GOOGLE வேலையை கடாசிய ரீல்ஸ் டார்லிங்!
தமிழில் நான்கு படங்கள்... தெலுங்கில் மூன்று படங்கள்... கேன்ஸ் விழா... ரீல்ஸ் இளவரசி
கலகல காமெடி, கலாய், இணைய பீரங்கி, கேன்ஸ் ரெட் கார்பெட்டைக் கடந்த கட்டழகி, அமீர்கான், மகேஷ் பாபு, ஏன் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் உட்பட இவருடன் 30 செகண்ட் ப்ரொமோஷன் ரீல் செய்ய நேரம் கேட்கும் அளவுக்கு இந்திய இன்டர்நெட் சென்சேஷன் நிஹாரிகா. சும்மா இல்லப்பு...  மேடம் சொன்ன சும்மா வார்த்தையே இப்போ இன்டர்நேஷனல் டிரெண்ட். ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவில் நான்கு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். விட்டுவிடுவோமா, ஒரு ஹலோவை போட்டு வைத்தோம்.  யாரு சாமி நீங்க... மொத்த இந்தியாவையும் ஃபாலோ பண்ண வச்சிட்டீங்க?
ஹாஹா... ஆந்திரா பூர்வீகம், சென்னையில் பிறப்பு, பெங்களூரில் வளர்ப்பு. இன்ஜினியரிங் படிச்சிருக்கேன். தொடர்ந்து எம்பிஏ படிப்புக்காக அமெரிக்காவில் இருந்தப்ப கொரோனா காரணமா உலகமே வீட்டுக்குள்ள மாட்டிக்கிச்சு. நானும் மாட்டிக் கிட்டேன். நம்ம சொந்த ஊரில் இப்படி வீட்டில் அடைபட்டா கூட பரவாயில்லை. கடல் கடந்து, நாடு கடந்து ஏதோ ஒரு நாட்டில் ஓர் அறைக்குள் பூட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
வேற வழியே இல்லாம நேரத்தை கடத்த யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன். என்னுடைய ஃபிரண்ட்ஸ் கூட அடிக்கடி சொல்லுவாங்க... உன்கிட்ட சூப்பர் எனர்ஜி இருக்கு,ச் அதை பயன்படுத்தி ஆன்லைன் சேனல் ஆரம்பிக்கலாமே அப்படின்னு. அப்படி ஆரம்பிச்சதுதான் என்னுடைய யூடியூப் சேனல்.
டிஜிட்டல் கரியருக்காக கூகுள் வேலையையே விட்டுவிட்டீர்களாமே?
உண்மைதான். மெனக்கெட்டு இன்டர்வியூ எல்லாம் பாஸ் செய்தேன். எனக்கு அந்த வேலை பெரிய கனவு. கூகுளில் வேலையும் கிடைச்சது. ஆனால், டிஜிட்டல் உலகம் எனக்கு வேறு ஒரு பிளான் வச்சிருக்குன்னு புரிஞ்சது. ஆரம்பத்தில் நிறைய கேள்விகள்-இந்த டிஜிட்டலை நம்பி இறங்கலாமா வேண்டாமா அப்படின்னு. ஆனால், என்னை நம்பி இறங்கினேன். அவ்வளவுதான்.
மிகச் சீக்கிரமே உங்களை சினிமாவில் எதிர்பார்த்தோமே... ஏன் தாமதம்?
இதை காம்ப்ளிமெண்ட்டா நான் எடுத்துக்கிறேன். எதுவானாலும் படிப்பை முடிச்சிட்டு செய்யலாம் அப்படின்னு தோணுச்சு. நான் இன்டர்நெட்டில் கொஞ்சம் பிரபலமான நேரத்திலேயே ஒரு சில படங்கள் என்னைத் தேடி வந்தது. ஆனால், படிப்பை முடிக்கணும் என்கிறதுக்காக வேண்டாம்னு சொன்னேன்.
