இந்தியர்களின் அமெரிக்க கனவு என்ன ஆகும்..?
ஒருகாலத்தில் இந்தியத் தேர்தல்கள்தான் இந்தியர்களின் தலையெழுத்தை நிர்ணயித்துக்கொண்டிருந்தது. ஆனால், இன்று உலகளவில் எங்கே ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அது இந்தியாவையும் அசைத்துப் பார்க்கிறது.
அப்படிப்பட்ட ஓர் உலகளவிலான தேர்தலில்தான் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாம் முறையும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகையில் கடந்தவாரம் அதிபராக ஜம்மென்று அமர்ந்தார். டிரம்ப் அதிபரானதும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் நிறுத்தம் போன்ற சில பாசிட்டிவான நிகழ்வுகள் அரங்கேறினாலும் அமெரிக்காவிற்கு வேலை நிமித்தம் செல்லும் வெளிநாட்டினர் குறித்து அவர் கடந்த ஆண்டிலேயே கண்டிப்பு காட்டியது இந்தப் பிரிவினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. உதாரணமாக இந்தப் பிரிவினருக்காக வழங்கப்படும் எச் 1 பி விசா (H 1 B Visa) குறித்து இப்போது பேசியுள்ள டிரம்ப், ‘அந்த விசாவில் கை வைக்கமாட்டேன்’ என்று சத்தியம் செய்துகொடுத்து வெளிநாட்டினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், ‘அதிபரின் பேச்சு எல்லாம் சும்மா குஷிப்படுத்தத்தான். அமெரிக்க நீதிமன்றங்களும், அமெரிக்க வெள்ளை நிற குடிமக்களும் அதிபரின் பேச்சுக்கு எல்லாம் செவிமடுக்கமாட்டார்கள்’ என்றும் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
சரி. இந்தியா ஏன் இதுபற்றிக் கவலைப்படவேண்டும்?
ஏனெனில் அமெரிக்காவில் வாழும் இந்தப் பிரிவினரில் 80 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பதால்தான். அதாவது வேலைக்காக எச் 1 பி விசா பெற்று அமெரிக்காவை சுவைக்கும் இந்த முதலிடம் வகிக்கும் இந்திய பிரஜைகளின் அமெரிக்கக் கனவில் அமெரிக்கா மண்ணைத் தூவுமா அல்லது அமெரிக்கக் கனவை நிறைவேற்றுமா என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வி. முதலில் இப்போது இந்த விசாவில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினரின் நிலையைப் பற்றியும் அதில் இந்தியாவின் நிலையைப் பற்றியும் பார்ப்போம்.
கடந்த 34 வருடங்களாக இந்த எச் 1 பி விசா அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கிறது. 2023ம் ஆண்டு கணக்குப்படி இந்த விசாவில் அமெரிக்காவில் வேலை பார்க்கும் மொத்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 2,65,777. இதில் இந்தியத் தொழிலாளர் மட்டும் 2,06,591. இது மொத்த எண்ணிக்கையில் 78 சதவீதம்.
இந்தியர்கள்தான் இந்த விஷயத்தில் கொடி நாட்டுகிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. அதற்கு அடுத்துதான் சீனா. சீனர்களின் எண்ணிக்கை 23,482. அதாவது மொத்த தொழிலாளர்களில் வெறும் 9 சதவீதம். ஆனால், இந்த 32 வருடங்களில் இந்த விசா பெறும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதலபாதாளத்திற்கு சென்றுகொண்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.உதாரணமாக 2015ல் காக்னிசண்ட், இன்ஃபோசிஸ், விப்ரோ, டாடா போன்றவை அமெரிக்காவில் இந்தியர்களை இந்த வேலைக்கு எடுத்த எண்ணிக்கை 14,792. ஆனால், கடந்த ஆண்டு - 2024ல் - இது பாதியாக, அதாவது 7,299 ஆக குறைந்து மண்ணைக் கவ்வியிருக்கிறது.
பதிலாக இந்த கம்பெனிகள் அமெரிக்கப் பிரஜைகளை வேலைக்கு அமர்த்தும் போக்குகள் அண்மைக் காலமாக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காரணம் அமெரிக்காவிலேயே வெளிநாட்டு வேலையாட்கள் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் நிலவுவது.
‘திறமையான அமெரிக்கப் பிரஜைகள் ஐடி துறையில் வேலை செய்யக் காத்திருக்கையில் குறைந்த சம்பளத்துக்காக வெளிநாட்டினரை இந்த ஐடி நிறுவனங்கள் பணியில் அமர்த்துகின்றன’ என்ற குற்றச்சாட்டும் அமெரிக்கர்களிடையே பிரபலம்.
வெளிநாட்டு நிறுவனங்களும் கொஞ்ச காலத்துக்கு ‘சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’ என்று இதற்கு செவிசாய்க்காமல் இருந்தார்கள். ஆனால், தொடர்ச்சியான அமெரிக்க கருத்தியல் அழுத்தம் இந்த நிறுவனங்களை அடிபணியவைத்தது. சரி. இனி இந்த எச் 1 பி விசா வளர்ந்த கதையைப் பார்ப்போம்.
