முருகன் மை ஃப்ரெண்ட்!
முருகனும், நானும் அமுதும் தமிழும்!
என்னப்பா பண்ண சொல்ற ... முருகன் ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலயும் தாறுமாறா விளையாடறான்... முருகன்: ஆமா... இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்ன? .... 2025ல மீ: என்ன தங்கம் பண்ணப் போறிங்க? முருகன்: பார்த்தா அழுதுருவீங்க! மீ: என்ன அழுதுரு வேனா? முருகன்: ஆங், ஆனந்தக் கண்ணீர் விடுவீங்கன்னு சொன்னேன்!
மீ: ஏய்! என்னைய வச்சு ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலையே?
.... இப்படி முருகனை அனிமேட்டட் கேரக்டராக உருவாக்கி, தானும் முருகனும் ஒரு நண்பனாக சுற்றித் திரிந்தால் என்னவெல்லாம் பேசுவோம்... எப்படி எல்லாம் கலாய்த்துக்கொள்வோம் என யோசித்து கார்ட்டூன் ரீல்ஸ்களை வெளியிட்டு ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார் லோகநாதன்.
இவரது ‘முருகன் + மீ’ இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தள வீடியோக்கள் அத்தனையும் லட்சங்கள் மற்றும் மில்லியன்களை தொடுகின்றன. கடவுள் முருகனையே முஸ்தபா பாட வைத்து ‘மெய்யழகன்’ ஸ்டைலில் சைக்கிள் ஓட்ட வைத்து அத்தனை பேரையும் ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் ஆழ்த்தி வருகிறார் இந்த டிஜிட்டல் பக்தர். ‘‘எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் திருவாரூர்தான். வழக்கம்போல இன்ஜினியரிங் ட்ராப்அவுட். அம்மா சிங்கிள் மதர் நாகலட்சுமி, எங்களை ஒரு ஆளா நின்னு வளர்த்தாங்க. சின்ன வயதிலிருந்தே அம்மாவைப் பார்த்து வரைய ஆரம்பிச்சேன். அதனால் நல்லா வரைய தெரியும். தொ டர்ந்து சென்னையில் ஐடியில் வேலை. பிறகு கோவாவில் ப்ராஜெக்ட் என மாசம் ஒரு ரெண்டரை லட்சம் வரை சம்பளம் வந்துகிட்டு இருந்துச்சு.
ஆனால், எனக்கு கனவு, ஆசை எல்லாமே சினிமா டைரக்ஷன்தான். அதனால் வேலையை விட்டுட்டு டைரக்ஷன் பக்கம் என்னுடைய பாதையை மாற்றினேன்...’’ என்ற லோகநாதன், 2.5 லட்சம் சம்பளத்தை விட்டுவிட்டு சினிமா தேடலில் இறங்கியபோது வீட்டில் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் விளக்கினார்.
‘‘அம்மாவைப் பொறுத்தவரை எங்களுக்கு என்ன பிடிக்குதோ அதை செய்யறதுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் கொடுத்திருக்காங்க. எனக்கு ஒரு தம்பி சந்திரமோகன். அவனும் அப்படித்தான். எங்க ரெண்டு பேர் மேலயும் அம்மாவுக்கு முழு நம்பிக்கை உண்டு. நாங்க எது செய்தாலும் நிச்சயம் அது நல்ல முடிவா இருக்கும் என்கிறதில் அம்மா உறுதியா இருந்தாங்க. அதனால்தான் அவ்வளவு பெரிய சம்பளம், வேலை இதையெல்லாம் விடும்போது கூட நான் சம்பளம் இல்லாம துவண்டு போய்டக் கூடாதுன்னு அவங்க எனக்கு ஆதரவும் சப்போர்ட்டும் கொடுத்தாங்க...’’ என்னும் லோகநாதன் இந்த தோழர் முருகன் கான்செப்ட்டை எப்படி உருவாக்கினார் என மேலும் விவரமாகக் கூறினார் ‘‘சென்னைக்கு வந்த புதிதில் பெரிதாக எனக்கு நண்பர்கள் கிடையாது. ஆபீஸ் போனாலும் நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேன். வேலை முடிந்தவுடன் நேராக ரூமுக்கு வந்து விடுவேன்.
ஆனால், வேலையில் இருந்த நேரம்தான் என்னால் டிஜிட்டல் ஆர்ட் மற்றும் மோஷன் அனிமேஷன் கத்துக்க முடிஞ்சது. அதேநேரம் வேலையை விட்டுட்டு சினிமா வாய்ப்புக்காக தேடிக்கிட்டு இருந்தேன்.
