குப்பைகளில் சிலை வடிக்கும் அகதி!



‘‘அப்போ எனக்கு பத்து வயது இருக்கும். ஸ்கூலில் படிச்சிட்டு இருந்தேன். திடீர் திடீரென ஹெலிகாப்டர் எங்களை கடந்து போகும் பொழுது வெடிகுண்டுகளை வீசிட்டு போகும். ஒவ்வொரு நாளும் படிக்கவே பதட்டமா இருக்கும்...’’ இன்றும் அந்த நினைவுகளைப் பற்றி பேசினாலே படபடப்புடன் பேசுகிறார் ராமச்சந்திரன். கழிவு அல்லது வீண் என இவரது வாழ்க்கையில் எந்த பொருளும் கிடையாது. எந்தக் குப்பையையும் கூட இவரது கைகள் அழகிய சிலைகளாக வடித்து விடுகின்றன.

கல்லூரி ப்ராஜெக்டுகள் முதல் கலைநயமிக்க கவர்மெண்ட் ப்ராஜெக்ட் வரை பல சிலைகளை முடித்து வரும் இவர், இன்னமும் போதிய அடையாளம் இல்லாமல் சென்னையின் குழலில் இருக்கும் அகதிகள் இருப்பிடத்தில்தான் தங்கியிருக்கிறார். ஆனால், அவரது வார்த்தைகளில் அவ்வளவு தன்னம்பிக்கையும் மன உறுதியும் தென்படுகின்றன. ‘‘இலங்கை மன்னார் மாவட்டம், முருங்கன்தான் எங்களுக்கு சொந்த ஊர். 1990களில் இங்கே இந்தியாவுக்கு வந்தோம். நாங்க உயிருடன் வாழ்ந்தால் போதும்... இதுதான் எங்க அப்பாவின் ஒரே நோக்கமா இருந்துச்சு.

அப்பா டிரைவர் ஆக இருந்தார். கொழும்புக்கும் மன்னார் மாவட்டத்துக்கும் இடையே லாரி ஓட்டுவார். அவர் பெயர் தொண்டி ராஜா. அம்மா இலங்கையில் இருக்கும் போதே உடம்பு சரியில்லாம இறந்துட்டாங்க. போர், ஆபத்தான சூழல் காரணமாக வேலையும் செய்ய முடியல. தொடர்ந்து ஸ்கூல் அருகிலும் அடிக்கடி விழும் குண்டுகள்... நடக்கும் போர்கள்... வீடு வரையிலும் பிரச்னை அதிகமானது.

உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்கிற மனநிலையுடன்தான் அப்பாவுடன் சின்னப் பசங்களான நாங்க அண்ணன் தம்பிகள் நாலு பேர் படகு ஏறி இராமேஸ்வரம் வந்து இறங்கினோம். அப்போதிருந்து இப்போது வரை இந்தியாதான் எங்களுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கு. இங்கே கிடைத்த நிறைய உதவிகள் காரணமா ஐஐடி சென்னையில் டீசல் மெக்கானிக் படிச்சேன். படிச்ச படிப்புக்கு வேலை கிடைச்சாலும் நிரந்தரமான வேலையாகவோ அல்லது பணி உயர்வு, சம்பள அதிகரிப்போ இப்படி எதுவும் கிடையாது.

ஒருவேளை வெளிநாட்டில் நல்ல வேலை கிடைச்சா பாஸ்போர்ட் கூட எடுக்க முடியல. அகதிகளாக இருக்கிறவங்க வேறு ஊருக்கும் போக முடியாது. ஒருவேளை சொந்த மண்ணுக்கு திரும்பி அங்கே இருந்து வெளிநாட்டுக்கு போகலாம்னு நினைச்சு முயற்சி செய்யலாம். ஆனால், அதிலும் நிறைய சிக்கல் இருக்கு...’’ என்னும் ராமச்சந்திரன் ஒரு முறை இந்தியாவில் இருந்து சொந்த மண்ணிற்கு திரும்பி விட்டால் மீண்டும் இங்கே அகதியாக வர முடியாது... சுற்றுலா பயணியாக மட்டும்தான் வர முடியும் என்கிறார்.