அமெரிக்காவின் பக்கத்து நாடு, மெக்சிகோ. இதனால் மெக்சிகோ நாட்டினர் பலகாலமாகவே அமெரிக்க மண்ணில் ஊடுருவியபடி இருக்கின்றனர். இதனால் அமெரிக்கா குட்டிச்சுவராக மாறுவதாக ஒரு கருத்து - குற்றச்சாட்டு - அந்நாட்டில் நிலவி வருகிறது. இன்றும் அதே நிலைதான்.
இந்நிலையில் 1942 முதல் 64 வரை சுமார் 40 லட்சம் மெக்சிகோ நாட்டினரை விவசாயத்தில் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்கா ஒரு சமரச முடிவுக்கு வந்தது. இதற்கான சட்டமும் 1952ல் இயற்றப்பட்டது.
இந்த விவசாய விசாவை எச் 2 (H 2) என்றழைத்தனர். அதே ஆண்டு நற்பேறு (மெரிட்), திறன் (எபிலிட்டி) அடிப்படையில் விளையாட்டு, கலை, அறிவியலில் சிறந்த வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு வரலாம் என்றும் சட்டம் போட்டனர். இந்த விசாவுக்குப் பெயர் எச் 1 (H 1). ஆனால், 1969 வரை ஒரு அறிவாளிகூட அமெரிக்காவில் கால் வைக்கவில்லை என்கிறார்கள்.
1970ல் 3 வருடத்துக்கு அமெரிக்காவில் தங்கிக்கொள்வதற்கான விசா வழங்கப்பட்டது. ஆனால், இதற்கு நீங்கள் ஒரு பேச்சுலர் டிகிரியாவது படித்திருக்கவேண்டும். இருந்தாலும் மெரிட் அடிப்படையில்தான் விசா வழங்கப்பட்டது. இந்த நேரத்தில், அதாவது 1990 வாக்கில் அமெரிக்காவில் வளர்ந்துவந்த தொழில் நிறுவனங்கள் மெரிட்டை எல்லாம் வைத்து தொழிலை சாதிக்கமுடியாது என்பதற்காக அதை தளர்த்தவேண்டும் என்று அழுத்தம் கொடுத்தன.
இதனைத் தொடர்ந்து 2023ம் ஆண்டு அமெரிக்கா இன்றைய விசா வடிவமான எச் 1 பி விசாவை அறிமுகப்படுத்தி பேச்சுலர் தகுதி, மெரிட் எல்லாவற்றையும் தூக்கிவிட்டு ‘சிறப்புத் தொழில்’ (Specialist Occupation) என்ற தகுதியை உருவாக்கியது. இது பெரிய பலனைக் கொடுத்தது.
உதாரணமாக பேச்சுலர் டிகிரி இல்லாமலேயே 1/3 ல் பங்கினர் அமெரிக்காவில் வேலைக்காக வெளிநாடுகளில் இருந்து வந்தனர். தொழிலை நசியவிடக்கூடாது என்பதற்காக இந்த விசாவில் வருபவர்கள் 6 வருடம் அமெரிக்காவில் இருக்கலாம் என்றும் இந்த ஆண்டில் சட்டம் கொண்டுவந்தனர்.
ஆனால் 90களிலேயே வெளிநாட்டு வேலையாட்கள் பற்றி அமெரிக்க வெள்ளை இனத்தினரிடையே ஒரு காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டது. இதை ஒட்டி 90களில் வருடத்துக்கு 65 ஆயிரம் விசாதான் கொடுக்கப்படவேண்டும், அதுவும் நல்ல சம்பளமாக உள்ள வேலைகளுக்காக மட்டுமே விசா என்ற கூடுதல் சட்டமும் அமல்படுத்தப்பட்டது.
ஒருகாலத்தில் 6 வருடம் அமெரிக்காவில் வேலை செய்தால் அங்கேயே நிரந்தரமாகக் குடியேறுவதற்கான கிரீன் கார்ட் முறை எல்லாம் இருந்தது. ஆனால், இப்போதைக்கு இந்த விசாவில் 3 வருடம்தான் அமெரிக்காவில் வேலை செய்யமுடியும் என்ற நிலை.
காரணம், கிரீன் கார்ட் முறையை ஒழிப்பதற்காக இந்த 3 ஆண்டு முறையைக் கொண்டு வந்திருப்பதாக நிபுணர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இச்சூழலில்தான் இப்படியொரு தடாலடி. பார்ப்போம், டிரம்ப் பம்முவாரா அல்லது பாய்வாரா என்று. இந்தியக் குழந்தைகளுக்கு இனி அமெரிக்கக் குடியுரிமை கிடைக்காதா?
இமிக்ரேஷன் துறையை சார்ந்தவன் என்பதால், டிரம்பின் முதல்நாள் அரசாணைகளில் (Executive order) இது என் கவனத்தை மிகவும் ஈர்த்தது.
