவு நனவாகி இருப்பதாகச் சொல்கிறார் ரெய்னா.

பேராச்சி கண்ணன்