‘பெருசு’ பட நாயகி... தொடர்ந்து மூன்று படங்கள் தமிழில்..?
‘பெருசு’... நிச்சயமா இந்திய சினிமாவில் இப்படி ஒரு கதையை யாரும் யோசித்திருக்க மாட்டாங்க. என்னால் கதையை கூட வெளிப்படையா சொல்ல முடியாது. பார்த்து சிரிச்சு நீங்களே என்ஜாய் பண்ணுங்க. டைரக்டர் இளங்கோ ராமை இப்படியொரு ஃபேமிலி அடல்ட் காமெடியை யோசிச்சதுக்கே பாராட்டணும்.
‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் பொதுவா இப்படி எந்த நடிகரையும் ஒப்பந்தம் செய்ததில்லை. ஆனா, ஒரே சமயத்தில் என்னை மூன்று படங்களில் ஒப்பந்தம் செய்திருக்காங்க. அதில் ஒன்றுதான் ‘பெருசு’. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் என்மேல் அவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். தொடர்ந்து டான் பிக்சர்ஸ் ‘இதயம் முரளி’ படத்திலும் நடிச்சிருக்கேன். மேலும் தெலுங்கிலும் மூணு படங்கள் கமிட் ஆகியிருக்கேன்.
‘த பிக் மவுத்’ சீரிஸ்... கேன்ஸ் திரைப்பட விழா..?
எல்லாமே தேடி வந்த வாய்ப்புதான். இப்போ நினைச்சாலும் கனவு மாதிரி இருக்கு. கடந்த மூன்று வருடங்களா கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கறேன். ஒவ்வொரு வருஷமும் மறக்க முடியாத நிறைய மெமரிஸ் கிடைச்சிகிட்டே இருக்கு. அதற்கான டிரஸ், மேக்கப், லுக், அங்கே இன்டர்நேஷனல் ஸ்டார்களுக்கு நடுவில் நான் இதெல்லாம் யோசிக்கும் பொழுது கனவா நினைவா அப்படின்னு தோணும். ஐ யம் லக்கி... அப்படித்தான் தோணுது.
உங்களை ட்ரீம் கேர்ள் ஆக நினைத்து எத்தனையோ பசங்க இருக்காங்க... உங்களுக்கு பசங்க எப்படி இருக்கணும்?
உயிரோட சுத்தணும்! ஹா ஹா... அதாவது இயல்பா, தன்னைச் சுற்றி இருக்கிற எல்லா உயிர்களையும் மதிச்சு வாழத் தெரிந்தவனா இருக்கணும். அவ்வளவுதான். ‘போய் படிங்கடா... என்னடா வேலன்டைன்ஸ் டே...’ இது இப்போது வரை ட்ரெண்டிங்கில் இருக்கே!
அந்த இடம் அப்படி. ‘இதயம் முரளி’ படத்தினுடைய இன்ட்ரோடக்ஷன் விழா. அது ஒரு காலேஜில் நடந்துச்சு. அங்கே போய் காதல்... வேலன்டைன்ஸ் டே இப்படி எல்லாம் பேசணுமா அப்படின்னு அந்த மொமெண்ட் தோணுச்சு.
அதான் அதற்கு ஏத்த மாதிரி ‘என்னடா வேலன்டைன்ஸ் டே, வீட்ல சும்மா இருங்கடா, போய் படிங்க. ஏதாவது செல்ஃபி போட்டா ஸ்க்ரீன் ஷாட் உங்க அப்பா அம்மாவுக்கு அனுப்பிடுவேன்’ அப்படின்னு சொன்னேன். அது ரீல்ஸா சுத்த ஆரம்பிச்சு கடைசியில பசங்க மட்டுமில்லாம அவங்க பேரன்ட்ஸுக்கும் பிடிச்சு போயிடுச்சுன்னு நினைக்கிறேன்.
ஷாலினி நியூட்டன்
|