அதாவது பெற்றோர்கள் கீழ்க்கண்ட வகைமையில் வந்தால், இனி அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பிலேயே அமெரிக்கக் குடியுரிமை (citizenship) கிடையாது:
*பெற்றோர் ஒருவராவது அமெரிக்க பிரஜை அல்லது Green card holder ஆக இல்லாவிட்டால்.
*ஏனைய H1, L1 வேலை விசாக்கள், F1 ஸ்டூடண்ட் விசா போன்ற விசாக்கள் legallyஆக இருந்தாலும் அல்லது undocumented ஆக இருந்தாலும்.
இதில் Undocumented ஆசாமிகளை விட்டுவிடுவோம். அது புரிந்துகொள்ளக்கூடியது. Documented ஆக, குறிப்பாக ஐடி போன்ற துறைகளில் வேலை விசாக்களில் வேலை பார்க்கும் லட்சோபலட்சம் இந்தியர்களுக்கு பெரிய அடி இது.
ஏற்கனவே இந்தியர்களுக்கான Priority date ஒவ்வொரு கிரீன்கார்ட் கேட்டகரியிலும் பத்திருபது வருடங்கள் என தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. கிரீன்கார்டுக்காக காத்திருக்கும் மக்கள், பல்லைக் கடித்துக்கொண்டு இருப்பது தம் குழந்தைகளுக்காவது அமெரிக்க குடியுரிமையும், வாழ்வும் அமையட்டும் என்றுதான். இது ஒரு Constitutional issue. அமெரிக்காவின் 14வது அமெண்ட்மெண்ட் படி அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைவருக்கும் அரசியலமைப்பு சட்டம் குடியுரிமையை உறுதி செய்கிறது என்கிறார்கள் பல சட்ட வல்லுனர்கள். ஏற்கனவே ACLU (American Civil Liberties Union) போன்ற அமைப்புகள் உடனே வழக்கு தொடர்ந்திருக்கின்றன. இந்த சட்டசிக்கலுக்கு ஒரு முடிவு வர 14 மாதங்களாவது ஆகும் என்கின்றனர்.
இதற்கு இறுதித் தீர்ப்பு வரும் அடுத்த ஒரு வருடம் வரை இது நடைமுறையில் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
*முதலில் தீர்ப்பு வரும் வரை, இந்த Executive order (அதாவது பிறப்புரிமை கிடையாது) என்பதுதான் நடைமுறையில் இருக்குமா?
*அப்படியெனில் பிப்ரவரி 19 முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் Birth certificate தரமாட்டார்களா? (பொதுவாய் இங்கு மருத்துவமனையிலேயே பிறப்புச் சான்றிதழ், அல்லது குழந்தை பிறந்த அத்தாட்சியைத் தந்துவிடுவார்கள். அதைக்கொண்டு, அமெரிக்க பாஸ்போர்ட்டை சில வாரங்களில் குழந்தைக்கு வாங்கிவிடலாம்.)
*அப்படி Birth certificate தராவிடில், தங்கள் நாட்டு (home country) எம்பசியோடு பாஸ்போர்ட்டுக்காக ரெஜிஸ்டர் செய்யவேண்டுமா?
*அப்படி home country பாஸ்போர்ட் தரும்வரை, குழந்தைக்கான இன்ஷ்யூரன்ஸ், ஹெல்த் கவரேஜ் யார் தருவார்கள்? குழந்தைபிறப்பு, பிறகு Pediatrician போன்றவை இன்ஷ்யூரன்ஸ் இல்லாவிடில் அமெரிக்காவில் கிழிந்துவிடும்.
*Home country பாஸ்போர்ட் வரும்வரை, அக்குழந்தைகளின் லீகல் ஸ்டேட்டஸ் என்ன? இது தாண்டி முன்னர் அமெரிக்காவில் precedence இல்லாத ஏகப்பட்ட லாஜிஸ்டிக்ஸ் சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.
இந்த சட்டச்சிக்கலுக்கு (legal battle) முடிவு தெரியும் வரை பிறக்கப்போகும் குழந்தை அமெரிக்கன் இல்லை என்றால், தற்போது டெலிவரிக்கு காத்திருக்கும் பல இந்தியர்கள் பெட்டியைக் கட்டிவிடுவார்கள். ‘போங்கடா, உங்களோட மாரடிக்கறதுக்கு இந்தியாலேயே நல்ல உதவியோட பெத்துக்கறோம்’ என கிளம்ப வாய்ப்புண்டு.
இறுதித்தீர்ப்பும் வெளிநாட்டினர் / இந்தியர்களுக்கு சாதகமாய் வராவிட்டால், ‘என் பசங்களும் குடியுரிமைக்கு கஷ்டப்படணும்னா, அப்படி ஒண்ணும் தேவையில்ல’ என இந்தியர்களின் அமெரிக்கன் ட்ரீம் மெல்ல கரையவே செய்யும். இந்தியாவுக்கு திரும்புபவர்கள் எண்ணிக்கை short term & long termஇல் அதிகரிக்கவே செய்யும்.
- அமெரிக்காவில் இருந்து ஸ்ரீராம்
செய்தி: டி.ரஞ்சித்
|