ஸ்டார் ஹோட்டல் to கூரைக்கடை... அன்று செஃப்... இன்று செட்டிநாடு கிராமிய மணம் கமழும் ஹோட்டல் உரிமையாளர்!



‘‘பொதுவா சின்ன வயசுல எல்லோருக்குமே டாக்டராகணும், எஞ்சினியராகணும், கலெக்டராகணும்னுதான் ஆசையிருக்கும். ஆனா, எனக்கு சமையலில் பெயர் சொல்லக்கூடிய இடத்துக்குப் போகணும்னு லட்சியமாகவே இருந்தது. இன்னைக்கு அந்த இடத்தை ஓரளவுக்கு அடைஞ்சிருக்கேன்னு நினைக்கிறேன்...’’ அத்தனை உற்சாகமாகப் பேசுகிறார் கணேசன்.
சென்னை ஆவடியில் ‘கூரைக்கடை குப்புசாமி செட்டிநாடு மெஸ்’ என்றால் தெரியாதவர்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு பலருக்கும் பரிச்சயமான ஹோட்டல் இது. இதன் உரிமையாளர் கணேசன்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவின் புகழ்பெற்ற பிரபல நட்சத்திர ஹோட்டலில் செஃப்பாக பணியாற்றியவர் இவர். இன்று எல்லோருக்கும் தன்னுடைய கைபக்குவத்தைக் கொண்டு சேர்க்கும் வகையில் கிராமத்து செட்அப்பில் கூரைகள் வேயப்பட்ட ஹோட்டலை நடத்தி வருகிறார். 
இந்த ஹோட்டலின் சிறப்பு என்னவென்றால் ரசாயனம் கலக்காத, பாரம்பரியமான முறையில், இயற்கையில் விளைவிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு தரமான உணவுகளை வழங்கி வருவதுதான். இதனாலேயே பலரும் இவரின் ஹோட்டலைத் தேடி வந்து சாப்பிடுகின்றனர்.
 
‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். சின்ன வயசுல வீட்டுல அம்மா சமைக்கும்போது அவங்களுக்குத் துணையா நானும் ஏதாவது உதவிகள் செய்வேன். சில நேரங்கள்ல எனக்குத் தெரிஞ்ச சமையலும் பண்ணுவேன். அப்படிதான் எனக்குள்ள சமையல் ஆர்வம் வந்தது. நான் சமைச்சதைச் சாப்பிட்டு வீட்டுல இருக்கிற எல்லாருமே ரொம்ப நல்லா இருக்குன்னு பாராட்டினாங்க. ஆனா, எனக்கு அப்பத் தெரியாது, சமையல்தான் என்னோட தொழிலாக மாறும்னு.

இன்னைக்கு சென்னையில் பெயர் சொல்லக்கூடிய உணவகங்களில் என்னோட ஹோட்டலும் இருக்குனு நினைக்கிறப்ப மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு...’’ என ஆத்மார்த்தமாகச் சொல்கிற கணேசன் தொடர்ந்து பேசினார். 

‘‘பள்ளிப் படிப்பு முடிச்சதும் பட்டப்படிப்பாக கேட்டரிங்கைதான் தேர்வு செய்தேன். ஒரு தனியார் கல்லூரியில் கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை மூணு வருஷம் படிச்சேன். அங்க படிச்சிட்டு இருக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஜெய்ப் பூர்ல இருக்கிற தாஜ் ஸ்டார் ஹோட்டலில் வேலை கிடைச்சது.

ஆரம்பத்தில் பயிற்சிக் காலம். இதில் கிச்சனில் தொடங்கி அட்மின், ஹவுஸ் கிளீனிங், வாஷிங் ஏரியா, டைனிங்னு எல்லா வேலைகளும் பார்த்தேன். ஓராண்டு முடிஞ்சதும் சென்னையில் இருக்கிற தாஜ் ஹோட்டலுக்கு செஃப் ஆக வந்தேன்.   

இங்க வந்ததும் நமக்கு எந்த வகை சமையலில் ஆர்வம் அதிகம் இருக்கோ, அதை தேர்ந்தெடுத்துக்கலாம். அதாவது சைனீஸ், ஜப்பனீஸ், கான்டினென்டல், இத்தாலியன்னு பல வகையான உணவு வகைகள் இருக்கும். இதில் எந்த மாதிரியான உணவு சமைப்பதில் நமக்கு விருப்பமோ அதைத் தேர்வு செய்யலாம். அப்ப நான் செட்டிநாடு உணவு வகையைத் தேர்ந்தெடுத்தேன்.

