இந்தியாவின் முதல் பெண் விமானி!



இந்தியாவில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் ஒரு துறை, இந்திய விமானப் படை. இதன் முக்கிய சொத்தாக கருதப்படுகிறது, ஜாக்குவர் போர்விமானப் படை. இதுவரை ஜாக்குவர் படையில் ஒரு பெண் விமானி கூட இடம் பெறவில்லை. இந்நிலையில் ஃப்ளையிங் ஆபீசர் தனுஷ்கா சிங் வரலாறு படைத்துள்ளார். ஆம்;  ஜாக்குவர் படையில் நிரந்தரமாகச் சேர்க்கப்பட்ட முதல் பெண் விமானி என்ற சிறப்பைத் தன்வசமாக்கியிருக்கிறார் தனுஷ்கா.

உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் வாழ்த்துவந்த ஓர் இராணுவக் குடும்பத்தில் பிறந்தவர், தனுஷ்கா சிங். இவரது தந்தையும், தாத்தாவும் இராணுவத்தில் பணியாற்றியவர்கள். குறிப்பாக தனுஷ்காவின் தந்தையான அஜய் பிரதாப் சிங் இராணுவத்தில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இப்போது ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் பொது மேலாளர் பதவியில் இருக்கிறார்.

லக்னோவிலிருந்து, 2007ம் வருடம் கர்நாடகாவில் உள்ள மங்களூருவுக்கு தனுஷ்காவின் குடும்பம் இடம் பெயர்ந்தது. சூரத்கல்லில் பள்ளிப்படிப்பை முடித்தார். 2022ல் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பாடத்தில் பி.டெக் பட்டத்தைப் பெற்றார். படிப்பை முடித்தபிறகு பொறியியல் துறையில் வேலையைத் தேடாமல், தனது குடும்பத்தினரைப் போலவே இந்திய இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் தனுஷ்காவின் விருப்பம்.

ஆனால், அவரது விருப்பம் இந்திய விமானப்படையின் பக்கம் திரும்பியது. காரணம், இந்திய விமானப் படையில் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. பெண்களுக்கான காலியிடங்களும் நிறைய இருந்தன. அந்த இடங்களை நிரப்புவதற்கு பெரிதாக பெண்கள் யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றிடத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் தனுஷ்கா.

முதலில் தெலுங்கானாவில் உள்ள துண்டிக்கல் பகுதியில் அமைந்திருக்கும் இந்திய விமானப்படை அகாடமியில் பயிற்சி பெற்றார், தனுஷ்கா. ஹாக் எம் கே 132 எனும் விமானத்தை இயக்குவதில் சிறப்புப் பயிற்சியைத் திறம்பட முடித்தார். அவரது திறமையை அங்கீகரிக்கும் விதமாக ஜாக்குவார் படையில் நிரந்தர விமானி என்ற பணி கிடைத்துள்ளது. இதற்கு முன்பு ஜாக்குவார் படை விமானத்தைப் பயிற்சிக்காக மட்டுமே பெண்கள் இயக்கியிருக்கின்றனர்.

த.சக்திவேல்