சிறுகதை - மரியாதை முத்தம்



திருநெல்வேலி மேலப்பாளையம்.இரவு மணி பத்து.காரின் பின்னிருக்கையில் திருக்குர்ஆன் தமிழ்ப் பதிப்பு, ஒரு தொழுகை விரிப்பு, ஒரு குடிநீர் போத்தல், நான்கு செவ்வாழை பழங்கள், ஒரு சிறு துண்டு மற்றும் ஒரு சாம்பிள் சோப் பத்திரப்படுத்தினார் எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரன்.அவருக்கு வயது 65. 
உயரம் 165 செமீ. சால்ட் அண்ட் பெப்பர் தலைக்கேசம். அழகிய சீர்மைப்படுத்திய தாடி, அடர் கம்பிளிப் பூச்சி புருவங்கள். சூபியிஸக் கண்கள். மினியேச்சர் நிலவை நுனியில் சுமந்திருக்கும் மூக்கு. திக்ர் எடுக்கும் வாய். காட்டன் முழுக்கை சட்டையும் காட்டன் பேன்ட்டும்  உடுத்தியிருந்தார். வலது பேன்ட் பாக்கட்டில் தஸ்பீஹ் மணிமாலை. தலையில் துணித் தொப்பி.

ரஹ்மத் ராஜகுமாரன் திருக்குர்ஆன் கருத்துகளை விஞ்ஞானபூர்வமாய் நிரூபிக்கும் 12500 கட்டுரைகள் எழுதியுள்ளார். தினமும் 1200 வார்த்தைகளாவது எழுதி விடுவார்.மனைவி ரஹ்மத் ஓடி வந்தார். ஒரு சிறு டப்பாவை கையளித்தார்.  “இதில் நாலு இடியாப்பமும் பாயாவும் வச்சிருக்கேன். 

இடைல பசிச்சா சாப்பிடுங்க...”மறுக்கப்போனவர் மனைவியின் அன்பு முகம் பார்த்து வாங்கி ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் வைத்தார்.ரஹ்மத் ராஜகுமாரனின் இயற்பெயர் ஏபிஎம் அப்துல் காதிர். மின்னணு பொறியியல் படித்துவிட்டு ஹார்ட்வேர்ஸ் நடத்துகிறவர்.

மகன் மூஸல் காழிம் ஓடி வந்தான். “தனியா நானூறு... நானூறு எட்டு நூறு கிமீ காரை ஓட்டிட்டு போகனுமா  நீங்க? கார் ஓட்ட நான் வரட்டுமா?”“வேண்டாம், நன்றி...”கார் கேரளாவின் பாடூர் நோக்கி சீறிப்பாய்ந்தது.‘சுப்ஹானல்லாஹ்’ என 100 தடவை உச்சரித்து திக்ர் எடுத்தபடி கார் ஓட்டினார் ர.ரா.150 கிமீ தாண்டிய பின் தஹஜ்ஜத் இரவு தொழுகை ஒன்பது ரக்அத்கள் காரிலேயே தொழுதார்.கார் பாடூர் கிராமத்தை நெருங்கியது. பாடூர், பணிக்கர்கள் எனப்படும் ஜோதிடர்கள் நிரம்பிய சிற்றூர்.

வலப்பிழ் சையத் பக்ருதீன் தங்கள் மஸ்ஜித்தின் வாசலில் நின்றது கார். பள்ளியில் பல்துலக்கினார். குளித்தார். இரு வாழைப்பழங்கள் சாப்பிட்டார். பஜ்ரு தொழுகை தொழுதார்.
மெதுவாக, மிக மெதுவாக கபர்ஸ்தானுக்கு நடந்தார் ர.ரா.விடிய சில பல நிமிடங்கள் இருந்ததால் வானம் மசமசத்தது. சில ஜின்கள் தங்களுக்குள் ஏதோ பேசியபடி ர.ரா.வை பின்
தொடர்ந்தன.நூற்றுக்கும் மேற்பட்ட கபுர்கள் மேடிட்டிருந்தன. சில கபுர்கள் வெடித்து வீறல் விட்டிருந்தன.

ஆறு அடி நீளமுள்ள நாகப்பாம்பு காலடியில் சரசரப்பாய் ஊர்ந்தோடியது.ரஹ்மத் ராஜகுமாரன் நடக்கையில் சருகுகள் பெரும் சப்தம் எழுப்பின.ஒரு குறிப்பிட்ட கபுரை உலா பேசி டார்ச்சால் தேடினார் ர.ரா. ஒரு குறிப்பிட்ட கபுரின் தலைமாட்டில் ரோஜாச் செடி எழும்பிருந்தது. செடி சில நிமிடங்களுக்கு முன் ஒரு சிவப்பு ரோஜாவை மலர்த்தியிருந்தது.