செட்டிநாடு ஸ்டைலில் தயாரிக்கப்படும் குழம்பு வகைகள், சிக்கன், மட்டன், ஸீ ஃபுட்ஸ் உள்ளிட்டவற்றில் தயாரிக்கப்படும் சைடு டிஷ், பலகாரங்கள்னு ஒரு செஃப்பாக அனைத்து உணவுகளையும் சிறப்பா செய்துகொடுத்தேன்.

பெரிய ஆர்டர்கள், லைவ் கிச்சன்னு பயங்கர பிசியாக இருந்தேன். ஒருநாளில் 14 மணிநேரமெல்லாம் வேலை செய்திருக்கேன். மனதிற்கு பிடித்த வேலை என்பதால் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் செய்தேன். ஊதியமும் நிறைவாக இருந்தது. இப்படியே நான்கு ஆண்டுகள் கடந்தது.   

ஒருகட்டத்துல ஒரே மாதிரியான வேலையை பார்க்கிறோமோனு எண்ணம் வரத் தொடங்குச்சு. அதனால் தனியாக ஏதாவது சாதிக்கணும்னு செஃப் வேலையை விட்டு வெளியேறினேன்.
அப்புறம், ஹோம் மேட் ஐஸ்கிரீம் தயாரித்து சென்னையின் ஏழு இடங்களில் ஐஸ்கிரீம் கடைகளைத் திறந்தேன். மனசுக்குப் பிடிச்சமாதிரி போகிற நேரத்துல கொரோனா வந்து எல்லாத்தையும் கலைச்சிடுச்சு.

கொரோனா காலம் என்பதால் எங்கும் வேலைக்குச் செல்ல முடியல. பிறகு, அம்பத்தூரில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பேராசிரியராக வேலை கிடைச்சது. அங்க மூன்று ஆண்டுகள் வேலை செய்தேன்.

அங்குதான் எனக்கு வெவ்வேறான அனுபவங்கள் கிடைச்சது. நிறைய நண்பர்களும் கிடைச்சாங்க. அவங்க மூலம்தான் இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவுகள் பத்தியெல்லாம் தெரிய வந்தது...’’ என்கிறவர், இங்கிருந்துதான் கூரைக்கடைக்கான திட்டத்தை வகுத்திருக்கிறார்.

‘‘இந்த நண்பர்களுடன் சேர்ந்து தற்சார்பு வாழ்க்கையைக் கடைப்பிடிச்சேன். இயற்கை முறையில் விளைஞ்ச உணவுகளைச் சாப்பிட ஆரம்பிச்சேன். இப்ப நானும் என் குடும்பமும் எந்த பூச்சி மருந்துகளும் கலக்காத உணவுப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளையே கடந்த ஆறு வருடங்களாக சாப்பிட்டு வர்றோம். 

இயற்கை முறையில் செய்யப்படும் உணவில் இருக்கிற சுவையும் தரமும் மருத்துவ குணமும் பயனுள்ளதாக இருந்ததை நேரடியாகவே உணர்ந்தேன். இதை அப்படியே மக்களிடம் கொண்டு சேர்க்கணும்னு ஆசைப்பட்டேன்.

அதன்விளைவாக ஆரம்பிச்சதுதான் இந்த கூரைக்கடை குப்புசாமி செட்டிநாடு மெஸ். கடந்த மூணு ஆண்டுகளாக சுவையான, தரமான உணவுகளை கொடுத்திட்டு வர்றேன். இந்த உணவகம் தொடங்கணும்னு எண்ணம் வந்தவுடனே முதலில் எனக்குள் தோன்றியது மற்ற உணவகம் போல இது இருக்கக்கூடாது என்பதுதான். அதனாலே என் உணவகத்தை செங்கல், சிமெண்ட் வைத்து கட்டாமல் பனை ஓலைகளை வைத்து உருவாக்கினேன்.

அதாவது ஒரு கிராமத்து வீட்டில் அமர்ந்து சத்தான உணவை மக்கள் ருசிக்கணும்னு நினைச்சேன். அதனாலே, இந்த உணவகம் எங்கள் பகுதியில் பலருக்கும் விருப்பமான உணவகமாக மாறியிருக்கு...’’ என்கிறவர், மெஸ் உணவுகளை பட்டியலிட்டார். 