‘‘இதில் என்னதான் நான் படிச்சவனா இருந்தாலும் என்னுடைய தோற்றம் பலருக்கும் நம்பிக்கை கொடுக்கிறதில்லை. இதன் காரணமாக சொந்தமாக ஏதாவது தொழில் செய்யணும்னு ஓர் ஆர்வம் இருந்துச்சி. சின்ன வயதில் இருந்து நிறைய கைவினைப் பொருட்கள் செய்துகிட்டே இருப்பேன். முக்கியமா இந்த சிலைகள் செதுக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் வேஸ்ட் பொருட்களிலிருந்து சிலைகள் நிறைய செய்வேன்.

UNHCR (United Nations High Commissioner for Refugees) நிகழ்ச்சிகளுக்கு அமைதியை அடையாளப்படுத்தும் இரண்டு கைகளுக்குள் இருக்கும் பறவைக் கூடு செய்து கொடுத்தேன். இதை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஐயா நேரில் பார்த்து பாராட்டினார். மேலும் உதயநிதி ஸ்டாலின் ஐயாவும் பார்த்து பாராட்டு தெரிவிச்சார். 

தற்சமயம் காலேஜ் ப்ராஜெக்ட், ஸ்கூல் ப்ராஜெக்ட் எல்லாம் எடுத்து செய்துட்டு இருக்கேன். பல் குத்தும் டூத்பிக்கில் முடியைக் கொண்டு திருக்குறளில் முதல் குறளை எழுதி இருக்கேன். அதை காட்சிப்படுத்த தகுந்த லென்ஸ் இல்லாத காரணத்தால் தண்ணீர் சொட்டு வச்சு அதன் மூலம் பெரிதாக்கி புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறேன்.

யாராவது செய்த சிலைகள காட்டுங்க என்று கேட்டால் கூட காண்பிக்க நல்ல புகைப்படம் என்னிடம் கிடையாது. இப்ப பேட்டிக்கு வந்திருக்கும் உங்களுக்கே கூட போதுமான புகைப்படங்கள் கொடுக்க என்கிட்ட போட்டோ இல்ல. சிலைகள் செய்கிற கோர்ஸ் எல்லா இடங்களிலும் இருக்கு. 

ஆனால், வேஸ்ட் டூ ஸ்டேச்சூ (கலைப்பொருள்) படிப்பு கிடையாது. அதனால்தான் இதை நான் விரும்பி செய்து அதில் இன்னும் திறமை வளர்த்துக்கணும்னு யோசிச்சேன்...’’ என்னும் ராமச்சந்திரன் தகுந்த அங்கீகாரம் மட்டும் கிடைத்தால் நிரந்தரமான வேலையும் வாழ்க்கையும் கிடைக்கும் என்கிறார்.

‘‘இந்திய அரசு போதுமான அளவு எங்களுக்கு உதவிகள் செய்தாலும் இந்த குடிமகன் அடையாளத்தை சொந்த நாடுதான் கொடுக்க முடியும்.
ஆனால், சொந்த மண்ணில் வாழ்வாதாரம் இல்லாமல் போனதால் எத்தனையோ பேர் தகுந்த அடையாளம் இல்லாமல், நிரந்தரமான வேலையும் கிடைக்காமல், கிடைக்கும் வேலையை செய்து வாழ்ந்துட்டு இருக்கோம்.

வேலை கொடுக்கும் நிறுவனங்கள் எங்க மேல குறைந்தபட்ச நம்பிக்கை வச்சா கூட இன்னும் கொஞ்சம் நாங்க முன்னேறுவோம். ஆனால், அவர்களையும் குறை சொல்லிட முடியாது. நம்பி வேலைக் கொடுத்து எல்லாம் செட்டிலாகி வரும்போது, ‘போர் நிறுத்தியாச்சு, இலங்கையில் சூழல் அமைதியா மாறிடுச்சு’னு அப்படியே கிளம்பினவங்க பலர் இருக்காங்க.

அதனாலேயே பெரிய ப்ராஜெக்ட் அல்லது நீண்ட நாள் தங்கி இருந்து செய்கிற வேலைகளில் எங்களை பொதுவா சேர்த்துக்கறதில்லை. சிவில் இன்ஜினியரிங் துறை, சினிமா இதில் எல்லாம் நாங்கள் பெரிதா ஜொலிக்க முடியாமல் போவதற்கு காரணம் இதுதான்...’’ என்னும் ராமச்சந்திரன், தனக்கான தகுந்த அடையாளமும் அங்கீகாரமும் கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.  

ஷாலினி நியூட்டன்