Must Watch
க்ரோ மோலியோ ‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளி வரும் இந்தோனேஷியன் மொழிப்படம் , ‘க்ரோமோலியோ’. பிறந்ததிலிருந்து சொந்த கிராமத்தின் வாசமின்றி, வெகு தொலைவில் உள்ள நகரத்தில் வளர்கிறாள் ஜியா. ஒருவேளை முறை தவறி பிறந்த குழந்தையோ நான், ஊருக்குச் சென்றால் யாரும் நம்மை வரவேற்க மாட்டார்களோ என்று கூட நினைக்கிறாள்.
“ஊரில் என்ன நடந்தாலும் வரக்கூடாது...” என்று ஜியாவின் தாத்தா நிபந்தனையே போட்டிருக்கிறார். ஏன் வரக்கூடாது என்பதற்கான காரணம் அவளுக்குச் சொல்லப்படுவதில்லை.
இந்நிலையில் ஜியாவின் அம்மா மரணமடைகிறார். தாத்தாவின் நிபந்தனையை மீறி ஊருக்கு வருகிறாள் ஜியா. யாருமே அவளை வரவேற்பதில்லை. ஆனால், ஊரில் உள்ள தீய சக்திகள் எல்லாம் எழுச்சியடைகின்றன.
மக்கள் வீட்டைவிட்டுக்கூட வெளியே வரப் பயப்படுகின்றனர். ஜியாவுக்கும் அந்த தீய சக்திகளுக்கும் என்ன தொடர்பு? ஏன் ஜியாவை ஊருக்கு வர வேண்டாம் என்று தடை போட்டிருக்கின்றனர் என்பதற்கு திகிலாகப் பதில் சொல்லியிருக்கிறது திரைக்கதை. திகில் படப்பிரியர்கள் தவறவிடக்கூடாத படம் இது. படத்தின் இயக்குநர் அங்கி உம்பரா.
ஆனந்த் ஸ்ரீபாலா
‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளைக் குவித்து வரும் மலையாளப் படம், ‘ஆனந்த் பாலா’. சட்டக் கல்லூரியில் படிக்கும் தனது மகளைக் காணவில்லை என்று ஒரு பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தருகின்றனர். உன் மகளின் இருப்பிடம் வேறு. அதனால் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில்தான் புகார் தரவேண்டும் என்று அந்தப் பெற்றோரை காவல் துறையினர் அலைக்கழிக்கின்றனர்.
அடுத்த நாள் ஓர் இளம் பெண்ணின் இறந்துபோன உடல் கிடைக்கிறது. அது தங்களது மகள்தான் என்பதை அறியும் அந்தப் பெற்றோர் உடைந்து போகின்றனர்.
சட்டக் கல்லூரி மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டி போராட்டம் வெடிக்கிறது. சில நாட்களிலேயே அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்று காவல்துறை வழக்கை முடிக்கிறது.
ஆனால், தங்களின் மகள் தற்கொலை செய்திருக்க மாட்டாள் என்று பெற்றோர் நம்புகின்றனர். இன்னொரு பக்கம் போலீஸாக வேண்டும் என்ற வெறியில் இருப்பவன் ஆனந்த். அவன் எப்படி அந்தப் பெற்றோருக்கான நீதியைப் பெற்றுத் தருகிறான் என்பதே திரைக்கதை. விறுவிறுப்பான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணு வினய்.
த சேண்ட் கேஸல்
ஒரு வித்தியாசமான திரைப்பட அனுபவம் வேண்டுமா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது, ‘த சேண்ட் கேஸல்’ எனும் அரபு மொழிப் படம்.
தனியாக இருக்கும் ஒரு சிறு தீவு. அத்தீவில் அப்பா, அம்மா, மகன், மகள் என நான்கு பேர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
அங்கிருக்கும் கலங்கரை விளக்கம்தான் அவர்களுடைய வீடு.தீவிலிருந்து வெளியே செல்ல எந்த வழியும் அவர்களுக்கு இல்லை. வெளி உலகில் நடக்கும் விஷயங்களை ரேடியோ மூலம் தெரிந்துகொள்கின்றனர். தீவில் இருக்கும் புல்வெளிகளில் விளையாடுவது, மணல் கோட்டைகளைக் கட்டுவது என மகளின் நாட்கள் நகர்கிறது.
பதின்பருவத்தில் இருக்கும் மகன் எப்போதுமே இசையில் திளைத்து இருக்கிறான். தந்தைக்குத் தெரியாமல் சிகரெட் பிடிக்கிறான். அப்பாவும், அம்மாவும் குழந்தைகளுக்குத் தெரியாமல் ரகசியாக பேசிக்கொள்கின்றனர்.
எப்படியாவது வெளியே செல்ல வேண்டும் என்பது அவர்களது நோக்கம். அந்த நான்கு பேரும் எப்படி அந்த தீவுக்குள் வந்தனர்? அவர்கள் வெளி உலகுக்குச் சென்றார்களா என்பதை அறிய படத்தை ஒரு முறை பார்த்துவிடுங்கள்.படத்தின் இயக்குநர் மேட்டி பிரவுன். ஐ வான்ட் டூ டாக்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டுகளை அள்ளிய இந்திப்படம், ‘ஐ வான்ட் டூ டாக்’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி , பார்வைகளை அள்ளி வருகிறது. அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்தியர், அர்ஜுன் சென். மனைவியுடன் விவாகரத்து பெற்றுவிட்ட அவருக்கு ரியா என்ற மகள் இருக்கிறாள்.
ஒரு வாதத்தால் அம்மாவின் வீட்டில் சில நாட்களும், அப்பா அர்ஜுனின் வீட்டில் சில நாட்களும் ரியா தங்குவாள். அர்ஜுனும், மனைவியும் சேர்ந்து மகளை வளர்க்க வேண்டும் என்பது விவாகரத்து ஒப்பந்தம்.
மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்த அர்ஜுனுக்குத் திடீரென உடல்நிலை சரி இல்லாமல் போய்விடுகிறது. பரிசோதனையில் புற்றுநோய் என்று தெரியவர, உடைந்து போகிறார். அதிகபட்சம் 100 நாட்கள்தான் வாழமுடியும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.
அர்ஜுன் எப்படி புற்றுநோயை எதிர்த்து போராடுகிறார் என்பதே மீதிக்கதை. அப்பா - மகளுக்கு இடையிலான உறவினூடாக, மனதில் நம்பிக்கையிருந்தால் எந்தவித நோய்மையையும் எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது இந்தப் படம். உண்மை நிகழ்வுகளை இயக்கியிருக்கிறார் சூஜித் சிர்கார்.
தொகுப்பு: த.சக்திவேல்
|