‘‘இப்ப எங்க உணவகத்தில வெஜ் மற்றும் நான்வெஜ் மீல்ஸ் இரண்டுமே 110 ரூபாய்க்கு கொடுக்குறோம். நான்வெஜ் மீல்ஸ்ஸில் நல்லெண்ணெய் மீன் குழம்பும், கடலை எண்ணெய் மட்டன் குழம்பும் வரும். அதுபோக சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், கூட்டு, பொரியல், மோர் என அனைத்துமே தர்றோம்.

இதனுடன் சைடு டிஷ்க்கு மட்டன், சிக்கன், கடல் உணவுகள்னு எல்லாமே இருக்கு. எங்க கடையின் ஃபேமஸ் என்றால் அது மட்டன் நெய் சுக்காதான். இதுதவிர மட்டன் ஈரல் கொடுக்குறோம். சிக்கனிலும் சிக்கன் சுக்கா தர்றோம். அடுத்து கடம்பா ஃப்ரை, இறால் கிரேவி, ஃபிஷ் ஃப்ரைனு கடல் உணவுகளும் இருக்குது. இவை அனைத்துமே செக்கு எண்ணெயில்தான் தயாரிக்கிறோம்.

மட்டனை பொறுத்தவரை தினசரி வாங்குவோம். அதுவும் ஆற்காடு, ஆரணி பக்கம் இருந்து மேய்ச்சல் ஆடுகளை வரவழைக்கிறோம். சிக்கனும் அப்படிதான். ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்படாத கோழிகளைதினமும் அம்பத்தூரில் உள்ள ஒரு பண்ணையில் இருந்து தருவிக்கிறோம்.

இறாலைப் பொறுத்தவரை வளர்ப்பு இறாலில் எனக்கு விருப்பம் கிடையாது. அதனால் கடல் இறால் வாங்குறோம். இதனை ஒரு நண்பரின் உதவியால் ராமேஸ்வரத்தில இருந்து டிராவல்ஸ் மூலம் கொண்டு வர்றோம். இப்படி சமையலுக்கு தேவையான ஒவ்வொன்றையும் தரமான இடத்தில் இருந்து வரவழைப்பது எங்கள் ஸ்பெஷல்னு சொல்லலாம்.

அப்புறம், ஞாயிற்றுக்கிழமை மட்டும் மீல்ஸுடன் சேர்த்து மட்டன் சீரக சம்பா பிரியாணியும் கொடுக்கிறோம். இதைப்போல புதன்கிழமை ஆட்டுக்கால் பாயாவும், இடியாப்பமும் எங்க கடையின் ஸ்பெஷல் டிஷ்.

இதுதவிர தினமும் இரவில் மதுரை ஸ்டைல் கறிதோசையை ஸ்பெஷல் ஐட்டமாக கொடுக்குறோம். இந்த கறிதோசையை சிக்கன், மட்டன், இறால்னு அனைத்திலுமே செய்றோம். இதனுடன் இட்லி, தோசை, சப்பாத்தி எப்போதும் இரவில் உண்டு. நாங்க மைதா பயன்படுத்துறது கிடையாது. அதனால், புரோட்டா போடுறதில்ல.   

அப்புறம், இங்க இருக்கிற அனைத்து ரெசிபியுமே நான்தான் சமைக்கிறேன். நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் காலேஜ்ல பேராசிரியராக இருக்கும்போது என் டீச்சிங் பிடிச்சுப்போன மூன்று மாணவர்கள் எனக்கு உதவியாக என்னுடன் வேலை செய்றாங்க. 

இவர்களுடன் பெண்களுக்கு வேலை கொடுக்கும் நோக்கில் 8 பெண்களையும் வேலைக்கு அமர்த்தியிருக்கேன்...’’ என்கிற கணேசன், ‘‘உண்மையில் உணவுல தரமும் ஆரோக்கியமும் கொடுத்தால் யார் வேணாலும் உணவகம் நடத்தலாம். என்னைப் பொறுத்தவரை சமையல் தொழிலுக்கு நான் எப்பவும் உண்மையாக இருப்பேன். ஏன்னா, சமையலைத் தவிர எனக்கு வேறெதுவும் தெரியாது...’’ என முத்தாய்ப்பாக சொல்கிறார் கணேசன்.

செய்தி: ச.விவேக்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்