“யா அல்லாஹ்...” ஆசுவாசித்தார் ர.ரா.தனது நெஞ்சுக்கு முன் இரு கைகளை ஏந்தி பாத்தியா ஓத ஆரம்பித்தார்.ஓதி முடித்த போது கிழக்குத் திசையில் சூரியன் எழுந்திருந்தான். க்ளைடாஸ்கோப் வானம்.கபுரின் முன் முழங்காலிட்டார் ராஜகுமாரன். ஸ்லோமோஷனில் குனிந்து கபுரை முத்தமிட்டார்.

“என் அழகிய ஷெய்குமார் செய்யதினா சுபைர் தங்கள் அவர்களே! அஸ்ஸலாம் அலைக்கும். என் மரியாதை கலந்த முத்தத்தை ஏற்றுக் கொள்வீர்களாக!”

ஒரு கனத்த உருவம் தடதடவென ஓடி வந்து ராஜகுமாரனை ஒளி வேகத்தில் தூக்கி நிறுத்தியது. “நீ தமிழா?”“ஆமாம்!”“என்ன காரியம் பண்ணுகிறாய்? கபுரை முத்தமிடுவது இறைவனுக்கு இணை வைக்கும் குற்றம். பித்அத். சூபியிஸத்தில்தான் முரீதுகள் தங்கள் ஷெய்குமாரை புறங்கையிலும் கால்களிலும் தோள்பட்டையிலும் முத்தா கொடுப்பார்கள். அந்த அனாச்சாரத்தை எங்கள் கேரளாவில் பரப்பி விடாதே!”

“ஆன்மிகப் பெரியவர்களுக்கு மரியாதை முத்தம் கொடுப்பது மார்க்கத்தின் கட்டாயமல்ல. விருப்பப்பட்டவர்கள் கொடுக்கலாம்!”“நீ இப்ப யாருடைய கபுருக்கு முத்தம் கொடுத்தாய்?”“என் ஆன்மிக வழிகாட்டி செய்யதினா சுபைர் தங்கள் கபுருக்கு முத்தா கொடுத்தேன். அவர் எனக்கு ஏழு வருடம் ஆன்மிக வழிகாட்டினார். 

இன்று நான் எழுதும் விஞ்ஞானக் கட்டுரைகளுக்கு விதை போட்டது அவர்தான்!”“ஸஜ்தா இறைவனுக்குரியது. மனிதருக்கு மனிதர் கூடாது!’“ஸஜ்தா என்றால் சிரம் பணிதல்; அடிமை மற்றும் படைப்பாளியின் நெருக்க நிலை; மரியாதைக்குரிய உடல் செயல்பாடு; நெற்றியை தரையில் வைத்து இருபுறமும் உள்ளங்கை வைத்தல்; உடலின் ஏழு பாகங்கள் தரையில் தொடுவதே ஸஜ்தா.

நெற்றி மூக்கு அடங்கியது. இரண்டு கைகள் இரண்டு முழங்கால்கள் இரண்டு கால்களின் முனைகள் அல்லது விரல்கள் மொத்தம் ஏழு உடல் பாகங்கள். ஸஜ்தா இறைவனுக்கு மிகவும் பிடித்தமான நிலை. 

ஸஜ்தா ஸலாத்தின் ஒரு பகுதி. ஸஜ்தா மனிதனின் தாழ்மையான பதவி. ஸஜ்தாவையும் ஷெய்குமாருக்கு முத்தம் கொடுப்பதையும்  ஒப்பிடாதீர்கள். அது தவறு!”
“பிற மத சகோதரர்கள் மூத்தவர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவதும் பெரியவர்களுக்கு சில முஸ்லிம்கள் புறங்கையிலும் கால்களிலும் முத்தம் தருவதும் ஒன்றுதான். 

அவர்களின் கலாச்சாரத்தை நாம் நகலெடுக்கக்கூடாது...”“மரியாதைக்குரியவர்களை முத்தமிடுவது தவறில்லை என்பதற்கு நம் மார்க்கத்திலேயே பல உதாரணங்கள் தருகிறேன் மோதினார்!”மௌனித்தார் மோதினார்.

“நபிகள் நாயகம் அவர்கள் வீற்றிருந்து குத்பா ஓதிக் கொண்டிருந்த மிம்பர் படியை அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் கையில் தொட்டு முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள் என ஷரஹு ஷிபா 153வது பக்கம் கூறுகிறது!”“ஓ..!”“முபாஹுனா எனும் மரியாதை முத்தத்தை செய்யாததுனால ஒரு குற்றமும் இல்லை செய்யுறதுனால அவனோட  நிய்யத்தை வச்சு அவனுக்கு கூலி கிடைக்கும் மோதினார்!”“இம்..!”

“மிஷ்காத் நபிமொழி கிரந்தத்திற்கு விரிவுரை வழங்கிய அல்லாமா அஹ்மது யார் கான் ரலியல்லாஹு அன்ஹு - ‘பெரியவர்களின் கரங்களையும் பாதங்களையும் முத்தமிடுவது  நபிமொழியாகும். பாதத்தினை கரத்தால் தொட்டு முத்தமிடலாம். உதட்டினால் முத்தமிடலாம். உதட்டால் முத்தமிடுவதே சிறந்தது’ என கூறியிருக்கிறார்கள்!”