அந்தவேளைலதான் ‘கனா’ படத்துக்காக அருண் ராஜா காமராஜா அண்ணனிடம் அசிஸ்டெண்டாக சேரும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அவர் கூடவே பயணிக்க ஆரம்பிச்சேன். அதற்கிடையிலேதான் அதிகமான தனிமை, யார்கிட்டயாவது பேசணும் அப்படின்னு நினைப்பேன். வேலைக்காக சென்னை வரும் அத்தனை இளைஞர்களின் பொதுவான பிரச்னைதான் இது. ஆனால், நான் யாரிடமும் பெரிதா நெருக்கமாகப் பழக மாட்டேன் என்கிறதால் எனக்கு இருக்கும் ஒரே நண்பர் கடவுள் முருகன்தான். அவர்கிட்ட பேசுற விஷயங்களையே வீடியோக்களா மாத்தினா எப்படி இருக்கும் அப்படின்னு யோசிச்சு உருவானதுதான் இந்த கான்செப்ட். என்னுடைய ஓவியமும் சேர்ந்து எனக்கு கை கொடுக்க , டிஜிட்டல் ஆர்ட்டில் படங்களை வரைந்து அதற்கு மோஷன் அனிமேஷன் கொடுத்தேன். நானே குரலும் கொடுத்து இன்ஸ்டாகிராமில் @loganxanand என்கிற அக்கவுண்டில் அப்லோட் செய்ய ஆரம்பிச்சேன்.
ஒரு வீடியோவுக்கே அவ்வளவு வரவேற்பு கிடைத்தது. நிறைய பேர் தொடர்ந்து இதே மாதிரி செய்யுங்க அப்படின்னு கமெண்டில் சொல்ல ஆரம்பிச்சாங்க. அன்னைக்கு ஆரம்பிச்சது. நான் முருகன் கிட்ட பேசினா அவர் எனக்கு ரியாக்ட் செய்தால் எப்படி இருக்கும்... இப்படி யோசிச்சு கொஞ்சம் சினிமா காமெடி வசனங்களையும் சேர்த்து உருவாக்கவும் இன்னும் அதிக பார்வையாளர்கள் கிடைச்சாங்க.
தொடர்ந்து தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ட்ரெண்டாகும் திரைப்படங்களின் காட்சிகள், வசனங்கள் இப்படி அத்தனையையும் நானும் முருகனும் சேர்ந்து செய்தால் எப்படி இருக்கும் அப்படின்னு யோசிச்சு நிறைய கான்செப்ட்ல ரிலீஸ் செய்தேன். இப்போ ஒவ்வொரு ரீல்ஸ்க்கும் பல லட்சம் பார்வையாளர்கள் வராங்க...’’ என்னும் லோகநாதன் எதிர்மறை கருத்துக்களை சந்தித்தாரா என்றதும் ஆச்சரியத்துடன் பேச ஆரம்பித்தார்.
‘‘சொன்னால் நம்ப மாட்டீங்க... சந்தோஷமா பாசிட்டிவா கொடுத்தால் நிச்சயம் இந்த டிஜிட்டல் உலகம் ஏத்துக்கும். சர்ப்ரைஸ் என்னன்னா எனக்கு ஒரு நெகட்டிவ் விமர்சனம் கூட வரலை. ஆரம்பத்தில்எனக்குக் கூட தெய்வத்தை இப்படி காமெடியா சித்தரிச்சு வீடியோ செய்கிறோமே அப்படின்னு ஒரு தயக்கம் இருந்துச்சு. ஆனால், இப்போ என்னை அத்தனை பேரும் ஊக்குவிக்கத்தான் செய்றாங்க.
இன்னும் நிறைய கான்செப்ட் யூடியூப் வீடியோக்கள் எல்லாம் செய்யணும். உண்மையில் இந்த முருகன் கான்செப்ட்டுக்கு முழுமுதல் அடித்தளம் போட்டது என்னுடைய சினிமா ஸ்கிரிப்ட்தான்.
நிச்சயம் நான் இப்படியான முருகன் கான்செப்ட் அடிப்படையில் ஒரு படம் செய்வேன்...’’ தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் இந்த எதிர்கால இயக்குநர் லோகநாதன்.
ஷாலினி நியூட்டன்
|