“ஆஹ்..!”“இன்னொரு அதிமுக்கியமான உதாரணம் ஒன்று கூறுகிறேன். மக்கா நகரின் பெரிய பள்ளிவாசல் நடுவில் அமைந்துள்ள காபா கட்டடத்தின் கிழக்கு மூலையில் ஒரு சொர்க்கத்து கல் பதிக்கப்பட்டிருக்கிறது. அது ஆதம் ஹவ்வா காலத்திலிருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்படுகிறது.

அது சொர்க்கத்திலிருந்து வரும்போது பாலை போல வெண்மையாக இருந்ததாகவும் ஆதம் மக்களின் பாவங்களால் அது கறுத்துவிட்டது எனவும் கூறுவர்.

அக்கல்லை அல்லாஹ்வின் கரம் என்றும் அழைப்பர். ஹஜ் பயணிகள் காபாவைச் சுற்றி வந்து தவாப் செய்யும்போது அக்கல்லை முத்தமிடுவர். அக்கல்லின் பெயர் ஹஜ்ருல் அஸ்வத் கல். அக்கல்லை முத்தமிடுவதன் மூலம் இறைவனுக்கு இணை வைக்கிறோம் என கூற முடியுமா?

ஆன்ம உலகில் நாம் அல்லாஹ்விடம் அறுதிமானம் செய்த உறுதிபிரமாணம் இந்தகல்லின் வாயினுள் வைக்கப்பட்டிருக்கிறது. எழுதப்பட்டுள்ள சத்தியநாமாவை முத்தமிடுகிறோம். கல்லை அல்ல. மறுமை நாளில் ஹஜ்ருல் அஸ்வத் கல்  இரு கண்கள் கொண்டு  பார்க்கும், பேசும், தன்னை முத்தமிட்டவர்களை சாட்சி சொல்லும், அவர்களுக்காக ஷபாஅத்தும் செய்யும்...”“உலகில் மரியாதை நிமித்தம் எல்லாரையும் முத்தமிடலாமா?”

“அதற்கான தகுதி வேண்டும். நாம் முத்த மரியாதை செய்யும் ஷெய்குமார் மார்க்க சட்டக் கலையிலும் கொள்கையிலும் சித்தாந்தத்திலும் ஞானக்கலைகளிலும் ஆழ்ந்த அறிவு உள்ளவராக இருப்பதுடன் அதன்படி அமல் செய்பவராக இருக்க வேண்டும். 

ஞானபாட்டையின்  நுட்பத்தையும் முக்கியத்துவத்தையும் கடின முறையை கையாளாமல் இறை நாடுபவருக்கு கற்றுத் தர வேண்டும். இறை நாடுபவர்களை ஒரு தரத்தில் இருந்து இன்னொரு தரத்துக்கு உயர்த்துகின்ற தகுதி பெற்றவரே ஷெய்கு...”“செரி...”“ஆன்மிகத்தில் நான்கு நிலைகள் உள்ளன மோதினார். 

முதல்நிலை - ஷரீஅத். இது வெளிப்படையானது.  இரண்டாம் நிலை - தரீகத். இது அந்தரங்கமானது. ஷரீஅத் உடல் என்றால் தரீகத் உயிர். மூன்றாம் நிலை - ஹகீகத். இது இரகசிய யதார்த்தம். 

இறுதி நிலை - மஃரிபத். இந்த நான்காவது  நிலையில் நாம் இறைநினைவால் மூழ்கிப் போகும் ஃபனா  நிலை அடைவோம். ஃபனா நிலையை நான் அடைய பெரிதும் உதவியவர் செய்யதினா சுபைர் தங்கள்!”“உங்க பெயர் என்ன பாய்?”“ரஹ்மத் ராஜகுமாரன். 

விஞ்ஞானக் கட்டுரை எழுத்தாளர்!”“மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட உங்க கட்டுரைகளை நிறைய வாசித்துள்ளேன். அற்புதமான ஆன்மிக எழுத்து. உங்களிடம் வீண் வாதம் பண்ணி தோற்றுவிட்டேன். என்னை மன்னியுங்கள்!”

“உங்களுக்கு புரியும் வண்ணம் என்னை பேச வைத்த அல்லாஹ்வுக்கு நன்றி!”அப்போது அந்த மோதினார் ஓர் எதிர்பாராத காரியத்தைச் செய்தார். ரஹ்மத் ராஜகுமாரனின் வலது கையைப் பற்றித் தூக்கி புறங்கையில் முத்தமிட்டார். “மாஷா அல்லாஹ்!”வேடிக்கை பார்த்த ஜின்கள் தலை தெறிக்க ஓடி ஒளிந்தன.

 - ஆர்னிகா நாசர்